பன்னீர்ப் பூக்கள்
பாஸ்கர்
தினமும் நான் வசிக்கும் தெருவைக் காலையில் கடக்கும் போது கிடக்கும் வெள்ளைப் பூக்களைப் பார்ப்பது பெரும் பரவசம். அந்தப் பெருமரத்தில் இருந்து எல்லாப் புறமும் பூக்கள் உதிர்ந்து கிடக்க அதுவே ஒரு ஓவியம் போல இருக்கும். எங்கெங்கு பூக்கள் இல்லையோ அதுவும் ஒரு ஓவியம் போல அமைந்து இருக்கும். அவற்றை மிதிக்காமல் ஒரு ஓரமாய்ச் செல்வேன்.
அந்தப் பூவால் எந்த வாசமும் இல்லை. ஆனால் அதன் அமைப்பு ஒரு வசீகரம். தலைப்பக்கம் கொஞ்சம் பச்சை. வால் பகுதி சுத்த வெண்மை. அது உயிர்ப்பு. அதனைக் கையில் வைத்துப் பார்த்தால் அதன் புத்துணர்வு தெரியும். அதன் சுத்தம் என்னிடம் இல்லை. அதன் அழகு என்னிடம் இல்லை. அந்த வெண்மைக்கும் எனக்கும் காத தூரம். அதன் இயல்பும் என்னிடம் இல்லை. எனக்கும் அதற்கும் ஒரே தொடர்பு அதன் உயிர்ப்பு. அடிப்படையில் இதன் அழகு மரம் அறியாது. கிளைக்குப் புரியாது. எல்லாம் இயக்கத்தில் நிகழும் பெரும் அற்புதம். அது தினசரி தொடர் நிகழ்வு என்பதில் தான் ஒரு பெரும் சூட்சுமம் இருக்கிறது. ஆராய முடியாத ஆழம் அது. அடித்துப் போடும் அழகில் மனம் லேசாகிறது.
எந்தக் கவிதையும் கட்டுரையும் பேச்சுரையும் இதனைப் புரிய வைக்க முடியாது. அழகு மனிதனை நிற்க வைக்கும் தருணங்கள் மிக விசித்திரம். அது மனித இயக்கத்தைச் சில மணித் துளிகளைக் கொஞ்சம் அசைத்து விடும் என்பது இந்தப் பன்னீர்ப் பூ தினமும் சொல்கிறது. மண் உயிர், மரம் உயிர், செடி கொடி மலர் எல்லாம் உயிர். காலில் அடிபடும் சருகு கட்டைகளில் உயிர் இருக்கிறது. காலத்தின் உயிர்ப்பில் நின்று தன்னிலை மறவாமல் ஒரு நிஜ உணர்வில் கலந்து போகும் நேரத்தில் இருக்கிறது வாழ்க்கை.