-மேகலா இராமமூர்த்தி

இறந்த இராவணனுக்கு இறுதிக் கடன்களைச் செய்யும் பணியை வீடணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைக் கண்டு வாழ்த்தவந்தவர்களைக் காணச் சென்றான் இராமன்.

வீழ்ந்துகிடந்த இராவணனின் உடலைக் கண்டு வருந்திய வீடணன், ”ஆற்றலின் உறைவிடமாயிருந்த அண்ணனே! அசுரர்களுக்குப் பிரளயமாய் உருவெடுத்தவனே!  தேவர்களுக்கு எமனாய் இருந்தவனே! எந்த நஞ்சும் உண்ணாவிட்டால் உயிரை உண்ணாது; ஆனால் சானகி எனும் நஞ்சு கண்ணால் கண்ட மாத்திரத்தில் உன் உயிரைப் போக்கியதே! நீயும் சாமானியன் போன்று படுகளப்பட்டு வீழ்ந்தாயே! எண்ணத் தெரியாதவனென்று உன்னால் கருதப்பட்ட நான் எண்ணி உரைத்த சொற்களை இந்த இறுதிக் காலத்தில்தான் எண்ணுகின்றாயா?

கொல்லத் தகாத மைத்துனனை நீ கொன்றுவிட்டாய் என்று அக்கொடுமையை மனத்தில் குறித்துவைத்துக் கொண்டு கொடுமைசூழ்ந்து, உன்னைப் பழிவாங்குவதற்குச் சமயம் பார்த்துப் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டிருந்த கொடிய பாவியான சூர்ப்பனகை, தன் நெஞ்சையழுத்திக் கொண்டிருந்த நெடுநாள் பகையை இன்று தீர்த்துக்கொண்டாளோ?” என்று புலம்பினான்.

இதன்மூலம் ஓர் உண்மை தெரியவருகின்றது. சூர்ப்பனகை இராமனோடு இராவணனை மோதவிட்டது தான் இராமனை அடையவேண்டும் என்பதற்காகவோ இராவணன் சீதையை அடையவேண்டும் என்பதற்காகவோ அல்ல. அவள் கணவனான வித்துருசிங்கன் என்பவனைத் திக்குவிசயம் செய்யச் சென்ற சமயத்தில், யாது காரணத்தாலோ, இராவணன் கொன்றுவிடுகின்றான். அதனால் அவன்மீது கடுங்கோபமும் தீராப்பகையும் கொண்டிருந்த சூர்ப்பனகை, அதற்குப் பழி தீர்க்கவே சீதை குறித்து அவனிடத்தில் கூறி காமத்தைத் தூண்டி அவன் அழிவுக்கு வித்திடுகின்றாள். இச்செய்தியை இங்கே வீடணன் மூலம் நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

நீல மாமணிநிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை
காலம் ஓர்ந்து உடன்உறை கடிய நோய் அனாள்.
  (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2836) என்று இராமகாதையில் சூர்ப்பனகையை அறிமுகப்படுத்தும்போதே அவள் உட்கிடையைக் கம்பர் இப்பாட்டில் வடித்துக் காட்டியமை இங்கே நினையத்தக்கது.

அவ்வேளையில் தன் கணவன் இராவணன் மாண்ட செய்தியறிந்து களம்புகுந்த மண்டோதரி மண்ணில் கிடந்த அவன் உடல்மீது வீழ்ந்தாள். ”அந்தோ! அரக்கர் வேந்தன் இறந்த பின்னேயோ யான் இறப்பது? இராவணனார் வாழ்வு இவ்வாறா முடியவேண்டும்?” என வருந்தி, ”ஒப்பற்ற வீரனான இராமனின் அம்பு, வெள்ளெருக்கம் பூவைத் தன் சடையில் சூடும் சிவனின் கயிலை மலையைத் தூக்கிய இராவணனின் திருமேனியில் மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடத்தை ஆராய்ந்ததோ? கள்ளிருக்கும் மலர்க் கூந்தலாள் சானகியை மனச்சிறையில் அடைத்த காதல் இராவணனின் உள்ளே எங்கேனும் பதுங்கியிருக்கும் என்றெண்ணி உடல் முழுதும் நுழைந்து தடவிப் பார்த்ததோ? என்று வேதனையோடு உரைத்தாள்.

வெள்எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள்இருக்கும் இடனின்றி உயிர் இருக்கும்
இடன்நாடி இழைத்தவாறோ
கள்இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி.
(கம்ப: இராவணன் வதைப் படலம் – 9940)

இராவணனின் உடலை இராமனின் அம்பு துளைத்தது எனக்கூற விரும்பாத மண்டோதரி, ”தடவியதோ” எனக் கேட்பது, தன் கணவன்மேல் அவள் கொண்டிருந்த அளவற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது.

”யாருடைய கணைகளாலும் துளைக்கமுடியாத இராவணனின் தோள்வலிமை மாரனின் கரும்பு வில்லுக்கும் மலரம்புக்கும் இலக்காகி நைந்தழிந்ததே!” என்று ஏங்கியழுத மண்டோதரி, இராவணனின் மார்பினைத் தன் கரங்களால் தழுவி உயிர்நீத்தாள்.

புலனடக்கமின்றிக் கழிகாமம் மிக்கோனாய்ப் பல பெண்டிரொடு வாழ்ந்தவன் இராவணன்; அவன் மனைவி மண்டோதரியோ, மாசுமறுவற்ற கற்புக்கரசியாய் வாழ்ந்து, கணவனின் மரணத்தைத் தாங்கவியலாது உயிர்விடுகின்றாள். இக்காட்சி நம் நெஞ்சை உருக்குகின்றது. அத்தோடு, சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் ”கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்றுரைத்து உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் செயலையும் நினைவுபடுத்துகின்றது.

இறந்துபட்ட இராவணனுக்கும் மண்டோதரிக்கும் ஏனைய அரக்கர்கட்கும் வீடணன் ஈமக்கடன்கள் ஆற்றினான்; வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவனை இராமன் அருள்மொழிகளால் தேற்றினான்.

அதனைத் தொடர்ந்து இராமனின் விருப்பப்படி இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டினான்; முடிசூடிக்கொண்ட வீடணன் இராமனைப் பணிந்தான். அவனை ஆரத்தழுவிய இராமன், ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை, முன்பு சுக்கிரீவனுக்கு உரைத்தது போலவே, வீடணனுக்கும் உரைத்தான்.

அடுத்து, அனுமனை அருகில் அழைத்த இராமன் நடந்தவற்றைச் சீதைக்கு உரைத்துவருமாறு அவனைப் பணித்தான். அசோகவனம் சென்ற அனுமன், ”அன்னையே! உன்னைப் பணிகின்றேன்; மங்கலச் செய்தி கொணர்ந்துள்ளேன். இலங்கையில் மகளிரன்றி ஆடவர் அனைவரும் போரில் அழிந்துபட்டனர்” என்றான் சீதையிடம்.

அதுகேட்டு மகிழ்ச்சி மீதூரப்பெற்ற சீதை, சொல்லுதற்கு வார்த்தைகளின்றி மௌனித்திருந்தாள். அவளின் மௌனத்திற்கான காரணத்தை அனுமன் வினவ, ”ஐய! நீ செய்திருக்கும் பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்றறியாது திகைத்திருக்கின்றேன்” என்றாள் சீதை.

அப்போது அனுமன் சீதையிடம், ”தாயே! மலர்ந்த முகமுடையவளான திரிசடை நீங்கலாக அனைத்து அரக்கியரையும் நான் அழித்திட உம் அனுமதி வேண்டுகின்றேன்” என்றான். அதுகேட்டு அஞ்சி நடுங்கிய அசோகவனத்து அரக்கியர், ”அன்னையே எம்மைக் காத்திடு” என்று அச்சத்தோடு சீதையைச் சரணடைந்தனர். ”அஞ்சல்மின்” என்று அவர்களுக்குத் துணிவுரைத்த சீதை, ”தாயைக் காட்டிலும் என்பால் அன்புடையோனே! அறிவிற் சிறந்தவனே! எனக்கு ஏற்பட்ட துயர்களுக்கு என் தீவினையே காரணம்; இவ் அரக்கியர் இராவணன் சொன்னதைச் செய்தனர்; அவ்வளவே! இவர்கள் கூனியினும் கொடியோர் அல்லர்; ஆதலால், நடந்துமுடிந்தவற்றை மனத்தில் வைத்து இவர்களை வருத்த எண்ணாதே!” என்றாள் அனுமனிடம்.

யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியார் அலரே இவர்
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்.
(கம்ப: மீட்சிப் படலம் – 9886)

சீதையின் பெருந்தன்மை கண்டு நெஞ்சு நெகிழ்ந்தான் அனுமன்.

இதற்கிடையில் இராமன் வீடணனிடம், ”வீடணா! நீ சென்று நம் தேவியைச் சீரொடும் தா!” என்றான். அதனையேற்றுச் சீதையைக் காணவந்த வீடணன், ”இறைவியே! இராமபிரான் உன்னைக் காண விரும்புகின்றான். அணியத்தக்க அணிகலன்களை விரைவாய் அணிவித்துச் சீதையை இங்கே அழைத்து வா” என்று எனக்குக் கட்டளையிட்டான்” என்றான்.

இராமன், ”சீதையைச் சீரொடும் தா” அதாவது ”சிறப்பாக அழைத்து வா” எனும் பொருளில் சொன்னதைச் சீதை தன்னை அலங்கரித்துக்கொண்டு வரவேண்டும் என இராமன் சொல்வதாகப் புரிந்துகொண்ட வீடணன் அவ்வாறே சீதையிடம் செப்பினான். அதனை ஏற்க மறுத்த சீதை, ”வீரனே! நான் அசோகவனத்தில் எத்தகு கோலத்தில் இருந்தேனோ அக்கோலத்துடனேயே என் தலைவன் இராமனையும் ஏனையோரையும் காண்பதே சிறப்புடைத்து; கோலம் பூண்டு வருவது பீடன்று!” என்றாள்.

வீடணனும் விடாமல், ”தாயே! நீ அணிபுனைந்து வரவேண்டும் என்பது ஐயன் இராமனின் கட்டளை” என்றுரைக்கவே வேறுவழியின்றி அதனையேற்றுக் கோலம்புனைந்தாள் அந்தக் கோதை; அவளை அரம்பையர் சூழ விமானத்திலேற்றி இராமன் இருக்குமிடம் அழைத்துவந்தான் வீடணன்.

பச்சிலை வண்ணனாய், பவளச் செவ்வாயனாய் நின்றிருந்த இராமனைக் கண்டு உவந்தாள் சீதை; அண்ணலும் அவளை நோக்கினான். ஆனால், அப்பார்வையில் மகிழ்ச்சியின் மலர்ச்சியில்லை; மாறாக வெறுப்பே வெளிப்பட்டது; அதனை அனைவர்க்கும் புலப்படுத்தும் வகையில், ”நீ ஒருத்தி தோன்றியதால் பெண்மைக் குணங்களும் பெருமையும் நற்குடிப் பிறப்பும் கற்பும் ஒழுக்கமும் சத்தியமும், கொடைத்தன்மை இல்லாத அரசனின் புகழ் கெடுவதுபோல் அடியோடு அழிந்தன” என்றான் சீற்றத்தோடு.

பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்.
(கம்ப: மீட்சிப் படலம் – 10017)

தன் கொடுமொழிகளை மேலும் தொடர்ந்தவன், “உன்னை மீட்பதற்காக நான் இலங்கைக்கு வந்ததாகவா எண்ணுகின்றாய்? இல்லை! என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ளவே வந்தேன்; உன் செயல் என் உணர்வுகளை வெட்டிவிட்டது; உன் ஒழுக்கத்தை நீ சாதிப்பாயாக!” என்றான்.

நஞ்சினும் கொடிய இராமனின் மொழிகள் பூங்கொடியன்ன சீதையை நிலைகுலையச் செய்தன; அவள் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தன. ”ஆடவர் திலகனே! நான் இத்தனை காலமும் செய்த தவமும், காத்த கற்பும் நீ சிந்தையில் உணராமற் போனதால் எனது பைத்தியக்காரச் செயல் எனும்படியாய்ப் பயனற்றுப் போயின.

