சக்தி சக்திதாசன், இலண்டன்

sakthidasanதனிமையை வசந்தம் என்று யாராவது வர்ணிப்பார்களா? தனிமை என்பது தண்டனையாயிற்றே, தனிமையில் இருப்பவர் தவிப்பதுதானே இயற்கை? என்றெல்லாம் வினாக்கள், உள்ளங்களில் எகிறிக் குதிப்பதும் நியாயமே.

“தனிமை” இந்தச் சொல்லின் உண்மையான உள்ளர்த்தம் என்ன? இதை எத்தகையதோர் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கிறோம்? கேள்வியைக் கேட்டதும் எம் மனத்திலேயே ஆச்சரியமான பல உணர்வுகள் தோன்றி மறைகின்றன.

ஆங்கிலேய நண்பர்கள், சில வேளைகளில் என்னைப் பார்த்து, நேற்றுச் சாயந்தரம் நீ என்ன செய்தாய்?” என்று கேட்பார்கள். அப்போது நான் வீட்டில் தனிமையில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன், இல்லை ஏதோ சிந்தனையிலிருந்தேன் என்று சொன்னால் “get a life” என்பார்கள். அதன் அர்த்தம் ‘வாழ்க்கையை அனுபவி, சும்மா போரடித்துக் கொண்டு இருக்காதே’ என்பதே.

ஆனால் எப்போதும் எம்மைச் சுற்றி நண்பர்கள் படைசூழ, அல்லது உறவினர்கள் புடைசூழ உட்கார்ந்திருப்பதுதான் மகிழ்ச்சியா? அப்படியாயின் மற்றவர்களின் மூலம் தாம் நாம் மனத்தின் நிறைவை அடைகிறோமா?

வாசகர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நண்பர்களே அற்ற ஒரு வாழ்க்கை அல்லது உறவுகளே அற்ற ஒரு வாழ்க்கை சுவையாக இருக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். ஆனால் நான் என்னையே எனது நண்பனாகப் பாவிக்கும் கலையை அறியாதவனாக வாழ்ந்தால் எப்படி என்னை நான் அறிந்தவனாக முடியும்?

அண்மையில் நான் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது கேட்டதாக ஞாபகம். புத்தபிரான் ஒரு மரத்தினடியில் அமைதியாகத் தனிமையில் உட்கார்ந்திருந்தாராம். அப்போது அவரருகே நான்கு இளைஞர்கள் தமக்கேயுரிய சில்மிஷங்களில் ஈடுபட்டு, ஆனந்தமாயிருக்க வேண்டி ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார்களாம்.

தாம் மதுவருந்திக் கேளிக்கைகளில் ஈடுபடும் போது எங்கே அந்தப் பெண் ஓடிவிடுவாளோ என்று எண்ணி, அவளின் உடைகளை வேறு களைந்து இருந்தார்களாம். அப்படி இருந்தும் அந்தப் பெண் ஓடி விட்டாளாம். அவள் ஓடும் போது புத்தபிரான் உட்கார்ந்திருந்த இடத்தைக் கடந்துதான் சென்றிருக்க வேண்டும்.

அவளைக் காணாது தேடி வந்த இளைஞர்கள் புத்தபிரானைப் பார்த்து, ‘இவ்வழியே யாராவது போனார்களா?’ என்று கேட்டார்களாம். தியானத்திலிருந்த புத்தர் கண்களைத் திறந்து, “ஆமாம் யாரோ போவது போலிருந்தது. ஆனால் அவர் ஆணா, பெண்ணா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றாராம். அதற்கு அவ்விளைஞர்கள் ஒரு நிர்வாணப் பெண் கடந்து போவதையறியாமல் அப்படி என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என ஆத்திரத்துடன் கேட்க, புத்தபிரான் அமைதியாக “நான் என்னுடன் இருந்தேன், அதனால் தெரியவில்லை” என்றாராம்.

இது ஒரு கதையே. ஆனால் இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் ஒருவர் தனிமையில் இருப்பது வேறு, தன்னுடன் இருப்பது வேறு. தன்னுடன் இருப்பது என்றால் என்ன? தன்னைத்தானே அறிந்த நிலையில் இருப்பது, தனது உணர்வுகளை முழுக்கத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பது.

