இராஜபாளையத்து நாயகர்கள்

0

விசாலம்

Vishalamஸ்ரீ கிருஷ்ண தேவராயர் வழிவந்த மன்னர்கள், விஜய நகரில் பல ஆண்டுகள் இருந்தனர். அவர்கள் ஆந்திர வம்சம் ஆக இருந்தனர். ஆனால் பலவித போர்களால் அவர்கள் ஆட்சி முடிவடைந்து, தங்கள் உயிரைக் காக்கத் தப்பித்து, தமிழகம் நோக்கிப் பிரயாணித்தனர். அப்போது அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிகளும் அவர்கள் கூட வந்தன.

அவர்கள் நடந்து நடந்து திருவாங்கூர் சமஸ்தானப் பகுதியின் எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் கீழ் வந்து, அங்கேயே தங்கவும் ஆரம்பித்தனர். அகதிகள் போல் முதலில் முகாம் இட்டு, பின் அங்கேயே இருக்க முடிவு செய்து, பக்காவாக வீடு கட்டித் தங்க ஆரம்பித்தனர். சஞ்சீவி மலைப் பகுதியில் பரவி  அந்த இடத்தையே அவர்களது சொந்தமாக்கிக்கொண்டனர்.

அந்தப் பகுதியையே ராஜபாளையம் என்கிறார்கள். அவர்களுடன் வந்த நாயின் ஒரு ஜாதி, ராஜபாளையம் என்ற பெயரில் மிகவும் பிரபலமானது. பார்த்தால் அல்சேஷன்  அல்லது ஜெர்மன் ஷெப்பர்ட் போன்று பெரிதாக இருக்கும். காவலுக்கு மிகச் சிறந்த நாய். அதற்கு பாராமரிப்புச் செலவும் குறைவு. சைவம் தான் விரும்பிச் சாப்பிடும். தயிர் சாதம், பாலுஞ்சாதம் என்று எது கொடுத்தாலும் சாப்பிடும். இதற்கு மோப்பச் சக்தியும் அதிகம். இன்றும் போலீசின் பல படைகளில் குற்றம் கண்டுப்பிடிக்க இந்த வகை நாயை அழைத்துப் போகிறார்கள். இன்றும் பல பங்களாக்கள், எஸ்டேட்டுகள், பெரிய தோட்டங்கள் போன்ற இடங்களில் இவற்றை வளர்க்கிறார்கள்.

rajapalayam dogடாபர்மென், லெப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களுக்குச் சமமாக இதுவும் இருக்கிறது. மிகவும் விசுவாசமான நாய். ஆனால் எஜமானரின் கட்டளைக்குத்தான்  அடிபடியும். கவ்வினால் பிடி சதை வந்துவிடும். வீட்டைப் பாதுகாக்க மிகச் சிறந்த நாய். ஆனால் அன்பையும் எதிர்பார்க்கும். அதன் கண்கள், காது ஆகியவை மிக அழகு.
மேற்குப் பகுதியில் நிறைய இடங்களில் இந்த வகை நாய்களை நான் பார்த்து இருக்கிறேன். ஏன்! ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாயை வளர்த்தும் இருக்கிறேன். அதற்கு என்ன பழக்கம் கற்றுக் கொடுக்கிறோமோ, அதையே தவறாமல் செய்யும். நான் அதற்கு வெளியிலிருந்து வந்த பிறகு நேரே பாத்ரூமுக்குப் போய்க் கால்கள் அலம்பக் கற்றுக் கொடுத்தேன். அதே போல் எப்போது வெளியிலிருந்து வந்தாலும் நேரே பாத்ரூமுக்குப் போய்த்தான் நிற்கும். தவிர பூஜை முடியும் நேரம், கற்பூர ஆரத்தியின் போது எங்கிருந்தாலும் தவறாமல் வந்து பூஜையில் கலந்துகொள்ளும்.

பாவம் அதற்கு 11 வருடங்கள் தான் என்னுடனிருக்க விதி வகுந்திருந்தது போலும். என் மகனின் மடியில் படுத்தபடி, விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டபடி, வாயில் கங்கை நீர் ஊற்ற, உயிரை விட்டது. பின் தில்லியில் யாரிடமிருந்து இதை வாங்கினோமோ, அந்த டாக்டர் வீட்டு மைதானத்தில், மனிதர்களுக்குச் சொல்லும் மந்திரங்கள் எல்லாம் சொல்லி, வாயில் அரிசி போட்டுப் புதைக்கப்பட்டது. பின் அங்கு ஒரு வேப்ப மரமும் நடப்பட்டு, அங்கு ஒரு பெயர்ப் பலகை வைத்தோம். அதிலுள்ள வாசகம் “அமைதியான தூக்கம்”.

ராஜபாளையம் போல் வேறொரு நாயும் இருக்கிறது. சிப்பிப்பாறை நாய் என்று அதை அழைக்கிறார்கள். மிகவும் மூளை உள்ளது. வெள்ளையாக இருக்கும். 4 அடி உயரம், 4 அடி நீளம், கூர்மையான் கண்கள், உதடு ரோஜா நிறம்…….. பார்க்க சாது போல் இருக்கும். ஆனால் யாராவது எதாவது தொட்டால் அவ்வளவுதான், பிடுங்கிவிடும்.

தன்னலமில்லாத அன்பு, நாயினுடையது. அதன் தலைவன் எத்தனை அடித்தாலும் அதை மறந்து வாலை ஆட்டிக்கொண்டு திரும்ப அன்பு செலுத்தப் போகும். மனிதன் மன்னிக்கும் குணம் கொண்டு இதே போல் அன்பு காட்டி வந்தால், உலகம் எத்தனை நன்றாக இருக்கும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.