பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 17
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறை மாணவி வெ.ஜனனி எழுப்பிய கேள்விகள்:
1) பல துறைகளில் இன்னும் தமிழ் நூல்கள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? குறிப்பாக மானுடவியல், சமூகவியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கணக்கிடும் அளவிற்குத்தான் நூல்கள் இருக்கின்றன. மேலும் நம்மிடையே கலைச்சொற்கள் இன்னும் புதியதாக வரவில்லை. கலைச்சொல் அகராதியையும் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை.
2) தமிழில் encyclopedia போன்ற நூல்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதுபோன்ற துறையில் நூல்கள் எழுதுவதன் மூலம், தமிழை அடுத்த தலைமுறையினரிடையே எடுத்துச் செல்ல முடியுமா?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழர்களுடைய அறிவு சார்ந்த சிந்தனை வரலாறு (intellectual history) இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்று. அது இந்தியத் துணைக் கண்டத்தின் மற்ற பகுதிகளில் சமகாலத்தில் நிகழ்ந்த சிந்தனையோட்டங்களோடு இணைத்துப் பார்த்து எழுதப்பட வேண்டும்.
இலக்கணம் தவிர்த்த மற்ற அறிவுத் துறைகளில் தமிழ்ப் பிரதிகள் இருந்ததற்குச் சான்று இல்லை. இடைக்காலத்தில் தோன்றிய சித்த மருத்துவ நூல்கள் மருத்துவவியலுக்குச் சான்று என்று சொல்லாம். மறைந்துபோன நூல் பட்டியலில் சேர்க்கப்படும் கூவநூல் முதலான நூல்கள், கிணறு தோண்டுதல், நிலத்தடி நீர் இருப்பதைக் கண்டுபிடித்தல் போன்ற நடைமுறைச் செயல்களுக்கு உதவும் நூல்களாக இருக்கலாம்; அல்லது நீரியலின் அடிப்படைக் கொள்கைகளை விவாதிக்கும் நூல்களாக இருக்கலாம்; ஆனால் எது என்று சொல்லச் சான்று இல்லை. தமிழ் இலக்கிய நூல்களில் உயிரியல், தாவரவியல், வானியல், ஆட்சியியல், போரியல் போன்ற அறிவுத் துறைக் கருத்துகள் காணப்படுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்தில் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பெற்றுப் பரவியிருந்த கருத்துகள். இவற்றைக் கொண்டு இந்த அறிவுத் துறைகளில் முறையான விசாரணை (systematic inquiry) நடந்தது; நூல்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. இன்றைய புனைவிலக்கியத்தில் சமூகவியல் கருத்துகள் இருக்கின்றன என்பதால் தமிழில் சமூகவியல் நூல்கள் பெருமளவில் இருக்கின்றன என்று சொல்ல முடியாது. அறிவியல் கருத்துகள் இலக்கியத்திற்கு அப்பால் ஏன் தனி நூல் வடிவம் பெறவில்லை என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை.
திருக்குறள் ஒரு வித்தியாசமான இலக்கிய நூல். ஆட்சியியல் சார்ந்த அறிவுச் செய்திகளை இலக்கியமாகச் சொல்லும் நூல்; குறளிலும், காமவியல் அறிவியலாகத் தரப்படவில்லை; இலக்கியமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கவியல் அல்லது அறவியல் (Ethics) சார்ந்த உன்னதமான கருத்துகளைத் தமிழ் நீதி இலக்கியம் தருகிறது. ஆனால், அவை முடிந்த முடிவுகளாக உள்ளனவே தவிர, அறிவியலின் அடிப்படையாகக் கருதும் பிரச்சினைகளின் விசாரணையாக இல்லை. இடைக்காலத்தில் தான் சமயம் சார்ந்த விசாரணை, தத்துவவியலாக வளர்ந்து சைவ சித்தாந்தத்தைத் தத்துவத் துறையின் படைப்பாகத் தந்தது. வைணவத்தில் தத்துவ விசாரணை மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டது.
தமிழக வரலாற்றில் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசை போன்ற நுண்கலைகள், உலோகக் கலை, நீர்ப்பாசனவியல், போரியல், ஆட்சியியல் முதலான அறிவுத் துறைகளில் ஆழ்ந்த அறிவு இல்லாமல் இவற்றில் உன்னதப் படைப்புகளை உருவாக்கியிருக்க முடியாது; உன்னத நிலையை அடைந்திருக்க முடியாது. இசையைப் பற்றி வேண்டுமானால் அறிவு சார்ந்த கட்டமைப்பு (constructed knowledge) எழுத்தில் இருந்தது எனலாம். அப்பாவிடமிருந்து மகனுக்கு என்று வாய்மொழியாக, செய்பயிற்சி மூலமாக, மட்டும் இத்தகைய அறிவு வளர்ந்தது என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துறைக் கல்வி வாய்மொழியாக நடந்திருக்கலாம்; துறை அறிவின் ஆக்கமும், இந்தியாவின் பழைய மரபுப்படி, நூலாக எழுதப்படாமல் வாய்மொழியாக நடந்திருக்கலாம். ஆனால், துறை அறிவை விவாதித்து வளர்த்த அறிவாளர் குழுக்கள் இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் குறிப்பிடவில்லை. வாய்மொழியாக வளர்த்த அறிவுத் திரட்டைப் பிந்தைய காலத்தில் தமிழர்கள் நூலாக வடிக்கவும் இல்லை; அரசர்கள் இதற்கு மானியம் கொடுக்கவும் இல்லை.
தமிழ் வரலாற்றில், இலக்கணம், பின்னால் தத்துவம், தவிர மற்ற அறிவு விசாரணைகள் தமிழ் அல்லாத ஒரு மொழியில் – ஒரு காலத்தில் பிராகிருதத்திலும் பின்னால் பெருவழக்காகச் சஸ்கிருதத்திலும் – எழுதப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமஸ்கிருத அறிவு நூல்களை எழுதியவர்களில் தமிழ் பேசியவர்களும் உண்டு என்பது பலரும் அறிந்த செய்தி. இவர்கள் சமஸ்கிருதக் கல்வி மரபில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம். இன்று ஆங்கிலம்வழி கல்வி பெற்ற தமிழ் பேசுபவர்கள், ஆங்கிலத்தில் தங்கள் அறிவியல் விசாரணையை நடத்துவது போல, இவர்கள் சமஸ்கிருதத்தில் நடத்தியிருக்கலாம். இன்று ஆங்கிலம் போல், அன்று சமஸ்கிருதம் அறிவுலக மொழியாக இருந்திருக்கலாம். தமிழ்க் கல்வி மரபில் பயிற்சி பெற்றவர்களும் தங்கள் அறிவு விசாரணை உண்மைகளைச் சமஸ்கிருதத்தில் எழுதினார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை.
கடைசியில் சொன்ன கருத்து இன்று தமிழில் அறிவியல் நூல்கள், கட்டுரைகள் இல்லாத காரணத்தைக் கோடி காட்டும். தமிழ் பேசும் அறிவுத் துறைப் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் துறைக் கருத்துகளை ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். இயற்பியல் போன்ற வன்துறைகளாக இருந்தாலும், மானுடவியல் போன்ற மென்துறைகளாக இருந்தாலும் இந்த வழக்கம் இருக்கிறது. தமிழில் எழுதினால், அது மொழிபெயர்ப்பாக இருக்கிறது; அல்லது பொது மக்களுக்கு அறிவியல் கருத்துகளை அறிமுகப்படுத்தும் துவக்க நூல்களாக இருக்கின்றன.
ஆங்கிலத்தில் சமூகம் பற்றிய நூல்களைச் சமூகவியல் பேராசிரியர்கள் எழுதுகிறார்கள்; துறை வல்லுநர்களுக்கு மட்டுமல்ல, வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுதுகிறார்கள். மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நூல்கள் எழுதவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லை; பெயர் இல்லை. அவர்களை மதிப்பீடு செய்வது அவர்களுடைய நூல்களே. நல்ல மதிப்பீடு இல்லை என்றால் அவர்கள் வகுப்புக்கு மாணவர்கள் வரமாட்டார்கள்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தங்கள் சொந்த அறிவுப் படைப்புகளின் மூலம் ஈர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுடைய முக்கியமான வேலை, மாணவர்களை மதிப்பிடுவதுதான். புதிய கருத்துகளை வெளியிடும் ஆசிரியர்கள் சிலரும் ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழ்த் துறை ஆசிரியர்கள்தான் தமிழில் எழுதுவார்கள்; தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைப் பற்றியும். ஆனால் இவர்களுக்குச் சமூகவியலில் பயிற்சி இருக்காது.
இந்தியாவில் இப்போது பெரிய பொருளாதார மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றிப் பத்திரிகைத் தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. எத்தனை பொருளாதாரப் பேராசிரியர்கள் இதன் பல அம்சங்களைப் பற்றித் தமிழில் எழுதியிருக்கிறார்கள்? இதன் சமூக விளைவுகளைப் பற்றி எத்தனை சமூகவியல் வல்லுநர்கள் தமிழில் அலசியிருக்கிறார்கள்? இதைப் போலவே, பூமியின் வெப்பம், உயிரினங்களின் அழிவு, நச்சுக் காற்று போன்ற சுற்றுச்சூழல் நாசம் பற்றி எத்தனை தமிழ் பேசும் விஞ்ஞானிகள் தமிழில் விவாதித்திருக்கிறார்கள்?
வசதியுள்ள நாடுகளில் பல சிந்தனை நிறுவங்கள் (think tanks) இருக்கும்; அவற்றிலிருந்து புத்தகங்கள் வெளிவரும். அங்கே பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி எழுதுவார்கள். அவர்கள் அந்தத் துறையில் பொதுமக்களுக்கு நூலும் எழுதுவார்கள். எந்த நிறுவனத்தையும் சாராமல் தனிப்பட்டவர்கள் ஆய்வு செய்து நூல் எழுதுவது உண்டு. நூல்களை மக்களும் வாங்கிப் படிப்பார்கள்; எழுதியவர்களுக்குப் பணம் கிடைக்கும்; அது மேலும் புத்தகம் எழுத ஊக்குவிக்கும். தமிழிலும் இப்படி நூல்கள் எழுதினால் புத்தகம் படிக்கும் பழக்கம் கூடும்; அது கூடினால் அதிகப் புத்தகங்கள் வெளிவரும்.
தமிழில் அறிவுத் துறைக் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை அகராதிகளில் தூங்குகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் உருவாக்கிய சொற்களைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது; அவற்றின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம். போன நூற்றாண்டில் உருவாக்கிய தமிழ்க் கலைச்சொற்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். தமிழின் பிரச்சனை கலைச்சொற்கள் இல்லாதது அல்ல; அவற்றைப் பயன்படுத்த ஆங்கிலவழிக் கல்வியில் இடம் இல்லாததுதான்; பல கலைச்சொற்கள் அவற்றிற்கு இணையான ஆங்கிலச் சொற்களை விடப் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதுதான். தமிழுக்கு அறிவியல் வர வேண்டுமென்றால் அது மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டும்; தமிழ் வல்லாரைத் தவிர மற்றவர்கள் தொடத் தயங்கும் தமிழில் அல்ல.
முறை சார்ந்த கல்வியில் தமிழின் நெகிழ்ச்சிக்கு இடம் மறுக்கும் சூழ்நிலையில் இன்று வலைப்பூ போன்ற தொழில்நுட்பம் தரும் வசதிகள் இருக்கின்றன. இது புதிய தலைமுறையினரையும் கவரும். ஆனால் இன்று பெரும்பாலான வலைப்பூக்களில் வரும் பதிவுகள் அறிவுலகச் செய்திகளைத் தருவதில்லை; அறிவுலகத்தில் பணிபுரிபவர்கள் அதில் தமிழில் எழுதுவதில்லை.
தமிழர்கள் தமிழுக்கு உயிரைத் தர வேண்டாம்; தங்கள் அறிவைத் தந்தால் போதும். அதுவே தமிழை அறிவு மொழி ஆக்கும்.
=====================================
(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)
“தமிழ்க் கல்வி மரபில் பயிற்சி பெற்றவர்களும் தங்கள் அறிவு விசாரணை உண்மைகளைச் சமஸ்கிருதத்தில் எழுதினார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை.”
ஓரளவு விடை இருக்கிறது. தமிழ்நாட்டு ஸ்ரீவைணவம் தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் ‘தேவ’ மொழிகளாக பாவிக்கின்றது. ஏனெனில் நாலாயிர திவ்விய பிரபந்தங்களுக்கு வேதங்களுக்கு சமாமான இடத்தை கொடுக்கின்றது. அதனால் வைணவ ஆசாரியர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் பாண்டித்யம் பெற்றிருந்தனர். அதே சமயம், வைணவ ஆசாரியர்களின் சிரத்தை சமய சம்பந்தமானது , விஞ்ஞானம் நோக்கியல்ல.
விஜயராகவன்