ஏற்றத்தின் இனிப்பும் இறக்கத்தின் கசப்பும்

0

சக்தி சக்திதாசன்

sakthidasanமுதலாம் உலகு, இரண்டாம் உலகு, மூன்றாம் உலகு என மேற்குலக நாடுகள் தமது பொருளாதாரத்தின் அடிப்படையில் நாடுகளைப் பிரித்து வைத்தன. காலாகாலமாக இதன் அடிப்படையில் அவர்கள் தத்தமது நாடுகளில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு எவ்விதக் குறைபாடுமின்றி வாழ்க்கையை ஓட்டி வந்தார்கள்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மேற்குலக நாட்டு வங்கிகளின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளினால், சீர்குலைந்த பொருளாதார நிலைமையினால், மேற்குலக நாடுகள் அனைத்தும் ஒரு புது வகையான திசையில் தமது கொள்கைகளை வழிநடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அது மட்டுமின்றி இந்தியா, சீனா போன்ற நாடுகளின் அதீத பொருளாதார வளர்ச்சி, மேற்குலக நாடுகளின் சர்வதேச உறவுகளின் மேம்பாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தினூடு பார்க்கத் தூண்டியது.

அமேரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள், சீனா, இந்தியா போன்ற நாடுகளினுடனான தமது உறவைப் புதிய வகையில் வலுப்படுத்தத் தலைப்பட்டன.

உதாரணத்திற்கு இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால், அதன் பொருளாதாரம், உற்பத்தி ஸ்தாபனங்களின் அடிப்படையில் இருந்து, பராமரிப்புச் சேவையின் அடிப்படைக்கு மாற்றப்பட்டது. மோட்டார் வாகனம், இரும்பு ஆலை, இயந்திரவியல் உபகரணங்களின் உற்பத்தி ஆகியன, சீனா, இந்தியா, பிரேஸில், கிழக்கு ஜரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுக்கு இடமாற்றப்பட்டது.

மூன்றாம் உலக நாடுகள் என்று தம்மால் வருணிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மூலப் பொருட்களைத் தமது நாடுகளுக்கு இறக்குமதி செய்து அதனைப் பாவனைப் பொருட்களாக உற்பத்தி செய்து, மீண்டும் உலகெங்கும் அப்பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த மேற்குலக நாடுகள், அவ்வகை வியாபாரத் தந்திரங்களைக் கைவிடும் நிலை ஏற்பட்டது.

தமது வியாபாரங்களின் கேந்திரத் தளமாகச் சீனா, இந்தியா போன்ற நாடுகளை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மேற்குலக நாடுகளின் வாடிக்கையாளர்களாகச் சீன, இந்திய மக்கள் மாறும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகப் பிரபலமிக்க உற்பத்தியாளர்கள் தமது ஆக்கங்களை இந்திய, சீன மக்களின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் நிலை ஏற்பட்டது.

இத்தகைய ஒரு காலக்கட்டத்திலே தான் மேற்குலக நாடுகளின் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. நான் மேலே சுட்டிக் காட்டிய காரணங்களினால் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் தமது நாட்டு எல்லைகளைத் தாண்டி, உலகப் பொருளாதாரம் என்னும் புதிய வகைப் பரிமாணத்தை எடுத்த காரணத்தினால், மேற்குலக நாடுகளின் பொருளாதாரச் சரிவின் பாதிப்பு, உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையிலேயே இவ்வருUnited_Kingdomடம் மே மாதம் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை ஈட்டி அரசமைக்க முடியாத நிலையில் கன்சர்வேடிவ் கட்சி, டேவிட் கமரன் தலைமையில் லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டாட்சி அமைத்தது.

இக்கூட்டரசாங்கத்தின் முன்னால் இருந்த மிகப் பாரிய பிரச்சனை, இங்கிலாந்து நாட்டின் அரசாங்கக் கடனின் அளவே. ஆமாம், வங்கிகளின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் தோற்றுவித்த பொருளாதாரச் சிக்கல், பல வங்கிகளை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அப்போது அரசிலிருந்த லேபர் கட்சி மக்களின் சேமிப்புகளைக் காப்பதற்காக அவ்வங்கிகளுக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து உதவித் தொகை வழங்கி, அவற்றில் சிலவற்றைப் பகுதிவாரியாகத் தேசிய உடைமையாக்கியது.

அவற்றிற்கான செலவினைக் கடன் பெற்றுத் தாங்கிக்கொண்டது. இந்நடவடிக்கையின் நிமித்தம், இங்கிலாந்தின் தேசியக் கடன், 160 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸை எட்டிப் பிடித்தது.

பதவிக்கு வந்த எந்தக் கட்சியாகினும் அதன் முன்னால் இருந்த முக்கியமான பணி, இக்கடன் தொகையைக் குறைக்கும் திட்டங்களை அமல் படுத்துவதேயாகும். ஏனெனில் அவ்வகையான திட்டங்களை முன்வைக்காவிடில் இங்கிலாந்துத் தேசத்தின் பொருளாதார ஸ்திரத்தில் ஏனைய நாடுகள் நம்பிக்கையிழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது இங்கிலாந்து நாட்டின் வியாபாரச் சந்தர்ப்பங்களை முடக்கி, நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளக்கூடிய அபாயம் இருந்தது.

இந்நிலையில் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம், இக்கடனைக் குறைப்பதற்கு பொதுப் பணித் துறைகளில் அரச செலவீனத்தைக் கடுமையான வகையில் குறைப்பது ஒன்றே இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான திசைக்குத் திருப்பும் என்னும் கொள்கையை முன்வைத்தது. ஆனால் இப்போது எதிர்க் கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட லேபர் கட்சியோ, இக்கடன் குறைப்பு இத்தகைய கடுமையான முறையில் அமல்படுத்தப்பட்டால்  நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று வாதிட்டது.

ஆனால் இங்கிலாந்து நிதியமைச்சர், 2010 அக்டோபர் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களில் , வரும் நான்கு வருடங்காளில் இங்கிலாந்து நாட்டின் தேசியக் கடனை 80 பில்லியன் பவுண்ஸினால் குறைப்பதற்குரிய வகையில் பல பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்தார்.

இத்திட்டம், பணக்காரர் தொடங்கி சாமான்ய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அனைவரையும் தாக்கும் வகையில் உள்ளதால் மிகவும் நியாயமான வகையில் உள்ளது என்பது, அரசாங்கத்தின் வாதம். இத்திட்டங்களினால் தாக்கப்படும் பண்க்காரர்களின் மீதான தாக்கம், நடுத்தர, கீழ்த்தர மக்களின் மீதான தாக்கத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் சாதாரணமானதே என்று எதிர்க்கட்சியினர் வாதிடுகிறார்கள்.

இத்திட்டங்களின் கீழ் 2020இலிருந்து ஓய்வூதியம் பெறும் வயது, 65 இலிருந்து 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல அரசாங்க இலாக்காக்களின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வருகின்ற நான்கு வருடங்களில் அரசாங்க சேவையில் உள்ளோரின் எண்ணிக்கை 4,90,000 இனால் குறைக்கப்படும் என்று அரசாங்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த ஆட்குறைப்பு, இயற்கையாகவே வேலையிலிருந்து ஓய்வு பெறுவோரின் இடத்துக்கு நியமனம் செய்யாதிருப்பது, வேலையிலிருந்து விலகுவோரின் இடத்துக்கு ஆட்களை நியமனம் செய்யாது விடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலமும், வேலையிலிருந்து விலகுவோருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிப்பதன் மூலம் தாமாகவே வேலையிலிருந்து விலகும் மனப்பான்மையை தூண்டுவது என்பனவற்றின் மூலம் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

எப்படியான விளக்கத்தை அரசாங்கம் அளித்தாலும்  4,90,000 பேரின் வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதாரத்திலிருந்து நீக்கப்படுவது, நாட்டில் வேலையற்றோர் பட்டியலை அதிகரித்து, மக்களின் வாழ்க்கையில் ஏழ்மையைத் தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சி வாதிடுகிறது.

மாநகரக் கவுன்சில்களுக்குக் கொடுக்கப்படும் பட்ஜெட் அதீதமாகக் குறைக்கப்ப்பட்டுள்ளதால், கவுன்சில்களினால் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையற்றோருக்கு வழங்கப்படும் உதவிப் பணத்தை மட்டுப்படுத்தி, அவற்றில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சோம்பல்தனத்தினால் வேலை தேடுவதை விடுத்து, அரசாங்கத்தின் உதவிப் பணத்தில் வாழ்வோரை மீண்டும் வேலை செய்யத் தூண்டலாம் என்பது அரசாங்கத்தின் வாதம்.
கடின உழைப்பின் மூலம் மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பது தமது முக்கிய நோக்கம் என்கிறது அரசு.

இக்கட்டுப்பாடுகள் உண்மையிலேயே வேலையற்றுத் தவிப்போரின் மீதான வறுமையைத் தீவிரமாக்கும் என்பது ஒருசாராரின் வாதம்.

எது எப்படி இருப்பினும் நம் அனைவரின் முன்னாலும் தெரியும் பாதை, கரடுமுரடானதாகவே தென்படுகிறது. ஆனால் இப்பயணத்தின் முடிவு, ஒரு பொருளாதார ஸ்திர நிலையை நாட்டில் தோற்றுவிக்குமானால் அந்தப் பயணத்தை மேற்கொள்ள பெரும்பான்மையோர் தயாராகவே உள்ளனர்.

ஆனால் அப்பதையின் முடிவில் பசுமையான எதிர்காலம் தெரிகிறதா?? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும்.

ஏற்றத்தைச் சுவைத்த நாம், இறக்கத்தைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் ஏற்றத் தாழ்வு மனித வாழ்க்கையில் சகஜமே!

===========================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.