நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க நீதிமன்றங்கள் செயல்படும் முறையைக் கண்டு நான் பல முறை வியந்திருக்கிறேன்.  எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுகிறார்கள்.  எந்தப் பக்கத்து வழக்கறிஞர் வாய்தா கேட்டாலும் நீதிபதிகள் கொடுப்பதில்லை.  ஒரு வழக்கில் தலைமை வழக்கறிஞருக்கு இதய நோய் ஏற்பட்டது.  அவர் தவணை கேட்பதற்குப் பதில் தன்னுடைய ஜூனியர் ஒருவரை அனுப்பி வைத்தார்.  சாட்சியங்களைச் சேகரித்த பிறகு வழக்கை ஆரம்பித்து ஒரு கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு அந்தக் கெடுவிற்குள் முடித்து விடுகிறார்கள்.  அமெரிக்க நீதித்துறையில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான அம்சம் இதுதான்.

அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான இல்லினாய் (ஜனாதிபதி லிங்கனின் சொந்த மாநிலம் இது) மாநில ஆளுநராக இருந்த ராட்னி ப்ளகோஜேவிச் (Rodney Blagojevich) என்பவர் செய்த அரசியல் தகிடு தத்தங்களை நீதிமன்றத்தின் மூலம் அம்பலப் படுத்தி 2011 டிசம்பர் ஏழாம் தேதி அவருக்குப் பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள்.  4000 டாலர் பெறுமான, பிரத்தியேகமாக அவருக்காகத் தைக்கப்பட்ட கோட்டு, சூட்டுகளையே அணியும் இவர் சிறையில் கழிப்பறைகளை மணிக்கு 12 காசுகள் கூலியாகப் பெற்றுக் கொண்டு சுத்தப்படுத்தப் போகிறார்.  இதுதான் அமெரிக்க நீதித்துறை செயல்படும் விதம்.  அமெரிக்காவிடமிருந்து இந்தியா எதைக் கற்றுக் கொள்கிறதோ இதைக் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கப் போகும் இவர் செய்த குற்றம்தான் என்ன?  2002-இல் இல்லினாய் மாநில ஆளுநராக இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அமெரிக்க மாநில ஆளுநர்கள் இந்திய மாநில முதலமைச்சர்களுக்குச் சமம்.  இவர்களும் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் கட்சியின் தலைவர் முதலமைச்சர் ஆவார்.  ஆனால் அமெரிக்காவில் ஆளுநர் பதவிக்காகவென்றே தேர்தல் நடக்கும்.  இந்தத் தேர்தலுக்கு முன் இரண்டு கட்சியிலும் ஆளுநர் தேர்தலில் பங்கு கொள்ள விரும்புவோர் முதல்நிலைத் தேர்தலில் (primaries) வெற்றி பெற வேண்டும்.  முதல் நிலைத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு கட்சி வேட்பாளர்களும் பின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவார்கள். 

இல்லினாய் மாநில ஆளுநராக 2002-இல் தேர்தெடுக்கப்பட்ட ராட்னி ப்ளகோஜேவிச்சின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள், அதாவது 2006 வரை.  2005-லேயே இவர் மீது பல வகைக் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தன.  ஆனாலும் மறுபடி 2006-இல் இன்னொரு முறை ஆளுநர் தேர்தலில் ஜெயித்தார்.  தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி ஆகிய ஊடகங்கள் மூலம் பிறரோடு உறவாடும்போது லஞ்சம் கேட்பது போன்ற ஊழலில் ஈடுபட்டால் அம்மாதிரியான செயல்கள் மத்திய அரசின் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்படும்.  2005-லிருந்தே இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய அரசைச் சேர்ந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் பேட்ரிக் பிட்ஜேரால்ட் (Patrick Fitzgerald) என்பவர் கவனித்து வந்தார்.  இவர் மிகவும் கண்டிப்பான அதிகாரி.  ஜனாதிபதி புஷ்ஷின் உதவி ஜனாதிபதியாக இருந்த டிக் சேனியின் (Dick Cheney) முதல்நிலைக் காரியதரிசியின் மீது வழக்குத் தொடர்ந்து அவரைச் சிறைக்கு அனுப்பியவர்.  ப்ளகோஜேவிச் மீதும் தேவையான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டு தக்க சமயத்திற்காகக் காத்திருந்தார். 

ராட்னி ப்ளகோஜேவிச் அவருடைய தலைமைக் காரியதரிசியோடு சேர்ந்து பல ஊழல்கள் புரிந்திருக்கிறார்.  மாநிலத்தின் பல துறைகளிலிருந்து எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்.  சிகாகோ ட்ரிப்யூன் (Chicago Tribune)) என்னும் பத்திரிக்கையின் தலையங்க எழுத்தாளர்கள் இவருடைய ஊழல்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக அவர்களைப் பதவியிலிருந்து விலக்கும்படியும் அப்படி விலக்கினாலொழிய மாநில அரசிடமிருந்து அந்தப் பத்திரிகைக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாது என்று மறுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு.  தேர்தல் நிதிக்காக 50,000 டாலர் எதிர்பார்த்துக் குழந்தைகள் மருத்துவமனைக்கு எட்டு மில்லியன் டாலர் தன் அதிகாரத்தை உபயோகித்துக் கொடுத்திருக்கிறார்.  மாநில அரசிடமிருந்து காண்ட்ராக்ட் போன்ற சலுகைகள் பெற்றவர்களிடமிருந்து இரண்டரை மில்லியன் டாலர் தேர்தல் நிதிக்காக எதிர்பார்த்திருக்கிறார்.  இவை எல்லாம் பொது நிறுவனங்களுக்கும் தேர்தல் நிதிக்கும் பணம் சம்பாதிக்க இவர் செய்த ஊழல்கள்.  மாநில அரசுத் துறைகளிலிருந்து பணத்தைக் கையாடி ரியல் எஸ்டேட் நடத்தி வந்த இவர் மனைவியின் அலுவலகத்தின் மூலம் தன்னுடைய சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டார்.  இது இவருடைய சொந்த நலனுக்காக செய்த ஊழல்.  இவர் செய்த எல்லா ஊழல்களிலும் மிகவும் முதன்மையாகக் கருதப்படும் ஊழலும் இவருடைய சொந்த நன்மைக்காகச் செய்ததே.

இப்போதைய ஜனாதிபதி ஒபாமா 2008-இல் ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட போது அவர் அப்போது வகித்துக் கொண்டிருந்த இல்லினாய் செனட்டர் பதவியை (அமெரிக்க மாநிலங்கள் ஐம்பதும் மத்திய செனட்டிற்கு இரண்டு செனட்டர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அனுப்பும்) ராஜினாமா செய்தார்.  அந்தப் பதவிக்கு, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் செனட்டர் தேர்தல் நடக்கும் வரை (அமெரிக்காவில் இடைத் தேர்தல்கள் கிடையாது.) அந்தந்த மாநில ஆளுநர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவரை நியமிக்கலாம்.  ஒபாமா இல்லினாய் மாநில செனட்டர் என்பதால் இல்லினாய் ஆளுநரான ப்ளகோஜேவிச்சிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.  அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்க வழி செய்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தார்.  ஒபாமாவிற்கு விருப்பமான வெலரி ஜேரட் (Valerie Jarret) என்பவரை நியமனம் செய்தால் நன்றியைத் தவிர அதனால் தனக்கு எந்த வித நன்மையும் இல்லை என்றும் அந்தப் பதவி மிக முக்கியமானதால் தனக்குச் சாதகமாக அந்த நியமனம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.  யாரை நியமித்தாலும் தனக்குப் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தோடு பதவி வேண்டும் அல்லது செர்பியா (Serbia) நாட்டிற்குத் (இந்த நாட்டிலிருந்துதான் இவருடைய பெற்றோர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்திருந்தனர்.) தூதராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தன்னுடைய மனைவிக்குப் பெரிய கார்ப்பரேட்டுகளில் வருடம் ஒன்றரை லட்சம் டாலர் வருமானம் வரக் கூடிய பதவி வேண்டும் என்றும் ரொக்கமாக உடனேயே தேர்தல் நிதிக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்க வேண்டும் என்றும் திட்டம் தீட்டினார். 

ஒபாமாவின் செனட்டர் பதவி காலியானதும் ப்ளகோஜேவிச் இப்படியெல்லாம் திட்டம் தீட்டுவார் என்று எதிர்பார்த்து ப்ராசிக்யூட்டர் பிட்ஜெரால்ட் இவர் யாரோடு என்ன பேசுகிறார் என்பதை ரகசியமாகப் பதிவு செய்ய ஆரம்பித்தார்.  இதற்கு நீதிமன்றத்தின் அனுமதியும் பெற்றிருந்தார்.

தக்க சாட்சியங்கள் கிடைத்ததும் டிசம்பர், 9, 2008 அன்று ப்ளகோஜேவிச்சையும் அவருடைய காரியதரிசியையும் அவர்கள் வீடுகளிலேயே கைது செய்ய பிட்ஜெரால்ட் ஏற்பாடு செய்தார்.  உடனேயே அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹோவர்ட் டீன் (Howard Dean), ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.  ஆனால் ப்ளகோஜேவிச் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தான் இன்னும் ஆளுநர் என்பது போல் ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் காரியங்கள் செய்தார்.  தான் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிலை நாட்டுவேன் என்று சூளுரையும் உரைத்தார்.

இவரை ஆளுநர் பதவியிலிருந்து விலக்க இல்லினாய் மாநில இரண்டு அவைகளும் திட்டம் தீட்ட ஆரம்பித்தன.  முதலில் 2009 ஜனவரி மாதம் இல்லினாய் மேலவையில் இவரைப் பதவி இறக்கம் செய்யத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது ஒருவரைத் தவிர மற்ற 59 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.  தீர்மானத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டவர் இவருடைய உறவினப் பெண்.  கீழவையிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  இந்த நடவடிக்கைகளில் கலந்து கொள்ள விரும்பாத ப்ளகோஜேவிச் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே அரசு விமானத்தில் தன்னுடைய சொந்த வீடு இருக்கும் சிகாகோவிற்குப் பறந்து சென்று விட்டார். 

ஆளுநர் பதவியை இழந்த இவர் மீது 2009 ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் குற்றம் தாக்கல் செய்யப்பட்டது.  24 குற்றங்கள் இவர் மேல் சாத்தப்பட்டன.  பனிரெண்டு வாரங்கள் நடந்த இந்த வழக்கில் ஜூரர்கள் பதினான்கு நாட்கள் விவாதித்தனர்.  24 குற்றங்களில் ஒன்றை மட்டும்தான் – ஒபாமாவின் செனட்டர் பதவி நியமனத்தில் இவர் எதிர்பார்த்த நன்மைகள் – ஜூரர்கள் ஒப்புக் கொண்டனர்.  மற்றக் குற்றங்களைப் பொறுத்த வரை ஜூரர்களால் ஒருமித்த முடிவிற்கு வர முடியவில்லை. 

ஆனால் பப்ளிக் பிராசிக்யூட்டர் பிட்ஜெரால்ட் இதை ஒப்புக் கொள்ள மறுத்து மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்.   முதல் விசாரனை 2010 ஜூனில் முடிந்தது.  மறு விசாரணை 2011 ஏப்ரலில் ஆரம்பித்து ஜூன் மாதம் முடிந்தது.  முதல் விசாரனையில் நிறைய குற்றங்கள் சுமத்தப்பட்டதால் ஜூரர்கள் குழப்பமடைந்து விட்டார்கள் என்று முடிவு செய்து மறு விசாரணையில் இருபது குற்றங்களே சுமத்தப்பட்டன.  இந்த இருபதில் பதினேழு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ப்ளகோஜெவிச்சிற்கு பதினான்கு வருட சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் தவறே செய்யவில்லை என்று வீறாப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர் தண்டனை நிச்சயம் என்றதும் அவர் குடும்பம் சமீபத்தில்தான் அமெரிக்காவில் குடியேறி இருந்ததால் தான் சிறு வயதில் பட்ட துன்பங்களையும் தன்னுடைய 15, 13 வயதான இரண்டு  மகள்கள் தான் சிறைக்குச் சென்றால் படப் போகும் கஷ்டங்களையும் கூறி நீதிபதியின் இரக்கத்தைச் சம்பாதிக்க முயன்றார்.  ஆனால் இது எதுவும் எடுபடவில்லை.  

அமெரிக்க சரித்திரத்திலேயே பதினாறு ஆளுநர்கள்தான் இப்படிப் பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.  இல்லினாய் மாநிலம் ஊழல் நிறைந்த மாநிலம் என்று பெயர் வாங்கியிருக்கிறது.  இவருக்கு முந்தைய ஆளுநரும் ஊழல் புரிந்ததற்காகத் தண்டிக்கப்பட்டு இப்போது ஆறரை வருடச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். கடந்த நான்கு வருடங்களில் இரண்டு இல்லினாய் ஆளுநர்கள் மீது வழக்கு நடந்திருக்கிறது.   ‘இத்தனைக்கும் பிறகுப் பொதுத் துறையில் இருப்பவர்கள் ஊழல் செய்ய நினைத்தால் ஒன்றிற்கு இரண்டு முறை சிந்திப்பார்கள்’ என்று பப்ளிக் பிராசிக்யூட்டர் கூறியிருக்கிறார். 

இந்தியாவில் அரசியல்வாதிகள் எல்லா வகையான குற்றங்களையும் புரிந்து விட்டு – அதுவும் மலை முழுங்கிகளாக இருந்து விட்டுச் – சுதந்திர மனிதர்களாக மட்டுமல்ல சாதனைகள் புரிந்த வீரர்களாகவும் உலாவுவதைப் பார்க்கும் போது எப்போது அவர்களும் அமெரிக்காவில் போல் தண்டிக்கப்படுவார்கள் என்று உள்ளம் ஏங்குகிறது.  அந்தப் பொற்காலம் இப்போதைக்கு இல்லையா என்று ஏங்குவதைத் தவிர வேறு வழியே இல்லையா?

 

படத்திற்கு நன்றி: http://articles.nydailynews.com/2009-01-23/news/17913705_1_illinois-taxes-illinois-governor-rod-blagojevich-pearl-harbor-day

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமெரிக்க நீதிமன்றங்கள்

  1. இந்த விழிப்புணர்ச்சிக் கட்டுரையை ஆர்வத்துடன் வரவேற்கிறேன். முழுமையானது. கோர்வையானது. தேவையானது. வாய்தா தான் வாய்மையின் எதிரி.ராட்னி ப்ளகோஜேவிச் ஒரு ஊழல் மன்னன். ஒபாமாவின் பதவியை ஏலம் போட எத்தனை தெனாவட்டு இருந்திருக்க வேண்டும்! பேட்ரிக் பிட்ஜேரால்ட் சுறுசுறுப்பான தணிக்கை ராஜா. எத்தனையோ புள்ளிராஜாக்களை வளைத்துப் போட்டவர். இத்தனைக்கும் இவர் தொடுத்த 24 குற்றச்சாட்டுக்களில், ஒன்று தான் நின்றது. அப்பவே இந்த அதோகதி, ராட்னி ப்ளகோஜேவிச்சுக்கு.இந்தியாவிலும் விழிப்புணர்ச்சி இருக்கவேண்டும். ஆனால். வல்லமை வாசகர்கள் அசாத்திய மெளனிகள்! பெரும்பாலும், அரிதாக வரும் பின்னூட்டங்கள், ‘ஆஹா! ஓஹோ!’ வுடன் சரி. ஒருவர் உழைத்துக் கட்டுரை எழுதுகிறார். படிக்க ஆள் இல்லை என்று தான் தோற்றம். கருத்துக்களம் காலியிடம் பெரும்பாலும்! இப்படியே போனால் ‘வல்லமை’ பொலிவு இழந்து விடும் அபாயம் உண்டு. ஒன்று முக்கியம். இதழ் நிர்வாகிகள், ஆசிரியர்க்குழு, படைப்பாளர்கள் எல்லாருக்கும், வாசகனின் நடுநிலை விமர்சனம் தான் டானிக். ஒரு அனுபவஸ்தர் சொன்னார், “படிப்பார்கள். கருத்திட நேரமிருப்பதில்லை.” அப்படியானால், முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை, வேலை வெட்டியில்லாமலா, இத்தனை அருமையான கட்டுரையை வடித்திருக்கிறார்!நான் சொல்வது கசப்பாக இருக்கலாம். ஆனால், நாம் ‘வல்லமை’யின் மெலிந்து போவதற்குக் காரணமாக இருக்கலாமா? நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

  2. இந்தியாவிலும் சிலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். பலர் விடுவிக்கப்படக் காரணம், தகுந்த சான்றுகள் இல்லாமையே. அமெரிக்காவில் பொறி வைத்துப் பிடிப்பது போல், இங்கும் கீழ் நிலைகளில் லஞ்சம் வாங்குவோரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார்கள். மேல்நிலைகளில்தான் பெரிய அளவில் நடப்பதில்லை.

    நீதிமன்றங்கள், பலரை விடுவிக்கக் காரணம், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற கொள்கையே.

    இன்னம்பூராரின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், பெரும்பான்மையானோர் பதிலிடுவது இல்லை. இட்டால், எழுதுவோருக்கு உற்சாகமாய் இருக்கும் என்பது உண்மை. இது, காலம் மாறி வருகிறது என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். வேறு சில தளங்களில் உள்ளது போல், Like / Dislike வசதியை அறிமுகப்படுத்த முயலலாம். அதன் சாத்தியங்களைப் பரிசீலிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *