2010ஆம் ஆண்டே உனக்கு டாடா பை பை
விசாலம்
காலம் யாருக்கு நிற்கிறது? அது தன் கடமையைச் செய்தபடி ஒடிக்கொண்டே இருக்கிறது. அதில் நன்மைகள், தீமைகள் கலந்து வருகின்றன. இறைவன் சங்கல்பத்திற்கேற்ப இயற்கையும் ஆடுகின்றது. இன்று நடப்பது, பின்னால் ஒரு சரித்திரம் ஆகிவிடுகிறது.
2010ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் குருவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டாக இருந்ததால் முன் ஆண்டுகள் போல் அத்தனை இழப்புகள் இல்லை எனலாம்.
ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என் மனத்தில் நின்ற சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். முதலில் நடந்த நல்ல சம்பவங்களை நினைத்துப் பார்க்கலாம்.
நல்ல சம்பவங்கள் சில:
ஜனவரியில் மிகவும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சூரியகிரஹணம் ஏற்பட்டது
தனுஷ், பிருத்வி என்ற ஏவுகணைகள் விடப்பட்டன
ஏ.ஆர் ரஹ்மான், இசைஞானி இளைய ராஜா, அமீர்கான் – இவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே கயிலாசநாதர் கோயில் சமீபம், சோழர் காலத்தைச் சேர்ந்த 12 செப்பேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன அத்துடன் சில திருமேனிகள், பூஜைக்கு உதவும் பொருட்கள், வாத்தியங்கள் கிடைக்கப்பெற்றன.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பெண்களுக்கு சட்டமன்றத்தில், ராஜ்யசபாவில் அவர்கள் வேண்டுகோளின்படி இடம் ஒதுக்கப்பட்டது.
முதன் முதலாக திவ்யா என்ற பெண்மணி சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சியின் விருதைத் தட்டிச் சென்றார். ஓடியபடி சுடுவது, ஓடும் குதிரையில் ஏறுவது என்று பல சாகசச் செயல்களைப் புரிந்தார்.
கிரிக்கெட் சாதனையாளர் டெண்டுல்கர், தன் விளையாட்டின் உச்சியை எட்டினார். “sports icon of the yr for 21 yrs” என்று NDTV அவரைக் கௌரவித்தது
சமையல் கலையில் திருமதி விஜி வரதராஜன் என்பவர் தன் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக சர்வதேச விருது பெற்றார் {“கேர்மேன்ட் வேர்ல்ட் குக் புக்”}இவர் நம் மாவடு தயிர் சாதத்தை உலக அளவு பரப்பிஇ டைனிங்க் டேபிள் மெனுவாக ஆக்கிவிட்டார் என்று படித்தேன். மனது மகிழ்ச்சியானது. நம் நாட்டு ஸ்பெஷல் ஆயிறேறே!
தமிழ்நாட்டுப் பெண் வசுமதி, தட்டு எறிவதில் சாதனை படைத்து, பரிசுகள் பெற்றார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் மிகச் சிறப்பாக நடந்தது. குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டில், மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
தஞ்சைக் கோயிலின் ஆயிரம் வருட விழா, நடனக் கலைஞர்கள் பலருடன் திருமதி டாக்டர் பத்மா சுப்பிரமண்யம் அவர்களின் மேற்பார்வையில் பல நடனங்கள் நடந்தன. முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்திற்கு மிகச் சிறந்த மனிதர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
பிரசன் சாட்டர்ஜி என்ற இந்தியர், அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பொறியிலுக்காக மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டு பாரதத்திற்குப் பெருமை சேர்த்தார்.
“காமென்வெல்த் கேம்ஸ்” 2010 அக்டோபர் மூன்றிலிருந்து பதினாலு வரை கோலாகலாமாய் நடந்தது. இதனால் தில்லியில் மெட்ரோ ரயில் பாதை பூரணமாக வெற்றி கண்டது.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு, எல்லோருக்கும் திருப்தியைக் கொடுத்தது.
தங்கத்தின் விலை கரை காண முடியாத நிலையாக ஏறியது.
தனியார் பள்ளியில் அதிக பணம் வசூலிக்கக் கடிவாளம் போடப்பட்டது
பெங்களூர்ப் பெண் நிக்கோல் பாஸ்தா, மிஸ் இந்தியா ஆனபின் மிஸ் வேர்ல்டும் ஆனார்.
நம்ப முடியாத செய்திகள்:
இனி, நம்ப முடியாத சம்வங்களைக் காணலாம்.
சினிமா உலகில் காமெடியில் உச்சியிலிருந்த வடிவேலு, தன் இணைபிரியா காமெடி நண்பர் சிங்கமுத்துவுடன் எலியும் பூனையும் போல் ஆனார்.
உலகப் புகழ் சுவாமி நித்யானந்தர், காமனின் அம்பில் சிக்கி, நடிகை ரஞ்சிதா என்பவருடன் மிக நெருக்கமாக இருந்தது மிகவும் பரபரப்பான செய்தியானது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் ராஜாவுடன் பல விஐபி பேர்கள் அடிபட்டு, பல புதுப்புது சம்பவங்கள் வெளிவந்து, மக்களைத் திடுக்கிட வைத்தன. இன்னும் அது வளரும்.
காலாவதியான மருந்து திரும்பவும் விற்கப்பட்டு, பெரிய மோசடி தெரிய வந்து, பல மருந்துக் கடைகள் மூடப்பட்டன. பலர் இந்த மருந்துகளை உபயோகித்ததால் உடல் நலம் குன்றினர். சிலர் உயிரிழந்தனர். மோசடியில் ஒன்பதரைக் கோடி ரூபாய் மருந்துகள் விற்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
காமென்வெல்த் விளையாட்டிலும் மோசடி அம்பலமாகி, நீதிமன்றத்தில் விசாரணை வரை வந்திருக்கிறது
வேதனைப்படுத்திய செய்திகள்:
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள், அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் பலர், தங்கள் மகன்களைப் பற்றி
கவலை கொண்டனர்.
இந்த ஆண்டு வடக்கில் பல தடவை ரெயில் விபத்து ஏற்பட்டது. உத்தரப்பிரதேசத்திலேயே மூன்று தடவைகள் விபத்து ஏற்பட்டு, பலர் படுகாயம் உற்றனர். மங்களூரிலும் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி, 158 பேர்கள் உயிரிழந்தனர்.
பிப்ரவரியில் பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்து, பலர் இறந்து போனார்கள்.
மார்ச்சில் பிரதாப்கட் என்ற இடத்தில் இருக்கும் அம்மன் கோயிலின் திருவிழாவின் போது, கூட்டம் தாங்காமல் நெரிசல் ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து மிதிப்பட்டனர். அதில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்.
சோமாலிய கொள்ளைக்காரர்களால் 120 மாலுமிகள் கடத்தப்பட்டனர். கிழக்கிந்திய புயல் அடித்து, வங்காளத்தில் 50,000 பேர்கள் வீடுகள் இல்லாமல், எல்லாம் இழந்து நின்றனர்.
மும்பையில் நடந்த மறக்க முடியாத தீவிரவாதத்தில் முக்கிய பங்கு வகித்த கசாப்புக்கு மரண தண்டனை தீர்ப்பு வெளியானது.
எரிபொருள் விலை ஏறி, ஜூலையில் நாடு முழுவதும் “பந்த்” நடத்தப்பட்டது.
ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் லே பகுதியில் வெள்ளம் கரை புரண்டோடி, நூற்றுக்கும் மேல் உயிரிழந்தனர்.
காளஹஸ்தி கோயிலின் கோபுரம் சரிந்து விழுந்தது. அத்துடன் காரைக்குடி அருகில் கொற்றவாளீச்வரம் கோயிலில் பலத்த இடியினால்
மூன்று கலசங்கள் சாய்ந்தன. இராமேச்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் கோபுரத்தில் விரிசல் கண்டு கலசம் விழுந்தது. அத்துடன் கொடிமரமும்
சாய்ந்தது. இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலிலும் சுவரில் விரிசல் என்று பக்தர்கள் கவலையடைகின்றனர்.
மழை இந்த வருடம் நன்றாகவே பெய்திருக்கிறது. ஆகையால் தண்ணீர்ப் பஞ்சம் வரும் வருடம் இருக்காது. ஆனால் காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டு நடுத்தர மக்கள் மிகவும் தவிக்கின்றனர்.
பல சாதனைகள் செய்து புகழுடன் மறைந்தவர்கள்:
ராஜசேகர் ரெட்டி, மார்க்கரெட் தாட்சர், அரசியல் தலைவர் கருணாகரன், நகைச்சுவை நடிகர் எஸ். எஸ். சந்திரன், நடிகர் முரளி, மெல்லிசையில் பல பரிசுகள் பெற்ற சுவர்ணலதா, புல்லாங்குழல் மேதை சிக்கல் குஞ்சுமணி, இசை அமைப்பாளர் சந்திரபோஸ், கன்னட நடகர் விஷ்ணுவர்தன், டி. எம். தியாகராஜன், டி. வி. வாசன், எழுத்தாளர் அனுராதா ரமணன்.
என் ஞாபகத்தில் வந்ததை எல்லாம் எழுதியிருக்கிறேன். சில முக்கிய விஷயங்கள் விட்டும் போயிருக்கலாம்.
அன்பர்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2011ஆம் ஆண்டே, என் இனிய கரங்கள் நீட்டி உன்னை வரவேற்கிறேன்.
சிறந்த எழுத்தாளர் அநுத்தமா புகழுடம்பு எய்தினார்;
அருமையான மீள்பார்வை.
விசாலம் அம்மாவுக்குப் பாராட்டுக்கள்
தேவ்