பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 10

0

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

2010 அக்.25 அன்றைய வல்லமையில் வெளியான வெ.ஜனனியின் கேள்விகளை அண்ணாகண்ணன் சற்றே திருத்தி, எழுப்பிய புதிய கேள்விகள்:

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க் குடியைப் போற்றும் வசனத்தை எழுதியவர் யார்? இதை அறிவியல்பூர்வமாக ஆய்ந்திட முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ் இனத்தின் பழமையைப் பெருமையுடன் சுட்டும் இந்தத் தொடரை எழுதிய இலக்கிய அல்லது இலக்கண உரையாசிரியர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இது தமிழ் இனம் உலகின் மற்ற இனங்களை விடக் காலத்தால் முந்தியது என்று கூறும் வரி. ‘குரங்கிலிருந்து வந்த முதல் மனிதன் தமிழனே’ என்று புதுமைப்பித்தனைக் கிண்டலடிக்க வைத்த வரி.

இதன் கருத்தை அறிவியல்பூர்வமாக நோக்க இதன் நேர்பொருளை முதலில் பார்க்க வேண்டும். பூமி தோன்றியபோது பாறையாக இருந்தது; பின்னால் பாறை மண்ணாகியது; இப்படி மாறுவதற்கு முன்னாலேயே தமிழ்க் குடி கருவிகளைச் செய்து நாகரிகத்தில் முன்நின்ற குடி என்று பொருள்கொண்டால், அது புவியியல் அறிஞர்களின் முடிவுக்கு முரணானது. பூமி தோன்றியபோதே கல்லும் மண்ணும் நீரும் இருந்தன. பூமியில் உயிர் தோன்றுவதற்கு முன்னாலேயே இவை இருந்தன.

மனித வரலாற்றில் கற்கருவிக் காலத்திற்குப் பிறகு வரும் செம்புக் கருவிக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை பொது யுகத்திற்கு முன்னால் (BCE) 3300இல் துவங்கியது என்பார்கள். செம்புக் காலத்திற்குப் பின் வந்த இரும்புக் கருவிக் காலம் இங்கே பொது யுகத்திற்கு முன்னால் 1800இல் துவங்கியது என்பார்கள். இந்த இரண்டு கால வரையறைகளுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது இந்துவெளி நாகரிகம். இரும்புக் காலம், இந்துவெளி நாகரிகத்தின் இறுதிப் பகுதியில் துவங்கினாலும், ஆரியர்களின் வேத காலத்திலேயே அது விரிவடைகிறது.

கேள்வியில் உள்ள தொடரில் உள்ள வாள் செம்பால் செய்யப்பட்டதென்றால், அதில் ‘கல் தோன்றி மண் தோன்றா’ என்ற பகுதியை அர்த்தமற்றது என்று விட்டுவிட்டால், இந்தத் தொடர் இந்துவெளி நாகரிகத்தை உருவாக்கிய குடியைக் குறிக்கிறது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்துவெளி நாகரிகத்தின் இருப்பு உலக அறிவிற்கு வந்தது, காலனிய காலத்தில். இந்தத் தொடர் காலனிய காலத்திற்கு முற்பட்ட புலவனால் எழுதப்பட்டது என்றால், அந்த அறிவு, தமிழ்க் குடியின் கூட்டு நினைவைச் (collective memory)சேர்ந்ததா என்ற கேள்விக்கு விடை வேண்டும். இதற்கு விடை காண்பது எளிதல்ல.

இந்தத் தொடர், இந்துவெளி நாகரிகக் குடியைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் குடி எது என்பது மற்றொரு கேள்வி. அது திராவிடக் குடி என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், அது தமிழ்க் குடி என்று சொல்லத் தடையாக, இந்துவெளி நாகரிகத்தின் இறுதிக் காலத்திற்கும் சங்க இலக்கியமும் பிராமிக் கல்வெட்டுகளும் காட்டும் தமிழ் நாகரிகத்தின் துவக்கக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியில் தமிழ்க் குடி இருந்ததா, இருந்தால் இரண்டுக்கும் உறவு தொடர்ச்சியாக இருந்ததா என்ற கேள்விக்கு விடை சொல்ல ஆதாரம் வேண்டும்.

ஒப்பிலக்கண ஆய்வின்படி, பழந்தமிழோடு நெருங்கிய ஒரு பேச்சுமொழி அந்தக் காலக்கட்டத்தில் இருந்தது; அதற்குத் தமிழ் என்ற பெயர் இலக்கியம் எழுதப்பட்ட பின் வந்தது, ஆனால் இந்துவெளி நாகரிகம் போல் அந்தத் தமிழ்க் குடியிடம் நகர நாகரிகம் இருந்ததற்கு அகழாய்வுச் சான்று இல்லை. ஐராவதம் மகாதேவன் சங்க இலக்கியத்தில் வரும் பொறையன் என்ற அரசர் குடிப்பெயரும் அண்மையில் தமிழகத்தில் அகழ்ந்தெடுத்த இந்துவெளி எழுத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சிறுகோடரியும் உறவுத் தொடர்ச்சிக்கு ஆதாரம் என்று சொல்கிறார். இந்த ஆதாரங்கள் இன்னும் சர்ச்சைக்கு உரியவையாக இருக்கின்றன.

