புதியதோர் உலகம் செய்யும் போர்ப்படைத் தளபதிகள்!
ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சங்கமத்தில் திரு ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு!
இன்று 18/12/2011 ஞாயிறு காலை ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தின் சங்கமம் நிகழ்ச்சி , சுமார் 200 பதிவர்கள் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்தேறியது. முகம் தெரியாத ஒரு மாய உலகத்தில் பழகிக் கொண்டிருந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது கண்களில் ஆர்வம் பொங்க ,’அட நீதானா அது/ அட நீங்களா?’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை பல முறை கேட்க முடிந்தது சென்னை, கோவை, ஆந்திர மாநிலம் – சித்தூர், திருப்பூர், பவானி, சித்தோடு என்று பல இடங்களிலிருந்தும் மிக ஆர்வத்துடன் வந்து பதிவர்கள் கலந்து கொண்டது , விழாவை சிறப்பாக்கியது. விழாக்குழுவின் தலைவர் திரு தாமோதர் சந்திரு தலைமையில், திரு ஸ்டாலின் குணசேகரன் , சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள , பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 15 நபர்களை பாராட்டி, பரிசுகளும் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சி நல்ல ஊக்கமளிக்கக் கூடிய வகையில் இருந்ததாக பலர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
திரு ஸ்டாலின் குணசேகரன் பேசும் போது முற்றிலும் வித்தியாசமான , நெகிழ்ச்சியூட்டக்கூடிய ஓர் நிகழ்ச்சி என்றும், அடர்த்தியான , அர்த்தமுள்ள நிகழ்வாகவும் பார்க்க முடிந்ததாகவும் பாராட்டினார்.வலைப்பதிவர்கள் வெறும் பொழுது போக்காக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த சமுதாய பங்களிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று புகழாரம் சூட்டினார். பாராட்டுப் பெற்றவர்களின் சாதனைகளை விளக்கி கல்வெட்டு போல் செதுக்கி மனதில் பதிய வைத்தார்கள் என்றார். சமீப காலமாக வட்டார அளவிலேயே பார்க்கப்படும் வரலாறு, வெள்ளையர் கால பழைய வரலாறுகளை போக்கி, இன்று கலைத்தன்மையுடன், படைப்பாற்றலை வெளிப்படுத்துகிற இயல்பான தன்மையுடன் காண முடிகிறது என்றார். வலைப்பதிவர்கள் , புதியதோர் உலகம் செய்யும் போர்ப்படைத் தளபதிகள் என்றார். அன்னா ஹசாரே போன்றோரின் சேவைகள் உடனடியாக உலகளவில் எட்டியதற்கும், உலகின் பல பகுதிகளிலும் நடக்கக் கூடிய செய்திகள் உடனடியாக பலருக்கும் எட்டச் செய்வதில் வலைப்பதிவர்களின் பங்கு அபாரமானது என்றார்.
அருமையான சைவ மற்றும் அசைவ உணவு விருந்துடன் விழா இனிது நிறைவடைந்தது. அடுத்த சந்திப்பை ஆவலாக எதிர்நோக்கி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும். திரு ஸ்டாலின் குணசேகரன் கூறியது போன்று இது ஒரு நல்ல சமுதாய மாற்றம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு என்று ஒப்புக் கொள்ளத் தோன்றியது!
பாராட்டுப் பெற்ற அந்த 15 பேர்களின் சாதனைகள் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்!