பேரின்பம்
தமிழ்த்தேனீ
எத்தனையோ பேர் வந்து போகும் இடம். ஏறக்குறைய சத்திரம் மாதிரி. ஆமாம் அவள் தொழிலே வரும் ஆண்களை மயக்கி அவளோடு சல்லாபம் செய்ய வைத்து, அதிக பணத்தை அவர்களாகவே அள்ளிக் கொடுக்க வைப்பதுதான். அப்படிப் பழக்கி இருந்தார்கள் அவளை. அவள் இருக்கும் வீட்டின் தலைவி கல்யாணி இவளைத் தனியாக அழைத்து, ”இன்று இரவு ஒருவர் வரப் போகிறார். நல்ல பசையுள்ள பார்ட்டி. நீ நடந்துக்கறதைப் பொறுத்து இருக்கு நம்ம வருமானம். அவருக்குப் பிடிச்சுப் போச்சுன்னா அவரே உன்னோட பர்மனண்ட் கஸ்டமராக் கூட இருப்பாரு. பாத்து நடந்துக்கோ” என்று திருமணம் ஆன புதிதில் திருமணப் பெண்ணுக்குச் சொல்வது போல் சொன்னாள். ”சரிம்மா, நான் பாத்துக்கறேன்” என்றாள், சிரிப்புடன் ரஞ்சிதா.
ஆனால் அன்று வந்தவரைப் பார்த்து அதிர்ந்தாள் ரஞ்சிதா!
************ ************* **************
பருவம் வந்து, அந்தப் பருவம் அவளைப் பொல்லாத பாடு படுத்திக்கொண்டிருந்த நேரம். எதைப் பார்த்தாலும் சந்தேகமும், ஆனால் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அவளைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அவள் வனப்பு, அவளுக்கே ஒரு கர்வத்தை ஏற்படுத்தியது. அடிக்கடி நிலைக்கண்ணாடி முன் நின்று யாரும் அறியாமல் ரகசியமாய் அவள் வனப்பை அவளே ரசித்துக்கொண்டிருந்த யௌவனம், ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள் அளித்த சந்தேகங்களும், அவற்றைத் தெளிவு செய்துகொள்ளத் தகுந்த தோழி கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபமும் அவளை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் யாரையும் நம்பி அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள அவள் மனம் இடம் கொடாத அவஸ்தை, அப்படிப்பட்ட நேரத்தில்தான் அவனைச் சந்தித்தாள். அப்படிச் சொல்வதை விட அவன், அவளைச் சந்தித்தான் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
கல்லூரிக்குப் போவதற்காக வாசலுக்கு வந்து, “அம்மா நான் போயிட்டு வரேன்“ என்று கூறி விட்டு, வாசற்படியை விட்டு அவள் தெருவில் இறங்குவதற்கும், அந்த மோட்டர் பைக் அவள் மீது வந்து இடிப்பது போல் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது. “பாத்து வாங்க, எங்கேயோ பராக்கு பாத்துண்டே ரோட்டிலே நடக்கக் கூடாது“ என்றான். அந்த மோட்டர் பைக்கில் ஸ்டைலாய் உட்கார்ந்திருந்த அவன், “ஏன் நீங்க பாத்து ஓட்ட மாட்டீங்களோ? கொஞ்சம் ஏமாந்திருந்தா, என்னைக் கீழே தள்ளி விட்டிருப்பீங்களே“ என்றாள் பதற்றத்துடன்.
“அட, எத்தனையோ நாளா உங்களையே பாத்துக்கிட்டே இருக்கேன். உங்களுக்கு இப்பிடி பேசக் கூடத் தெரியுமா? இனிமே பாத்து ஓட்றேன். சாரி“ என்று சொல்லிவிட்டு ஒரு புன்சிரிப்புடன் பைக்கைக் கிளப்பி, விர்ரென்று போனான். அவள் நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவன் சொன்ன வார்த்தை, அவளுக்கு நினைவு வந்தது. ‘இவன் ஏன் என்னை எத்தனையோ நாளாக் கவனிக்கறான்..‘ என்று மனம் குறுகுறுத்தது.
அதற்காகவே அவன் மோட்டார் பைக்கின் சைலன்ஸரைக் கழற்றிவிட்டு, அவள் தெருவில் அடிக்கடி வருகிறான் என்பது அவனுடைய சுழலும் விழிகளில் தெரிந்த போது, முதலில் கோபம் வந்தது. பிறகு ஆர்வம் வந்தது. ஒருவித மயக்கம் வந்தது. அன்றிலிருந்து அவன் மோட்டார் பைக்கின் சத்தம் அடிக்கடி கனவில் வந்தது, படபடபடவென்று அவனுடைய மோட்டார் பைக் சத்தம் கேட்க ஆரம்பித்தாலே மனது படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. அந்த மோட்டார் பைக் சத்தம், அவள் வாழ்வில் எப்போதும் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கப் போகிறது என்பதை உணராதவளாய் அவள் அவனுடைய வலையில் மெல்ல மெல்ல விழுந்து கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவள் நடந்து போகும்போது, அவளைக் கடந்து அவன் பைக் சென்றது. அவன் பார்வை, அவள்மேலே உரசிவிட்டுச் சென்றது. யாரோ ஒருவர், “இந்தப் பையன் ஏன் இப்படி தாறுமாறா வண்டி ஓட்றான்? அந்தக் கடைசீ வீட்டுலே இருக்காங்களே. அந்தக் கல்யாணி அம்மா பையன் ரமேஷ். ஒருநாள் அந்தம்மா கிட்ட சொல்லணும்“ என்றபடி பேசிக்கொண்டே போனார்கள்.
கல்லூரியில் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் போதும் அவன் நினைவு, மாணவர்களின் கரகோஷம் இவளை நினைவுக்குக் கொண்டு வந்தது. “புதிதாக வந்திருக்கும் லெக்சரர் இவர். இவர் பேரு கேசவன். நாளையிலேருந்து இவர்தான் உங்களுக்கு வகுப்பு எடுப்பார். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி“ என்றபடி விடைபெற்றார் பழைய லெக்சரர்.
“வெல்கம், வெல்கம்” என்று கோரஸ் பாடினர் மாணவர்கள். அந்த வரவேற்பைச் சிரித்த முகத்துடன் ஏற்ற கேசவன், அறிமுகம் முடித்து, “இன்னிக்கு முதல் நாள். அதுனாலே ஒரு சின்ன பாடம் மட்டும் சொல்லிக் குடுத்துட்டு, உங்களை விட்டுடறேன்“ என்று ஆரம்பித்து, “வேதியியலில் முதல் பாடம் இதுதான், எந்த ஒரு ரசாயனத்தையும் நாம உபயோகிக்கிற புயூரெட்டொ, பிப்பட்டொ, அதுலே நாம கலக்கறதுக்கு உபயோகிக்கிற கண்ணாடிக் குச்சியை நல்லா கழுவி அதுலே பழைய ரசாயனத்தின் சிறு துளிகூட இல்லையான்னு பாத்துட்டுதான், இன்னொரு ரசாயனத்திலே போடணும். இது மிக முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இன்னிக்கு. இது போதும். நான் இப்போ லாபுக்குதான் போறேன். கெமிஸ்ட்ரீலே ஏதாவது சந்தேகம் இருந்தா லேபிலே வந்து என்னைக் கேக்கலாம்“ என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அன்று கல்லூரி வாசலில் இவளுக்காக காத்திருந்த ரமேஷைப் பார்த்ததும் திகீரென்றது ரஞ்சிதாவுக்கு. ஆனால் ரமேஷ் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.இவளையும் ரமேஷையும் நோட்டம் விட்ட சக மாணவிகள், நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தனர்.
மறு நாள் கல்லூரியின் உள்ளே அவள் படிக்கும் அறைக்கே வந்து வாயிலில் நின்ற ரமேஷைப் பார்த்ததும் பயந்தே போனாள் ரஞ்சிதா. ஆனால் ரமேஷ் அந்த கெமிஸ்ட்ரி லெக்சரரிடம் அனுமதி பெற்று, அவர் அருகே சென்று, அவர் காதில் ஏதோ சொன்னான். தொண்டையை செருமிக்கொண்ட லெக்சரர் கேசவன், “ரஞ்சிதா இவர் பேரு ரமேஷ். இவர் உங்க வீட்டுகிட்டதான் இருக்காராம். உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதுனாலே உன்னை அழைச்சிட்டுப் போகணுன்னு சொல்றாரு. உங்களுக்கு இவரைத் தெரியுமா?” என்றார். “தெரியும்” என்று தலையாட்டினாள். “அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்கிற கலவரத்துடன், “சரி நீங்க இவரோட போங்க. ஒண்ணும் கவலைப் படாதீங்க” என்றார் கேசவன்.
ரஞ்சிதா தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவர்கள் இருவரும் ஜன்னல் பக்கம் வரும்போது, வகுப்பின் உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. “கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிடிச்சு” என்று சிலர் சிரிக்கும் சத்தமும் கேட்டது.
ரமேஷுடன் வீட்டுக்கு வந்த போது அங்கே தெருவே கூடியிருந்தது. சுனாமியாய் அடித்துப் போட்டது விதி அவளை. ஆமாம் எந்த ஒரு நோயும் இல்லாமல் கலகலப்பாக வளைய வந்துகொண்டிருந்து, அந்த வீட்டின் ஜீவ நாடியாகவே திகழ்ந்த அவள் அம்மா, திடீரென்று மாரடைப்பால் இறந்து கிடந்தாள். ரஞ்சிதாவைத் தேற்றி, அவள் அம்மாவின் உடலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, எல்லா ஏற்பாட்டையும் ரமேஷ் கவனித்துக்கொண்டான். எல்லாச் சடங்குகளும் முடிந்து வெறுமை அவளைத் தாக்கியபோது அவள், ரமேஷின் தோளில் தஞ்சமடைந்தாள். அவளுக்குத் தெரியாது, ரமேஷின் அம்மா என்று அழைக்கப்படும் கல்யாணி அம்மா, ஒரு தொழில்காரி என்று. ரமேஷ், ரஞ்சிதாவை அவன் வீட்டுக்கு அழைத்துப் போனான்.
************ ************* **************
தன் அதிர்ச்சியிலிருந்து மீண்ட ரஞ்சிதா, எதிரே உட்கார்ந்திருந்த வேதியியல் விரிவுரையாளர் கேசவனை ஏறிட்டுப் பார்த்தாள். கேசவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. “ஏன் சார், நீங்க இது மாதிரி இடத்துக்கு வந்தீங்க?“ என்றாள். “இதுதாம்மா முதல் முறை” என்று ஒரு கூச்சத்துடன் சொன்னார் கேசவன். அவளையே பார்த்துக்கொண்டிருந்த கேசவன், “என் வாழ்க்கையிலே அன்புங்கற கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகலைம்மா. என் மனைவி குழந்தைங்க எல்லாரும் என்னை வெறுக்கறாங்க. காரணமே இல்லாம, அதுனாலேதான் நான் ஒரு ஆறுதலுக்கு… சரி, ஒரு மாறுதலுக்கு இங்கே வந்தேன்” என்றார்.
அவருக்குக் காப்பி பிடிக்குமா என்று கேட்டுவிட்டு ரஞ்சிதா, பாலையும் டிகாஷனையும் கலந்து, சர்க்கரை போட்டு ஸ்பூனால் கலக்கினாள். அந்த ஸ்பூனை வாஷ் பேசினில் கழுவி, தன்னுடைய தேநீர் இருக்கும் கோப்பையில் போட்டு அதையும் கலக்கினாள்.
“ஆமா எனக்கு ஒரு சந்தேகம், காப்பியைக் கலக்கின அதே ஸ்பூனாலே தேநீரைக் கலக்கினா என்ன ஆகும்?” என்றாள்.
“கூடாதும்மா. கெமிஸ்ட்ரீலே நான் சொல்லிக் குடுக்கற முதல் பாடமே அதுதான். நமக்குத் தெரியாது, விளைவுகள் எப்பிடி இருக்கும்னு. ஆனா ஒண்ணு ஏதோ ஒண்ணு அதோட தூய்மையை இழக்கும்” என்றார்.
மௌனமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சிதா, “பின்ன ஏன் சார் இங்கே வந்தீங்க?” என்றாள்.
திடுக்கிட்ட கேசவன், சற்று நேர மௌனத்துக்குப் பின், “இனிமே இங்கே மட்டுமில்லே. வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன்” என்று கூறிவிட்டு, அவள் அருகே வந்து “நீ உன்னை என் பொண்ணுன்னு சொல்றதா? இல்லே அம்மான்னு சொல்றதான்னு தெரியலை” என்று கூறிவிட்டு அவள் நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு வெளியே போனார்.
அய்யா மன்னிக்க வேண்டும். ஏனோ இது போன்று பெண்களைப் போகப் பொருளாகவும், தாசியாகவும் சித்தரிக்கும் கதைகள் சங்கடப்படுத்துகின்றன…………..
பவளசங்கரி அவர்களே தற்போது இருக்கும் சில பெண்கள் விபரீதம் தெரியாமல் சிலரின் வலையிலே வீழ்ந்து கெட்டுப்போகும் நிலையை எண்ணி அப்படிப்பட்ட பெண்களைப் பற்றி மனம் வருந்திதான் இந்தக் கதையே எழுதினேன், அப்படி தான் கெட்டுப்போனாலும் ஒரு நல்ல மனிதரின் மனதை மாற்றி மனப்பக்குவத்தை ஏற்படுத்தி அவரை தூய்மையாக அனுப்பி வைக்கிறாள் என்பதை வலியுறுத்தும் வண்ணமே எழுதினேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்பு தமிழ்த்தேனி இன்றும் உலகில் பல பெண்கள் சந்தர்ப்பவசத்தினால் இந்த வலையில் விழுந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள் .மும்பயிலும் கல்பாதேவி என்ற இடத்தில் பல
பெண்களுடைய சோகக்கதை ஒளிந்துக்கொண்டிருக்கிறது
கதையின் முடிவில் ஒரு திருப்தி