கேள்வியில் உள்ள தொடரில் உள்ள ‘வாள்’ செம்புக் கருவிக் காலத்தைச் சுட்டுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், தமிழ்க் குடி மனிதக் குடிகளில் மூத்த குடி என்று சொல்வது தவறாகும். பொதுயுகம் 3000இலேயே சுமேரிய, பாபிலோனிய, அசிரிய நாகரிங்களின் பிறப்பிடமான மெசபடோமியா பகுதியில் செம்புக் கருவிகள் செய்யப்பட்டன.

கேள்வியில் உள்ள தொடர், இன்று பல தமிழ் ஆர்வலர்களிடம் இருப்பது போல், அறிவியல் அடிப்படையில் அல்லாமல், தமிழுக்குப் பழமைத் தகுதி தரும் ஆசையால் சொல்லப்பட்டதாகவும் இருக்கலாம். இதுவே என் கருத்து.

தமிழர்களுக்குப் பழமையை நிலைநாட்டுவதில் உள்ள ஆர்வத்தைத் தமிழுக்குப் புதுமையைக் கொண்டு வருவதில் காட்டினால் தமிழ் வளரும்.

=========================

இலக்கியம் மூலம் பருவ நிலை, சுற்றுச் சூழலை பற்றிப் புரிதல் பெற முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

இலக்கியம் அது எழுதப்பட்ட காலத்தின் பருவநிலை, சுற்றுச் சூழல் முதலியன பற்றிப் பேசலாம். ஆனால் அது அறிவியல் அடிப்படையில் இருக்கும் என்பதில்லை. அவை பற்றிய சமூகப் பார்வை இலக்கியத்தில் இருக்கும்.

பழைய இலக்கியத்தில் இக்கால எண்ணப் போக்கையும் மதிப்பீடுகளையும் தேடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய சிந்தனைகளை அன்றைய இலக்கியத்தின் மீது ஏற்றிப் பார்ப்பது கால முரண் ஆகும். இது பெண்ணுரிமை, மனித உரிமை, பொதுவுடைமை, மக்களாட்சி போன்ற சமூகம் சார்ந்த கருத்தியல்களுக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு சமூகத்தின் சிந்தனைப் போக்குகள் காலத்துக்குக் காலம் மாறும். அவற்றுக்குப் பழமைத் தொடர்ச்சி இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். இக்காலச் சிந்தனைகள் எல்லாமே பழைய இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன என்பது பழமையைக் கொண்டாடுவதற்கோ. புதுமையின் ஏற்பைக் கூட்டவோ பயன்படலாம். ஒரு இலக்கியத்தை அதன் காலச் சமூகத்தின் பின்புலத்தில் பார்க்கப் பயன்படாது. எல்லாக் காலத்திற்கும் ஏற்ற திருக்குறளுக்கும் இது பொருந்தும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி மாறவில்லை என்று சொல்வது போல், தமிழ்ச் சிந்தனையும் மாறவில்லை என்று நினைப்பதில் பெருமை இல்லை. இரண்டும் வளர்ந்து வந்தவை; இன்னும் வளர்ந்துகொண்டிருப்பவை.

=========================

தமிழில் உருவாக்க வேண்டிய புதிய ஆய்வுக் களங்கள் யாவை?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

புதிய ஆய்வுக் களங்களுக்கு ஒரு எல்லைக் கோடு இல்லை. தமிழ் வழங்கும் சமூகத்தில் நேரும் அமைப்பு மாற்றங்களால், அதனாலும் பிற உலகின் தொடர்பாலும் ஏற்படும் சிந்தனை மாற்றங்களால் புதிய ஆய்வுக் களங்கள் தோன்றும். இது தகவல் தொழில்நுட்பச் செயல்பாட்டிற்குத் தமிழ் தன்னைத் தகுதி ஆக்கிக்கொள்ளச் செய்யும் ஆய்வு மட்டுமன்றி, சாதி பற்றிய சமூகவியல் ஆய்வுக்கும் பொருந்தும். புதிய ஆய்வுக் களங்கள் தோன்றுவதோடு பழைய ஆய்வுக் களங்களில் புதிய பார்வை விழுவதும் வரையறை அற்றது.

என் கருத்துப்படி, தமிழ் மீதான ஆய்வுக் கவனம் தமிழின் பழமையையும் மாறாமையையும் நிலைநாட்டுவதிலிருந்து தமிழ் மொழியும் இலக்கியமும் கலாச்சாரமும் சமூகமும் எப்படிக்  காலந்தோறும் வந்த மாற்றங்களை உள்வாங்கின, இன்று எப்படி உள்வாங்குகின்றன என்னும் ஆய்வுக்கு விரிவடைய வேண்டும். இந்த ஆய்வு, எப்படி தமிழ் உயிருள்ள மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகள் தன்னைக் காத்துகொண்டது என்று காட்ட வேண்டும்.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *