கட்டுரைகள்

இலங்கையின் மாபெரும் சமாதி புத்தர்

லில்லி சிவசண்முகநாதன், கொழும்பு

Lilli_Sivasanmuganathanஇலங்கையின் குருணாகலைக்கு அருகில் ரீதிகம, ரம்பொடகலை, மொனராகலையில் உள்ள வித்தியா சாகர பிரிவென விகாரையில் கருங்கற் புத்தர் சிலை, எம் இந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு வருகிறது. கருங்கல் பாறையைத் தகர்த்து, தமது கை வண்ணத்தினால் புத்தர் சிலை உருப்பெற்று வருகிறது. இது, பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்

“விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை.
எண்ணியவன் உறங்கினாலும்
எண்ணங்கள் உறங்குவதில்லை”

இவ்வசனத்திற்கேற்ப, ரம்பொடகலையில் மக்கள் எண்ணிய எண்ணம், இன்று  விதையாக முளைத்து, மக்களுக்கு நல்ல கனிகளை கொடுக்கப் போகிறது. 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட நிகழ்வு, இக்கிராம மக்களை வேதனைக்கு உள்ளாக்கியது. ஆத்திரடைந்த மக்கள் அங்குள்ள சில கட்டடங்களைத் தகர்க்க நினைத்தார்கள். இவர்களின் நோக்கத்தை அறிந்த வித்தியா சாகர பிரிவேன விகாரையின் தேரர், வணக்கத்துக்குரிய அமரமௌலி, கிராம மக்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறினார். அது மாத்திரமன்றி, புத்த பெருமானின் தர்ம தத்துவங்களையும் பிறருக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடாத வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணத்தை அவர்களின் மனத்தில் விதைத்தார்.

மேலும், அவர்களின் எண்ணத்தைத் திசை திருப்பும் விதமாக, விகாரையின் பின்னால் உள்ள பாறையைத் தகர்த்து நாம் ஒரு சிலையை உருவாக்கலாம் என்றார். இதை கேட்டு, கிராம மக்கள் மகிழ்ந்தனர். இன்றைய சிறுவர்கள் தான் நாளை எதிர்கால மன்னர்கள். நாம் சிறுவர்களுக்கு நல்லதைக் கண்டு கொடுத்தால், நல்லதைச் செய்வார்கள். சிறுவயதில் எதைக் கேட்கிறார்களோ அதை அவர்கள் செய்யத் துணிபவர்கள்.  அப்படிப்பட்டவர்கள்தான் இக்கிராமத்துச் சிறுவர்கள். தேரர் கூறியதை வேத வாக்காகக் கருதி, நான்கு சிறுவர்கள் உண்டியலில் பணம் சேகரித்து, தேரரிடம் கொடுத்தனர். அவர்கள் சேகரித்த பணம் 500 ரூபா. சிறுவர்களின் முயற்சி இன்று திருவினையானது. தேரரின் உறுதி, இலங்கை மண்ணில் மிக உயர்ந்த கரங்கற் புத்தர் சிலையை உருவாக்கியது.

இரம்பொடக்கலைக்குத் தொழில் நிதித்தம் சென்ற தமிழ் வர்த்தகர், தேரரிடம் ரம்பொடையில் பெரிய அனுமார் சிலை உள்ளது. அங்கு சென்றால் உங்களுக்கு நல்ல விடை கிடைத்து விடும் என்றார். தேரரும் வர்த்தகரும் ரம்பொடைக்குச் சென்றனர். அவர்களின் அதிர்ஷ்டம், தொழில் அதிபரும் மொரீசியஸ் தீவுகளுக்கான தூதுவரும் சமயத் தொண்டரும் பேச்சாளருமான தெ.ஈஸ்வரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

samadhibuddhastatue“தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் முழுவதற்குமே” என்ற கருதிற்கு அமையவும், “தந்தை வழியே தனயன்” என்ற சிந்தாந்தத்திற்கு அமையவும் தந்தையின் பாத அடிகளைப் பின்பற்றி, சேவை நோக்குடன் வாழும் இவர், மற்றவர்களுக்குத் தொண்டாற்றி, இன்பம் காண்பதில் இவருக்கு நிகர் இவரே தான்.  உதவி கேட்டு வரும் யாருக்கும் இல்லையென்று சொல்லாதவர். தேரரின் முயற்சிக்குத் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாக வாக்களித்தது மாத்திரமன்றி, செயலிலும் இறக்கினார். தொண்டு என்பது இறைவனின் கொடை; இச்சிலையை வடிவமைப்பதற்கு  உதவிகளைச் செய்ய இறைவன் தேர்ந்தெடுத்த மனிதன் தான் தெ.ஈஸ்வரன் அவர்கள். இலங்கையில் ஒரு புத்தர் சிலை அமைப்பதற்குத் தமிழர் ஒருவர் முன்வந்து உதவி செய்தமை, குறிப்பிடத்தக்க, பெருமையடைக் கூடிய விடயமாகும்.

தேரரை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று ரம்பொடை ஆஞ்சநேயர் சுவாமி சிலையை வடிவமைத்த இந்தியச் சிற்பி பத்மஸ்ரீ சிற்பக் கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியைத் தேரருக்கு அறிமுகம் செய்து வைத்தது மாத்திரமல்லாது அவரை உடனடியாக அழைத்து வந்து பாறையைக் காட்டியுள்ளார். இச்சிலை அமைப்பதற்கு இப்பாறை உறுதியானது, தரமானது என்றார் ஸ்தபதி. இதைக் கேட்ட தேரர் மகிழ்ந்து, சிலை செதுக்கும் பணிகளைத் தொடங்க முடிவெடுத்தார்.

அனுபவமிக்க இந்தியச் சிற்பி பத்மஸ்ரீ சிற்பக் கலாமணி எம் முத்தையா ஸ்தபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கையிலேயே மிக உயரமான 67.5 அடிக் கருங்கற் சிலை செதுக்கும் பணி, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டளவில் முழுமையாகச் செதுக்கி முடித்து விட முடியும் என எதிர்பார்த்தனர். முடியவில்லை. இறை நிலை அனுகிரகத்தினால் இப்பணி, 2011ஆம் ஆண்டு பூர்த்தியடைந்து விடுமென இந்தியச் சிற்பிகள் தெரிவித்தனர்.

திரு. தெ. ஈஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர், கரு ஜயசூரிய, காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர். ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இவர்களின் அயராத விடா முயற்சியினாலும் ஒத்துழைப்பினாலும் நிதியுதவிகளினாலும் தேசிய பொக்கிஷமாகவும் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும்,இப்பிரமண்டமான பாறை, புத்த பெருமானின் சிலையாக வெற்றிகரமாக உயிரூட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது. வணக்கத்துக்குரிய தேரர் அமரமௌலியின் சேவையும் விடா முயற்சியும் பாராட்டத்தக்கது.

இந்தியச் சிற்பக் கலைஞர்கள் அங்கே தங்கி இச்சிலையைச் செதுக்கி வருவது நம்மையெல்லாம் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. தேரரின் அன்பான அரவணைப்பும் கிராம மக்களின் அன்பும் இவர்களுக்கு பெரும் ஆதரவாய் அமைந்துள்ளது. இச்சிலை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 250 லட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவ்விடத்தை மேலும் அழகுப்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் தனியாகத் தியான மண்டபங்கள் அமைப்பதற்கும், இவ்விகாரைக்குரிய பாதையைச் சீராக அமைப்பதற்கும் மேலதிகமாக ரூபா 140 லட்சம் தேவைப்படுகிறது.

இதற்கான உதவிகளைப் பலரும் செய்துள்ளனர். முன்னாள் கௌரவ இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் ரம்பொடகலைக்கு விஜயம் செய்து, இக் கருகற் சிலையைப் பார்வையிட்டதுடன் 25 லட்சம் ரூபாயையும் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு சந்திரிகா குமாரதுங்க 3 லட்சம் ரூபாவையும், கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 25 லட்சம் ரூபாவையும், மலிக் சமரவிக்கிரம 5 லட்சம் ரூபாவையும், இசுறுஜீவா விக்கிரம சேகர 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், திருமதி விமலா குமாரகே 2 லட்சம் ரூபாவையும், கிராம மக்களின் ஒத்தழைப்புடன் கிராம  சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் 10 லட்சம் ரூபாவை சேகரித்தும் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் ஆசீர்வாதத்தையும் வணகக்த்துக்குரிய தேரர் அமரமௌலி தெரிவித்ததுள்ளார்.

இந்தியச் சிற்பக் கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை, இரம்பொடகலையில் ஒரு பாறைக்கு உயிரூட்டி, மிகப் பிரமாண்டமான புத்தர் சிலை   உயிரூட்டப்படுகிறது. புத்த பெருமானின் மேன்மையான  இயல்புகள் வெளிப்படும் விதமாக இது அமைகிறது. புனித யாத்திரைத் தலமாகவும் உல்லாசப் பயணத் தலமாகவும் அமையப் போவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

======================================

படத்திற்கு நன்றி – www.samadhibuddhastatue.org

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க