இனி நான் யாருக்கு என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக் காட்டவேண்டும்? சாதலின் சிறந்தது எனக்கு வேறொன்றில்லை; அதுவே எனக்குத் தகுதியும் விதியும் ஆகும்” என்று வேதனையோடுரைத்து இராமனின் அருகில் நின்ற இலக்குவனை அழைத்துத் தனக்கு நெருப்பை உண்டாக்கித் தருமாறு வேண்டினாள். அதுகேட்டுக் கலக்கமுற்ற இலக்குவன், ”இதனைத் தான் ஏற்பதா தவிர்ப்பதா?” எனும் அச்சத்தோடு இராமனைப் பார்க்கவே, ”அவ்வாறு செய்க” என இராமன் தன் கண்ணினால் குறிப்புக் காட்டினான் இலக்குவனுக்கு.

இவ்விடத்தில், சீதை தீயில் இறங்க விரும்பிய செயல் குறித்தும் அதற்கு இலக்குவனை உதவப் பணித்த இராமனின் எண்ணம் குறித்தும் இராமாயண ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைக் காண்போம்.

”அசோகவனத்திலிருந்து மீண்டுவந்த சீதை இராமனின் கடுஞ்சொற்களால் மனம்நொந்து தீயில் இறங்குவது என்று முடிவுசெய்தபோது தீமூட்டித் தருமாறு இலங்கையைச் சேர்ந்தவனான வீடணனிடந்தான் கேட்டிருக்க வேண்டும்; ஆனால், அவளோ அவ்வாறு செய்யாமல் இலங்கைக்குப் புதியவனான இலக்குவனிடம் கேட்கிறாள்; இதற்குக் காரணமென்ன?

பஞ்சவடியில் இராமன் இலக்குவன் சீதை மூவரும் தங்கியிருந்தபோது மாய மானைத் துரத்திச்சென்ற இராமனின் அபயக் குரல் தொலைவினில் கேட்கவே, உடனே அங்குச்சென்று அண்ணனுக்கு உதவுமாறு இலக்குவனை வேண்டினாள் சீதை; அவனோ அதனையேற்க மறுத்து, ”அண்ணனுக்கு ஊறுசெய்வோர் அகிலத்தில் எவரும் இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்து ”அவளுக்குக் காவலாய் இருப்பதே அண்ணன் தனக்கிட்ட ஆணை” என்றுரைத்தபோது, மனக்கொதிப்படைந்து தகாத மொழிகளால் அவனைத் தீட்டினாள் சீதை. அதனையெண்ணி அவள் அசோகவனத்தில் சிறையிருந்தபோது பெரிதும் வருந்தினாள்.

அவளின் அந்த வருத்தத்தைப் போக்குதற்கும், தூயவனான இலக்குவனைத் தீயவனாய் அடையாளப்படுத்திய தீச்செயலுக்கு அவள் கழுவாய் தேடிக்கொள்வதற்கும் வாய்ப்பாகவே சீதையை இராமன் கொடுமொழிகளால் திட்டி அவளே தீயில் இறங்கும் நிலைக்குக் கொண்டுவந்தான் எனவும் இலக்குவனைத் தீ உண்டாக்கித் தருமாறு சீதை கூறியமைக்குக் காரணம் அவனிடம் அன்று நடந்துகொண்ட விதம் குறித்த அவளின் குற்றவுணர்ச்சியே” எனவும் தெரிவிக்கின்றார்கள்.

இவை ஏற்புடைய கருத்துக்கள் தாமா?

தன் மனைவி சீதையிடம் இரக்கமின்றியும் மனச்சான்றின்றியும் நடந்துகொண்டு அவளை ’அக்னிப் பிரவேசம்’ செய்யும் நிலைக்குத் தள்ளிய இராமனின் முறையற்ற செய்கையை நியாயப்படுத்துவதற்குச் சொல்லப்பட்ட சமாதானங்களாகவே இவை தோன்றுகின்றன.

சீதை இலக்குவனிடம் பேசிய வார்த்தைகள் தகாதவையே; அவளின் தகுதிக்குச் சிறிதும் பொருத்தமற்றவையே. எனினும், அதற்குக் கழுவாய் அவளைத் தீக்குளிக்க வைத்தலா? இல்லை!

இலக்குவனிடம் தன் தவற்றுக்குச் சீதை மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இராமன், அவர்கள் மூவரும் தனித்திருக்கும் பொழுதொன்றில், சொல்லியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும்; ஏற்கனவே அதுகுறித்துக் குற்றவுணர்ச்சி கொண்டிருந்த சீதை அதனை மறுக்காது ஏற்றுச் செய்திருப்பாள். அதனைவிடுத்து, கற்புக்கனலியான அவள் நடத்தையை அருவருக்கத்தக்க வகையில் பலர் முன்னிலையில் இழித்துப் பேசியதும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டியதும் இராமன்செய்த மன்னிக்க முடியாத குற்றங்களே.

இனி, அடுத்து நடந்தவற்றைக் காண்போம்.

இலக்குவன் உண்டாக்கிய தீயில் இறங்கினாள் சீதை; கண்டோர் நடுங்கிநிற்க, தீக்கடவுள் அவளின் கற்புத் தீயில் வெந்தான்; வெம்மை பொறாது கதறியபடி எழுந்துவந்த அவன், அம்மை சீதையை ஊறின்றிக் கொண்டுவந்து இராமனிடம் சேர்ப்பித்து அவள் கற்பின் மேன்மையைச் சாற்றினான்; உயர்மொழிகளால் அதைப் போற்றினான். அதன்பின்னர் இராமன் சீதையை ஏற்றுக்கொண்டான்.

உயிர்நீத்துத் துறக்கம் சென்ற தயரதன் அப்போது தன் மகன் இராமனைக் காண வருகின்றான்; வந்தவன், இராமனைத் தழுவி மகிழ்ந்தபின், சீதையைப் பார்த்து, ”நங்கையே! நின் கற்பினை உலகுக்கு நிலைநாட்டவே நெருப்பின்கண் புகும்படி உன்னை இராமன் கூறினான்; அதற்காக அவனை வெறுக்காதே! அவனுக்கு உன்மீது ஐயம் ஏதுமில்லை” எனக் கூறித் தன் மருமகளைத் தேற்றுகின்றான். இராமனின் அடாத செயலுக்கு நியாயம் கற்பிக்கவே விண்ணிலிருந்து இறங்கிவந்து தயரதன் இவ்விடத்தில் பேசுவதாய்ச் சாதுரியமாகக் காப்பியம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தயரதன் சொல்வதுபோல் உலகுக்குச் சீதையின் கற்பை நிரூபித்துக் காட்டும்பொருட்டு இராமன் சீதையைத் தீயில் இறங்கச் சொல்லியிருந்தாலும் அது குற்றமே. தன் மனைவி எப்படிப்பட்டவள் என்பதைக் கணவன் மட்டும் அறிந்தாலே போதுமானது; அதனை ஊருக்கும் உலகுக்கும் மெய்ப்பித்துக் காட்டவேண்டியது அவசியமற்றது!

’நடையின் நின்றுயர் நாயகனாக’ப் போற்றப்படும் இராமன் அதனின்று சறுக்கும் இடங்களாக இராமகாதையில் இரண்டைச் சொல்லலாம்; ஒன்று மறைந்திருந்து வாலிமீது அம்பெய்து அவனைக் கொன்றது; இரண்டாவது சீதையைத் தீயில் இறக்கியது.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
குறள்: 503) எனும் குறளை நினைவூட்டுகின்றன இராமனின் இச்செயல்கள்.

தவக்கோலம் புனைந்து இராமன் மேற்கொண்டிருந்த பதினான்கு ஆண்டுக்கால வனவாசத்தின் பெரும்பகுதி இளவல் இலக்குவனோடும் மனைவி சீதையோடும் அமைதியாகக் கழிந்தது; ஆனால், இறுதிப்பகுதியோ சீதையைப் பிரிந்த துயரத்தோடும் அவளைச் சிறையெடுத்துச் சென்ற இலங்கையர்கோனிடமிருந்து மீட்பதற்காக நிகழ்த்திய பெரும்போர்களோடும் கழிந்து ஒரு முடிவுக்கு வந்தது.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப்
(மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *