வி. டில்லிபாபு

லகின் முதல் விமானி பறக்கவேயில்லை. ஏனெனில் வானில் பறந்த முதல் மனிதப் படைப்பு, காற்றாடி. 

பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிநாதம் இயற்கை தான் என்றாலும் சில கண்டுபிடிப்புகள் இயற்கையை மிஞ்சுவதும் உண்டு. பறவைகளின் இயங்கு நுட்பங்களை ஆராய்ந்து விமானங்கள் வடிவமைக்கப்பட்டாலும், முதுகு கீழாக விமானங்களால் மட்டுமே பறக்க இயலும். ஓடு பாதைகளுக்கு அருகில் இறைச்சிக் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் அனுமதியில்லை, ஏனெனில் இவைகளின் கழிவுகள், பறவைகளைக் கவர்ந்திழுக்கும். விமானம் கண்டுபிடிக்கக் காரணமான பறவைகள், சில விபத்துகளுக்கும் காரணமாகிக் கொன்று முடிப்பது சோகமான உண்மை. 

விமானத்தை அசையா இறக்கை வாகனம் என்றும் ஹெலிகாப்டரைச் சுழலும் இறக்கை வாகனம் என்றும் பிரிக்கலாம். பயணிகள் விமானத்தின் நீண்ட இறக்கையைப் பார்த்த சிலர் ஏன் இவ்வளவு நீளம் என நெற்றி சுருக்கியிருக்கலாம். பறக்கும் போது, இறக்கை தான் முழு விமானத்தையும் தாங்குகிறது. இது விமானத்தின் மிக வலிமையான பாகம். விமான எஞ்சினைச் சுமப்பதும் இறக்கை தான்.( படம் பார்க்க-போயிங் விமானம்). விமானத்தில் பயணிகள் அறை, விமானி அறை, சாமான்கள் வைக்குமிடம்  என விமானம் முழுவதும் நிரம்பியிருக்க, எரி பொருளை எங்கே வைப்பது?  இறக்கை தான் இதற்கும் உதவுகிறது. உள்ளீடற்ற இறக்கை, விமான எரிபொருள் தொட்டியும் கூட. ரைட் சகோதரர்கள், இருநூறு விதமான இறக்கைகளைச் சோதனை செய்த பிறகே முதல் விமானம் வெற்றிகரமாக பறக்க முடிந்தது. 

போயிங் 787 பயணிகள் விமானம் 

பெரும்பாலும் பயணிகள் விமானத்தில், சாமான்கள் அறை விமானத்தின் கீழ்த் தளத்திலும், பயணிகள் இருக்கை மேல் தளத்திலும் அமைக்கப்பட்டிருப்பது ஏன்?. கீழ்த்தளத்திலிருந்து எடையுள்ள சாமான்களைக் கையாளுவது சுலபம் என்பதோடு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. ஓடு பாதையிலிருந்து விமானம் மேலெழும்பிப் பறக்கத் துவங்கியதும், சக்கரங்கள் விமானத்தின் அடிப்பகுதியில் மடிந்து உள்வாங்கும்.(ஏனெனில், விரித்த குடையுடன் ஓடுவதை விட மடித்த குடையுடன் ஓடுவது சுலபமல்லவா?). விமானம் தரையிறங்கும் போது சக்கரங்கள் வெளிவரும். இயந்திரக் கோளாறினால் சக்கரங்கள் வெளிவராத போது (மிக அரிது), விமானி மிகவும் கவனமாகத் தரையிறக்க வேண்டும். இதை வயிற்றுத் தரையிறக்கம்’ அல்லது சக்கரமில்லாத் தரையிறக்கம்’ என்பார்கள். இப்படித் தரையிறங்கும் போது விமானத்தின் வயிற்றுப்பகுதி ஓடுபாதையில் தேய்ந்து பலத்த சேதமாகும். கீழ்ப்பகுதியில், சாமான்கள் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும் (ஆக, இங்கே ஒருவரின் இறக்கம் இன்னொருவரின் இரக்கத்தை சார்ந்தது). 1986ல், இஸ்லாமபாத் விமானநிலையத்தில் இப்படித் தரையிறக்கப்பட்ட பாகிஸ்தான் விமானத்தில் பயணம் செய்த 264 பேரும் உயிர் பிழைத்தனர் (படம் பார்க்க). விமானி சாதுர்யமாகத் தரையிறக்கினார் என்றாலும் சக்கரத்தைக் கீழிறக்க மறந்தவரும் அவரே.

 

வயிற்றுத் தரையிறக்கம் 

போர் விமானம் சற்று வித்தியாசமானது. இதில் விமானி மட்டும் தான் பயணி. பெரும்பாலான போர் விமானங்களில் ஒரு விமானி தான். பயிற்சி விமானங்களில் இரண்டு விமானி இருக்கைகள் உண்டு. பயணிகள் இருக்கைகள் தேவையில்லாததால், விமானம் மிகச் சிறியதாக இருக்கும். எஞ்சின் விமானத்தின் உடலுக்குள் புதைக்கப்பட்டிருக்கும். விமானத்தின் வயிற்றுப்பகுதி மற்றும் இறக்கைகளின் அடிப்பகுதியில் வெடி குண்டு, ஏவுகணை, கூடுதல் எரிபொருள் தொட்டி முதலியவைகள் பொருத்தப்பட்டிருக்கும். (படம் பார்க்க-F16  ரக போர் விமானம்). போர் விமானத்தின்  மிகச்சிறிய வடிவத்துக்கு முக்கிய காரணம் ரடார்களின் பார்வையில் மண்ணைத் தூவத்தான். 

F16  ரகப் போர் விமானம்

விளையாட்டு மைதானத்தில் வளைந்து நெளிந்து ஓடுகிற ஒரு இருசக்கர வாகனத்தை  துரத்திச் செல்ல வேண்டுமானால் அதன் பின்னால் ஓட வேண்டும் அல்லவா?  ஒரு ஏவுகணையைச் செலுத்தினால் அது வாகனத்தைத் துரத்திச் சென்று தாக்கும். எப்படி? ஏவுகணை, வாகனத்தின் புகைக்குழாயின் வெப்பத்தை அறிந்து தொடர்ந்து செல்லும். வாகனம் எத்திசை திரும்பினாலும் புகைக்குழாய் வெப்பமாகவே இருக்கும், எனவே வாகனம் தப்பவே முடியாது. இதைப் போலவே ‘வெப்ப நோக்கு எவுகணை’ யின் பார்வையிலிருந்தும் விமானம் தப்பிப்பது சிரமம். எனவே தான், போர் விமானத்தில் எஞ்சின் உடலுக்குள் மறைத்து அமைக்கப்படுகிறது. மேலும், விமானிகள்  தீக்கங்குகளை கொளுத்தி வீசி எவுகணையைத்  திசை திருப்பவும் செய்வார்கள். பின்னால் துரத்தி வருகிற எவுகணையிடம் தப்பிக்க விமானத்தை சூரியனை நோக்கிச் செலுத்தத் துவங்குவார்கள். எஞ்சினின் வெப்பத்தை விட சூரியன் அதிக வெப்பமாதலால் ஏவுகணை சூரியனை நோக்கிப் பாயும், விமானம் தப்பிக்கும். 

எடைக் குறைப்பு நடுத்தர வயதினருக்கு மட்டுமல்ல விமானத்திற்கும் பொருந்தும். வலிமையான அதே சமயம் குறைந்த எடையுள்ள அலுமினியம், விமானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலங்களில், இழை வலுவேற்றிய ப்ளாஸ்டிக் கூட (இதனால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டிகளை நீங்கள் கவனித்திருக்கலாம்) விமானப் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. விமான மூக்கு, இறக்கையின் மேல் கீழ் தகடுகள், வால் பகுதி உள்ளிட்ட பாகங்கள் ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப் படுகின்றன. போர் விமானத்தின் பயணத் தூரத்தை அதிகரிக்கக் கூடுதல் எரிபொருள் தொட்டி இறக்கையின் கீழ்ப்பகுதியில் இணைக்கப்படுவதும் உண்டு. முதலில் இத்தொட்டியிலிருக்கிற எரிபொருளைத் தான் பயன்படுத்துவார்கள். போர்க்காலங்களில், துரத்தும் பகை விமானங்களிடமிருந்து தப்பித்து விரைய, விமானத்தின் வேகத்தை விமானி அதிகரிப்பார். மேலும் வேகத்தை அதிகரிக்க எடை குறைப்பில் இறங்குவார். காலியான கூடுதல் எரிபொருள் தொட்டிகளைக் கழற்றி விடுவார். பறக்க வேண்டிய தூரம் குறைவெனில், எரிபொருளில் ஒரு பகுதியையும் வால் பகுதியிலுள்ள குழாய் மூலம் வெளியேற்றி எடை குறைப்பார். 

தரைப் படையிலிருக்கும் இராணுவ டேங்க் போரில் ஈடுபடும் போது வாகன ஓட்டி, கண்காணிப்பவர், ஆயுதம் இயக்குபவர் என ஒரு குழுவாகப் போர் முனைக்குச் செல்வார்கள். ஆனால் விமானி தனியொருவராக விமானத்தைப் பகைவரின் வான் எல்லைக்குள் செலுத்தி, இலக்குகளைச் சரியாகக் கவனித்து, குறி தவறாமல் ஏவுகணை செலுத்தி, அழிக்க வரும் பகை ஏவுகணைகளுக்குத் தப்பி, விலையுயர்ந்த விமானத்தையும் சேதமின்றி காத்து நாடு திரும்பி மீண்டும் அடுத்த தாக்குதலுக்குத் தயாராவார். விமானப் படை விமானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

உசுப்பினால் வெடிக்கக்கூடிய வெடிபொருள் மீதமர்ந்து போர் விமானி இயங்குகிறார் என்பது தெரியுமா? 

(தொடர்ந்து பறக்கலாம்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நிற்பதுவே..பறப்பதுவே!(பகுதி-1)

  1. // பின்னால் துரத்தி வருகிற எவுகணையிடம் தப்பிக்க விமானத்தை சூரியனை நோக்கிச் செலுத்தத் துவங்குவார்கள். எஞ்சினின் வெப்பத்தை விட சூரியன் அதிக வெப்பமாதலால் ஏவுகணை சூரியனை நோக்கிப் பாயும், விமானம் தப்பிக்கும். //

    Dear Author,   Are you sure about this?  Can a pilot escape a heat seeking missile by flying the aircraft towards the sun?!!!!!!!!  Throw some more light on this?  In my view the pilots are trained to fly towards the sun to avoid the visibility of the following aircraft.  But it is an old tactics.  In present day, many modern instruments are there.  By using the instrument flying one pilot can easily follow the aircraft, even the aircraft flies towards the sun! 

  2. It is true that the sun is hotter than the engine of the aircraft.  But the heat seeking missile will seek only for the highest temperature in the near vicinity.  In the air, at high altitudes, the temperature is generally low.  At times, it is sub-zero.  So, even if the pilot flies the aircraft towards the sun, the heat-seeking missile will never miss the heat signature of the engine of the aircraft.

    This is a novel, excellent effort. Please continue! I wish you can share more with our readers! Thank you!

  3. அரிய செய்திகள்; எளிய நடை; அறிவூட்டும் தொடர்.
    மேலும் எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *