சென்னையில் இராமானுஜன் 125ம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – செய்திகள்
சென்னை, 26 டிசம்பர் 2011.
ஸ்ரீநிவாசன் இராமானுஜன் அவர்களின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில், கொண்டாடப்பட்ட விழாவில் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் கலந்து கொண்டு, 2012ம் ஆண்டை ”தேசிய கணிதவியல் ஆண்டாக” அறிவித்துள்ளார்.
விழாவில் பிரதமர் பேசுகையில்: “கணிதம் படித்தால் வாழ்வில் முன்னேற வாய்ப்பிருக்காது என்ற எண்ணம் மாற வேண்டும். நமது பரந்து விரிந்த இந்த நாட்டில் நமக்குத் தேவையான எண்ணிக்கையில் கணிதவியலாளர்கள் கிடைப்பதில்லை. கணித மேதை இராமானுஜன் அவர்கள் பிறந்த 125வது ஆண்டான 2012 -ஐ தேசிய கணித ஆண்டாகவும், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும், கணித மேதை இராமானுஜன் பிறந்த டிசம்பர் 22 -ஐ “தேசிய கணித நாளாகவும்” அறிவிக்கிறேன். சுமார் கடந்த முப்பது ஆண்டுகளாக மாணவர்கள் மிக உயரிய நிலையில் கணிதம் பயில்வதை தவிர்த்து வருகின்றனர். இதன் விளைவாக நமது நாட்டில் கணிதம் பயிற்றுவிக்கும் கணித ஆசிரியர்களின் தரமும் குறைந்து வருகின்றது.”என்று கூறினார்.
”கணிதம் படிப்பதால், நல்ல வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது சில வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை வேறு. கணக்கு படிப்பதால் பல புதிய வேலைவாய்ப்புகள் தயாராக உள்ளன.
கணிதம் அறிவியலின் தாய் என்ற நிலையில் வைத்து போற்றப்படும் ஒரு துறையாகும். இராமானுஜன் அவர்கள் பல தடைகள் மற்றும் வறுமை நிலை ஆகிய பல சிரமங்களைக் கடந்து கணிதத் துறையில் உலகமே புகழும் அளவிற்கு உயர்ந்தார். நாம் இராமானுஜம் போன்ற திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இராமானுஜன் ஒரு தமிழர் என்ற வகையில் தமிழகமும், இந்தியர் என்ற வகையில் நமது இந்தியாவும் பெருமை கொள்ள வேண்டும்.
சி. வி. இராமன், சுப்ரமணியம் சந்திர சேகர் ஆகிய இரண்டு நோபல் பரிசு வெற்றியாளர்கள் தவிர தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்தவர் இராமானுஜன் ஆவார்.” என்று கூறிய பிரதமர் அதைத் தொடர்ந்து, இராமானுஜம் அவர்களை கவுரவிக்கும் விதமாக தபால்தலையையும் வெளியிட்டார்.