விசாலம்

Vishalamஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய.
அன்னைக்கு சமர்ப்பணம்.

நவம்பர் 17 ஸ்ரீ அன்னை மகாசமாதி அடைந்த நாள். அன்னை என்று பெயர் சொன்னாலே ஒரு உன்னத உயர்ந்த ஆன்ம நிலையை அடைந்த ஒரு சித்த புருஷர் என் கண் முன் தோன்றுகிறார். அவர் பிரான்ஸில் இருந்தபோதே கீதை, உபநிடதம், யோகசூத்ரம், நாரத பக்தி சூத்ரம் எல்லாவற்றையும் படித்து மொழி பெயர்த்திருக்கிறார்

ஸ்ரீ அரவிந்தர் கூறுவது “நான் பத்து ஆண்டுகளில் அடைந்துவிடக்கூடிய சித்தியை ஒரே ஆண்டில் அடைந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம்
அன்னையின் ஆன்மீக உதவிதான். எனது பூரண யோகத்தை நடைமுறையில் கொண்டு வந்தது அன்னைதான்.”

“இறையுணர்வு, உனக்குள்ளும் உன் மூலமாகவும் வேலை செய்யட்டும். அப்போது யாவும் கிடைத்துவிடும்” என்கிறார் அன்னை.

இனி தியானம் என்றால் என்ன என்பதை என் கண்ணோட்டத்தில் சொல்கிறேன். அகத்தூய்மை, புறத்தூயமை இருப்பின் அரவிந்தரின் யோகத்தைப் பற்றித் தெரிய வரும்.

தியானத்தைப் பற்றிப் பெரியவர்கள் பலர், பல வழிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். அதாவது சிதறிக் கிடக்கும் எண்ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, கடைசியில் எண்ண ஒட்டங்களே இல்லாமல், மனத்தை ஒருமைப்படுத்துவதே தியானம். அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் நம் கவனத்தில் வரும். நிறைய பயிற்சிக்குப் பின், அதுவும் மறையும். இந்த நிலையை அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள், அதை அனுபவித்தவர்கள்.

இதற்கு முன் தியானம் செய்ய நம் உடலை அதற்குத் தகுதி ஆக்கிக்கொள்ள வேண்டாமா? அழுக்கு உடல் மீது புதுச் சட்டைப் போட்டுக்கொண்டால் உள்ளே அழுக்கு போய்விடுமா? மனத்தில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.
motherஎல்லாவற்றுக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. சுத்த மனம், அசுத்த மனம் என்று இரண்டு வகை பிரிக்கலாம். அசுத்த மனம், அதிகம் தத்தளிக்கிறது. இந்தத் தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம். அலை பாயும் மனம், தியானத்திற்கு ஒவ்வாது. அழுக்கான மனத்தில் எண்ணங்களின் ஒட்டம் ஒடிக்கொண்டே இருக்கும்.

கலங்காத நீரில் நிலவின் பிரதி பிம்பம் நன்கு தெரியும். ஆனால் கலங்கிய குட்டையில் இருட்டுதான் நிலவும். “மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. தாவிக்கொண்டே இருக்கும் அதை நிறுத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.

தினசரி செய்யும் வேலையில் நாம் நம்மைத் தியானத்திற்குத் தயார் செய்துகொள்ளலாம். வீடு கூட்டும் போது நம் மனத்திலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று எண்ணுவோம். மிக்ஸியில் அரைக்கும் போது நமது அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களையும் பொடிப் பொடியாக அரைத்து விட்டதாக எண்ண வேண்டும். ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு சிறு வட்டத்திலிருந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகிறது என்று எண்ணலாம்.

எந்த வேலை செய்தாலும் கடவுளுக்கே என்று அர்ப்பணித்துச் சிரத்தையாக செய்தால் அதனால் உண்டாகும் பலன்கள் பல. கோவில்களில் பிரசாதம் மணக்க, பொங்கல், புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது. ஆனால் அதன் ருசியோ தனிதான். ஏன்? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது. அதைச் சாப்பிடும் நமக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை. ஆனால் நல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சில சமயங்கள் வயிறு கெடுகிறது. ஏன்…? சமைப்பவரின் எதிர்மறை எண்ணங்களால் வரும் அலைகள் செய்யும் பதிவாகி, நம்மை வந்து அடைகின்றன. ஆகையால் எங்கும் அன்புதான் மூல காரணம். அதை எல்லாக் காரியங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். எல்லோரையும் அன்புடன் பார்க்க, கடவுள் நமக்குத் தெரிவார். இந்தச் சூழ்நிலையை வளர்த்தால் நாம் தியானம் செய்யத் தகுதியாகிவிட்டோம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம். அந்த வேலையைக் கோவிலுக்குள் நுழைந்து செய்வது போல் செய்தால் அவர்களுக்குத் தியானம் நன்கு வரும். காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் சஞ்சலமில்லமல் அமைதியாக இருக்க பழக்கிக்கொள்ள வேண்டும். மனத்தில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களைச் சிறிது சிறிதாகக் குறைத்து, மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் செய்த நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் காலை – மாலையில் கணக்கிட்டு, செய்யத்தகாத காரியங்களைப் படிப்படியாகக் குறைத்து, நம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்யத் தகுதியாகிவிட்டோம். நமக்குள் ஓர் அரிச்ச்ந்திரனோ, ஒரு புத்தரோ, ஒரு துகாராமோ குடிகொண்டிருக்க வேண்டும். நம் மனத்தில் தேளுக்கும் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்?

==========================================

அன்னையின் படத்திற்கு நன்றி – http://www.sriaurobindosociety.org.in

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தியானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *