பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 15
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்குத் தந்த என் பதிலுக்கு வந்த எதிர்வினைகள் (கொஞ்சம் சுருக்கப்பட்டுள்ளன):
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழ் வாழ, வளர என்ன தேவை என்பது பற்றிய என்னுடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் என் பதில்கள் அமைகின்றன. தமிழ் வாழ்வு, வளர்ச்சி பற்றிய எதிர்வினை ஆற்றுபவர்களும் தமிழ் வாழ, வளர விரும்புவர்களே. ஆனால் அவர்களுடைய நிலைப்பாடு என்னுடையதிலிருந்து வேறுபட்டது. இந்த வேறுபாட்டுக்கு விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய காரணங்களும் உண்டு. வேறுபாட்டை வைத்து, இரண்டாவது நிலைப்பாடே தமிழ் அன்பர்களுடயது, முதலாவது நிலைப்பாடு தமிழ் வம்பர்களுடையது என்று பட்டம் கட்டுவது, விவாதத்தைத் தடுக்கும். அது சூடு கிளப்பலாம்; வெளிச்சத்தைக் காட்டாது.
என்னுடைய நிலைப்பாட்டை ஓர் ஒப்புமை மூலம் விளக்குகிறேன். தமிழ் மகள் ஒருத்தி, சால்வாரோ, கால்சட்டையோ போடுவதால் தமிழ் மகள் அல்ல என்று ஆகிவிடாது; அவள் கெட்டுப்போய்விட்டாள் என்று சொல்ல முடியாது. மொழியும் அது போன்றதே. தமிழ் வேறு சொற்களையோ எழுத்துகளையோ சேர்த்துக்கொள்வதால் தமிழ் மொழி அல்ல என்று ஆகிவிடாது; கெட்டுப்போய்விட்டது என்று சொல்ல முடியாது. இரண்டும் காலத்தின் தேவைக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்வது ஆகும்; புதிய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்றதும் ஆகும். இது என்னுடைய நிலைப்பாடு.
சுவடி யுகத்திலிருந்து அச்சு யுகத்திற்குத் தமிழ் வந்த போது நெகிழ்ந்து கொடுத்தது. நெடுங்கணக்கில் எகர ஏகாரத்தையும், ஒகர ஓகாரத்தையும் வடிவில் வேறுபடுத்தியது, சொற்களுக்கிடையே இடம் விட்டது, நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தியது, புறச் சந்தியைக் குறைத்தது, தமிழ் எண்களைத் தசம முறையில் மாற்றி எழுதியது, பின்னால் அராபிய எண்ணுக்கு மாற்றிக்கொண்டது ஆகியவை தமிழ் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்கள். தற்போது கணினி யுகத்திற்கு வந்துள்ள போது நெகிழ்ச்சியின் தேவை மீண்டும் எழுந்துள்ளது. இப்போது மாற்றத்தை மறுப்பது, வரலாற்றை மறுக்கும் பார்வை. அது, தமிழின் வருங்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும்.
============================================
பெரியண்ணன் சந்திரசேகரன் கருத்து:
“வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும்.”
இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அயல்நாட்டுப் பிள்ளைகள்……. சில கூடுதல் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் கிட்டாததால் ……… தமிழ் மொழியில் இனிமேல் குவிக்கும் படைப்புகள் உடனே குன்றிப் போகும் நிலை இருப்பதாக ஒரு மாயத் தேவையைத் தோற்றுவிக்கிறார். ………அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சியில்லை. ……எனவே …..இப்படி ஒரு மாயைப் பேச்சுப் பேச அடிப்படையில்லை.
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
வெளிநாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலிருந்து விலகிப் போய்விட்டார்கள், அல்லது விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி நானே எழுதியிருக்கிறேன். விலகலுக்குப் பல காரணங்கள் உண்டு. தமிழால் தாங்கள் வாழும் புதிய சமூகத்தில் நன்மை இல்லை என்பது முக்கியமான காரணம். கலாச்சார நன்மை ஒன்றே அவர்களைத் தமிழில் இருத்திக்கொள்வதற்கு உள்ள வழி. ஆனால் பாடப் புத்தகத் தமிழ், அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது. ஜனரஞ்சகக் கலாச்சாரத் தமிழில் அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இலக்கியத் தமிழில் இல்லை. இது தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினருக்கும் ஓரளவு பொருந்தும். இவர்கள் தன்னுடையது என்று கொண்டாடத் தமிழும் மாற வேண்டும்.
என்னுடைய பதிலில் நான் மனத்தில் கொண்டவர்கள் சிங்கப்பூரில் உள்ள இளைய தலைமுறையினரும், கனடாவில் டோரன்டோ நகரில், யாழ்ப்பாணத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் இலங்கைத் தமிழரின் சந்ததியினரும். சிங்கப்பூர் தமிழ் மாணவர் சிலர் தாங்கள் வசிக்கும் தெருக்களின் பெயரையும் தங்கள் சீன நண்பர்களின் பெயரையும் மூல அடையாளத்தை முழுவதும் குலைக்காமல் எழுதத் தமிழ் இடம் கொடுக்க வேண்டும் என்றார்கள். தமிழ் உலகாளாவிய மொழி என்று சொல்லிக்கொள்ள தன் இறுக்கத்தை விட்டுக் கொடுப்பது அவசியம்.
============================================
பெரியண்ணன் சந்திரசேகரன் கருத்து:
மேலும் சமுதாயப் பிடியில் தமிழ் மொழி சிக்கியிருப்பதாகப் பேசுவதும் உண்மையில்லை.
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழ், சமூக நிறுவனங்களின் (social institutions) பிடியில் – பள்ளி ஒரு உதாரணம் – சிக்கியிருப்பதாகவே சொன்னேன். தமிழ் பற்றிய தங்கள் கருத்தாக்கத்தின் (language ideology) சாயலில் தமிழை உருவாக்க இந்த நிறுவனங்கள் விழைகின்றன. நெகிழ்ச்சியைப் பிழை என்பது ஒரு கருத்தாக்கம். இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி, பழைய சமூக நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஓரளவு வலுவிழக்கச் செய்திருக்கிறது. அந்த அளவில் தமிழ், மரபுச் சமூகத்தின் பிடியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
============================================
செ.இரா.செல்வக்குமார் கருத்து:
“கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை.”
இதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா? எஞ்சின் என்று கடன்வாங்கி எழுத வசதி இருக்கும் பொழுதே வேண்டுமென்றே என்ஜின் என்று எழுதுகின்றன சில புகழ்பெற்ற ஊடகங்கள். …… வேண்டுமென்றே கிரந்தம் கலந்தே கலந்து எழுதுகின்றனர்.
இவை எழுத்துப் பிழை இல்லை என்பதைப் பல கோணங்களில் நிறுவ முடியும். ……… தமிழின் நெடுங்கணக்கை மாற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது என்று கூறுவேன். பல கருத்துகளோடு ஒப்ப முடியவில்லை. பல கருத்துகளுக்குத் தக்க சான்றுகளோ பின்புலமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழில் புதிதாகச் சொற்கள் கடன் வாங்குவது வேறு; புதிய உச்சரிப்பு உள்ள சொற்களை எழுதப் புதிய எழுத்துகளை நாடுவது வேறு. புதிய எழுத்துகளை நாடினால் சொற்களைக் கடன் வாங்குவது மிகும் என்பதற்குத்தான் ஆதாரம் இல்லை என்று சொன்னேன். ஐம்பது ஆண்டுகளாக நான் படித்த, படிப்பித்த மொழியியல் ஆய்வு நூல்களில் நான் ஆதாரத்தைப் பார்க்கவில்லை. யாராவது ஆதாரம் காட்டும் ஆய்வைக் காட்டினால் என் கருத்தைத் திருத்திக்கொள்வேன்.
புதிய எழுத்துகளைப் பயன்படுத்த வாய்ப்பு எளிமையாகக் கிடைத்தால் பயன்பாடு கூடலாம்; ஆனால் வாய்ப்பைக் குறைத்தால், இன்றைய தொழில்நுட்ப வசதியில், அதை நிறுத்த முடியாது; அந்தப் பயன்பாட்டிற்கு ஆதாரமான மனநிலைக்கு உரிய காரணம் என்ன என்று பார்க்க வேண்டும் என்று கூறினேன். அந்த இடத்தில்தான் நெகிழ்ச்சியின் தேவை பற்றிக் கூறினேன்.
இப்போது தமிழுக்கு முன் உள்ள கேள்வி புதிய உச்சரிப்புகளைக் காட்டச் சில எழுத்துகள் வேண்டுமா என்பதுதான். அவை கிரந்தத்திலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. எங்கிருந்தும் வரலாம்; அவற்றைப் புதிதாகவும் உருவாக்கலாம். ஃபிரான்சு என்றோ ஃபிரான்ஸ் என்றோ உரசொலியை எழுத ஆய்த எழுத்தைப் பயன்படுத்தும் வழக்கைச் சிலர் ஏற்றுக்கொண்டது போல, புதிய வழிகளைக் காணலாம். பெரியார் ஆதரித்த எழுத்துச் சீர்திருத்தம், இரண்டு உயிர் எழுத்துகளைக் நெடுங்கணக்கில் குறைக்கும் எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வடிவத்தை மாற்றும். இவற்றுக்கு அடிப்படை, பகுத்தறிவு என்று ஒப்புக்கொள்ளபடுகிறது. இந்த வழியில் சில எழுத்துகளைச் சேர்ப்பதும் அறிவுடைமை ஆகலாம்.
============================================
இலக்குவனார் திருவள்ளுவன் கருத்து:
தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம் புரள்கிறார் என்று தெரியவில்லை.
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழாக்கப்பட்ட சமஸ்கிருதச் சொற்களும், சில சொற்கள் தமிழாக்கப்படாமல் கிரந்த எழுத்துக்களோடு எழுதப்பட்டுத் தமிழில் சேர்ந்ததைச் சில அறிஞர்கள் தூய்மை அழிப்பு என்று சொல்கிறார்கள். இவர்கள், தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்ற சகரம், கடன் சொற்கள் உட்பட சில காரணங்களால், சொல்லுக்கு முதலில் வந்து தமிழ் ஏற்றுக்கொண்டதால், தமிழின் தூய்மை கெட்டுவிட்டது என்று சொல்லமாட்டார்கள். எது தூய்மை அழிப்பு என்பதே பிரச்சனை. கழிப்பறை வீட்டுக்கு வெளியே இருக்க வேண்டும், அது வீட்டிற்குள் இருந்தால் வீட்டின் தூய்மை கெட்டுவிடும் என்று சொன்னவர்கள் பலர். இன்று மாறிய கழிப்பறை வீட்டிற்குள், ஏன் படுக்கையறைக்குளேயே, வந்துவிட்டதைப் பலர் வீட்டின் தூய்மை கெட்டுவிட்டது என்று சொல்லமாடார்கள். அப்படிச் சொல்பவர்கள் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர்கள். தேவை, வசதி கருதி, தூய்மை எது என்ற எண்ணம் சமுகத்தில் மாறிவிட்டது. மொழியிலும் எது தூய்மை என்பது பற்றிய கருத்து, காலத்தால் மாறலாம்; தமிழர்களிடையே வேறுபடலாம். இதில் தடப்புரட்சி எதுவும் இல்லை.
============================================
செ.இரா.செல்வக்குமார் கருத்து:
நீங்கள் “நெகிழ்ச்சி தேவைப்படுகின்றது”…… என்று கூறுகின்றீர்கள்…… பிரான்சு மக்களுடனும், அவர்கள் மொழியுடனும் மிகவும் நெருக்கமாகவே ஆங்கிலேயர்கள் உறவாடியிருக்கின்றார்கள். அப்படி இருக்கும்பொழுது ஆங்கிலேயர்கள் ஏன் Paris என்னும் நகரின் பெயரைக்கூட பிரான்சியர்கள் போல் ஒலிப்பதில்லை?…. அவர்களுக்கு நெகிழ்ச்சி தேவை இல்லையா? தமிழுக்கு மட்டும் தேவையா? ….எல்லா ஒலிகளையும் எழுத்தாகக் காட்ட வேண்டும் எனில் ஏன் மற்ற மொழிகள் அப்படிச் செய்யவில்லை?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
ஒரு மொழி உலகிலுள்ள பெயர்களையெல்லாம் எழுதவோ, உலக மொழிகளில் உள்ள ஒலிகளையெல்லாம் எழுதவோ எழுத்துகளைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை; சொல்லவும் இல்லை. இது தேவையே இல்லை. அவற்றை மூலத்தில் உள்ளது போலவே உச்சரிப்பதும் எங்கும் காணாத ஒன்று. தமிழர்கள் பயன்படுத்தும் சொற்களில் உள்ள ஒலிகளுக்கு எழுத்து வேண்டுமா, அவர்கள் வேறிடத்துப் பெயர்களைப் பெரும்பான்மையாக உச்சரிக்கும் ஒலிகளுக்கு எழுத்து வேண்டுமா என்பதே கேள்வி. வேண்டும் என்ற பதிலை நடைமுறைப்படுத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவை. எப்படி, எவ்வளவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கூடி முடிவு செய்ய வேண்டியது.
பழங்காலச் சீனாவில், பெண்ணுக்கு அழகு என்ற எண்ணத்தில், பெண்கள் பாதத்தைச் சிறிதாக்க, அதைக் குறுகிய காலணிக்குள் புதைத்து வைத்தார்கள். அவர்கள் அன்ன நடை நடந்தார்களோ என்னவோ, அவர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ் இன்றைய போட்டி உலகில் முன்னோட வேண்டுமென்றால் கட்டுகளை எடுக்க வேண்டும். இதுவே என் பதிலின் கருப் பொருள்.
===============================================
(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)
பேராசிரியரே
நீங்கள் ” தமிழிலிருந்து விலகிப் போய்விட்டார்கள், … ……… என்னுடைய பதிலில் நான் மனத்தில் கொண்டவர்கள் சிங்கப்பூரில் உள்ள இளைய தலைமுறையினரும், கனடாவில் டோரன்டோ நகரில், யாழ்ப்பாணத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் இலங்கைத் தமிழரின் சந்ததியினரும். சிங்கப்பூர் தமிழ் மாணவர் ” என்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கும் செல்லும். தமிழ்நாட்டில் ஆங்கில பள்ளிகள் அசுர கதியில் வளர்ந்து விட்டன. அதனால் முற்காலங்களில் பார்த்திராத அளவு ஒரு தலைமுறையே படிப்பு, சிந்தனை, கேளிக்கைகளுக்கு தமிழிலிருந்து விலகி வளர்ந்து விட்டது.
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வெளியே கணிசமான அளவில் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் மும்பை போன்ற பெருநகர்களில் வசித்து, பொதுவாக பை-லிங்குவலாக உள்ளனர். அவர்கள் தமிழை எதிர்காலத்தில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழ் எழுத்து பேச்சுக்கேற்றாற் போல் வளைந்து கொடுக்க வேண்டும்.
தமிழின் எழுத்தை நீட்சித் தமிழால் வலிமைப்படுத்துவதை எதிர்ப்பவர்கள் – ஸ்ரீரமணசர்மாவின் பிரபோசலை வழியாக எதிர்த்தவர்கள் கிராமத்தில் வசிக்கும் தமிழர்களையே – அவர்கள் கற்பனையில் `தூய தமிழர்களையே` தங்கள் மனதில் `தமிழ் பயனர்`களாக வைத்து மாற்றங்களை தடுத்து விட்டனர். இது எவ்வளவு பெரிய தவறு எனப் போகப் போகத்தான் தெரியும். என் கணிப்பில் 75% தமிழர்கள் பை-லிங்குவல்; அதாவது 75% தமிழர்கள் தமிழ் இல்லாத மற்றொரு மொழியுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். அது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, சீனம், மலாய், பிரெஞ்சு, ஜெர்மன் ஆக உள்ளது. சோறு போடாத நிலைமையில் தமிழ் இருக்கும் போது , அதைத் தொல்காப்பியர் இலக்கணத்திலேயே வைத்திருந்தால், அதன் எழுத்து பேச்சுக்கு அருகில் வராவிட்டால், 20-30 வருடங்களில் தமிழின் தாக்கம் குலைந்து விடும். தற்போது நடக்கும் `தமிழ் பற்று` என்ற lipservice ஒரு பக்கமும், மற்ற மொழிகளில் கேளிக்கை, சிந்தனை செய்வதுதான் வளரும்.
விஜயராகவன்
மேலே “ஸ்ரீரமணசர்மாவின் பிரபோசலை வழியாக எதிர்த்தவர்கள் ” என்பதை “ஸ்ரீரமணசர்மாவின் பிரபோசலை INFITT வழியாக எதிர்த்தவர்கள் ” என தயவு செய்து படிக்கவும்.
பேராசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு,
உங்கள் பொறுமையான
மறுமொழிகளுக்கு மிக்க நன்றி. அவை பற்றிய என் கருத்துகளை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். இப்போதைக்கு இரண்டே இரண்டை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
விரிவாகப் பின்னர்.
1) “சால்வாரோ, கால்சட்டையோ போடுவதால் தமிழ் மகள் அல்ல என்று ஆகிவிடாது.”
நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்,
ஆனால் அந்தத் தமிழ் மகளின்
டி..என்.ஏ-க்களையே மாற்றி, ஒரு காதில்
முள்செடி வளர்ந்து அப்படி வளர்ந்தாலும்,
அவளுடைய மறுகாது அப்படியேதான் அழகாக
இருக்கும், கவலைப்பட வேண்டாம்,
அந்த முள்செடியில் நல்ல சிவப்புப்
பழம் கூட பழுக்கும் நீங்களும்
உண்ணலாம், ஆனால் அவள் அதே தமிழ் மகள்தான் என்றால் ஏற்போமா? வேற்று மொழிச் சொற்களைத் தமிழ் இயல்புக்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் கடன் பெறுவது சல்வார் அணிவது போல எனக் கொள்ளலாம்.
2) “புதிய எழுத்துகளை நாடினால் சொற்களைக் கடன் வாங்குவது மிகும் என்பதற்குத்தான் ஆதாரம் இல்லை என்று சொன்னேன்”
ஐயா, மலையாளம் கண் முன்னே உள்ளது. தமிழில் 1/3 பகுதி
வேறு மொழியாகிவிட்டது. 39 மில்லியன் மக்கள். மீதம் உள்ள 2/3 தமிழையும் கெடுத்தே ஆகவேண்டுமா?
விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
பொறுத்தருள்க.
அன்புடன்
செல்வா