மகளிர் தம் நிலைமை – அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!

1

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி 5

முனைவர் நாக பூஷணம்

மகளிர் ஆடவர் நிலை குறித்த வாதங்களும் விவாதங்களும் நினைவறிந்த நாள் கடந்தும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒரு வேளை மேலும் தொடரக்கூடும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மகளிர் உரிமை, சம உரிமை , ஆடவர்க்கிணையாக எல்லாத்துறைகளிலும் செயல் பட உரிமை எனப் பல வகையிலும் காக்கவும் , விதியாக்கவும் செய்கிறது. இந்த நிலை உருவாகக் காரணமான பின்புலம் காலம் காலமாக இந்தியப் பண்பாட்டில் இழையோடி வந்தது தான். என்றாலும் இடையில் நேர்ந்து விட்ட பின்னடைவு இத்தகைய பாதுகாப்பு அடிப்படைச் சட்டத்திலேயே இடம் பெறச் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தியது எனலாம்.

அயல் நாட்டு ஆதிக்கத்திற்கு உள்ளாவதற்கு முன்னர் இந்தியத் திரு நாட்டில் இந்து சட்ட நுண்மாண் நுழை புலமே கோலோச்சி வந்தது எனலாம். இங்கே இந்து என்பது மதத்தைக் குறிப்பதாகக் கொள்வது முறையாகாது. இந்தியா Hindoi , என்று தான் அயல் நாட்டவர்களால் குறிக்கப் பெற்றதற்கு ஏற்பாகவே இந்து சட்ட அறிவியல் Hindu Jurisprudence கருதப் பெறல் வேண்டும். இந்தியர்கள் இந்தியாவை பாரத் என்று தான் குறித்து வந்துள்ளனர்.

தனிப்பட்டவர் குறித்த சட்டங்கள் எனக் காணும் போது , சட்டம் தொடர்பானவை பெரும்பாலும் திருமணம் சார்ந்த சட்டங்கள் சொத்துரிமை , வாரிசு உரிமை முதலானவை குறித்தே சிந்திக்கப் பெறுகின்றன. அவ்வாறே மகளிர் தம் உரிமைகளும் , இவற்றின் அடிப்படையிலானவையாகவே அமையக் காணலாம்.

நாளடைவில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் அடிப்படையில் தொகுக்கப் பெற்றச் சட்டங்கள் (codified law) பல வகையிலும் மகளிர்க்குரிய எல்லா உரிமைகளையும் மறுத்து அவர்களை அறியாமை இருளில் ஆழ்த்துவதில் முனைந்திருந்தன. இதன் விளைவாக சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் வரிசையில் இவர்களும் இணைக்கப் பெற்றனர்.

திருமண ஒழுங்கமைப்பு முறை:

பெண்ணை மண முடித்துக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவராக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறை பின்பற்றப் பட்டிருந்தமை கண்கூடு . சில இடங்களில் இத்தகு தகுதி உடையவராகக் கருதப் பெறுபவர் /பெற்றவர் தந்தை. , தந்தையின் தந்தை , சகோதரர் , அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வரிசையில் கொண்டிருந்தன. இன்னும் சில கோட்பாடுகளுக்கேற்ப தந்தை அவரது உடன் பாட்டுடன் உடன் பிறந்தோன் , தந்தை வழிப்பாட்டன் , தாய் மாமன் , உறவினர் என்ற வரிசையில் கண்டனர். இவர்கள் யாருமே இல்லாத நிலையில் தாய் , அதுவும் அவள் அதற்குரியத் தகுதி வாய்ந்தவளாகக் கருதப் பெறல் வேண்டும். இல்லாவிடில் தூரத்துச் சொந்தம் யாரேனும் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்கலாம் என வரிசைப் படுத்தியிருக்கக் காணலாம்.

கூர்ந்து கவனித்தால் இந்த உறவினர் தம் உரிமையை விடவும் கடமையையே இந்து சட்ட அறிவியல் தெளிவாகக் காணலாம். ஏனெனில் இந்தச் சட்டத்தின் அடிப்படையே கடமையைச் செய்வதைச் சார்ந்தது. உரிமையைக் காட்டிலும் கடமைக்கே முதலிடம் தருவது இம்முறையாகும்.

இவ்வாறு முற்காலச் சட்டம் ஏற்றுக் கொண்ட காப்பாளர் நடத்தி வைக்கும் திருமணமாயினும் அப்பெண்ணிற்குத் தீங்கு நேரக்கூடியதாகவோ , வேறு முறை கேடுகள் நடக்கக் கூடும் என்று தெரிய வந்தாலோ அரசு இடையிட்டு அத்தகைய திருமணத்தை தடை செய்யக் கூடும்.

வற்புறுத்தியோ, பொய் புனைந்து கூறியோ நிகழ்த்திய திருமணம் பிற சடங்குகளெல்லாம் முறையாக நடந்தேறினாலும் நீதி மன்றம் அத்தகைய மணத்தை இல்லா நிலையதாக்கலாம். மேலும் சடங்குகளோ காப்பாளர் அனுமதியோ இல்லாவிடினும் , பெண்ணிற்கு ஏற்ற மணமகன் தெரிவு செய்யப் பெற்று நிகழ்த்தப் பெறும் திருமணம் அத்திருமணத்தைப் பாதிக்காது. அது செல்லும் திருமணம் என்றாகும். இத்தனையும் பார்க்கப் பெறக் காரணம் அந்நாட்களில் பெருமளவு குழந்தைத் திருமணம் நிகழ்ந்ததே.

தொன்மையான நடைமுறையில் குழந்தை மணம் குறித்தோ , மண வயது குறித்தோ ஏதும் கூறப் படவில்லை எனலாம். ஒத்த மனமுடையோர் முன் வந்து கரம் கோத்து இல்லறம் ஏற்பதே அக்கால வழக்கெனலாம். பெரும்பாலும் புத்த மதம் பரவிய காலத்தும் , பிறகு வந்த அந்நியர் ஆதிக்கக் காலத்திலுமே இத்தகைய குழந்தை மணம் பெருமளவு நடத்தி வைக்கப் பெறக் காணலாம் . புத்த மதத்தினர் பெருமளவு துறவு பூண்டதும் பிற மதத்தவர் ஆட்சிக் காலத்தில் மணமாகா மகளிர்க்குப் பாதுகாப்புக் குறைவு எனக் கருதிய நிலையிலும் குழந்தைத் திருமணம் பெரிதும் மேற்கொள்ளப் பட்டது.

மணவாழ்வின் உண்மைத்தன்மையை அறிந்து அதற்கு உரிய பக்குவம் அடையும் முன்னரே மணவினையில் இணைக்கப் பட்ட இரு பாலருமே தம்மளவிலும் குடும்பம் , சமுதாயம் எனும் அளவிலும் பல்வேறு தொல்லைகட்கும் , துயரங்கட்கும் உள்ளான நிலைமையைச் சரித்திரம் சான்று பகரும்.

மணக்கொடை (Bridal price) :

மணமகள் தந்தைக்கு அல்லது காப்பாளருக்கு மணமகன் மண வினைக்கு முன் கொடுப்பது மணக்கொடை – kanya sulka – என்று குறிக்கப் பட்டது. பழங்காலத்தில் இல்லாத ஒரு பழக்கம் இது.

இன்றைக்கு மணக்கொடை எதிர்மறையாகச் செயல்படக் காண்கிறோம். மணமகனுக்கு மணமகள் வீட்டார் பொன்னாகவும் , பொருளாகவும் மிக மிக விலை உயர்ந்தவற்றைத் தம் சக்திக்கு மீறி கடன் பட்டேனும் கொடுப்பதையும் மணமகனைச் சார்ந்தவர்கள் , எவ்வளவு கொடுத்தாலும் மன நிறைவு கொள்ளாது இன்னும் கொண்டு வா! எப்போதும் கொண்டு வா! எங்கள் ஆசைக்கு , பேராசைக்கு , பெரும் பேராசைக்கு அளவே இல்லை என்று சொல்லாலும் செயலாலும் மணப்பெண்ணைச் சுட்டெரிக்கும் கொடூரங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மணவிழாவில் பெறுவது , மனைவியின் வருமானமாக மாதாந்திரம் பெறுவது , இரண்டுமே இன்றைய அரங்கில் சதிராடி வருகின்றன.

குருகுல வாசத்தில் கற்றுத் தேறி வரும் மணமகனைத் தேர்வு செய்து மணமுடித்த பெற்றோர் தன் மகளைத் தானமாக – கன்யா தானமாகக் கொடுத்து அம்மணமகன் இல்லறம் நடத்தத் தேவையான பொருளீட்டு நாள் வரை அவர்கள் நலமுடன் வாழத் தேவையான அடிப்படை வசதிகட்காய் பெற்றோர் கொடுத்து வந்த வரதானம் இன்று ஏறக்குறைய அடித்துப் பறிக்கும் ஆரலைக் கள்வர் மன நிலைக்கு மணமகன் வீட்டாரை அடையாளம் காட்டுகிறது.

இன்றைக்கு குருகுல வாசமில்லை. ஓரளவு மணமக்கள் வாழ்வில் நிலைத்தன்மை அடைந்த பிறகே திருமணம் நிகழ்கிறது. என்றாலும் ‘பழக்க தோஷம்’ விட்டு விலக மறுக்கிறது.

மீண்டும் வருவேன்.

படத்திற்கு நன்றி : http://vidhoosh.blogspot.com/2009/08/2.html

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகளிர் தம் நிலைமை – அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!

  1. மீண்டும் வருக. நல்லதொரு கட்டுரை. அத்யாவசிமான கட்டுரை. சட்டத்துக்கு சட்டம் போடுவது, சமுதாயக்கட்டுப்பாடு. அதில் தன்னலமும், ஆணாதிக்கமும், கடந்த முன்னூறு ஆண்டுகளில் ஆட்டம் போட்டன. மற்றபடி, ‘கூர்ந்து கவனித்தால் இந்த உறவினர் தம் உரிமையை விடவும் கடமையையே இந்து சட்ட அறிவியல் தெளிவாகக் காணலாம். ஏனெனில் இந்தச் சட்டத்தின் அடிப்படையே கடமையைச் செய்வதைச் சார்ந்தது. உரிமையைக் காட்டிலும் கடமைக்கே முதலிடம் தருவது இம்முறையாகும்..’ என்பது உண்மையே. ஆனால், உரிமையை பின் தள்ளிய ‘கடமை’ கடமை தவற தொடங்கியதும், அதை கலோனிய அரசும், நேரு அவர்களும் சீர்திருத்தி அமைத்ததும் வரலாறு.ஒரு வேண்டுகோள்: “…இந்து சட்ட நுண்மாண் நுழை புலம்..’ எல்லாம் எதற்கு? நம் தமிழும். அவசியமான ஆங்கிலமும் இருக்கலாமே. புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *