தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது – செய்திகள்

கடந்த பத்து வருடங்களாக மதுரையின் வரலாறு பற்றிய அரிய செய்திகளை பற்றி ஆராய்ச்சி செய்து பதிவுகள் செய்து வந்தவர் திரு. சு. வெங்கடேசன். நாற்பத்தியோரு வயதான இவர் தான் எழுதிய முதல் புதினம்(நாவல்) ‘காவல் கோட்டம்’ என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.

மதுரை கோட்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய இந்த புதினம் மொத்தம் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. இந்த நூலின் ஒரு பகுதியைத் தழுவி, இயக்குநர் வசந்த பாலன் அவர்களின் இயக்கத்தில் ‘அரவான்’ என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த விருது தான் எதிர்பாராத ஒன்று என்று கூறும் வெங்கடேசன், “இந்த நூலை எழுதத்துவங்கிய, முதல் மூன்று ஆண்டுகள் கழித்து தான் இது ஒரு புதினமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்கிறார். விருது பற்றி அவர் மேலும் கூறுகையில் “சாகித்ய அகாடமி விருதானது எழுத்தாளர்களின் அனுபவம் மற்றும் அவர்களின் படைப்புகளின் மேன்மைக்காக வழங்கப்படும் விருது. இந்த விருது எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இது வரை நான்கு கவிதைத் தொகுப்புக்கள் மற்றும் ஐந்து புனைகதை அல்லாத நூல்களை எழுதியுள்ள திரு. சு. வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆவார். 1972ம் ஆண்டு தனது 39ம் வயதில் சாகித்ய அகாடமி விருது வென்ற பிரபல தமிழ் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களுக்குப் பின், குறைந்த வயதில் இந்த விருதினைப் பெறும் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது – செய்திகள்

  1. இளம் வயதிலேயே சாகித்திய அக்காதெமி விருது வென்று, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published.