சிங்கப்பூரில் இசையமைப்பாளர் தஷி!
சிங்கப்பூரில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக சென்னையில் இருந்து இசையமைப்பாளர் வீ. தஷி அழைக்கப்பட்டிருந்தார்.
பாக்யராஜ் நடித்த ‘மாணவன் நினைத்தால்’, புதுமுகங்கள் நடித்த ‘பயணங்கள் தொடரும்’, ‘இந்திரசேனா’, ‘நீதானா அவன்’ போன்ற சில தமிழ் படங்களுக்கும், மலையாளத்தில் பல படங்களுக்கும் இசையமைத்தவர் வீ.தஷி. கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்.பட்டுக்கோட்டையாரின் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கேரள அரசின் விருதைப் பெற்று ஊருக்குப் பெருமை சேர்த்தவர் என்பதாலும் சிங்கப்பூர் இசை ரசிகர்களும், மக்கள் கவிஞர் மன்றத்தினரும் நடத்திய இந்த விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு நடந்த இசையரங்கில் தஷி உரையாற்றியதோடு, தஷியும், கீபோர்டு கலைஞர் செல்லாவும் அங்கு கவிதை பாட வந்த கவிஞர்களின் கவிதைகளுக்கு மேடையிலேயே மெட்டமைத்து, கவிஞர்கள் ராகத்தோடு பாட உதவினார்கள். கவிஞர்கள் விஜயபாரதி, சண்முகசுந்தரம், இனியதாசன், சத்தியமூர்த்தி, கோவிந்தராஜ், அமிர்தலிங்கம், சோ.சிவா ஆகியோர் கவிதை வாசித்தார்கள்.
விழாவுக்கு வந்திருந்த இசைப் பிரியவர்கள் வியந்து அதை ரசித்ததோடு, இசையில் இவர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் உற்சாகமான சிங்கப்பூர் பாடகர் குணசேகரன் ஒரு பாடலை எழுதிக் கொடுக்க, அதற்கும் அந்த மேடையிலேயே தஷி இசையமைக்க, அவர் பாட, பாராட்டுகள் குவிந்தன. அதே போல சிங்கப்பூர் பாடகி கலையரசி ஒரு பாடலை அவரது இசையில் பாடி அசத்தினார். அதைப் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போனார்கள்
இந்த விழாவுக்குச் சிங்கப்பூரில் உள்ள ‘சென்னை தோசை’ உணவகத்தின் உரிமையாளர் ஆர்.வெங்கட் ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் கவிஞர் மன்றத்தின் தலைவர் ராமசாமி, செயலாளர் ராஜாராம், பொருளாளர் உத்திராபதி ஆகியோர் விழா சிறப்பாக நடத்துவதற்கு உதவி புரிந்தார்கள்.
===============================
செய்தி: ஜி.பாலன், செய்தி தொடர்பாளர்