பொங்கல் திருநாள், நன்றிப் பெருநாள்!

0

தமிழ்த்தேனீ

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்ந்நன்றி கொன்ற மகற்கு“

உலகில் எத்துணையோ விஞ்ஞானக் கருவிகள் கண்டு பிடித்து விட்டோம். விஞ்ஞானம் அதி விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

1.உடல் உறுப்புகளைக் கூடத் தயாரிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இன்னும் நம்மால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளவோ, உயிரின் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளவோ முடியவில்லை.

2.ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் இருக்கும் மூலக்கூறுகளில் சேகரிக்கப் பட்ட அபூர்வமான சிந்தனைகளை, கண்டு பிடிப்புகளை இன்னொரு மூளைக்குள் இடம் மாற்றும் கருவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.அது மட்டும் கண்டு பிடிக்கப்பட்டால் பற்பல அறிஞர்களின் மூளைத் தொகுப்புகளை வெகு எளிதாக இன்னொரு மூளைக்குள் ஏற்றி விடலாம்.

இவை எல்லாம் இருக்கட்டும். இத்துணைக் காலமாய் நமக்குப் பல விஞ்ஞான முன்னேற்றங்களை, தங்கள் வாழ்வின் சுவையான பகுதிகளை ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று கழித்து விட்டு, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த எத்துணையோ விஞ்ஞானிகளுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அதை விட முக்கியமாக நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள், உழவர்கள், விவசாயிகள்.

போகித் திருநாள்:

நம் வீட்டில் சேரும் குப்பை, அழுக்குகள், இவைகளைக் களைந்து நெருப்பிலிட்டுப் பொசுக்கி, சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக்கும் திருநாளே போகி. அன்று எரியும் நெருப்பில் நம்முடைய மன அழுக்குகளையும் சேர்த்து எரித்து நம்மையும் தூய்மைப் படுத்திக் கொண்டு மீண்டும் புது வாழ்வு துவங்கி, மகிழ்ந்து நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகி என்னும் திருநாள்.

இன்னும் முக்கியமாக அன்றாடம் உணவில்லையெனில் உயிர் வாழ முடியாத அத்துணை ஜீவராசிகளின் ஆதார சக்தியான உணவைத் தயாரிக்க, விளைவிக்க, தங்களுடைய பொன்னான நேரங்களை,உழைப்பை,வியர்வையை நமக்காகச் செலவழித்து விட்டு, தங்களுக்கென்று ஒன்றும் சேர்த்து வைக்காத விவசாயிகள் இவர்கள் அத்துணை பேரையும் காட்டிலும் உயர்ந்தவர்கள்; உத்தமர்கள். நம் உயிரைக் காப்பாற்றும் சக்திகள், உழவர்கள். ஜாதி, மதம், நாடு என்னும் எந்தப் பேதமும் இல்லாத உலகக் காப்பாளர்கள், அமுத சுரபிகள் விவசாயிகளே.

அவர்கள் தானியங்கள் விளைவிக்க உதவிய அத்துணை  சாதனங்களுக்கும் நன்றி சொல்லும் திருநாளே ஏர், கலப்பை, இயற்கை, மாடுகள், எறும்பு, பறவைகள், மண்புழுக்கள் போன்ற பலருக்கும் நன்றி சொல்லும் விதமாக ஏற்பட்ட  திருநாளே, பொங்கல் திரு நாள். ஆகவே நன்றி சொல்வோம் அத்துணை நண்பர்களும் சர்க்கரைப் பொங்கல், வெல்லப் பொங்கல், வாழைப் பழம், கரும்பு இவற்றை உண்ண ஆரம்பிக்கும் போது அந்த உழவர்களை மனத்தில் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு,முடிந்தால் அன்று ஒரு நாளாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு உண்போமானால் அதுதான் நாம் செலுத்தும் நன்றி.

அனைத்துத் தமிழ் நண்பர்களுக்கும்
அனைத்துயிர்க்கும் ஜீவாதாரமான சூரிய பகவானுக்கும்
அனைத்து உழவர்களுக்கும் நன்றி சொல்ல
மகிழ்ச்சியாய்ப்  பொங்கலிடுவோம்.

என் மனமார்ந்த நன்றி.

================
படங்கள்: தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *