கரிகாலன்
நூ த லோகசுந்தரம்
சங்ககால சோழமன்னர்களில் புகழ்பெற்ற ஒரு பெருமன்னன் ‘கரிகால்வளவன்’ (அ) ‘கரிகால் பெருவளத்தான்’. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக் கண்ணி யார் பாடிய பொருநர் ஆற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு பாட்டுடைத் தலைவனும், அகநானூறு 55, 125, 141, 246, 376 புறநானூறு 7, 65, 66, 224, சிலப்பதிகாரம் 6-கடலாடு காதை, 21-வஞ்சின மாலை, மணிமேகலை 1-விழாவறை காதை, குலோத்துங்க சோழனுலா கண்ணி-18, முதலிய வற்றில் பெருவீரன் புகழ்பல சேர்ந்தவன் என குறிகப்பட்டுள்ளவன் ஆவான். ஈங்கு நான் குறிக்க இருப்பது அப்பெருமன்னன் தொடர்புடைய வரலாறு ஏதும் இல்லை கரிகாலன் என்னும் பெயரில் காணப்படும் சொற்களின் விளக்கம் மட்டும். உடற்கூற்றியல் பற்றியதாகக் காண்பது .
இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர் நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடையவனாதலால் அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் ‘வீரம்’-‘காதல்’ என இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப் பரந்தலைப் போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு அதை விடுத்து தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப் பெற்றான் என்பது ஐயத்தின் பால்படும்.
கருங்குழல் ஆதனார் இயற்றிய புறநானூறு (7) “களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய திருந்தடி” என காட்டும் வரிகளால் ஐயம் இன்றி அகச்சான்று உள்ளது எனலாம். அஃதாவது களிற்றின் தாள் (யானையின் கால்) போன்று கடைஇய = கடைந்த உரு கொண்டது (உருண்ட வடிவம்) உவமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் காண்கின்றது “யானையின் கால் போன்ற உருண்ட வடிவினதான சோழ மன்னனது தாள்” என வரும்.
மேலும் கரிக்கு(யானைக்கு) காலன்(யமன்) போன்று உடற்றிரம் மனத்திண்மைக் கொண்டவன் என இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் கொள்வதில் பழுதுள்ளது. மன்னன் ‘கரிகால்பெருவளத்தான்’, ‘கரிகால்வளவன்’ என குறிக்கப்படுகின்றானே அன்றி காலன் என ‘னகர’ மெய்ஈறு உடைய சொல் நூல்களில் வழங்கவில்லை. பிற்காலத்தோர்தான் ‘கரிகாலன்’ ஒர் புதிய விளியினைப்பயன் கொண்டனர்.
‘வெண்ணிக் குயத்தியார்’ என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலில் (66) “களி இயல் யானைக் கரிகால் வளவ” எனவரும் வரிகள் யானை நடையின் தோற்றததைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே யானையின் கால் போன்று ஒருவரது தாள் உளவாதல் ஐயமின்றிப் பெறப்படுகினறது.
யானையின்கால் போன்று ஒருவன் கால் உருண்ட உருவத்திலும் நடையிலும் அமைந்தருப்பது எப்போது ??
நமக்கு நன்கே தெரிந்த காலில் தோன்றும் அத்தனித்தன்மை (குறை) ‘யானைக்கால்’ என்பதே. இந்நோய் உற்றோர்தம் கால்கள் இயல்பில்லாமல் பெருத்து உருண்ட வடிவினதாவதை நன்கறி வோம். ஆதலால் அச்சோழமன்னன் ‘யானைக்கால்’ என்னும் உடற்கூற்றியல் (குறை) உடையவன் ஆதல் வேண்டும். இங்ஙணம் இயற்கையின் வழி பிறப்புக் குறைதனை காட்டுவது மரபிற்கும் ஓர் மன்னனின் மாண் பினுக்கும் அப்பாற்பட்டது ஆகாதா ? என்றக்கால் ஆகா எனலாம். ஈங்கு அச்சொல் பயன்கொள்நிலையில் இகழ்ச்சி ஏதும் இல்லாமல் தனிஒருவனை பலரினின்று வேறுபடுத்திக் காட்டும் நிலை மட்டும் ஆகும். இஃது மரபில் ஏற்புடையதே. புறநானூறு பாடல் (51) இயற்றிய புலவர் ஐயூர் முடவனார் எனக் குறிக்கப் படுகின்றார். ஈங்கு புலவரை குறைகாண் நிலை ஏதும் இல்லை. ஓருவரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கருத்தில் அச்சொல் பயன்பட்டுள்ளது. பின் இணைப்பு காண்க. ஆங்கே ஓர் மன்னன் (யானைக்கண்சேய்) அவ்வாறே குறிக்கப்பெறுகின்றான்.
எனவே ‘கரிகால்வளவன்’, ‘கரிகால் பெருவளத்தான்’ என்றெல்லாம் விளிக்கப்படும் மாமன்னன்தன் கால்கள் யானையின் கால்கள் போன்று கடைந்த (உருண்ட) வடிவினதாக இருந்ததால் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்பெற்றான் எனலாம். அஃதே இக்காலத்தில் யானைக்கால் என்று குறிக்கப்படும் ஓர் நோய் ஆகும்.
() () () () () () () () () () () () () () () () ()
பின் இணைப்பு
மின்தமிழ் மடலாடல் குழுவில் 7-8 ஆண்டுகளுக்கு முன், அப்போது அதற்கு ‘இசுவடி’என்பது பெயர், ஓர் உடல் கூற்றியல் தொடர்புடைய சொல் ஒன்றினைக் காட்டி ஓர் குறுவிளக்கமும் வைத்திருந்தேன். அஃது புறநானூறு 17, 20 – பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார், புறநானூறு 229 பாடியவர் கூடலூர் கிழார். இவர்களால் பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் ‘யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை’ என்னும் சேர மன்னன் ஆகும் ‘யானைக்கண்’ என்பது ‘நாகர்க்கண்’ (Mangloism) எனும் சொல்லால் குறிக்கப்படும் ஓர் மகவுப் பிறப்பினில் வரும் ஓர் குறைபாடு ஆகும் எனக்காட்டி இருந்தேன். இவ்வகை பிறவிக் குறைபாடு உடையோர்தம் கண்களின் நடுவில் கற்பனையாக ஓர் கோடு கீறினால் அஃது நிலமட்டத்திற்கு இணையாக இராமல் யானையைப் போல் கவைநிகர் அமைப்புடன் காணப்படும் (மஞ்சள் இன மக்களிடை காணும் ஓர் பொதுத் தன்மை = கவட்டின் மெல்புற வடிவு = ஆங்கில V ).
மற்றும் யானைக்கண் உடையோருடைய தலை சிறுத்தும், அறிவு வளர்ச்சியில் முதிர்ச்சி மிகமிகக் குறைந்தும், வாழும் காலம் 16 அகவைக்கு மேல்படாது என Mangloism அதனின் பண்பினைக் சுட்டி இருந்தேன். புறநானூற்றுப் பாடல் கொளுவினில் காணப்படும் விளக்கம் தமிழ்மக்கள் இதனை ஈராயிரம் ஆண்டுகல் முன்பபே அறிந்திருந்தனர் எனக்காட்டுகின்றது.
புறநானூறு 229
“மறந்தனன் கொல்லோ” //
பாடியவர்: கூடலூர் கிழார் //
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை //
திணை: பொதுவியல் //துறை: கையறுநிலை //
குறிப்பு: :: அவன் இன்னநாளில் துஞ்சும்என அஞ்சி அவன் அவ்வாறே துஞ்சியபோது பாடியது.
மேலும் அதே மடலில்,
திருவிளையாடல் புராணத்தில் காணும் ‘தடாதகை பிராட்டியார் திருஅவதாரப்படல’த்தில் காணும் இயல்பில்லாது பெண்மகவு 3 முலைக் காம்புகளுடன் பிறப்பதும் அவற்றில் (நடுவில்) ஒன்று சிறப்புற அமையாமல் / வளராமல் இருப்பதும் “அம்மகள் (தடாதகை பிராட்டி = மீனாட்சி) தான் மணக்கப் போகும் கணவனைக் காணும் காலத்தில் மறைந்துவிடும் கவலை விடும்” என வந்த அசரீரி வாக்கு முதலிய குறிப்புகள் உள்ளவற்றைக் காட்டி இருந்தேன். இஃதே ரஷ்யநாட்டு ஆசிரியர் ஒருவர் எழுதிய உயிர் இனங்களின் உடற்கூற்றியல் பண்புகள் (ஆயிரக்கினதானவை நுணுக்கி தொகுத்தது) விளக்கும் நூலில் (‘Physiology For Everyone’) அவர் ஜப்பானிய மகளிர் 5 ல் ஒருவருக்கு இவ்வாறு இருப்பதாகக் குறித்துள்ளதும் இணைத்திருந்தேன்.
படங்களுக்கு நன்றி :
http://animals.nationalgeographic.com/animals/mammals/african-elephant/
http://www.newworldencyclopedia.org/entry/Karikala_Chola