தன் தேரஸ்
விசாலம்
தீபாவளிக்கு முதல் நாள் “தன் தேரஸ்” பண்டிகைக்காக வட இந்தியர்கள் எல்லோரும் வியாபரஸ்தலங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். இதை நான் பார்த்து அனுபவித்திருக்கிறேன். தில்லியில் அஜ்மல்கான் ரோடு முழுவதும் மேலே பூப்பந்தல்கள்! அத்துடன் அலங்கரிக்கும் விளக்குகள். அதிலும் சில விளக்குகள், நட்சத்திரங்கள் போல் கண் சிமிட்டி, நாம் இருப்பது தெருவா அல்லது சுவர்க்கமா என்று ஒரே மலைப்பாக இருக்கும்.
அந்தப் பெரிய தெருவில் வாகனங்கள் ஓட்டுவதற்குத் தடை விதித்து விடுவதால் மனத்தில் எங்கே கார் அல்லது ஸ்கூட்டர் வந்து மோதிவிடுமோ என்ற பயமில்லை. ஹாய்யாக நடக்கலாம். மேலேயும் பந்தல் போன்று நல்ல அழுத்தமான மழை பெய்தாலும் நனையாமல் இருக்க கான்வஸ் போன்ற துணியால் அடைத்து விட, அந்த இடம் ஒரு கல்யாணச் சத்திரம் போல் ஆகிறது. தெருவின் நீளமும் சுமார் 2 கிமீ இருக்கும். கூட்டமோ அலை மோதும். அந்தத் தெருவில் நாம் நடக்கவே வேண்டாம். மற்றவர்கள் தள்ள, நாம் ஒரு மாதிரி அங்கு மிதக்கிறோம்.
ஆனால் ஒரு பயம்…….. அலைமோதும் மக்களின் நடுவில் எப்படியோ பலரின் பர்ஸ் அபேஸாகிவிடும். தவிர விஷமிகளின் கூட்டத்தினால் பெண்கள் பலர் அவதிப்படுவார்கள்.
கடைகள் எல்லாம் வியாபாரத்தில் போட்டி போட, நடக்கும் பாதையிலும் கடைகள். கொலுப் படிகள் போல் கட்டப்பட்டு, அதில் பாத்திரங்களை அழகாக விற்பனைக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். வடநாட்டவர்கள் இந்தத் தினத்தில் எதாவது பாத்திரம் வாங்கித்தான் ஆகவேண்டுமாம். அத்துடன் குறைந்தது ஒரு கிராம் தங்கமும் வாங்கிவிடுகிறார்கள். இதில் குஜராத்தி, மராட்டியர்கள் ஆகியோர், முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சாதாரண நிலையில் இருப்பவர்கள், வெள்ளியில் ஏதாவது வாங்குகின்றனர். ஏழைகள் கூட ஒரு எவர்சில்வர் ஸ்பூனாவது வாங்கி, திருப்தி அடைகின்றனர். ஊசியிலிருந்து யானை வரை என்று சொல்வதற்கு ஒப்ப, எல்லாமே அங்கு கிடைக்கின்றன.
இந்த நாளன்று லக்ஷ்மி ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறாள் என்பது நம்பிக்கை. ஆகையால் அவள் வரவுக்காக வாசலில் ரங்கோலி என்ற வண்ணக் கோலங்கள் பெரிய அளவில் போடப்பட்டு, பின் நம் கிருஷ்ண ஜயந்தியில் போடும் சிறு பாதங்கள் போல் ஸ்ரீ லட்சுமியின் சிறு பாதங்களும் கோல மாவினால் போடப்படுகின்றன. பின் மலையிலேயே விளக்குகள் ஏற்றப்பட்டு, விடிய விடிய அவை அணையாமல் பாதுகாக்கபடுகின்றன. இந்த ஒளிக்குத் தனிப்பட்ட சக்தி வந்து, தீய சக்திகளை விரட்டிவிடுகிறது என்ற நம்பிக்கை.
இந்த நன்நாளன்று தான் தன்வந்திரி தோன்றியதால் ஆயுர்வேத சிகிச்சையளிக்கும் எல்லா இடங்களிலும் தன்வந்தரி பூஜையும் நடக்கிறது. தவிர பெரிய நிறுவனங்களிலும் தன்வந்தரி பூஜை, லக்ஷ்மி – குபேர பூஜை என்று நடக்கிறது.
புராணக் கதையைச் சொல்ல வேண்டாமோ?
மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாகக் கொண்டு அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைந்த போது, நடுவில் மந்தார மலை சாய்ந்து ஆட்டம் கண்டது. மஹாவிஷ்ணு கூர்மவதாரம் எடுத்து, பாற்கடலுக்குள் சென்று, அதைத் தூக்கிப் பிடித்துச் சரிசெய்தார். பின் கடைய, பல பொருட்கள் வெளிவந்தன. அதில் உச்சைசரஸ் என்ற குதிரை, காமதேனு, கற்பகத் தரு, அப்சரர்கள் என்று வந்த பின் மிக அழகுடன் ஜ்வலிப்புடன் தோன்றினாள் லக்ஷ்மி.
தாமரையில் வீற்றிருந்தாள். தாமரை மாலை அணிந்திருந்தாள். இரு யானைகள் இரு பக்கமும் கங்கை நீரைத் தும்பிக்கையால் தெளிக்க, அவள் “கஜ லட்சுமி” ஆனாள். பாற்கடலில் தோன்றியதால் “க்ஷீராப்த புத்திரி”. அதாவது சமுத்திர தனயா ஆனாள்.
சமுத்திரராஜன் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுடன் பட்டு வஸ்திரங்கள் அளித்தான். மஹாலட்சுமியின் வருகை, அந்த இடத்தையே ஒளிமயமாக்கியது. தேவர்கள் மலர் தூவ, மகாலட்சுமியின் கண்கள், மஹாவிஷ்ணுவைப் பார்க்க, தன் கழுத்தில் இருந்த தாமரை மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். பின் மஹாவிஷ்ணுவிடம் இணைந்தாள். இதனாலேயே இந்நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதைத் தவிர தன்வந்திரி, அமிருத கல்சத்துடன் தோன்றிய நாளும் இதுவேதான். ஆகையால் பல நிறுவனங்கள், ஆயுர்வேத மருத்துவ சாலைகளில் தன்வந்தரியின் பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது.
இன்னொரு முக்கிய சம்பவமும் இதனுடன் சேர்கிறது. அதுதான் யம தீபம். யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்கிறான். யமுனையும் மனம் மகிழ்ந்து, சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.
இன்னொரு கதை. ஹிமா என்ற இளவரசனின் ஜாதகம் பார்த்து, அதில் அவன் கல்யாணம் ஆன நான்காவது நாள் மரணமடைவான எனத் தெரிய வர, அவனின் பெற்றோர்கள் மிகுந்த கவலையுற்றனர். திருமணம் ஆனவுடன் இதைப் பற்றி அறிந்த அவனது மனைவி, அந்த நான்காவது நாளில் வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றிவைத்து, தன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி, ஒரு குவியலாகச் சேர்த்து, கண் விழித்து கடவுளை நெஞ்சுருகப் பஜனை செய்துகொண்டிருந்தாள். அப்போது யமன், பாம்பின் ரூபத்தில் வந்தான். அந்த இடம் விளக்குகளினால் மிகவும் பிரகாசமாகி, பாம்பின் கண்களைக் கூச வைத்தன. அதனால் தங்க நகைகளின் குவியலுக்குள்
புகுந்து அமர்ந்தது. அமர்ந்தபடியே பஜன் கேட்டபடியே தன்னையே மறந்ததாம். காலையில் வந்த வழியே அது போய்விட்டது. அந்த இளம் மனைவி, தன் கணவனை மரணப் பிடியிலிருந்து காத்துவிட்டாள்.
இந்தக் கதையைக் கொண்டு, அன்று தீபம் ஏற்றி, யமனையும் பூசிக்கின்றனர். இதுவே யம தீபம். இன்னும் பல விஷயங்கள், தீபாவளிப் பண்டிகையில் சொல்லிக்கொண்டே போகலாம்.
அன்பர்கள் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
Really useful tips; Good work