ஒபாமாவின் நல்ல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள்

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்கா இப்போது 11 ட்ரில்லியன் டாலர் கடனில் மூழ்கித் தவிப்பதற்கு நிதிப் பற்றாக்குறையோடு (இது பட்ஜெட் பற்றாக்குறையில் முடிகிறது) ஜனங்களிடம் சேமிப்புப் பற்றாக்குறை, (அமெரிக்கர்களிடம் சேமிக்கும் பழக்கமே போய், கடன் அட்டை இருப்பதால் வரவுக்கு மேல் செலவு செய்வதால் சேமிப்பு இல்லாத நிலை), வணிகப் பற்றாக்குறை (உற்பத்திக்கு மேல் மக்களிடையே நுகர்வு (consumption)  இருப்பதால் ஏற்றுமதிக்கு மேல் இறக்குமதி அதிகம் இருக்கும் நிலை), தலைமைப் பற்றாக்குறை (leadership deficit) (நாட்டின் நலன்களை மனத்தில் கொண்டு நாட்டை நடத்திச் செல்லத் தகுந்த தலைவர்கள் இல்லாதது) ஆகிய மற்ற பற்றாக்குறைகளும் இருக்கின்றன.

பட்ஜெட் பற்றாக்குறை பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதில் மற்றப் பற்றாக்குறைகளைப் பற்றி ஆராய்வோம். கடன் அட்டை தோன்றி, சுமார் முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்தே அமெரிக்கர்கள் பண வரவு இல்லாதபோதும் செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.  அமெரிக்காவில் வாய்ப்புகள் அதிகம், இன்றில்லாவிட்டாலும் நாளை சம்பாதித்துக் கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்துத் தாறுமாறாக சாமான்களை வாங்கிக் குவித்தார்கள்.

இதே சமயத்தில்தான் சீனாவோடு உறவு வலுப்பட்டு சீன மக்களின் உழைப்பைக் கொண்டு குறைந்த விலையில் வணிக நிறுவனங்கள் பொருள்களை விற்கத் தொடங்கின. எந்தப் பொருளை எடுத்தாலும் ‘சீனாவில் செய்யப்பட்டது’ என்னும் வாசகத்தைப் பார்க்கலாம். எண்பது சதவிகித சாமான்கள் அங்குதான் செய்யப்படுகின்றன. மீதியுள்ள இருபது சதவிகிதத்தில் பதினைந்து சதவிகித சாமான்கள் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. ஐந்து சதவிகிதப் பொருள்களே அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. தாங்கள் சீனத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் பட்டினி கிடப்பார்கள் என்று சாதாரண அமெரிக்கர்கள் நினைக்கும் அளவிற்கு இது நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இதே அமெரிக்கர்கள்தான் சீனா தங்களை முந்திவிடுமோ என்று பயப்படுகிறார்கள். தேவைக்கு அதிகமாக சாமான் வாங்கும் நோய், அமெரிக்கர்களைப் பீடித்தது இந்தக் காலத்தில்தான்.

அடுத்தது வணிகப் பற்றாக்குறை. அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் அது ஏற்றுமதி செய்யும் பொருள்களை விட மிக அதிகமாகிவிட்டன. மறுபடியும் இதே இறுமாப்புத்தான். அமெரிக்காவை யாரும் மிஞ்ச முடியாது, தாங்கள் பங்குச் சந்தை மூலம் எப்போதும் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் இந்த வணிகப் பற்றாக்குறை கூடிக்கொண்டே போனதற்குக் காரணம்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கை மேலோங்கத் தொடங்கியது. மத்திய அரசு மிகச் சிறிய அளவிலேயே செயல்பட வேண்டும், பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்கக் கூடாது, அப்போதுதான் அவர்கள் தங்கள் பணத்தைத் தொழில்களில் முதலீடு செய்து மற்ற குடிமக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவார்கள், மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதும்தான் ரீகனின் பொருளாதார, அரசியல் கொள்கை. இவர் காலத்தில் பற்றாக்குறை ஏறியதால் அமெரிக்கக் கடனும் கூடிக்கொண்டு போனது. இவருக்குப் பிறகு பதவியேற்ற கிளிண்டன், காங்கிரஸில் இருந்த குடியரசுக் கட்சியின் அங்கத்தினர்கள் எவ்வளவோ தடைகள் போட்டும் தன் பதவிக் காலத்தில் பல தடவை பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். அவருடைய கொள்கைகளை அவருக்குப் பின்னால் பதவியேற்ற புஷ் பின்பற்றியிருந்தால் இந்த அளவிற்கு அமெரிக்கக் கடன் ஏறியிருக்காது. இவர் பதவிக்கு வந்த ஒரு வருடத்திலேயே எல்லோருக்கும் வரியைக் குறைத்து அரசின் வருமானத்தையும் குறைத்தார். இரண்டு யுத்தங்களை ஆரம்பித்து அரசுக்கு எக்கச்சக்க செலவுகளை உண்டுபண்ணினார்.

Barack Obamaதன்னுடைய சிறு வயதிலேயே அமெரிக்கா தன் சுயநலத்திற்காக பல நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றதை அறிந்திருந்த ஒபாமா, 2004இல் மாநில அரசியலிலிருந்து மத்திய அரசியலுக்கு வந்தபோது அமெரிக்காவின் ஆதிக்க வெறியைக் கண்கூடாகக் கண்டார். அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இருந்த இடைவெளி கூடிக்கொண்டே போனதையும் உணர்ந்தார். மருத்துவக் காப்பீடு இல்லாமல் லட்சக் கணக்கான அமெரிக்கர்கள் அவதிப்படுவதையும் பார்த்தார். அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப விரும்பி, தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு யுத்தங்களையும் சீக்கிரமே முடிவுக்குக் கொண்டுவருவது, புஷ் கொடுத்த வரிச் சலுகை 2010இன் முடிவில் முடிவுக்கு வரும்போது அதைப் பணக்காரர்களுக்குத் தொடரவிடாமல் தடுப்பது, மருத்துவக் காப்பீடு இல்லாத எல்லா அமெரிக்கர்களுக்கும் அது கிடைக்குமாறு செய்வது போன்றவை ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்.

ஈராக் யுத்தத்தை ஒரு வழியாக முடித்துவிட்டார் ஒபாமா. ஆஃப்கானிஸ்தான் யுத்தத்தையும் சீக்கிரமே முடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் அங்கத்தினர்கள் எவ்வளவோ தடைகள் போட்டும் சுமார் நான்கு கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்க வழிசெய்தார். சென்ற நவம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கீழவையில் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மையே கிடைத்திருக்கிறது. இந்த புதிய காங்கிரஸ் 2011இல்தான் செயல்பட ஆரம்பிக்கும் என்றாலும் ஒபாமா கொண்டுவந்த மருத்துவ வசதி சீரமைப்புச் சட்டத்தை (Health Care Law) முறியடிக்க இப்போதே குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

2001இலும் 2003இலும் புஷ் பணக்காரர்களுக்குக் கொண்டுவந்த வரிச் சலுகைகளின் காலக்கெடு 2010 உடன் முடிகிறது. அத்துடன் ஒபாமா வேலையில்லாதவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகையும் 2010இன் முடிவில் முடியவிருந்தது. முன்னதை முடிவுக்குக் கொண்டுவந்து, பின்னதை இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்பதுதான் ஒபாமாவின் திட்டம். நிறைய குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் அடங்கிய காங்கிரஸ் அடுத்த வருடம் பதவியேற்கு முன்பே இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றிவிட ஒபாமா முயன்றபோது இப்போதுள்ள காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள், பணக்காரர்களுக்கு இருக்கும் வரிச் சலுகையை இன்னும் இரண்டு வருங்களுக்கு ஒபாமா நீடிக்கவிட்டால் வேலையற்றோர்களுக்கான உதவித் தொகையை நீட்டிக்கச் சம்மதிப்போம் என்றார்கள். பாவம், ஒபாமா என்ன செய்வார்? வேலையற்ற பல லட்சம் அமெரிக்கர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவருடைய தேர்தல் வாக்குறுதியையே விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இதனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த இடதுசாரிகள் அவரையே கடுமையாக விமர்சிக்கிறார்கள். பாதை தவறிவிட்டார் என்று கண்டிக்கிறார்கள்.  ஏன், ஒபாமாவும் குடியரசுக் கட்சியின் கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் என்று கூறுவோரும் உள்ளனர். ‘நான் ஓட்டளித்த ஒபாமா எங்கே?’ என்று ஏங்குவோரும் இருக்கிறார்கள். பணக்கார்களின் வரிச் சலுகையை நிறுத்திவைப்பதை விட வேலையற்றோர்களின் கஷ்டம்தான் அவருக்குப் பெரிதாக இருந்தது. அவர்தான் என்ன செய்வார்? இப்படிப் பேரம் பேசும் பழமைவாதிகளான, வேலை இழந்தோர்களின் துன்பங்களை உணர்ந்துகொள்ள முடியாத குடியரசுக் கட்சி அங்கத்தினர்களை அவர் வேறு எப்படிச் சமாளிக்க முடியும்?

ஒபாமா, ரஷ்யாவோடு அணு ஆயுதக் குறைப்பு பற்றிப் போட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தை (New Start Treaty) என்னென்னவோ சாக்குகள் சொல்லி, நிறைவேற்றாமல் நிறுத்தப் பார்த்தார்கள். இந்த ஒப்பந்தத்தினால் உலகமே நன்மை அடையும் என்று ஒபாமாவும் மற்ற ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் எடுத்துச் சொல்லியும் இவர்கள் அசைவதாக இல்லை. இவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை எல்லாம் நவீன மயமாக்க வேண்டுமாம்(!), ரஷ்யா ஒப்பந்தத்தை ஒழுங்காக அமுல்படுத்துகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டுமாம்.  இவற்றையெல்லாம் முடித்த பிறகுதான் இந்த ஒப்பந்ததைப் பற்றி யோசிக்கவே செய்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ரஷ்யாவோடு செய்யவிருந்த புது ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒரு வழியாகப் பல விவாதங்களுக்குப் பிறகு குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் ராணுவத்தை நவீனப்படுத்த கேட்ட 85 பில்லியன் டாலரை அந்தத் திட்டத்திற்கு ஒபாமா கொடுக்க ஒப்புக்கொண்டதும் ஒரு காரணம். அவர் கேட்ட சில சில சலுகைகளைக் கொடுத்த பிறகே ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டனர்.

பல வருடங்களுக்கு முன் தங்கள் பெற்றோர்களால் சரியான விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் பலர், இப்போது வளர்ந்து பெரியவர்களாகிக் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் திருப்பி அவர்கள் நாட்டிற்கு அனுப்புவதற்குப் பதில் அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தாலோ, ராணுவத்தில் சேவை செய்தாலோ அவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது என்று கொண்டுவரப்பட்ட மசோதாவையும் சட்டமாகாமல் தடுத்துவிட முயன்றார்கள்.

அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கானல் என்ன சொல்லிக்கொண்டு திரிகிறார் தெரியுமா? ஒபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதி ஆகாமல் பார்த்துக்கொள்வதுதான் தங்களுடைய முக்கிய குறிக்கோள் என்கிறார். அப்படியென்றால் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது, மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களூக்கு காப்பீடு அளிப்பது, வேலையின்மையைக் குறைப்பது போன்றவை பற்றி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி கேட்கிறார் ஒபாமாவிற்கு வாக்களித்த ஒரு வாக்காளர்.

புஷ் போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகச் சில மனிதர்களிடம் செல்வம் குவிகிறது, இம்மாதிரி குவிவது ஒரு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அழித்துவிடும். ‘ஒரு சமூகத்தில் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவியலாம் அல்லது அந்தச் சமூகம் ஜனநாயக சமூகமாக இருக்கலாம்; ஆனால் இரண்டும் ஒன்றாக இயங்க முடியாது’ என்று ஒரு அமெரிக்க நீதிபதியே கூறியிருக்கிறார்.

அமெரிக்க மக்களின் நலன்களைக் காத்து, அமெரிக்காவை உலக அரங்கில் முதன்மையில் நிறுத்த வேண்டுமென்றால் ஒபாமா போன்றவர்களால்தான் அது முடியும் என்பதை எப்போது ஜனநாயக் கட்சியின் பழமைவாதிகள் உணரப் போகிறார்கள்?

================================

ஒபாமா படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.