நிலவொளியில் ஒரு குளியல் – 1

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

=====================================================================
எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பு:

Srija_Venkateshஸ்ரீஜா வெங்கடேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. தற்போது ‘நாடக உலகில் பெண்களின் பங்கு மற்றும் நிலை’ என்ற தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், இப்பொழுது தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார்.

இவருக்கு இது வரை ஆறு முழு நீள நாடகங்கள் எழுதி, இயக்கிய அனுபவம் உண்டு. அவற்றில் ‘N.R.I’ என்ற நாடகம் ஷதாப்தீர கலாகார் என்ற ஒரிய கலை மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இருபத்து மூன்றாவது அகில இந்திய நாடக விழாவில் தமிழ் நாடகமாக இடம் பெற்றது. மற்றுமொரு நாடகமான ‘சங்க இலக்கியத்தில் நட்பு’ (இருமொழி), உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் மேடையேற்றப்பட்டது.

இவை தவிர  பிரபலமான  ஐந்து ஒரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை (மொத்தம் 5 கதைகள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அனுபவமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் இலக்கிய உலகில் தன் பெயரும் இடம் பெற வேண்டும்  என்பதே இவரின் லட்சியம். வல்லமை.காமில் ‘நிலவொளியில் ஒரு குளியல்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுத உள்ளார்.

=====================================================================

கல்யாணப் பெண் ஒருத்தியின் பெற்றோர், கல்யாணத்திற்குத் தேவையான  பணம் புரட்ட முடியாத சூழ்நிலையில் ஊரை விட்டே ஓடிவிட்டதாகவும் அதனால் அப்பெண்ணின் திருமணமே நின்று விட்டதாகவும் சமீபத்தில் கேள்விப்பட்டேன். இது போன்ற செய்திகள் தினம் வந்து கொண்டிருந்தாலும் என் மனம் மிகவும் சங்கடப்பட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழ்நிலையை ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் என் கிராமத்தில்  ஒரு குடும்பம் சந்தித்தது. ஆனால் இன்று போலில்லாமல் அன்று திருமணம் நல்லபடியாக நடந்தது. சொல்கிறேன்.

நான், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அது, பக்கத்துக் கிராமமான கடையத்தில் இருக்கும் என் பாட்டி வீ்டடிற்கு வந்திருந்தேன். பந்தல் போட்டு, வாழை மரம் கட்டி, கல்யணத்திற்கான கட்டியம் கூறியது, எதிர் வீடு. ஒரு ஏழைப் புரோகிதரின் ஒரே மகளின் திருமணம். நான் போயிருந்த நேரம், கல்யாணத்திற்கு மூன்று தினங்களே இருந்தன. புரொகிதரும் அவர் மனைவியும் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் அல்லது அப்படி எல்லொரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

கல்யணத்திற்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் நகை வாங்க என வீட்டிலிருந்து கிளம்பியவர்கள்தான், திருமணத்திற்கு முதல் நாள் மாலை வரை திரும்பவேயில்லை. எங்கே இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? என எந்தத் தகவலும் இல்லை.

மாப்பிள்ளை வீட்டார் வேறு வரத் தொடங்கிவிட்டனர். மணப்பெண்ணின் நிலையோ மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. எல்லோருக்கும் ஒரே பதற்றம். அப்போது தான் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஒன்று கூடிப் பேசி, கல்யாணத்தை எப்படியாவது நடத்திவிடுவது என ஒரு மனதாகத் தீர்மானித்தனர்.

அதன் பிறகு அவரவர்க்குரிய வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, காரியங்கள் மளமளவென நடந்தன. சிறுவர்களுக்கு வீடு வீடாகச் சென்று மளிகை சாமான் சேகரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தபடி ஒரு உருண்டை புளியாவது கொடுத்தனர். தோட்டங்களிலிருந்து காய்கறிகள், பழங்கள் குவிந்தன. ஊர்ப் பெரியவர்கள், மாப்பிள்ளை வீட்டாரிடம் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களும் சம்மதித்துவிடவே, எல்லோருடைய உற்சாகமும் கரை கடந்தது.

தெருப் பெண்மணிகள் அனைவரும் சேர்ந்து சமையல் ஏற்பட்டைக் கவனித்துக்கொண்டனர். ஏழை – பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பெண்களும் சமையல் வேலையில் ஈடுபட, ஆண்கள் பணம் புரட்டுவதில் இறங்க ஊரே அமர்க்களப்பட்டது.

கதையை வளர்த்துவானேன்? கல்யாணம் நல்லபடியாக முடிந்து, பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்தனர்.

இந்த விஷயத்தில் யாருடைய பெருந்தன்மையைப் பாராட்டுவது? இன்று வரை அப்பெண்ணின் பெற்றோர் எப்போது வந்தனர்? எந்தக் காரணத்தால் திருமணம் நிற்கும் அபாயம் தெரிந்தும் வராமல் போனார்கள்? திரும்பி வந்ததும் ஊர்க்காரர்கள் அவர்களை எப்படி ஏற்றுக்கொண்டனர்? என்ற இது போன்ற பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியாது. அவை ஒன்றும் முக்கியமானவையாகவும் தோன்றவில்லை. எங்கள் கிராம மக்களின் ஒற்றுமையான நிலைப்பாடும் உண்மையான ஒத்துழைப்புமே என்னை வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இது போன்ற ஒரு நிகழ்ச்சி, அக்கம் பக்கத்தவரின் பெயர் கூடத் தெரியாத இந்த காலக்கட்டத்தில், கிராமங்களில் கூட சாத்தியமா? அப்படியே ஒரு அதிசயம் போல எல்லோரும் ஒன்று படுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். பேசியபடி நகையும் பணமும் இல்லாமல், பெண்ணின் பெற்றோர்களும் இல்லாத நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்திற்குச் சம்மதித்து இருப்பார்களா?

முப்பது வருடங்களுக்கு முன் நம்மிடம் இருந்த மனித நேயத்தை எப்போது காணாமல் போக்கினோம்? எந்தச் சமயத்தில் நம்முடைய வேர்களைத் தொலைக்க ஆரம்பித்தோம்? எப்போது தனித் தனித் தீவுகளாக வாழ ஆரம்பிதோம் என்பதே நமக்குத் தெரியவில்லையே.

முன்னேற்றம் அதிகமாக இல்லாவிட்டாலும் மனிதர்கள், மனிதர்களாக வாழ்திருந்த அந்த இனிய காலத்தை நினைத்துக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 1

  1. A nice real life story; It has stressed the fact that we have to live together in the society rather than like isolated compartments; My sincere wishes to the author to write more and more articles dealing with the current social issues

  2. I liked this incident very much which we can not imagine in our life. Really, this incident gives us meaning for ‘HUMAN VALUES’. This give me a lesson how to behave in our socieity as a responsible citizen. If everybody understands and acts upon this incident our society will definitely improve.

  3. The title name itself is very good (Bath in moonlight); Good beginning by the writer; A lesson to be understood by the people who are selfish and stay isolated;

  4. Really astonishing happening 30 years ago in a village in tamil nadu. After reading this article I will atleast try to understand about my neighbours. I am presently residing in an apartment and do not even know many of my neighbours in the same apartment. Atleast now I will start to behave like a real human being with soft cornered heart and take part in all social gathering as an active member.

  5. Panam, Pugazh yenra peyaril uravugalayum uttraargalayum marakkirom.. Nalla aarambham.. vazhtukkal..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.