(சிகாகோவிலிருந்து)
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஎல்லா நாடுகளிலும், குறிப்பாக வளர்ந்துவிட்ட நாடுகளில், மனிதனின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 2008-ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைகள் 81 ஆண்டுகளும் பையன்கள் 75 ஆண்டுகளும் வாழ்வார்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே முதன் முதலாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகியிருக்கிறதாம். ஆயுள் நீட்டிக்கப்பட்டிருப்பதோடு மனிதனின் உடல் ஆரோக்கியத்திலும் இப்போது நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மனிதனின் ஆயுள்  நீண்டுகொண்டே போனபோது மகிழ்ந்து போன மனித இனம், இப்போது இப்படி வயதாகிப் போன முதியோர்களுக்காகும் செலவை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த முதியோர்களுக்காகும் வைத்தியச் செலவு மற்றும் ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை ஈடுசெய்ய அத்தனை இளைஞர்கள் வேலை செய்யவில்லை (not in work force) என்பதால் அந்தச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று சில வளர்ந்துவிட்ட நாடுகள் விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றன. முதியோர்களுக்கு வரும் ‘வயோதிக மறதி’(Dementia) என்னும் வியாதியைக் குணப்படுத்த உலக முழுவதும் ஆகும் செலவு இந்த வருடம் 60400 கோடி டாலர்கள். முதியோர்களின் எண்ணிக்கை 2050-இல் மூன்று மடங்காகும்போது இது மேலும் கூடிக்கொண்டு போகுமே தவிர குறையப் போவதில்லை என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இப்படி இந்த நிலை நீடித்துக்கொண்டே போனால் வளர்ந்து வரும் நாடுகளின் கடன் சுமை 2050இல் தாறுமாறாகக் கூடிவிடுமாம். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின் முடிவில் பிரிட்டனுக்கு இருந்த கடன் சுமையை விட 2050-இல் முதியோர்களின் வைத்தியச் செலவுகளினால் ஏற்படும் கடன் சுமை அதிகமாக இருக்குமாம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காக்கப் பல திட்டங்கள் போட்டு வரும் அகில உலக நிறுவனங்கள், அரசுகள் மற்றும் ஆய்வாளர்கள், முதியோர்களின் நலனுக்காகும் செலவுகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் எச்சரிக்கிறார்கள். அடுத்த நூறு ஆண்டுகளில் மனித இனம் சாதிக்க வேண்டிய குறிக்கோள்களைப் பட்டியலிட்ட ஐ.நா. நிறுவனம், வளர்ந்து வரும் முதியோர்களின் தேவைகளைக் கவனிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினை திடீரென்று பூதாகரமாக வெடிக்கும் முன் அரசுகள் வைத்தியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார்கள்.

வளந்துவிட்ட நாடுகள் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்று பலரும் பல வித யோசனைகள் கூறி வருகிறார்கள். மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு சிலரும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களை நிறைய சேமிக்கச் செய்ய வேண்டும் என்று சிலரும் அவர்களுடைய வேலையிலிருந்து ஓய்வெடுக்கும் வயதைக் கூட்ட வேண்டும் என்று வேறு சிலரும் யோசனைகள் கூறி வருகிறார்கள். இவை எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை அறுபதிலிருந்து அறுபத்திரண்டாகக் கூட்ட அரசாங்கம் செய்து வரும் ஏற்பாட்டைப் பலர் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக இருப்பதால் இங்கும் ஓய்வு பெறும் வயதைக் கூட்டிப் பயனில்லை. அமெரிக்காவில் வேண்டுமானால் முதியோர்களை எழுபது வயதிற்கு மேலும் வேலையில் இருப்பதற்கு ஊக்குவிக்கலாம். பிரிட்டனில் அடுத்த ஆண்டிலிருந்து ஓய்வு பெறும் வயதை அறுபத்தைந்திலிருந்து அறுபத்தி ஆறாகக் கூட்டப் போகிறார்களாம்.

கொடிது, கொடிது வறுமை கொடிது என்றார் அவ்வையார். இப்போது இருந்தால் கொடிது, கொடிது முதுமை கொடிது என்று பாடியிருப்பார். வயோதிகம் எல்லா இடங்களிலும் கொடியது என்றாலும் அமெரிக்காவில் இது மிகவும் கொடியது. வயதான அமெரிக்கர்கள் தாங்களாக வாழ்ந்துகொண்டு சிரமப்படுவதைப் பார்த்தால் இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்று எண்ணத் தோன்றும்.

அமெரிக்காவில் பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றி, பெண்களை வேலைக்குப் போக வைத்திருப்பதால் கிட்டத்தட்ட எல்லாப் பெண்களும் வேலை பார்க்கிறார்கள்.  அதுவுமல்லாமல் அரசே எல்லோரையும் வேலை பார்க்க ஊக்குவிக்கிறது. ஓய்வூதியத் தொகையோடு பத்து வருடங்களாவது வேலை பார்த்திருப்பவர்களுக்கு அரசே சமூகப் பாதுகாப்புத் தொகை (social security) ஒன்றையும் அவர்கள் சம்பாதித்த தொகையைப் பொறுத்து அவர்கள் ஓய்வுபெறும் வயதிற்குப் பிறகு மாதாமாதம் அவர்களுக்குக் கொடுக்கிறது. இப்படி பாதுகாப்புத் தொகை கொடுப்பது மட்டுமல்ல, மத்திய அரசு நடத்தும் மெடிக்கேர் என்னும் மருத்துவ இன்ஸுரன்ஸிலும் பத்து வருடங்கள் வேலை பார்த்தவர்கள் ஒரு சிறிய தொகையைப் பிரீமியமாகக் கட்டிவிட்டுப் பங்கு பெறலாம். மேலும் இப்போது அமெரிக்கப் பெண்கள் சமையல் செய்வதை மிகவும் குறைத்துவிட்டார்கள். முக்கால்வாசி தயாரித்த உணவுப் பொருள்கள் கடைகளில் கிடைப்பதும் ஒரு காரணம். இதனால் இவர்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது.  இதனாலும் பெண்கள் வேலைக்குப் போக விரும்புகிறார்கள். பெண்கள் இப்படி வேலைக்குப் போவதால் குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவதோடு பெற்றோர்களையும் வீட்டில் வைத்துக் கவனிக்க முடியவில்லை. அவர்களையும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் அமெரிக்கர்களுக்கு தனித்துவத்தின் (individuality) மேல் அதீத ஆசை. தனிமனித உரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போய் முந்தைய தலைமுறையை அடுத்த தலைமுறையினர் தங்களோடு வைத்துக்கொள்ளப் பிரியப்படுவதில்லை. இவர்களின் அந்தரங்கம் (privacy) கெட்டுவிடுமாம். இவர்களும் வைத்துக்கொள்வதில்லை, அவர்களும் இவர்களோடு இருக்கப் பிரியப்படுவதில்லை. எண்பது வயதிலும் தாங்களாகத் தனி அப்பார்ட்மெண்ட்டுகளில் வாழ்ந்துகொண்டு, தாங்களாக சாமான்கள் வாங்கிகொண்டு, தாங்களாகக் கார் ஓட்டிக்கொண்டு வாழும் அமெரிக்கர்கள் நிறையப் பேரைப் பார்க்கலாம்.  தனியாக இயங்க முடியவில்லை என்றால் முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கும் இவர்களைத் தனிமை வாட்டுகிறது. நினைத்த நேரம் நினைத்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. பிறந்த நாளின் போதோ அல்லது மற்ற விசேஷ நாட்களிலோ உறவினர்கள் வந்து இவர்களைப் பார்ப்பதோடு சரி. அமெரிக்க சமூகம் இப்படி உருவாகிவிட்டிருந்தாலும் இன்னொரு வகையில் முதியோர்களுக்கு சில உதவிகளைச் செய்கிறது.

சிகாகோ போன்ற நகரங்களில் (அமெரிக்காவின் பெரிய ஊர்கள் எல்லாவற்றிலும் கீழே குறிப்பிட்டிருக்கும் முதியோர் வசதிகள் உண்டு) முதியோருக்கு அவர்களுடைய உடல்நலத்தைப் பேணுவது பற்றி யோசனை கூற, அந்நகரம் அவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் பற்றி எடுத்துக் கூற ஆங்காங்கே முதியோர் மையங்கள் இருக்கின்றன.  இந்த மையங்களில், நகரப் பேருந்துகள், ரயில்களில் இவர்கள் இலவசமாகப் பயணம் செய்வதற்குத் தேவையான இலவச நுழைவுச் சீட்டுகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றினால் அந்நகரக் குடும்ப நலத் துறையிலிருந்து தேவையான உதவி கிடைக்கும்.

இந்த மையங்களில் மாதம் ஒரு முறை நாட்டு நடப்பு பற்றிய, அவை முதியோர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். நகரக் கல்லூரிகளில் நடத்தப்படும் சில வகுப்புகளை இந்த மையங்களிலும் குறிப்பிட்ட முதியோர்கள் சேர்ந்தால் நடத்துகிறார்கள். இவற்றில் முக்கியமானது கம்ப்யூட்டர் வகுப்புகள்.  அது வரை கம்ப்யூட்டர் பற்றித் தெரியாமல் இருப்பவர்களுக்கு அவை பற்றித் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வகுப்புகள் எல்லாம் முதியோருக்கு இலவசம்.
முதியோர்களுக்குச் சாதாரணமாக வரக்கூடிய நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு மாதம் ஒரு முறை மருத்துவர்களும் நர்சுகளும் வந்து விரிவுரை ஆற்றி அவர்களுடைய கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கிறார்கள். உடல் எடையைக் குறைப்பது பற்றி, உடல்பயிற்சி செய்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூற நிபுணர்கள் இவர்களுக்கு உடல்நலத்திற்கு மட்டுமின்றி மனநலத்திற்குத் தேவையான யோசனைகளும் கூறுகிறார்கள். ஃப்ளூ சீசன் காலத்தில் இவர்களுக்கு இலவசமாக ஃப்ளூ தடுப்பு ஊசி போடுகிறார்கள்.

நாட்களைச் சோர்வில்லாமல் கழிக்க அவ்வப்போது முதியோர்களைச் சுற்றுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பல வகையான நடனங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். பள்ளியின் கடைசி வருடத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ப்ராம் (Prom) என்னும் ஒரு நிகழ்ச்சியை எல்லாப் பள்ளிகளும் நடத்துகின்றன. அந்த நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள் தங்கள் நண்பர்களை அழைத்து வந்து பள்ளி நடத்தும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். அது போல் முதியோர்களுக்கும் ப்ராம் நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களோடு நடனம் புரிய இது ஒரு வாய்ப்பு அளிக்கிறது. ‘உங்கள் வாழ்க்கைக்கு இன்னும் அர்த்தம் இருக்கிறது, அதை அனுபவியுங்கள்’ என்று சொல்லாமல் சொல்லி, முதியோர்களின் வாழ்க்கையை முடிந்த அளவு அர்த்தமுள்ளதாக்க அமெரிக்க சமூகம் முயல்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். முதியோர் மையங்களில் நிறையத் துண்டுப் பிரசுரங்கள் காணப்படுகின்றன. முதியோர்கள் யாரால் எங்கேயும் துன்புறுத்தப்பட்டால் தயவுசெய்து தங்களுக்குத் தெரிவிக்கும்படி அந்தத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மைய அதிகாரிகள் அங்கு வருபவர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். அந்தத் துன்புறுத்தல்கள் என்னவென்று அந்தத் துண்டுப் பிரசுரங்கள் விளக்குகின்றன. அவை முதியோர்களின் உடம்பில் காயம் ஏற்படுத்துதல், பாலியல் முறையில் அவர்களைத் தகாத முறையில் நடத்துதல், பயமுறுத்துதல், வசைமாரி பொழிதல், தனியாக அடைத்து வைத்தல், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை ஆகியவற்றைக் கொடுக்க மறுத்தல், அவர்களுக்குச் சேர வேண்டிய சொத்துகளை அபகரித்துக்கொள்ளுதல் ஆகியவை ஆகும். அவர்களுக்குத் தீங்கு இழைப்பவர்கள் பற்றித் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய எல்லா விபரங்களும் இரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி வேறு கூறுகிறார்கள்.

அமெரிக்கக் குடும்பங்களால் முதியோர்களைக் கவனிக்க முடியவில்லை என்றாலும் சமூகம் அவர்களின் நலனைப் பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.