அறுபத்து நான்கு யோகினிகள்

4

ஸ்ரீஜா வெங்கடேஷ் 

தெய்வ வழிபாடுகளில் சக்தி வழிபாடு மிகச் சிறப்பானதும், தனிச் சிறப்பு உடையதும் எனப் போற்றப் படுகிறது.. ஆதி சங்கரர் முதல் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவரும், நினைத்த நேரம் நினைத்த உரு எடுக்கும் தன்மையுடையவருமான கோரக்கச் சித்தர் வரை அன்னையை வழிபட்டு அவள் பாதகமலங்களைச் சரணடைந்தவர் பலகோடி. அப்படிப்பட்ட சக்தி வழிபாட்டில் முக்கியமாக நாம் கவனித்து ஆராதிக்க வேண்டியவர்கள் தான் அன்னையின் பரிவார தேவதைகளான அறுபத்து நான்கு யோகினிகள். அறுபத்து நான்கு கலைகளின் குறியீடாக விளங்கும் இவர்களை வழிபடுபவர்களுக்கு எந்தத் தீங்கும் வராத வண்ணம் காக்கும் திறன் படைத்தவர்கள் இவர்கள்.

இந்த அறுபத்து நான்கு பேரையும் பொதுவாக எட்டாகப் பிரித்து “அஷ்ட மாத்ருகா” என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் பிராம்மணி, வைஷ்ணவி, மாஹேஷ்வரி, இந்திராணி, கௌமாரி, வாராஹி அல்லது சாமுண்டா, நாரசிம்ஹி, விகடானனா ஆகிய எண்மர். நேபாளத்தில் இன்றும் “அஷ்ட மாத்ருகா” வழிபாடு நடைபெறுகிறது. நம் நாட்டில் அவர்கள் சப்த மாதர்கள் என்ற பெயரில் எல்லாப் பெரிய சிவாலயங்களிலும், சக்தி ஆலயங்களிலும் அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கிறார்கள். இவர்கள் பற்றிய வர்ணனை ரிக் வேதத்திலும், மஹாபாரதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில உலோகத் தகடுகளில் ஏழு பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்து இந்த வழிபாடு எவ்வளவு பழமையானது என நமக்கு நன்கு விளங்குகிறது. 

இவர்கள் தோன்றிய விதம் குறித்து தேவி மஹாத்மியம் விரிவாகக் கூறுகிறது.  முன்னொரு காலத்தில் சும்பன் , நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் இருந்தார்கள். அவர்களை அழிக்க யாராலும் முடியாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆகவே அவர்களின் அட்டஹாசங்கள் தாங்க முடியாமல் போயின. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர்கள் இழைத்த இன்னல்கள் சொல்லி முடியாது. மும்மூர்த்திகளாலும் அவர்களை வெல்ல முடியாத நிலை. அந்த நேரத்தில் அண்ட சராசரங்கள் இயங்குவதற்குச் சக்தியாக இருப்பவளும், ஒவ்வொரு உயிர்களிலும் குண்டலினியாக இருந்து இயக்குபவளும், உலக உயிர்கள் அனைத்திற்கும் தாயான அன்னை ஆதி சக்தி கண்மூடி மோனத்தவத்தில் ஆழ்ந்திருந்தாள். 

அவள் தவத்தைக் கலைத்து தேவர்களும், மூவர்களும், சும்ப நிசும்பர்களை சம்ஹரித்து உலகத்தைக் காத்து ரட்ஷிக்கும்படி வேண்டினார்கள். குழந்தைகளுக்கு ஒரு துன்பம் என்றால் பொறுப்பாளா அன்னை? வீறு கொண்டு எழுந்தாள். தன் உடலிருந்து அறுபத்து நான்கு மாதர்களை தோற்றுவித்தாள். அதில் எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்து தலைவிகளாக்கினாள், மற்றவர்களை எட்டெட்டாகப் பிரித்து அவர்களுக்கு பணி செய்யும்படியாகவும், முதல் எட்டுப் பேரைத் தன் சேனைத் தலைவிகளாகவும் நியமித்தாள். பிரம்மா தன் சக்தியை வழங்கியதால் அவள் பிராம்மணி எனவும், மஹா விஷ்ணுவால் சக்தி வழங்கப் பட்டவள் வைஷ்ணவி என்றும் இவ்வாறாக முறையே மஹேஸ்வரன், இந்திரன், குமரக் கடவுள், வராஹ அவதாரப் பெருமாள், நரசிம்ம அவதாரப் பெருமாள், வினாயகர் ஆகியோரிடமிருந்து சக்தி பெற்றவர்கள், மாஹேஸ்வரி, இந்திராணி, கௌமாரி, வாராஹி, நாரசிம்ஹி, மற்றும் விகடானனா என்றும் அழைக்கப் படுகிறார்கள். அந்தப் பயங்கர யுத்தத்தில் ரக்த பீஜன் என்னும் அரக்கனும் போரிட  வந்தான். அவன் வினோதமான வரம் பெற்றவன். அவன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தலிருந்தும் ஒரு ரக்தபீஜன் உருவாவான். அதனால் அவனை எத்தனை முறை வதைத்தாலும் மேலும் பலகோடி ரக்தபீஜர்கள் முளைத்தார்கள். பார்த்தாள் அன்னை. அவனை வெல்ல ஒரு தந்திரம் செய்தாள். 

அவனது காயங்களிலிருந்து பெருகும் குருதி மண்ணைத் தொடும் முன்பே தன் பரிவார தேவதைகளான யோகினிகளைக் கொண்டு அந்தக் குருதியைப் பருகச் செய்தாள். அதனால் ரத்தம் வெளியேறி வேறு ரக்தபீஜர்களும் தோன்ற முடியாத நிலையில் அன்னையின் வாளுக்குப் பலியானான் ரக்தபீஜன். சும்பனும் இறந்து விடவே அன்னையையும் அவள் படைகளையும் கண்டு நிசும்பன் அச்சம் கொண்டான். “நீ இப்படி பெரிய படையோடும், அறுபத்து நான்கு சக்திகளோடும் போராடி என்னை வெல்வது வீரமல்ல. என்னோடு தனியே யுத்தம் செய்யும் தைரியம் உனக்கிருக்கிறதா?” என்று அறைகூவல் விடுத்தான். அவனது சிறு மதியை நினைத்துச் சிரித்தாள் அன்னை. “அடே மூடா ! அவர்கள் என்னிலிருந்து உருவானவர்கள், அவர்களும் நானும் வேறு வேறல்ல” என்று சொல்லி அவர்கள் அனைவரையும் தன் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் ஐக்கியப்படுத்திக் கொண்டாள் அன்னை அகிலாண்ட நாயகி. தனியாகப் போரிட்டு அவனையும் மாய்த்தாள். வீராவேசம் தணியாமல் நின்றவளை தேவர்கள் சாந்தப் படுத்த, அவளும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக சகல விதமான அலங்காரங்களோடும் அழகு வடிவமாகக் காட்சி தந்தாள். இவ்வாறு தேவி மாஹாத்மியம் அன்னையின் அழகைப் பற்றியும், அவளது பரிவார தேவதைகள் குறித்தும் கூறுகிறது. 

ஆதிசங்கரர் தன்னுடைய சௌந்தர்ய லஹரி என்ற ஸ்தோத்திரத்தில் இந்த அறுபத்து நான்கு யோகினிகளைப் பற்றியும் மேலும் அவர்களது பரிவார தேவதைகளாக விளங்கும் மற்ற  யோகினிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு துல்லியமாகக் கூறுகிறார். அம்பிகையின் பேரழகைக் கண்ணால் கண்டு அந்த ஆனந்தம் தாங்காமல் அவளது அழகை தலை முதல் பாதம் வரை வர்ணித்து, பின்னரும் திருப்தியில்லாமல் போகவே மீண்டும் பாதம் முதல் தலை வரை அன்னையின் தேஜ ஸ்வரூப பேரழகை வர்ணிக்கும் ஒரு துதியே சௌந்தர்ய லஹரி. தமிழில் பொருள் கொண்டால் “அழகின் அலை” எனச் சொல்லலாம் . அதில் ஒரு இடத்தில் அன்னை கொலுவீற்றிருக்கும் அழகை வர்ணிக்கும் சங்கரர் “சதுஹ் சஷ்டி கோடி கண சேவிதா” என்கிறார். சதுர் என்றால் நான்கு, சஷ்டி என்றால் ஆறு. ஆக அறுபத்து நான்கு கோடி யோகினியரால் துதிக்கப் படுபவளே என்று பொருள். 

ஆதி சங்கரர் வடிவமைத்த ஸ்ரீ சக்கரமும் இந்த யோகினிகளை மையமாக வைத்தே இயங்குகிறது. பிராம்மணி முதல் விகடானனா வரையான முதன்மை எட்டு யோகினிகள், ஒவ்வொரு யோகினிக்கும் எட்டுப் பரிவார தேவதைகள்  ஆக மொத்தம் அறுபத்து நான்கு. இந்த அறுபத்து நான்கு யோகினிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி யோகினிகள் பணி செய்ய இருப்பதாகக் கூறுகிறார் ஆதி சங்கரர். ஆக மொத்தம் அறுபத்து நான்கு கோடி யோகினிகள். இவர்கள் அனைவரும் இந்தப் பிரபஞ்சத்தின் பல பகுதிகளிலும், பல்வேறு இயக்கங்களுக்கு காரணகர்த்தா ஆகிறார்கள். ஸ்ரீ சக்கரத்தில் மொத்தம் ஒன்பது ஆவரணங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு ஆவரணத்தையும் ஒரு கோணம், அல்லது ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கோணங்கள் அல்லது பகுதிகள் ஒவ்வொன்றையும் கட்டுப் படுத்துவது ஒரு யோகினி என்கிறார் ஆதிசங்கரர். ஸ்ரீ சக்கரத்தில் மொத்தம் அறுபத்து நான்கு கோணங்கள் அல்லது பகுதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த அறுபத்து நான்கு என்ற எண் சௌந்தர்ய லஹரியில் பல இடங்களில் குறிப்பாக நாமாவளிகள் 235, 236 ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கிறது. எனவே இந்த எண் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இவை அறுபத்து நான்கு தத்துவங்களைக் குறிப்பதாகவும் சொல்கிறார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களோடு, மனிதனுடைய மனம், புத்தி , நம்பிக்கை, கர்வம் இன்னும் பிற லௌகீக குணங்களும் சேர்ந்து அறுபத்து நான்கு என்ற எண்ணிக்கை வருகிறது. இந்தத் தத்துவங்கள் தான் ஒரு மனிதனைக் கட்டுப் படுத்துகின்றன. அதற்குப் பதிலாக இவற்றை நாம் கட்டுப் படுத்துவோமானால் “சித்தி” என்ற நிலையை அடையலாம் அன்னையைக் உணரும் ஆன்மீக நிலையை அடையலாம் என்பதே ஸ்ரீ சக்கரத்தின் தத்துவம். இந்த நிலையை அடைந்தவர் தான் ஆதி சங்கரர். அதற்குக் கடுமையான யோகப் பயிற்சியும், மனக் கட்டுப்பாடும் அவசியம். சிறு பிழை நேரக் கூடாது. அவற்றை அடைய சித்த புருஷர்களுக்கு அருள் பாலிப்பவர்கள் தான் இந்த அறுபத்து நான்கு யோகினியர். 

இப்படிப் பல்வேறு பெருமைகளைத் தாங்கி நிற்கும் அறுபத்து நான்கு யோகினிகளுக்கும் தனியாக கோயில் உண்டு என்பது ஒரு சிறப்பான செய்தி. இந்தியாவில் மொத்தம் ஒன்பது இடங்களில் இவர்களுக்குக் கோயில்கள் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது முழுமையாக நான்கு கோயில்களே காணக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு ஒரிஸ்ஸாவிலும் மேலும் இரண்டு மத்தியப் பிரதேசத்திலும் இருக்கின்றன. இந்த நான்கில் ஒரிஸ்ஸாவில் ஹீராபூரில் அமைந்துள்ள கோயில் தான் முழுமையாகக் காணக் கிடைக்கிறது. மற்றவை ஒரிஸ்ஸாவின் இராணிப்பூர் ஜரியல் என்ற இடத்திலும், மத்தியப் பிரதேசத்தில் பேராகாட் மற்றும் கஜுராஹோவிலும் உள்ளன. தமிழ் நாட்டிலும் ஒரு கோயில் இருந்ததாகச் சொல்லப் படுகிறது ஆனால் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இந்தக் கோயில்கள் அபூர்வமான சிற்ப வேலைபாடுகள் கொண்டவையாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒரிஸ்ஸாவின் ஹீராப்பூர் கோயில்தான் இருப்பதிலேயே சிறியது ஆனால் கலைநயம் மிக்கது. 

ஒரிஸ்ஸாவின் தலை நகர் புவனேஸ்வரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் பூரி போகும் வழியில் அமைந்துள்ளது ஹீராப்பூர் என்ற அழகிய கிராமம்.  எப்போதும் தண்ணீர் நிறைந்து ஓடும் புனித நதியான பார்கவி நதியின் மடியில் இருக்கிறது அந்தக் கோயில். கோயிலை “மஹாமாயா கோயில்” என்று மக்கள் அழைக்கிறார்கள். அன்னையின் மாயா லீலைகளை கண்டு மகிழ்ந்தவர்கள் வைத்த பெயர் போலும். போகும் வழியெல்லாம் பச்சைப் பசேலென வயல்களும், மணல் நிறைந்திருக்கும் ஆறுகளும் கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றன. இது பழம்பெருமை வாய்ந்த கோயில் என்று அங்குள்ள மக்கள் தெரிந்து வைத்திருப்பது ஒரு ஆறுதலான விஷயம். சாதாரண விவசாயி ஆனாலும் அல்லது கோயிலைப் பாதுகாக்கும்  பொறுப்பு வகிக்கும் தொல்பொருள் துறையைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தாலும் சரி, கோயிலைப் பற்றி நாம் கேட்டால் மிகுந்த பக்தியோடு பதிலளிக்கிறார்கள். ஆம்! அந்தக் கோயிலின் தொன்மை காரணமாக அது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் பூஜைகள், வழிபாடுகள் நடத்துவதில் எந்தக் தடையும் கிடையாது. 

கோயில் நெருங்க நெருங்கவே காற்றில் அதன் அதிர்வுகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. என்ன இருந்தாலும் சக்தி ஸ்வரூபம் அல்லவா அவர்கள்? அதுவும் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்திகள் சூழ வீற்றிருக்கும் கோயில் அல்லவா? நேர்மறையான அதிர்வுகளை உணர்ந்து நம் உடல் சிலிர்க்கிறது. மற்ற கோயில்களைப் போல சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோ இல்லாமல், வட்ட வடிவமாக அமைந்திருக்கிறது இந்த சின்னஞ்சிறு கோயில். கருவறை, அர்த்த மண்டபம், துவஜஸ்தம்பம் என்று எதுவும் கிடையாது. வட்ட வடிவப் பிரகாரச் சுவரில் அன்னையர்களின் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. சுமார் இரண்டடி உயரமே உடைய சிற்பங்கள். நடு நாயகமாக அன்னை துர்கையின் சிலை அதுவும் சுவரோடு சேர்ந்ததுதான். அந்த அன்னைக்குச் சிவப்பு வளையலும் சிந்தூரமும் சாற்றி வழிபடுகிறார்கள். மற்ற அபிஷேக ஆராதனைகள் கிடையாது. அன்னை பெண்களின்  மாங்கல்யத்தைக் காப்பாள் என்ற நம்பிக்கை அங்கே நிலவுகிறது. குழந்தைகளுக்கான தோஷத்தைப் போக்கும் கோயிலாகவும் அது திகழ்கிறது. சாக்த வழிபாடுகள் நடந்த கோயிலாதலால் மேற்கூரை கிடையாது. 

அந்த வட்ட வடிவமான கோயிலில் இருக்கும் சிலைகளின் அழகைக் காண நிச்சயமாகக் கண்கள் இரண்டு போதாது. ஒவ்வொரு யோகினியும் அவர்களுக்கே உரித்தான வாகனங்களோடு காட்சியளிக்கிறார்கள். போர்க்குணம் கொண்டவர்கள் என்றாலும் பெண்கள் அல்லவா? அழகுணர்ச்சிக்குப் பஞ்சமென்ன? அதனால் சர்வாலங்கார பூஷிதராகக் காட்சியளிக்கின்றனர்.  நகைகள், அணிந்திருக்கும் ஆடைகள் என ஒவ்வொருவருக்கும் வேறு வேறு என வடிவமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுடைய தலையலங்காரத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எத்தனை விதமான அலங்காரங்கள், சுருண்ட குழல்கள், நீண்டு நெளிந்திருக்கும் கேசம்,  உயர்த்திப் போடப்பட்டிருக்கும் கொண்டை எனக் காணக்காண வியப்பு பரவுகிறது நம்மிடம். அத்தனையும் கல்லில் வடித்த தெய்வீக உருவங்கள் என்பது ஒரு நிமிடம் மறந்து அன்னையரின் சன்னிதானத்தில் அவர்களின் கனிந்த அரவணைப்பில் பாதுகாப்பாக நிற்பது போலத் தோன்றுகிறது. அந்த இடத்தின் மௌனமும், மாசற்ற அந்தச் சூழ்நிலையும் நம்மைக் கடவுளுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. பூசாரியிடம் பேச்சுக் கொடுத்த போது சிறு குழந்தைகளுக்கு வரும் வியாதி, திருஷ்டி தோஷம் ஆகியவற்றை நீக்கி குழந்தைகளுக்கு நோயும், பகையும் அற்ற நீண்ட ஆயுள் கொடுத்துக் காப்பவர்கள் அந்த யோகினிகள் என்ற தகவல் கிடைத்தது. அவை தவிர திருமணத்தடை, பில்லி சூனியம் இவைகளால் பாதிப்பு, மன நலமின்மை ஆகியவற்றிற்கும் இது சிறந்த பரிகார ஷேத்திரம் என்று கூறுகிறார்கள். இன்றும் கூட பங்குனி மாதங்களில் சாக்த வழிபாடு செய்யும் சாமியார்கள் வந்து மஹா சண்டி ஹோமம், மற்றும் பல யாகங்கள் செய்வதாகவும் தெரிவித்தார் பூசாரி. 

புஷ்பமும், சிவப்பு வளையலும் அன்னையின் பிரசாதமாக கிடைக்கிறது. அந்தச் சிவப்பு வளையலை வீட்டுப் பூஜையில் வைத்து வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் நீடித்து இருக்கும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். அன்னையின் பாதாரவிந்தத்தில் அமர்ந்து, அவள் தன் பரிவார தேவதைகளுடன் கொலுவீற்றிருந்து உலகை ஆளும் திவ்ய திருக்கோலத்தைக் கண்டு இன்புற்றோம். அன்னையின் தர்பாருக்கு நேரில் சென்று பார்த்த சந்தோஷத்தோடும், மன நிறைவோடும் கோயிலுக்கு வெளியே வருகிறோம். 

தாய்மையைப் போற்றும் நம் இந்திய கலாசாரத்தின் சாரம் தான் சக்தி வழிபாடுகளும், யோகினி வழிபாடுகளும். பழம் பெருமை வாய்ந்த நம் கலாசாரத்தைக் காட்டிக் காப்பது மட்டுமல்ல, அவை வரும் தலைமுறைக்குக் கிடைக்கச் செய்வதும் நம் கடமை. ஒரிஸ்ஸா செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் பக்தர்கள் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டிய கோயில் இது. புவனேஸ்வர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸி அல்லது ஆட்டோ பிடித்துச் செல்லலாம். பேருந்து வசதி இன்னும் இல்லை. தூய்மையான காற்றும் மரங்களடர்ந்த அந்த சூழ்நிலையும், தெய்வீகத்தை உணர்த்துகின்றன. கண்டிப்பாக எல்லோரும் சென்று தரிசிக்க வேண்டிய இடம் ஹீராப்பூர். 

யா தேவி சர்வ பூதேஷு! ஷக்தி ரூபேண சமஸ்திதா!

நமஸ்தஸ்யை! நமஸ்தஸ்யை!நமஸ்தஸ்யை நமோ நமஹ!

 

ஹிராப்பூர் கோவில் படத்திற்கு நன்றி: http://www.art-and-archaeology.com/india/hirapur/cyt01.html

யோகினிகள் படத்திற்கு நன்றி: http://indiatemple.blogspot.com/2007/11/64-yoginis-dance-with-bhairava.html

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அறுபத்து நான்கு யோகினிகள்

  1. 64 யோகினிகளை பற்றி நன்றாக விவரித்து உள்ளீர்கள். நன்றி.

  2. ‘கோயில் நெருங்க நெருங்கவே காற்றில் அதன் அதிர்வுகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.’ 
    ~ வாஸ்தவம். முப்பது வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்ற போது, நான் உணர்ந்த அதிர்வுகளை நினைவூட்டுகிறீர்கள். நல்ல முழுமையான கட்டுரை. முப்பது வருடங்களுக்கு முன்னால், என் மைந்தன் ஹிந்து இதழுக்கு ‘ஹீராபூர் யோகினிகள்’ என்ற கட்டுரையை படங்களுடன் அனுப்பினான். அது அவனுடைய முதல் கட்டுரை. பிரசுரித்தார்கள் உடனே. 
    நன்றி, ஸ்ரீஜா.

  3. namaskaram.

    this is arulmurugan from trichy. are able to help me to give gayatri devi parivara davata names and position.

    thanks looking for your reply.

  4. அறுபத்து நான்கு கலைகளின் குறியீடாக விளங்கும் அன்னைஅகிலாண்ட நாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பரிவார தேவதைகளான அறபத்து நான்கு யோகினிகளை பற்றி அருமையாக விளக்கமளித்த ஸ்ரீஜா வெங்கடேஷிற்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள். மேலும் ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரத்தை மேற்கோள் காட்டியதற்கும், அழகு தமிழில் “அழகின் அலை” என்ற புதிய தகவலை பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம். – நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.