அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் அட்டகாசம்

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்க கார்ப்பரேட்டுகள், அமெரிக்காவில் நடத்தும் அட்டகாசம் பற்றி நிறையத் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் புரியும் அட்டகாசம், இப்போது தெரிய வந்திருக்கிறது. இவர்களின் அட்டகாசம் எப்போது முடியும் என்று காத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடியாக இருக்கிறது. இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்குவதும் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்று. ஆனால் இப்போது நடந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த நிறையப் பேர் வெற்றி பெற்றிருப்பதால் ஒபாமாவால் அந்தத் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. புகையிலைக் கம்பெனியான பிலிப் மோரிஸ் இன்டெர்நேஷனல் (Philip Morris International) என்ற அமெரிக்கப் புகையிலை கம்பெனி, வெளிநாடுகளில் புரியும் அட்டகாசங்கள் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்காவில் பல வழிகளைக் கையாண்டு – புகைபிடிப்பதால் உடல்நலம் கெடும், என்று ஜனங்களை அச்சுறுத்தியும் பல பொது இடங்களைப் புகைபிடிக்கக் கூடாத இடங்களாக மாற்றியும் – ஜனங்களைப் புகைபிடிப்பதிலிருந்து விடுவித்திருக்கிறார்கள். இதே மாதிரி ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் புகைபிடிப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால் தங்கள் புகையிலையின் விற்பனை குறைந்திருப்பதால் இந்தக் கம்பெனி, வளர்ந்து வரும் நாடுகளில் பல வகையாக விளம்பரம் செய்து புகையிலை விற்பனையைக் கூட்ட முயற்சி செய்கிறது.

2010 நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி தென்அமெரிக்காவில் உள்ள உருகுவே (Uruguay) நாட்டில் நடைபெற்ற 171 நாடுகள் கலந்துகொண்ட மாநாட்டில் அந்த நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புகையிலை உபயோகத்தைக் குறைக்க, அகில உலக ஒப்பந்தம் ஒன்றைத் தயாரிக்க முயன்றன.  இந்த முயற்சிகளை முடிந்த அளவு முறியடிக்க இந்தக் கம்பெனி முயன்றது.

Skull_with_a_burning_cigaretteஇந்தக் கம்பெனியின் தலைமையகம், ஸ்விட்சர்லாந்தில் உள்ளது. ஸ்விட்சர்லாந்திற்கும் உருகுவே நாட்டிற்கும் தொழில் முதலீடு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இது இந்த இரண்டு நாடுகளிலும் இரண்டு நாட்டுக் கம்பெனிகளும் எப்படி வியாபாரம் செய்யலாம் என்பதற்குச் சில விதிகள் வகுத்துள்ளது. இந்த விதிகளை மீறி உருகுவே, பிலிப்மோரீஸ் கம்பெனியின் விற்பனையைக் குறைக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றி இருப்பதாகவும் அதனால் தங்கள் சிகரெட்டுகளின் விற்பனை குறைந்து தங்கள் லாபம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு உருகுவே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் இந்தக் கம்பெனி உலக வங்கியின் முதலீடு சம்பந்தமான ஒரு ஸ்தாபனத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

உருகுவே நாடு செய்திருக்கும் தவறு என்ன தெரியுமா? அந்நாட்டு மக்களிடம் சிகரெட் குடிக்கும் பழக்கத்தைக் குறைக்க சிகரெட் பாக்கெட்டுகளின் மீது உள்ள படங்கள் எண்பது சதவிகிதம் புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய காட்சிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்தக் கம்பெனியின் சிகரெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரியான பாக்கெட்டுகளில் வர வேண்டும் என்று உருகுவே அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. பாக்கெட்டுகளின் மீது உள்ள சிகரெட் குடிப்பது போன்ற படங்கள் கவர்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்பதும் அந்தச் சட்ட ஷரத்துகளில் ஒன்று.  புகையிலை பிடிப்பதிலிருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு வளர்ந்து வரும் நாடு, தொழில் வளர்ச்சிக்காக வளர்ந்துவிட்ட இன்னொரு நாட்டோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பலன் இது. உலகமயமாக்குதலின் கேடுகளில் இதுவும் ஒன்று. உருகுவே நாட்டின் மொத்த வருமானம், பிலிப் மோரீஸ் கம்பெனியின் ஆண்டு விற்பனையான 6600 கோடி டாலர்களில் பாதி.

பிலிப் மோரீஸ் கம்பெனியின் அதிகாரி ஒருவர், உருகுவே நாட்டின் சட்டங்களை எல்லாம் தாங்கள் பின்பற்றி வருவதாகவும் மிகவும் அதீதமான சட்டங்கள் என்று தாங்கள் கருதுவதை மட்டும் எதிர்த்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

உருகுவே மாநாட்டில் கலந்துகொண்ட, வளர்ந்து வரும் பல நாடுகளை அச்சுறுத்தவே இந்தக் கம்பெனி இப்படி வழக்குத் தொடர்ந்திருக்கிறது என்று ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் ‘புகையிலை இல்லா உலகம்’ என்ற அமைப்பின் அதிகாரி ஒருவரே கூறியிருக்கிறார். புகையிலை உபயோகத்தை எல்லா நாடுகளிலிருந்தும் எப்படி அறவே ஒழிப்பது என்பதுதான் இந்த அமைப்பின் குறிக்கோள்.

பிலிப் மோரீஸ் இன்டர்நேஷனல் என்னும் கம்பெனி, பிலிப் மோரீஸ் யு.எஸ்.ஏ. என்னும் தாய்க் கம்பெனியிலிருந்து உருவாக்கப்பட்டு அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் தன் விற்பனையைக் கூட்ட எல்லா முயற்சிகளும் செய்துவருகிறது. பிலிப் மொரீஸ் யு.எஸ்.ஏ. அமெரிக்கக் காங்கிரஸில் சென்ற ஆண்டு புகையிலை உபயோகத்தைக் குறைக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்தது. அதோடு அமெரிக்கச் சந்தைக்கு வரும் உணவு, மருந்துகள் போன்ற பொருள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் (Food and Drug Administration) மீது மற்ற சிகரெட் கம்பெனிகள் வழக்குத் தொடர்ந்தபோது இந்தக் கம்பெனி அவர்களோடு சேரவில்லை. ஆனால் இதே கம்பெனிதான் தன் ஆராய்ச்சியில் புகையிலையால் புற்றுநோய் வரலாம் என்று கண்டுபிடித்திருந்தாலும் வெளியே சொல்லாமல் சிகரெட்டை விற்றுக்கொண்டிருந்தது. இதற்காகப் புற்றுநோய் வந்த சிலர் வழக்குப் போட்டபோது கோடிக்கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டிவந்தது.

அமெரிக்க மக்களின் நலன்களில் அக்கறை காட்டும் இந்தக் கம்பெனி உருகுவே நாட்டின் மீது மட்டுமல்ல, மெக்ஸிகோ, பிரேஸில் போன்ற தென் அமெரிக்க நாடுகளின் மீதும் அந்த நாடுகள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க அதீத நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

பல நாடுகள் புகைபிடிக்கும் பழக்கத்தை தங்கள் மக்களிடம் நிறுத்த முயன்று வரும்போது, வளர்ந்துவரும் நாடான இந்தோனேஷியா புகையிலை உபயோகத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இங்கு புகையிலை உபயோகத்தைக் குறைக்கக் கடுமையான சட்டங்கள் இல்லாதது மட்டுமல்ல, இவர்களின் புகையிலை விளம்பரங்கள் மக்களைப் புகைபிடிக்கத் தூண்டுவது போல் அமைந்திருக்கின்றன. அமெரிக்காவில் இப்போது புகையிலை விளம்பரப் பலகைகள் சாலைகளில் இல்லை; டி.வியில் இல்லை. ஆனால் இந்தோனேஷியாவில் இதற்கு எதிர்மாறாகச் சாலைகளைப் புகையிலை விளம்பரப் பலகைகள் அலங்கரிக்கினறன. தொலைக்காட்சியிலும் சினிமாத் தியேட்டர்களிலும் சிகரெட் விளம்பரங்கள் உண்டு.

அமெரிக்காவில் எந்தக் கலை நிகழ்ச்சிக்கு முன்னாலும் சிகரெட் விளம்பரம்  கிடையாது. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை கிடையாது. இந்தோனேஷியாவில் சிறு குழந்தைகளுக்கு சிகரெட் விற்பனை கிடையாது என்று எந்தச் சட்டமும் இல்லை. புகையிலை விற்பனையால் வரும் வருமானத்தையும் வேலை வாய்ப்புகளையும் தங்களால் இழக்க முடியாது என்று இந்தோனேஷிய அதிகாரிகள் கூறுகிறார்கள். (இங்கு பதினெட்டு மாசத்திலேயே புகைபிடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்ட ஒரு பையன் இருக்கிறான். இவன் ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட்டு சிகரெட்டுகள் குடித்தான். இப்போது இரண்டு வயதாகும் இந்தப் பையன் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்).

பிலிப் மோரீஸ் போன்ற புகையிலைக் கம்பெனிகள் செய்த வியாபாரத் தந்திரங்களால் பல நாடுகளில் புகையிலை உபயோகம் கூடியிருக்கிறது.  நல்லவேளை இந்தியா பாதிக்கப்படவில்லை. இது எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

=======================================

வான்கோவின் ஓவியத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *