குறளின் கதிர்களாய்…(436)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(436)
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.
-திருக்குறள் – 834 (பேதைமை)
புதுக் கவிதையில்…
அருமறை நூற்களை ஓதியும்,
அடக்கத்தால் வரும் பயனறிந்தும்,
அதனை மற்றவர்
அறிய விளக்கிக் கூறியும்,
அதன்படித் தான்
அடங்கி ஒழுகாத
அறிவிலி போல
அறிவற்றவர் எவருமிலர்…!
குறும்பாவில்…
நூற்களோதியும் அடக்கத்தின் பயனறிந்தும்
பிறர்க்கதை விளக்கியும், அதன்படி அடங்கியொழுகா
அறிவிலிபோல் அறிவிலார் இல்லை…!
மரபுக் கவிதையில்…
மனமொழி மெய்தனை யெல்லாமே
மாறிடா தடக்கிட உதவுகின்ற
இனமதாம் நூற்களைக் கற்றறிந்தும்
இயல்பதாம் அடக்கமே உயரறமே
எனவதை அறிந்துபின் பிறர்க்குரைத்தும்
என்றுமே யதன்படி யடங்கிவாழ
மனமிலா அறிவிலி போன்றதொரு
மட்டமாம் அறிவிலார் வேறிலரே…!
லிமரைக்கூ…
அறிந்தும் அடக்கத்தின் எல்லை,
கற்றதைப் பிறர்க்குரைத்தும் அடங்கியொழுகா அறிவிலிபோல்
அறிவில்லாதவர் வேறே இல்லை…!
கிராமிய பாணியில்…
இருக்காத இருக்காத
அறிவில்லாம இருக்காத,
ஒலக வாழ்க்கயில
அறிவில்லாதவனா இருக்காத..
மனச அடக்க ஒதவுற
நூலுகளப் படிச்சியும்,
அடக்கத்தால வருற நன்மகள
அறிஞ்சிருந்தும்,
அத மத்தவங்களுக்கு
எடுத்துச் சொன்னபெறகும்,
தான் அடங்கி
ஒழுக்கமா நடக்காத
கேடுகெட்டவனப் போல
அறிவில்லாதவன் வேற இல்ல..
அதால
இருக்காத இருக்காத
அறிவில்லாம இருக்காத,
ஒலக வாழ்க்கயில
அறிவில்லாதவனா இருக்காத…!