1

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஆஸ்திரேலியா 

ஆடி என்பது அமங்கலம் இல்லை
ஆன்மீகக் கருக்கள் நிறைந்த நல்மாதம்
பீடை என்பது பொருந்தாக் கருத்தே
பீடுடை என்பதே சிறப்புடைச் சிந்தனை

அமங்கலம்  என்பது ஆடியாய் ஆகுமா
அம்மனின் மாதம் ஆடியே ஆகும்
படையலும் பாட்டும் பரவசம் அனைத்தும்
பக்தியாய் மலரும் பாங்குடை மாதம்

ஆடியில் செவ்வாய் ஆடியின் வெள்ளி
ஆடியின் பூரம் ஆடியின் கார்த்திகை
ஆடித்தபசு ஆடியமாவாசை ஆடிப் பெளர்ணமி
ஆடியில் ஆண்டவன் நினைப்பதை உணர்த்தும்

ஆடியில் ஆறுகள் நீரைப் பெருக்கும்
ஆடிப் பெருக்கென அனைவரும் குவிவார்
அம்மனை எண்ணி உருகியே நின்று
ஆடிப் பாடிப்  படைத்துமே மகிழ்வார்

அமாவாசை மாதங்கள் அனைத்திலும் உண்டு
ஆடியில் மட்டும் அதன்நிலை சிறப்பே
பிதிர்க்கடன் தீர்த்திடப் பொருத்தமாய் அமையும்
ஆடியின் அமாவாசை என்பதே சிறப்பு

இறையினை உறவாய் ஆக்கிடும் பாங்கை
உலகிடை சைவமே அணைத்துமே நின்றது
அம்மனை உறவாய் கண்டநம் அடியவர்
அம்மனும்  ருதுவாய் ஆகினார் என்றனர்

ஆடியின் பூரம் ஆனந்தத் திருவிழா
ஆடியே உமையின் அவதாரம் ஆகும்
அம்மனே ஆண்டாளாய் வந்ததும் ஆடியே
அரங்கனை ஆண்டாள் அணைந்ததும் ஆடியே

அம்மனை எண்ணிடும் அகநிறை மாதம்
ஆடிக் கூழினைக் காய்ச்சிடும் மாதம்
அம்மனின் கோவிலில் கூழைப் படைத்து
அம்மனை ஏற்றியே போற்றிடும் மாதம்

கூழொடு கொழுக்கட்டை சேர்த்துமே செய்து
யாவரும் படைத்துமே பாடியே மகிழ்வார்
வீடுகள் தோறும் கூழது வாசம்
ஆடியை ஆனந்தம் ஆக்கியே நிற்கும்

ஆடிப் பிறப்பு அனைவர்க்கும் மகிழ்வே
கூடிப் பனங்கட்டி கூழுமே குடிக்கலாம்
ஆடியை ஒதுக்குதல் அறிவுடை ஆகா
ஆடியும் அருமையாய் அமைந்த நல்மாதமே

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.