நிலவொளியில் ஒரு குளியல் – 8
ஸ்ரீஜா வெங்கடேஷ்
இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருப்பது சகஜமாகிவிட்டது. ஒன்று பெரியவர்கள் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், மற்றொன்று குழந்தைகள் கார்ட்டூன்(?) பார்க்கவும் என்று சொல்கிறார்கள். இப்போது வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவும் பார்க்கும் தரமாக இல்லை என்பது மட்டுமில்லை, பார்ப்பவர் மனத்தில் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிப்பவையாக விளங்குகின்றன என்பது என் கருத்து. ஒருத்தியின் மூன்றாவது கணவனுக்கும் அவனுடைய இரண்டாவது மனைவியின் தங்கைக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என வக்கிரமான உறவுகள், ஒரே வீட்டில் வசிக்கும் நாத்தனாரும் அண்ணியும் ஒருவரையொருவர் கொல்லும் முயற்சியில் ஈடுபடுவது போன்றவைதாம் நெடுந்தொடர்களின் கதைக் களமாக விளங்குகின்றன. இவற்றைப் பார்ப்பது ஒரே ஒரு நாள் தவறினாலும் எதையோ இழந்ததாக நினைக்கும் பல பேர்களை எனக்குத் தெரியும். இந்தப் பத்தி நிச்சயமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனமோ, சாடலோ கண்டிப்பாக இல்லை. தொலைக்காட்சி என்பதே மிகவும் அரிதான காலக்கட்டமான எண்பதுகள் பற்றியது.
1982இல் டெல்லியில் ஏஷியாட் நடந்தபோதுதான் முதன் முதலில் வண்ண ஒளிபரப்பு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு முன்னமே கறுப்பு வெள்ளை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கள் கிராமத்திற்கு அப்போதுதான் முதன் முதலாக டிவி வந்தது. எங்கள் கிராமத்தில் ஒரு காலேஜ் உண்டு (சிம்சன் கம்பனியால் நடத்தப்படும் ஒரு சிறந்த கல்லூரி). அதன் பிரின்ஸ்பால் வீட்டில் தான் டிவி வந்தது. எனக்கு இதில் ஒரே சந்தோஷம். ஏனென்றால் மற்ற சிறுவர்கள் நுழையத் தயங்கும் அந்த வீட்டில் எனக்குச் சில சலுகைகள் உண்டு. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வீட்டிற்குப் போய் அந்த அண்ணன்களோடு விளையாடுவேன். சமயத்தில் என் அண்ணனும் வருவான். மற்றவர்கள் வந்தாலும் அவர்கள் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஏனோ வரத் தயங்கினார்கள். நாங்களும் கூப்பிட மாட்டோம். அப்படிச் செய்தால் எங்களுடைய பரமசிவன் கழுத்துப் பாம்பு என்ற பதவி பறி போய்விடுமே! என்ற பயம்தான் காரணம். இந்த நிலையில் அந்த வீட்டில் டிவி வாங்கப் போகிறார்கள் என்ற செய்தி, எங்களுக்குத் தந்த ஆளுமையை நீங்கள் உணர வேண்டும்.
நினைத்தவுடன் சென்று கடையில் வாங்க, டிவி ஒன்றும் கடலை மிட்டாய் இல்லை. திருநெல்வேலி போய்த்தான் வாங்க வேண்டும். ஒரு நல்ல நாளில் டிவி வாங்க பிரின்ஸ்பால் மாமா (நாங்கள் அவரை அப்படித்தான் அழைப்போம்) காரில் கிளம்பினார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போது வரும் டிவியென்று மாமியிடம் குறைந்தது நூறு தடவையாவது அவர் கிளம்பியது முதல் கேட்டிருப்பேன். என் தொல்லை தாங்காமல் அவர்கள், “நீ போய் மதியம் சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுந்து வா. அப்போது தான் வந்திருக்கும்” என்று என்னைத் துரத்தினார்கள். அதுவரை டிவி என்பது எப்படியிருக்கும் என்பதே தெரியாது. அதனால் என் தோழிகளும் நானும் பல விதமான கற்பனைகளில் மூழ்கினோம்.
சென்னைக்கு ஒரே ஒரு முறை செல்லும் பேறு பெற்ற என் தோழி ஒருத்தி எங்களுக்கு விளக்கினாள். “ஒரு வெள்ளை வேட்டியை சினிமா ஸ்க்ரீன் மாதிரி கட்டி எதுத்தாப்புல ஒரு மிஷின் வெச்சு படம் காட்டுவாங்க. ஆனா அதுல சினிமாப் படமெல்லாம் வராதே” என்றாள், எல்லாம் தெரிந்தவள் போல. எங்களுக்கு பக்கென்றது. அவள் சொன்னது புரொஜெக்டர் என்று பின்னால் தெரிந்துகொண்டோம். அவள் சும்மா சொல்கிறாள் என்று எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம். ஒரு சில வம்பு பிடித்த வயதான தாத்தாக்களும் பாட்டிகளும் அப்படி வேட்டியில் எல்லாம் படம் தெரியாது என்று சாதித்தார்கள். அப்படித் தெரிந்தால் அது ஏதோ மாய மந்திர வேலை என்றும் அதைப் பார்த்தால் கண் போய்விடும் என்றும் எங்களைப் பயமுறுத்தினார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் சட்டை செய்யவே இல்லை.
டிவியும் வந்து சேர்ந்தது. சும்மா வரவில்லை. கூடவே நீளமான இரும்புக் குழாயும் அலுமினியக் கம்பிகளும் வந்தன. என் தோழி சொன்னது போல வேட்டியெல்லாம் அவர்கள் கொண்டு வரவில்லை. டிவியென்பது ஒரு பெரிய பெட்டி மாதிரி இருந்தது. நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்துகொண்டு பார்க்க, பெரியவர்கள் சும்மா வாசலுக்கு வந்து போவது போல் எட்டி எட்டிப் பார்த்தார்கள். பிரின்ஸ்பால் மாமா வீட்டு மொட்டை மாடியில் ஒரு சுவர் போலக் கட்டி அந்த இரும்புக் குழாயை அதில் பதித்து, அலுமினியக் கம்பிகளை அதில் கட்டி… என்று வந்திருந்த ஆட்கள் பம்பரமாக வேலை செய்தார்கள்.
“எப்போ டிவி தெரியும்?” என்று கேட்டதற்கு “இந்த ஆண்டனா, பூஸ்டர் எல்லாம் பொருத்தினாதான் தெரியும்” என்று பதில் வந்தது. குடிக்கும் பூஸ்ட் வேறு, அவர் சொன்ன பூஸ்டர் வேறு என்று யாரும் சொல்லாமலே எங்களுக்குத் தெரிந்து போனது. . சாயங்காலம் சுமார் ஏழு மணியளவில் வேலை முடிந்து டிவியை ஆன் செய்தார்கள். முதல் நாள் என்பதால் நாங்கள் சிறுவர்கள் அனைவரும் அவர்கள் வீட்டினுள்ளே இருந்தோம். யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்ற தைரியத்தில் சிலர் நைஸாகத் தரையில் உட்கார்ந்துகொண்டார்கள்.
வந்தது பாருங்கள் படம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல கமல், ரஜினி படம் வராமல் யாரோ இரண்டு பேர் ஹிந்தியில் வளவளவெனப் பேசிக்கொண்டிருந்ததைக் காட்டினார்கள். எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. டிவியோடு வந்திருந்த ஒரு ஆள்தான், ‘எங்கள் கிராமத்திற்கு மட்டுமல்ல அந்தப் பகுதி முழுவதுமே தமிழ் நிகழ்ச்சிகள் வராது. டெல்லியிலிருந்து ஒளிபரப்புவது தான் வரும்’ என்று சொன்னார். எங்களுக்குச் சப்பென்று போய் விட்டது. ஆனால் சிலோன் டிவி தெரியக் கூடும் என்று சொல்லி ஆண்டனா எனப்பட்ட இரும்புக் குழாயைத் திருகப் போனார்.
சிறிது நேரத்தில் நல்ல தெளிவான படமும் தமிழ் ஓசையும் கேட்டது. ரூபவாஹினி என்ற பெயரை முதன் முதலாகப் பார்த்தோம். தமிழில் செய்தியும் கேட்டோம். நாட்கள் செல்லச் செல்ல டிவியின் மதிப்பு குறையத் தொடங்கியது. ஏனென்றால் சாயங்காலங்களில் யாரேனும் பேசிக்கொண்டிருப்பர்கள். இல்லை என்றால் வயதான பெண்கள் ஒடிஸ்ஸி நடனம் ஆடுவார்கள். புதன் கிழமைகளில் மட்டும் மனம் அடித்துக்கொள்ளும். அன்று வார மத்தி திரைப்படம் என்று ரூபவாஹினியில் தமிழ் சினிமா போடுவார்கள். ஆனால் அது இரவு எட்டு மணிக்குத்தான் தொடங்கும் என்பதால் அதைப் பார்க்க அனுமதி கிடைக்கது. என்றாவது மறுநாள் பள்ளி விடுமுறை என்றால் அன்று கெஞ்சிக் கூத்தாடி, பத்து மணி கூடினால் படம் முடியும் வரை பார்ப்போம் அவ்வளவுதான்.
இது நடந்து முடிந்து சில ஆண்டுகளில், பல வீடுகளில் டிவி வாங்கினார்கள். ஏனென்றால் கொடைக்கானலில் இருந்து சென்னை நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்பினார்கள். அதற்குள் டிவியைப் பற்றிய சில அடிப்படை அறிவுகளை நாங்கள் தெரிந்துகொண்டோம். செவ்வாய்தோறும் ஒளிபரப்பப்பட்ட நாடங்களை ரசித்தோம். ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கக் கற்றுக் கொண்டோம். அவ்வளவு ஏன்? எட்டு மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் ஹிந்தி தொடர்களைக்கூட பார்க்கலானோம். அதில் ஒரு கதை வந்தால், நாங்கள் அதை வைத்து ஊகித்து, குறைந்தது பத்து கதைகளாவது சொல்வோம்.
குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கி அதே சமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வண்ணம் அப்போதைய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. தொலைக்காட்சி நிலையத்தாரும் புரிதலோடு நடந்துகொள்வார்கள். பொது மக்களின் கடிதங்களைப் படிக்கும் நிகழ்ச்சியான எதிரொலியில் கடிதங்கள் உரிய மரியாதையோடு வாசிக்கப்படும். திட்டி விமர்சித்து வரும் சில கடிதங்களுக்குக் கூட யார் மனமும் நோகாமல் பதில் சொல்லும் சாதுர்யம் அவர்களுக்கு இருந்தது. எங்கள் ஊரிலிருந்து எதிரொலி நிகழ்ச்சிக்குக் கடிதம் அனுப்பினார்கள் சிலர். ஆனால் ஒன்று கூட வாசிக்கப்பட்டதில்லை. என்றாலும் அவர்கள் சளைக்காமல் எழுதினார்கள்.
மக்களின் கலாசாரத்தையும் பண்பாடையும் உண்மையிலேயே மதிக்கும் நிகழ்ச்சிகள், எல்லா பிரபல சேனல்களிலும் நடத்தப் பெறுமா? மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் என்று பழி போடாமல் அவர்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் காணக் கிடைக்குமா? மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக ஏதேனும் நல்ல நிகழ்ச்சிகள் தோன்றுமா? என்ற ஆதங்கத்தோடு நிலவொளியில் ஒரு குளியல்.
(மேலும் நனைவோம்…………
===========================
படத்திற்கு நன்றி – total80sremix.com
1980இல் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காகத் தவம் இருந்து பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது. அனைவரும் ஒன்று கூடி ரசித்த நிகழ்ச்சி அது.
ஆனால் இப்பொழுது எல்லாம் தொலைக்காட்சியைப் போட்டாலே யாரோ அழுதுகொண்டே இருக்கிறார்கள். கன்னா பின்னா என்று கதை வேறு. பார்க்கச் சகிக்கவில்லை.
நன்றாக எழுதியதற்குப் பாராட்டுகள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இப்பொழுது குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. தப்புத் தப்பான உறவுகள் எல்லாம் காண்பிக்கப்படுகின்றன. எதார்த்தமாக இல்லை.
நல்ல கருத்துகள் கொண்ட நிகழ்ச்சிகளின் வரத்து குறைந்துவிட்டது.
தற்போது வரும் பெரும்பாலான சாட்டிலைட் சேனல்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன்தான் செயல்படுகின்றன. கொலை, கொள்ளை, ஆபாசம் மட்டுமே பெரும்பாலான சீரியல்களிலும் காணப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
படிப்பதற்கு நன்றாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
டிவி சேனல்கள் ஒரு நாட்டின் வருங்காலத் தலைமுறைகளை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டும். நல்ல கருத்துகள் மற்றும் நல்ல சிந்தனைகள் உள்ளதான நிகழ்ச்சிகளை அளிக்க வேண்டும்.
தொலைக்காட்சி வந்த புதிதில் ருபவாகினிக்காக பூஸ்டர் antenna போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. சில வீடுகளில் கரண்டி, ஸ்பூன் எல்லாம் antennaவோடு தொங்க விடுவார்கள். பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். தொலைக்காட்சி சரியாகத் தெரியவில்லை என்றால் antennaவை இப்படியும் அப்படியும் திருப்புவார்கள். படம் சரியாகத் தெரிந்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தாங்க. அந்தக் கால இனிமையான சம்பவத்தை நினைத்துப் பார்ப்பது நிச்சயமாக நிலவொளியில் ஒரு குளியல்தான்.
மக்களிடம் இதுவரை நீங்கள் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று கேட்டால், நிச்சயமாக “ஒலியும் ஒளியும்” நிகழ்ச்சிதான் பதில் வரும்.
நன்றாக எழுதியதற்குப் பாராட்டுகள்
T V – அன்றும் இன்றும்…..
ரொம்ப அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
ஒரு காலக்கட்டத்தில் தொலைக்காட்சி என்பதே அரிதான ஒரு விஷயம். தொலைக்காட்சி வைத்திருபோர் எல்லாம் பெரிய பணக்காரர்கள் என நினைத்த காலம் உண்டு. ஆனால் இப்பொழுது தொலைக்காட்சி என்பது சர்வ சாதரணமான விஷயம் ஆகிவிட்டது. அரசாங்கம் வேறு இலவச தொலைக்காட்சி கொடுத்து, வீட்டுக்கு வீடு இரண்டு தொலைக்காட்சி என்ற நிலை ஆகிவிட்டது.
நிறைய சேனல்கள் ஆகிவிட்டாலும் மிகச் சொற்ப நிகழ்ச்சிகளே பார்க்கும்படியாக உள்ளன. நிகழ்ச்சிகளின் தரமும் கருத்தும் நன்று அமைக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர்க்கு பாராட்டுகள்.