அப்படியான நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து நீ தனிமையில் இருக்கிறாயே என்று பரிகாசிப்பது பொருத்தமா? தனிமையில் இருக்கத் தெரிந்தவன் ஆன்மீகத்தின் அதியுயர் கோட்டை நெருங்கிவிட்டான் என்று பொருள்.

அதே போல ஒரு ஏரிக் கரையில் தனியே விட்டு விட்டுச் சென்ற நண்பனிடம் திரும்பி வந்த நண்பர்கள் “்ஐயய்யோ, உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டோமே?” என்று சொல்லிய போது அவன், “இல்லையே நீங்கள் வரும்வரை ஆண்டவன் என்னோடு பேசிக்கொண்டிருந்தார், உங்களைக் கண்டதும் இதோ உன் நண்பர்கள் வந்து விட்டார்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் என்று சொன்னானாம்.

ஆண்டவனுடன் பேசுகிறானாம்? என்ன ஒரு பைத்தியக்காரனைப் பற்றிப் பெரிதாக விளம்பரப்படுத்துகிறானே என்று நீங்கள் எண்ணலாம். ஆன்மிகத்தின் அதியுயர் வெற்றி என்ன? எல்லோருக்கும் பொதுவான அந்த இறையுடன் கலப்பதுதானே. மதம் எதுவானாலும், ஆண்டவன் எதுவானாலும், நம்பிக்கை எதுவானாலும் ஆத்திக ஆன்மீகத்தின் அதியுயர் சாதனை இறையுடன் ஐக்கியம் ஆவதுவே. ஆண்டவனுடன் பேசும் வல்லமையைத் தனிமையில் தனக்குத் துணை ஆக்கிக்கொண்டவன், அந்த தனிமையின் இனிமையை உணர்ந்துகொண்டு விட்டான் என்பதுதானே பொருள்.

ஆத்திகம், ஆன்மீகம் அனைத்தையும் ஒருபுறம் தள்ளிவிட்டு, தனிமையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால் தனிமை எம்மை ஆராய உதவுகிறது. பலருக்கு முன்னால் எமது தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கும்போது தனிமை எமக்கு அதற்குரிய தைரியத்தைக் கொடுக்கிறது. தனிமையில் இருக்கும் போது எமது தவறுகளை ஏற்றுக்கொண்டு விட்டால் பின்பு அந்தத் தவறுக்குரிய மன்னிப்பை அதற்கு உரியவரிடம் கேட்பது இலகுவாகி விடுகிறது.

இதிகாசம், புராணம் ஆகியவை, எமக்கு பல கதைகளைத் தந்துவிட்டன. மூட நம்பிக்கைகளின் வழிநின்று மற்றையோரின் மனங்களை புண்படுத்துவதற்காக அல்ல. அத்தகைய செயல்களைச் செய்பவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளோ, அன்றி இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்ல. அந்தத் திரையின் கீழ் தமது தவறுகளை நியாயப்படுத்துபவர்கள். அதற்காக அனைவரையும் இவ்வர்ணம் கொண்டு தீட்டுவது தவறு. இதிகாசக் கதைகளெல்லாம் உண்மையாக நடந்தது என்பதை விட மனித மனங்களின் நல்வழிக்காக உருவகப்படுத்தப்பட்டவையே என்பதுவே உண்மை.

எமது மனத்திலுள்ள அகந்தை, ஆணவம், அலட்சியம் இவற்றின் பல்வேறு முகங்களை அறிந்து அவற்றை அறுத்து, மனிதாபிமான வழி நடத்துவதே அவற்றின் நோக்கம். இந்நோக்கத்தின் சீரிய அங்கமே தனிமை.

தனிமையே மனிதன் தனது முகவரியைத் தானே அறிந்துகொள்ள உதவுகிறது. என்று நாம் எமது தனிமையை ரசித்து வாழப் பழகிக்கொள்கிறோமோ அன்று நாம் எம்மை அறிந்துகொள்ளும் முயற்சியில் அரைப் பங்கு வெற்றியடைந்து விட்டோம் என்பதுவே பொருள்.

அதற்காக என்றுமே எப்போதுமே தனிமையைத்தான் தேட வேண்டும். நண்பர்கள், உறவினர்களை ஒதுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. சமையலில் உப்பைச் சேர்ப்பது போல, வாழ்க்கையில் தனிமையைச் சேர்ப்பது சுவையைத் தரும் என்றே கூறுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *