அமெரிக்கச் செல்லப் பிராணிகள் – 3
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறார்கள். பன்றி மாமிசத்தை இங்கு பலரும் மிகவும் விரும்பிச் சாப்பிட்டாலும் சிலர் பன்றிகளைக் கூட செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். அவை மிகவும் புத்திசாலியான பிராணி என்றும் கூறுகிறார்கள். மிருகங்களுக்கான ஒரு தொலைக்காட்சிச் சேனலில் எப்படி தான் வளர்க்கும் ஒரு பன்றி தன் உயிரைக் காப்பாற்றியது என்று ஒரு பெண் கூறியது ஒளிபரப்பட்டது. பல நாய்கள் எப்படித் தங்கள் எஜமானர்களைக் காப்பாற்றியிருக்கின்றன என்ற செய்திகள் வரும். ஆனால் அதே சமயத்தில் ஒரு தம்பதி வளர்த்த ஒரு சிம்பன்ஸி எப்படி வெறி பிடித்து நடந்து கொண்டது என்ற செய்தியும் இரண்டு வருஷங்களுக்கு முன் வெளியானது.
இந்த சிம்பன்ஸியின் பெயர் ட்ராவிஸ் (Travis). இது பிறந்து மூன்று நாட்களிலேயே இதன் தாய் தப்பிக்கப் பார்த்த போது சுடப்பட்டு இறந்து விட்டது. ஸேண்ட்ரா, ஜெரோம் என்ற தம்பதி அதை அப்போதே வாங்கித் தங்கள் குழந்தை போல் வளர்க்கத் தொடங்கினர். அது அவர்களோடு வளர்ந்து வரும்போது மனிதர்கள் செய்யும் பல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொண்டது. பிரஷ் மூலம் பல் விளக்குவது, தானாக ஷவரில் குளிப்பது, கதவுகளைச் சாவிகளைக் கொண்டு திறப்பது, தன் எஜமானர்களோடு உணவருந்தும் மேஜையில் அமர்ந்து சாப்பிடுவது, ஒயின் (wine) என்னும் மது அருந்துவது, கணினியைத் தானாகத் திறந்து தனக்குப் பிடித்த போட்டோக்களைப் பார்ப்பது, தொலைக்காட்சியில் பந்து விளையாட்டைப் பார்ப்பது போன்றவற்றைத் தானாகச் செய்யக் கற்றுக் கொண்டது. ஐஸ்கிரீம் அதற்கு மிகவும் பிடிக்குமாம். கடைகளுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்யப் போகும் லாரிகள் எப்போது வீதியில் போகும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். பந்து விளையாட்டு மிகவும் பிடிக்குமாதலால் விளையாட்டு நடக்கும் சேனலைத் தானாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாம். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, எஜமானர் வளர்த்த குதிரைகளுக்குப் புல் கொடுப்பது போன்ற வேலைகளைக் கூடச் செய்யுமாம். பந்து விளையாட்டுப் படம் போட்ட சட்டை ஒன்றை அணிந்து கொள்ளுமாம்.
ட்ராவிஸ் சிறு வயதில் கோக்கோ கோலா விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறது.
இதன் எஜமானர்கள் ஒரு லாரிக் கம்பெனி நடத்தி வந்தார்கள். தப்பான இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களை இழுத்துச் செல்வதற்கு இவர்களுடைய லாரிகளைக் காவலர்கள் பயன்படுத்துவார்களாம். அதனால் பல காவலர்களை இதற்கு நன்றாகத் தெரியுமாம். கடைகளுக்குச் சாமான்கள் வாங்கச் சென்றால் அவர்களோடு காரில் போகுமாம். பல பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ட்ராவிஸைத் தெரியுமாம். சிலரோடு விளையாடி இருக்கிறதாம்.
ஒரு முறை எஜமானர்களும் ட்ராவிஸும் காரில் போய்க் கொண்டிருந்தபோது ரோட்டில் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவன் காரின் ஜன்னல் வழியாக எதையோ எறிந்த போது அதற்கு மிகவும் கோபம் ஏற்பட்டுத் தன் பாதுகாப்பு பெல்ட்டைக் (seat belt) கழற்றி விட்டுக் காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அவனைத் துரத்திக் கொண்டு போனதாம். ஆனால் அவன் பிடிபடாமல் போகவே இது வீதிகளின் சந்திப்பில் நின்று கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு இதைக் காரின் உள்ளே தள்ள முயற்சித்தபோது காரின் இன்னொரு கதவின் வழியாக வெளியே வந்திருக்கிறது. இப்படிப் பல முறை முயன்ற பிறகு ஒரு வழியாக அதைக் காரின் உள்ளே அமர்த்தியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அது வசித்த மாநிலமான கனெக்டிகட்டில் (Connecticut) ஐம்பது பவுண்டிற்கு மேல் உள்ள பாலூட்டிகளை யாரும் வளர்க்கக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ட்ராவிஸை அதற்கு முன்பே அதன் எஜமானர்கள் தத்து எடுத்துவிட்டதால் இந்தச் சட்டம் இவர்களைப் பாதிக்கவில்லை.
பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர், ஒரு முறை தான் ட்ராவிஸோடு பேச முயன்ற போது அது அவருடைய கையைக் கடித்துவிட்டதாகவும் தன்னை ஒரு காருக்குள் தள்ள முயன்றதாகவும் காவலர்களிடமும் அதனுடைய எஜமானர்களிடமும் முறையிட்டிருக்கிறார். ஆனால் அது பற்றி யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல வருடங்களாக அது அதனுடைய எஜமானர்களிடம் வளர்ந்து வந்ததால் அதனால் அபாயம் எதுவும் இல்லை என்று காவலர்கள் உள்பட பலரும் நம்பினர்.
2004-இல் ட்ராவிஸின் எஜமானர்களில் ஒருவரான ஜெரோம் இறந்துவிட்டார். அவர்களுடைய ஒரே குழந்தையும் இறந்து விடவே அவர் மனைவியான ஸாண்ட்ராவிற்கு ட்ராவிஸ்தான் எல்லா வகையிலும் ஒரு குழந்தை போல் இருந்து வந்தது. “அது சிம்பன்ஸி என்றாலும் அது எனக்குக் குழந்தை மாதிரி. அதை வளர்த்தவர்களுக்குத் தான் நான் சொல்வது என்னவென்று புரியும்” என்று ஸாண்ட்ரா சொல்வதுண்டாம்.
ட்ராவிஸுக்கு லைம் வியாதி (Lyme disease) இருந்ததாம். சம்பவம் நடந்த தினத்தன்று அதற்கு செனாக்ஸ் (Xanax) என்னும் மனநோய் வியாதிக்கான மருந்தை ஸாண்ட்ரா கொடுத்திருக்கிறார். அது சில சமயங்களில் சிலருடைய மனநிலைகளைத் திசை திருப்பி விடுமாம். எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்யலாம் என்பது மறந்துவிடுமாம். ட்ராவிஸுக்கும் அன்று அப்படி நடந்தது போலும். நிலையில்லாமல் இருந்திருக்கிறது. வெளியில் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறது. எஜமானரின் காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே போயிருக்கிறது. அதைக் கையாள முடியாமல் தவித்த ஸாண்ட்ரா தன் சிநேகிதி ஒருத்தியைத் துணைக்குக் கூப்பிட்டிருக்கிறார். சார்லா நாஷ் என்னும் அந்தப் பெண்ணை ட்ராவிஸுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் அன்று அந்தப் பெண் தன்னுடைய காரிலிருந்து இறங்கிய உடனே அவளைத் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அன்று அவள் வேறு விதமான முடி அலங்காரத்தில் இருந்ததால் அவளை அதற்கு அடையாளம் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவளுடைய கைகள், கண், காது, மூக்கு ஆகியவற்றைத் தாறுமாறாகத் தாக்கியிருக்கிறது. வெளியே வந்த ஸாண்ட்ரா அதைத் தடுத்து நிறுத்த முயன்று பனியைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் பனிவெட்டியைக் கொண்டு அதைத் தாக்கியிருக்கிறார். பின்னால் கத்தி ஒன்றை வைத்து அதை முதுகில் குத்தியிருக்கிறார். அப்போது ட்ராவிஸ் ‘அம்மா, என்னை என்ன செய்கிறீர்கள்?’ என்பது போல் பார்த்ததாம். ஆனால் அதன் கோபம் இன்னும் அதிகமாகித் தொடர்ந்து சிநேகிதியைத் தாக்கியதாம்.
தன்னால் அதைக் கையாள முடியாதலால் ஸாண்ட்ரா 911 மூலம் (அமெரிக்காவில் எந்த நெருக்கடியிலும் இந்த எண்களைச் சுழற்றினால் உடனே உதவிக்குக் காவலர்கள் வருவார்கள்.) காவல் நிலையத்தைக் கூப்பிட்டிருக்கிறார். காவலர்கள் வந்த பிறகும் ட்ராவிஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் அதைப் பிடிக்க முயன்ற போது ஒரு காவலரின் காருக்குள் ஏற முயன்றிருக்கிறது. காருக்குள் இருந்த காவலர் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக அதைப் பல முறை சுட்டிருக்கிறார். பலத்த காயமுற்ற ட்ராவிஸ் வீட்டிற்குள் ஓடிப் போய் அதற்குரிய கூண்டிற்குப் பக்கத்தில் இறந்து கிடந்திருக்கிறது. அதனால் தாக்கப்பட்ட பெண் கிட்டத்தட்ட தன் முகம் முழுவதையும் இழந்து விட்டாள். பலத்த சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துக் கொண்டாள்.
ஸாண்ட்ராவின் மீது சார்லா நாஷ் குடும்பத்தினர் நஷ்ட ஈடு வழக்குப் பதிவுசெய்து ஐம்பது மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகக் கேட்டனர். காவல்துறை ஸாண்ட்ராவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் நடந்த மறு வருடம் ஸாண்ட்ரா இதய நோயினால் இறந்து விட்டார். அவர் வாழ்க்கையில் பலரை இழந்து மிகவும் சோர்வுற்றிருந்த நிலையில் அவருடைய இதயத்தால் இதற்கு மேலும் எதையும் தாங்க முடியவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
செல்லப் பிராணிகளைப் பற்றிய விபரீதமான இன்னொரு கதை. ஓஹையோவைச் சேர்ந்த டெரி தாம்சன் (Terry Thomson) என்பவர் கதை செல்லப் பிராணிகள் வைத்திருந்தவர்கள் வரிசையில் சேராவிட்டாலும் வனவிலங்குகள் வைத்திருந்தவர் என்பதால் அவரைப் பற்றியும் இதில் சொல்லலாம். செப்டம்பர் மாதம் ஒரு நாள் அவர் 73 ஏக்கரா பரப்பளவில் அமைந்திருந்த எஸ்டேட்டில் தான் வைத்திருந்த ஐம்பத்தாறு மிருகங்களையும் அவற்றின் கூண்டிலிருந்து விடுவித்துவிட்டு எஸ்டேட்டைச் சுற்றியிருந்த வேலிகளையும் ஆங்காங்கே துண்டித்து விட்டிருந்தார். அந்த மிருகங்கள் அத்தனையும் அவர் எஸ்டேட்டிலிருந்து வெளியேறியதை சாலைகளில் பார்த்த ஒருவர் காவல்துறையிடம் புகார் கொடுத்ததன் பேரில் காவலர்கள் நாற்பத்தியெட்டு மிருகங்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஆறு மிருகங்களை மட்டும்தான் அவர்களால் உயிரோடு பிடிக்க முடிந்தது.
சுட்டுக் கொல்லப்பட்ட மிருகங்களில் மிக அரிதான பதினெட்டு வங்காளப் புலிகளும் பதினேழு சிங்கங்களும் பெரிய கரடிகளும் இருந்தன. இந்த வனவிலங்குகளை மயக்க மருந்து (tranquilizer) கொடுத்து உயிரோடு பிடித்து வந்திருக்கலாம் என்றாலும் அதன் சொந்தக்காரர் அவற்றை சூரியன் அஸ்தமித்து இருள் பரவும் நேரத்தில் வெளியே விட்டிருந்ததால் மயக்க மருந்து கொடுத்தவுடன் மயக்கமடையாமல் கொஞ்ச தூரம் சென்று இருட்டில் மயங்கி விழுந்து பின் மயக்கம் தெளிந்து அவை எல்லா இடங்களிலும் ஓடியாட வாய்ப்பு இருந்ததால் அவற்றைக் கண்டவுடன் காவலர்கள் சுட்டுக் கொன்று விட்டிருக்கிறார்கள். மிக அரிதான வனவிலங்குகளை இப்படி அநியாயமாகக் கொன்று விட்டார்களே என்று பல அமெரிக்கர்கள் ஆதங்கப்பட்டனர். உயிரோடு பிடித்த ஆறு மிருகங்களில் மூன்று புலிகள், ஒரு கரடி, இரண்டு குரங்குகள். இறந்த மிருகங்களில் சில ஒன்றையொன்று கொன்றிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த மிருகங்களின் சொந்தக்காரர் அவற்றை அவிழ்த்து விட்டுவிட்டுத் தன்னுடைய கார் ஷெட்டிற்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார். ஏன் அவற்றை இப்படி அவிழ்த்து விட்டார் என்று யாருக்கும் புரியவில்லை. அவருக்கு நிறைய கடன் இருந்ததாம். மேலும் அவருடைய மனைவியும் இவரை விட்டுப் பிரிந்திருந்தாராம். லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக சில மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வந்திருக்கிறார். காவலர்கள் இவர் எஸ்டேட்டிற்கு வந்தபோது இவருடைய இறந்த உடலின் அருகில் இரண்டு மூன்று காட்டு மிருகங்கள் நின்று கொண்டிருந்தனவாம். இவருடைய உடலைச் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். இவர் தற்கொலை செய்து கொள்ளுமுன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய எஸ்டேட்டில் வேலை பார்த்த ஒருவரிடம் மட்டும் ”நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். அது என்னவென்று அதைச் செய்த பிறகுதான் தெரியும்” என்றாராம்.
உயிரோடு பிடித்த ஆறு மிருகங்களையும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு மிருகக் காட்சிச்சாலையில் மற்ற மிருகங்களிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த மிருகங்களின் சொந்தக்காரர் இவற்றைச் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வைத்திருந்ததாகவும் அதனால் அவற்றிற்கு வியாதி எதுவும் இருக்கலாம் என்றும் அவற்றைத் தனியாக அடைத்து வைத்துச் சோதனைகள் நடத்திய பிறகே மற்ற மிருகங்களோடு சேர்க்கலாம் என்றும் மிருகக் காட்சாலை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதற்கிடையில் தாம்சனின் மனைவி செய்தி அறிந்து வந்து அந்த மிருகங்கள் மீது தனக்கு உரிமை இருக்கிறதென்றும் அதனால் அவற்றைக் காவலர்கள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அந்த மிருகங்களின் மீது அவருக்கே உரிமைகள் இருக்கின்றன என்றாலும் அவை இருக்கப் போகும் இடங்களை நன்கு சோதித்த பிறகே அவற்றை அவரிடம் ஒப்படைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். தாம்சனின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தாம்சனின் மனைவிக்கே அந்த மிருகங்களின் மீது உரிமை இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் மற்றவர்களின் பாதுகாப்பைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். காவலர்கள் தாம்சனின் வீட்டிற்கு வந்தபோது இவருக்கு முப்பதடி தூரத்தில் தாம்சனின் புலி ஒன்று நின்று கொண்டிருந்ததாம்.
2011-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வனவிலங்குகளை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி தவறு என்ற சட்டம் இருந்ததாம். புதிதாகப் பதவியேற்ற ஆளுநர் காலாவதி ஆகிவிட்ட அந்தச் சட்டத்தைப் புதுப்பிக்கவில்லையாம். அப்படிச் செய்திருந்தால் இப்படி நடக்காமல் தடுத்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இப்போது தற்காலிகச் சட்டம் ஒன்று அமுலுக்கு வந்திருக்கிறது. நிலையான சட்டம் ஒன்றை நவம்பர் கடைசிக்குள் கொண்டு வரப் போகிறார்கள்.
அமெரிக்கா பல விஷயங்களில் மற்ற நாடுகளை விட முன்னணியில் இருக்கிறது. பல வகையான மிருகங்களை வளர்ப்பதிலும் முன்னணியில் இருக்கிறது போலும்!
படத்திற்கு நன்றி: http://newsone.com/newsone-original/casey-gane-mccalla/when-animals-attack-5-pets-you-shouldnt-have/