நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழா

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டமாக ஐம்பெரும் விழா சேலம் சண்முக மருத்துவமனை கலையரங்கில் 29.1.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் வரவேற்புரை ஆற்றினார்.

சேலம் சண்முகா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பன்னீர்செல்வம் நிகழ்விற்குத் தலைமைத் தாங்க, விவசாயி திரு. பழனிச்சாமி, தாரை குழுமம் தலைவர் திரு.தாரை குமரவேல், இந்திய மாதர் சங்க செயலாளர் திருமதி குப்புரத்தினம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பத்திரிகையாளர், பதிப்பாளர், கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன் மற்றும் திரைப்பட நடிகை, தன்னம்பிக்கை பேச்சாளர் சசிலயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, “பத்திரிகைகள் பாராட்டும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்” எனும் புத்தகத்தை வெளியிட்டனர்.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் அயோத்தியாபட்டணத்தில் அமைந்துள்ள நம்பிக்கை முதியோர் இல்லத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள், “நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது தன்னலம் பாராது பல நல்ல பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பை நடத்தி வருகிற கவிஞர் ஏகலைவன் தனியொரு மனிதராக ஊனமுற்றவராக இருந்தாலும், நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். கொரோனா காலகட்டத்திலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியி்ல் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் தொடர்ந்து நடைபெற்று பல்வேறு பயனாளிகளுக்கு பயனளித்தது பெரிய சாதனை. உதவி தேவைப்படும் மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு சரியான உதவியை செய்து வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பாக நம்பிக்கை முதியோர் இல்லம் தொடங்கவிருப்பது இன்னும் பல பயனாளிகளுக்கு பேருதவியாக அமையும். இத்தகைய அமைப்பிற்கு தற்போது சொந்த நிலம் தேவைப்படுகின்ற ஒரு சூழலில், நல்ல உள்ளங்கள் முன்வந்து அந்த அமைப்பிற்கு இடம் கொடுத்து உதவி செய்தால், இந்த சமூகத்திற்கு செய்த நற்பணியாகவே அமையும். சின்னச் சின்ன உதவிகளைச் செய்துவிட்டு, பெரியளவில் விளம்பரப்படுத்துவோருக்கு மத்தியில், சரியான நபர்களுக்கு பேருதவிகளை செய்துவிட்டு எந்தவித விளம்பரமும் இன்றி செயல்பட்டு வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது நம் எல்லோராலும் ஆதரிக்கப்பட வேண்டிய அமைப்பு” என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகை தன்னம்பிக்கை பேச்சாளர் சசிலயா, “இந்த சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைய சூழலில் நம்பிக்கையின் ஆதாரமாக திகழ்கிறார்கள். அத்தகையோரில் கவிஞர் ஏகலைவன் அவர்களின் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது நல்ல பல பணிகளை செய்து வருகிறது. தனியொரு மனிதராக வாழ்வில் வளர்ச்சி அடையும் போதும், சமுதாயத்திற்கு நல்ல பணிகளை செய்யும்போதும், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து தொடர்ந்து நாம் செயல்பட வேண்டும். அதுவே வாழ்வில் வெற்றி தரும்” என்று பேசினார்.

விழாவில் சமூகப் பணியாற்றும் பல்வேறு சாதனையாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளியின் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நிதி உதவி செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பலரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நற்பணிகள் தொடர்ந்து நடைபெற நிதி வழங்கினர்.

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் கௌரவ தலைவர் ஏ.ஆர். முத்துராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கவிஞர் ச.கோபிநாத், கவிஞர் இரா. பூபதி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கிட, மதிய உணவோடு விழா இனிதே நடைபெற்றது.

தொடர்புக்கு

கவிஞர் ஏகலைவன்
தலைவர்
நம்பிக்கை வாசல் டிரஸ்ட், அயோத்தியா பட்டணம், சேலம்
கைபேசி 9842974697, 8682994697

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *