மந்தரை
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சரயு நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை. புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப் பொழுது. நதியை ஒட்டிய குடிசையின் சாளரத்து வழியாக ஒரு முகம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சுருக்கம் விழுந்து காலம் என்னும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டுக் களைத்து, சுருக்கம் நிறைந்த அந்த முகம், மந்தரையினுடையது. உங்களுக்கு புரியும்படி சொல்வதானால் கூனியுடையது. குழி விழுந்த அந்தக் கண்களில் பரதன் அவன் ஆசிரமத்திலிருந்து வருவதைப் பார்த்து பிரகாசம் அடைந்தன. அந்த நேரத்திலேயே குளித்து முடித்து, அக்னிஹோத்ரம் செய்யப் போய்க்கொண்டிருந்தவனைப் பார்த்துப் பெருமிதத்தால் பூரித்துப்போனது மந்தரையின் நெஞ்சு.
பரதன் எப்பேர்ப்பட்ட அரசன்? வீரமும் கருணையும் ஒருங்கே பெற்றவன் அல்லவா? பின்னே மாதரசி கைகேயியின் மகன் வேறு எப்படி இருப்பான்? அவள் மனம் பரதனை விட்டு கைகேயியிடம் தாவியது. கைகேயியைப் போல ஒரு பேரரசியை இனி இந்த அயோத்தி, ஏன் பாரத வர்ஷமே பார்க்குமா என்பதே சந்தேகம் தான். கைகேயியும் அவளும் அறிமுகமான அந்த நாள், மந்தரையின் மனத்தில் நிழலாடியது.
அப்போது மந்தரைக்கு வாலிபப் பருவம். கேகய நாட்டின் ஒரு நந்தவனத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளைப் பெண்கள் விளையாடும் சத்தம் கலைத்தது. ஏழு அல்லது எட்டு வயதில் தங்கப் பதுமையாக பந்தாடிக்கொண்டிருந்த பெண் குழந்தைதான் அரசகுமாரி கைகேயி என்று அவர்கள் பேச்சின் மூலம் மந்தரை அறிந்தாள். அவளும் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஒரு பெண் அடித்த பந்து இவள் பக்கம் வர, அதை எடுத்து வைத்துக்கொண்டாள். தோழிகளில் ஒருத்தி ஓடி வந்து, “ஏ கூனி, என்ன விளையாட்டு இது? மரியாதையாகப் பந்தைக் கொடுக்கிறாயா? அல்லது…” என்று மிரட்டினாள். முகம் சுண்டிப் போனவளாக மந்தரை, பந்தைக் கொடுத்தாள்.
அப்போது கைகேயி ஓடி வந்து, “மாலதி! என்ன இது மரியாதையற்ற பேச்சு? பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உனக்குத் தெரியாது?” என்று கேட்டுவிட்டு மந்தரையின் பக்கம் திரும்பி “பெண்ணே நீ யார்? ஏன் இங்கு இப்படி தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அன்பாகப் பேசி, அவளைப் பற்றி அறிந்துகொண்டு, அடைக்கலம் அளித்தாள். அது மட்டுமா? உயிர்த் தோழியாகவும் ஆக்கிக்கொண்டாளே! அவளல்லவா மகாராணி.
கைகேயியோடு பேசி, பல வருடங்கள் ஓடிவிட்டன. பேசவா? ஒரு பார்வை, ஒரு புன்னகை? ம்ஹூம்!! இப்போதெல்லாம் அதுவும் இல்லை. ஹூம்! இந்தப் பாழும் அரசியல்! தன்னை மீறிய பெருமூச்சொன்றை உதிர்த்தாள் கிழவி.
குடிசைக் கதவைப் படீரென்று திறந்துகொண்டு வெள்ளமென உள்ளே நுழைந்தாள் நீலவேணி. மந்தரைக்கு உதவியாக இருக்க நியமிக்கப்பட்டிருப்பவள்.
“ஏ கூனி, விஷயம் தெரியுமா உனக்கு? எங்கள் ஸ்ரீராமர் பதினான்கு வருட வனவாசத்தை முடித்துக்கொண்டு, இலங்கை அரசன் இராவணனையும் வென்று, அயோத்தி திரும்புகிறாராம். இந்த நல்ல செய்தியை அவரின் தூதர் வானர வீரர் அனுமான் என்பவர் வந்து தெரிவித்திருக்கிறார். நாளை பொழுது சாயும் நேரம் வந்துவிடுவார்களாம். இப்போது என்ன செய்வாய் கிழவி?” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.
அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மந்தரையின் காதில் அமுதத் துளிகளாய் விழுந்தன. இராமன் வருகிறானா? பதினான்கு வருடங்களா ஓடிவிட்டன? என்று சிந்தனையில் மூழ்கிய மந்தரையைக் கலைத்தாள் நீலவேணி, “அடுத்த சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாயா கூனி?” என்ற கேள்வியுடன்.
அப்போது அங்கு வந்த அவளின் தோழி “உனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது? கூனியிடம் பேசிக்கொண்டு நிற்கிறாயே? சீக்கிரம் வா. நகரம் முழுவதிலும் தோரணங்கள் கட்டவும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைக்கச் சொல்லவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வேலைகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி நீலவேணியை அழைத்துப்போய் விட்டாள். தனித்து விடப்பட்ட மந்தரை, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இராமன் வருகிறானா? குழந்தை சீதையும் உடன் வருவாள் அல்லவா? இவள் எதிர்பார்த்தபடி அவர்கள் மாறியிருப்பார்களா? காட்டிற்குச் சென்ற உடனே அவர்களுள் மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. யாரோ படகோட்டியாம், குஹன் என்று பெயராம். அவனைத் தன் சகோதரனாகவே ஏற்றுக்கொண்டானாமே இராமன். இன்று அவனுடைய தூதனாக ஒரு வானர வீரனைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறானே. அது மட்டுமா? அவனுடைய படையில் கரடிகளும் கூட உண்டாமே. நல்லது நல்லது. உட்கார்ந்தபடியே சிந்தனையால் காலத்தின் ஏடுகளை முன்னால் புரட்டினாள் மந்தரை.
அது ஒரு இனிய வசந்த காலம். இராமன் உள்ளிட்ட தசரதகுமாரர்கள் நால்வரும் அரண்மனை நந்தவனத்தில் விளையாட்டு அம்புகள் விட்டு பழகிக்கொண்டிருந்த பருவம். இராமனைப் போல குறி பார்த்துச் சரம் தொடுக்க யாராலும் முடியாது. அதிலும் மந்தரையின் வளைந்த முதுகில் அம்பு எய்வதென்றால் அவனுக்கு தனி ஆனந்தம். ஒரு முறை அவள் அம்பை மறைத்து வைத்துவிட்டாள், இராமனின் அழகிய கொஞ்சும் முகத்தைப் பார்க்கும் ஆசையில். இராமன் வந்து கேட்க, இவள் மறுத்தாள். உடனே அவன் “ஏ கூனி, அம்பைக் கொடுக்கப் போகிறாயா, இல்லையா? உன் அசிங்கம் பிடித்த முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது?” என்று வெறுப்பை உமிழ்ந்தான். வேதனையோடு அம்பைக் கொடுத்தாள் மந்தரை.
சிறுவன் பரதன் வந்து, “அண்ணா இன்று ஏனோ கோபமாக இருக்கிறார். இல்லையென்றால் இப்படிப் பேசவே மாட்டார். நீ ஒன்றும் தவறாக நினைக்க வேண்டாம்” என்று காயத்திற்கு மருந்திட்டுப் போனான். இராமனின் இத்தகைய போக்கு குறித்துக் கைகேயிக்கும் கவலை உண்டு. குருகுல வாசம் அவனை மாற்றி விடும் என்று நம்பினாள். அப்படி எதுவும் நடக்கவில்லை. கைகேயி பல முறைகள் இது குறித்து மந்தரையிடம் பேசியிருக்கிறாள். “என் இராமன் மிகச் சிறந்தவன் தான். அதில் ஐயமில்லை. ஆனால் எல்லா மக்களையும் சமமாக எண்ணும் மனப்பாங்கு இல்லையே. அரசனாக வேண்டியவன் அல்லவா அவன்? இப்போது அவனைக் கொண்டாடும் மக்கள், அவன் அரசனான பின் இந்தப் போக்கின் காரணமாக வெறுக்கத் தொடங்கிவிட்டால்? அத்தகைய நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லையே” என்று புலம்பியிருக்கிறாள். திருமணம் அவனுள் மாற்றத்தை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. சீதை உலகமறியா சிறு குழந்தையாகவே இருந்தாள். பரந்து விரிந்த நாட்டின் பேரரசியாகும் மனப்பக்குவம் அவளிடமும் இல்லை.
இந்நிலையில்தான் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தார் தசரதச் சக்கரவர்த்தி. இராமனுக்குப் பலவிதமான மக்களைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் அனுபவப் பாடம் பெறவும், வெறும் நகரம் மட்டுமே நாடு அல்ல, காடுகள், மலைகள், அவற்றில் வாழும் பல இனத்தைச் சேர்ந்த மக்கள் இவையெல்லாம் சேர்ந்தது தான் நாடு என்ற உண்மையை உணர்த்தவும் வேண்டும். அதற்கு என்ன வழி என்று கைகேயியோடு ஆலோசித்தாள் மந்தரை. அதன் விளைவுதான், கைகேயி கேட்ட இரண்டு வரங்கள். எப்படியோ அயோத்திக்கு மிகச் சிறந்த அரசன் கிடைத்தால் சரி. கைகேயி வாழ வந்த நாடல்லவா? எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ தெரியாது, வெளியில் கேட்ட சந்தோஷ ஆரவாரங்கள் அவளைக் கலைத்தன.
அதோ இராமன் வருகிறான். காலத்தால் பக்குவப்படுத்தப்பட்ட இராமன் வருகிறான். வானர சேனை ஒரு பக்கமும், இலங்கை அரக்கர்கள் சேனை மறுபுறமும் சூழ, இராமன் வருகிறான். அவன் படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இப்போது அவன் பார்வையில் அனைவரும் சமம். சந்தோஷம் கொப்பளித்தது மந்தரைக்கு. மறு நொடியே கேள்வி எழுந்தது அவள் நெஞ்சில். “இராமன் தன்னை புரிந்துகொண்டிருப்பானா? உலகின் சிறந்த அரசனாக உருவாக இந்த வனவாசம் அவனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி என்பதை இராமனால் புரிந்துகொண்டிருக்கச் சாத்தியமா?”
கூட்டத்தில் இராமனின் கண்கள், யாரையோ தேடின. இந்தப் பக்கம் யாரும் இல்லையே! அமைச்சர்கள், தாய்மார்கள் எல்லோரும் மறுபுறம் அல்லவா நிற்கிறார்கள். அப்படியிருக்க அவன் கண்கள் யாரைத் தேடக்கூடும்? இப்போது சீதையின் பார்வையும் இராமனைத் தொடர்ந்தது. அவர்கள் பார்வை மந்தரை மேல் விழுந்ததும் இருவர் கரங்களும் சொல்லி வைத்தாற்போல் கூம்பின.
போதும்!! மந்தரைக்கு இது போதும்!!
Very nice story.
Different dimension regarding mandarai. Written in a good manner. Congrats
Experience & travel makes a man matured enough. The writer has aptly described the same. Getting exposure season’s a person maturity level. Good work……..
Good work madam. Keep it up. Please keep writing many more short stories.
Superb. VAZHTHUKKAL
You r giving totally a different dimension to Mandaharai’s character-that too, given as a type of flashback-SUPERB. continue the good work.
BABU ARUNACHALAM
Quite interesting writing. Well done!
Different thinking and turning. Nice one.
Very nicely picked up charcters and nicely described. Congrats
To become a perfect ruler one needs exposure in all fields. The writer has explained the same in very nice manner.
Very interesting story. Good effort
The story is totally a new one. Best wishes.
Very good work.
Good concept and well described.
Migavum arumai. Nandri
Superb creativity which gives an unique impact on Mandharai’s character.
Continue your imaginative creativity.
மந்தரையின் நல்ல பக்கத்துக்கு ஒரு கவிதை இந்தக் கதை. அழகாகச் சிந்தித்து மாற்றுக் குரல் அவளுக்குக் கொடுத்துவிட்டீர்கள்.நல்ல எண்ணங்களுக்கு நன்மையே விளையும்.
வாழ்த்துகள் ஸ்ரீஜா.
“…அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மந்தரையின் காதில் அமுதத் துளிகளாய் விழுந்தன…”
– கதையே இங்கு தான் உருவாகிறது. ஒரு புதிய பரிமாணம் நேர்த்தியாகச் சொல்லப்பட்டது என்று வாழ்த்துகிறேன். ஆமாம், ஸ்ரீஜா. யாரு தான் முழுதும் நல்லவர் அல்லது முழுதும் கெட்டவர்? கொஞ்சம் புதுமைப்பித்தன் டச். ஆனால் எத்தனையோ படிகள் ஏற வேண்டும்.
This story bought tears into my eyes. Good work.