நிலவொளியில் ஒரு குளியல் – 4

7

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_Venkateshசுமார் ஒரு வாரத்திற்கு முன் எங்கள் தெருவில் ஒரு பையன், வயது ஏழு அல்லது எட்டு தானிருக்கும், சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் கீழே விழாமல் இருக்க யாரும் அவனைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. அவனும் ஒரு மாதிரியாக வளைந்து நெளிந்து ஓட்டிக்கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரித்த போது தான் தெரிந்தது இப்போதெல்லாம் சைக்கிள்கள் பக்கவாட்டில் கனத்த சக்கரங்களோடு வடிவமைக்கப்படுகின்றன என்று. அதனால் யாருடைய உதவியும் இல்லாமல் தானே கற்றுக்கொள்ள முடியும். அதைக் கேட்டதும் எனக்கு நாங்கள் சைக்கிள் கற்றுக்கொண்ட நிகழ்ச்சிகளும் அப்போது பட்ட பாடுகளும் மனத்தில் ஊர்வலம் வந்தன. அதன் விளைவு, இதோ இந்தப் பத்தி.

நாங்கள் சைக்கிள் கற்றுக்கொண்ட காலமான எண்பதுகளில் இது போன்ற பக்கவாட்டுச் சக்கரம் வைத்த சைக்கிள்கள் புழக்கத்தில் இல்லை. சைக்கிள் கற்றுக்கொள்ளும் ஆசை வந்தவுடன் வீட்டில் உடனே சைக்கிள் எல்லாம் வாங்கிக்கொடுத்துவிட மாட்டார்கள். சைக்கிள் கற்கும் ஆசை எப்போது, யாரால் தோன்றும் என்றெல்லாம் சொல்லவே முடியாது. திடீரென்று ஒரு நாளில் எங்களை விடச் சற்றே பெரியவர்கள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.  அதைப் பார்த்து எங்களுக்கும் ஆசை வரும். ஆசை வந்தால் போதுமா? முதலில் சைக்கிள் வேண்டும். அப்புறம் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு கூடவே ஓடிவர இரண்டு நண்பர்கள் வேண்டும். ‘எனக்கு நீ பிடித்துக்கொண்டு வந்தால், நான் உனக்கு பிடித்துக்கொண்டு வருகிறேன்’ என்று ஒப்பந்தம் போட்டு, நண்பர்களை தயார் செய்து விடலாம். ஆனால் சைக்கிள் கிடைப்பது இருக்கிறதே!! அப்பப்பா!!

எங்கள் கிராமத்தில் செண்பக நாடார் கடையில் மட்டும்தான் சின்ன வண்டிகள் வாடகைக்குக் கிடைக்கும். எனவே அதற்கான தேவையும் மிக அதிகம். ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது காசு தான் வாடகை. அந்த ஐம்பது காசு கிடைத்து, ஒரு முழு மணி நேரத்திற்கு வண்டி எடுத்தால் அன்று நாங்கள்தான் டாடா, பிர்லா எல்லாம் (இப்போது தானே அம்பானி). மிகப் பெருமையாக உணர்வோம். ஆனால் அது எப்போதோதான் நடக்கும். அது வரை ஆளுக்கு இருபத்தைந்து அல்லது இருபது காசு போட்டு நேரத்தைப் பங்கிட்டுக்கொள்வோம். நாங்கள் கற்றுக்கொள்ளும் சைக்கிள்களில் நிச்சயமாக பிரேக்கோ, பெடல்களுக்கான கட்டையோ கண்டிப்பாக இருக்காது. இந்த அழகான சைக்கிள் கிடைப்பதற்குச் செண்பக நாடாரிடம் முன் பதிவு வேறு செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய வண்டி தான் கிடைக்கும். அதில் கால் எட்டாத காரணத்தால் பழக முடியாது.

சைக்கிள் கிடைத்து, ஓட்ட ஆரம்பிக்கும் போதுதான் நம் நண்பர்களின் வில்லத்தனங்களும் நம் மீது அவர்களுக்கு உள்ள கோபங்களும் தெரிய வரும். இலேசாக நெளிந்தால் குத்து, இடது பக்கம் வளைந்தால் உதை என்று பின்னி எடுத்து விடுவார்கள். நாம் மட்டும் சளைத்தவர்களா? நம் முறை வரும் பொழுது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்துவிட மட்டோம்? இரண்டு கீரைக்காரிகள், மூன்று கிழவிகளை மோதித் தள்ளி நாமும் நான்கு முறைகள் கீழே விழுந்து புதையல் எடுத்து, பூமிக்குக் கொஞ்சம் இரத்த தானமும் செய்த பிறகு, சைக்கிள் நம் பேச்சைக் கேட்கும் அளவுக்கு வந்திருக்கும். அப்புறம் பெரிய சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டு பழக வேண்டும்.

இப்படி பல வீர சாகசங்கள் செய்து பழகிய பின் எங்கள் வீட்டில் என் அண்ணனுக்குப் பள்ளி செல்ல ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். அவன் என்னை பின்னால் உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு. இந்த ஏற்பாட்டில் எனக்கு முழுச் சம்மதம். ஏனென்றால் எப்படியாவது என் அண்ணன் காலில் கையில் விழுந்து கெஞ்சி, கொஞ்ச தூரமாவது ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கைதான் காரணம். என் அண்ணன் என்னை விட ஒரு படி முன்னால் போய் புது சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வரும்போது ஓட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று அன்பு(?)க் கட்டளை இட்டு, நான் ஒப்புக்கொண்ட பின்தான் சைக்கிளைத் தொடவே சம்மதித்தான். இருந்தும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. என்றாவது எனக்கு வாய்ப்புக் கிடைக்காமலா போய் விடும் என்று அவன் பின்னால் உட்கார்ந்து போய் வந்தேன். நம்பிக்கை தானே வாழ்க்கை! ஆனால் எங்கள் சைக்கிள் பயணத்திற்கு, கூடிய சீக்கிரமே முற்றுப் புள்ளி வைக்க நேர்ந்தது. விவரமாகச் சொல்கிறேன்.

நாங்கள் பள்ளி செல்லும் வழியில் போக்குவரத்து என்று பார்த்தால் எப்போதாவது போகும் உர வண்டிகளும் மாணவர்கள் ஒரு சிலரின் சைக்கிள்களும்தான். கார்கள் எல்லாம் தெருவில் வந்தால் எல்லோரும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அபூர்வம். பேருந்து அந்த வழியில் வராது.  எனவே தைரியமாகச் செல்வோம். நான் அப்போது மூன்றாம் வகுப்பு. ஆங்கிலப் பாடம் ஆரம்பித்திருந்த புதிது. (அப்போது அரசு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் தான் A,B,C,D சொல்லித் தருவார்கள்). நான் பின்னால் உட்கார்ந்து வரும் போது சும்மா வராமல் சைக்கிளிலேயே ஒன்று இரண்டு போடச் சொல்லுவேன். என் அண்ணனும் வீராதி வீரனாகி போட்டுக் காண்பிப்பான். அப்படித்தான் ஒரு நாள் என் ஆங்கிலப் புலமையை பறை சாற்ற வேண்டி “A” போடச் சொன்னேன்.அன்றைக்கு என்று பார்த்து வனத் துறையினரின் ஜீப் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எங்கள் சைக்கிள், கடவுளைக் கண்ட பக்தன் போல அதை நோக்கி ஓடி, இடித்து சைக்கிளோடு நாங்களும் விழுந்து சரியான அடி!

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த அடி பட்ட நிலையிலும் என் அண்ணன் கீழே விழுந்ததையோ, அடி பட்டதையோ, வீட்டில் சொன்னால் அடி கொன்று விடுவேன் என்று மிரட்டியது தான். அடி பட்டதற்குக் கொஞ்சமும் அண்ணன் மிரட்டியதற்காக அதிகமும் ரோட்டிலேயே அழுது தீர்த்தேன். நாங்கள்தான் சொல்லவில்லையே தவிர, அந்த விபத்தைப் பார்த்த எங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கே வந்து சொல்லி விட்டு, எங்கள் அம்மா கொடுத்த காபியையும் குடித்துவிட்டு போய்விட்டார். அதற்கப்புறம் எங்களுக்கு கிடைத்த அர்ச்சனைகள், மாலை மரியாதைகள் முதலியவை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது இல்லை.

பிறகென்ன? நாங்கள் சைக்கிளில் பள்ளி செல்வது நின்று, மீண்டும் நடந்தே சென்றோம். இன்று இரு சக்கர வாகனத்தில் போகும் போது கூட அந்த சைக்கிள் சந்தோஷம் நிச்சயமாக இல்லவே இல்லை. அந்தக் கால நண்பர்களோடு கூடி வாழும் கூட்டு வாழ்க்கை இப்போது இல்லை. அதனால் நாம் பெற்றதை விட இழந்தது அதிகமோ? என எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பழைய இனிய நினைவுகளில் மூழ்கிக் களிக்க, நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…….

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 4

  1. Thank you very much for once again taking us back to our childhood days. Congragulations……..

  2. The writer has described about learning the cycle riding in our childhood period. While reading the same, I had been mentally transferred to my childhood days and how my parents were scolding me for each scar in the hand or leg which happened while learning the cycle. Well done Madam.

  3. I also enjoyed learning cycling during my younger age. I am from Chennai and I remember my freinds helping me as well as scolding me for getting the balance while driving. I was at Mylapore at that time and even took the risk of learning this art in a busy road where buses and cars where plying. Really I am able to visualise the help rendered my freinds during that time. Begging our parents and getting the money for paying the Hour Cycle is really an art. We used to hire the cycle for one hour and were watchful of the time also since the shop fellow would charge additionally if the cycle is not handed over to him in time. First 20 minutes would be full of joy and enjoyable. But by the end of 50 minutes we felt that as though the world is sinking because we have to hand over the cycle within another 10 minutes.

    Thanks to the author for taking us the journey to the wonderful memories through her writing.

    Nice job and request the writer to continue her writing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *