நிலவொளியில் ஒரு குளியல் – 10

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshசினிமா என்ற ஊடகம், தமிழகத்தில் பல அரிய விஷயங்களைச் சாதித்திருக்கிறது. முதல்வர்களை உருவாக்கியிருக்கிறது, அண்ணன் தங்கை பாசத்தின் உச்சக்கட்டத்தைக் காட்டியிருக்கிறது, கடவுள்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. முதன்முதலில் விமானத்தில் பயணம் செய்யும் ஒரு சில படித்தவர்கள் கூட வானத்தில் கிரீடம் வைத்த நிஜக் கடவுள்களை வானத்தில் தேடும் அளவுக்கு மூளைச் சலவை செய்துள்ளது. அப்படிப்பட்ட சினிமாவைப் பார்ப்பதற்காக எங்களை எங்கள் தாத்தா, பாட்டி படுத்திய பாடுளின் பதிவு தான் இந்தப் பத்தி.

நான் முன்பே சொல்லியபடி நாங்கள் இருந்த ஊரான ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் தான் இருந்தது எங்கள் தாத்தா, பாட்டியின் கிராமம். இரண்டு கிராமத்துக்கும் இடையே பேருந்துப் போக்குவரத்து கிடையாது. நடை, சைக்கிள் அல்லது மாட்டு வண்டி தான் போக்குவரத்துச் சாதனம். ஐந்து கி.மீ. நடப்பது என்பது அப்போதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தது. நடக்கும் பாதையின் இரு மருங்கிலும் வாய்க்கால்களில் தண்ணீர் நம்மோடு கூடவே நடக்கும். பச்சைப் பசேலென்று வயல்களில் நாற்றுகள் காற்றில் ஆடுவது ஒயிலாக இருக்கும்.

வயல்களும் தோப்புகளும் நிறைந்த இந்த இரண்டு கிராமங்களிலும் சினிமா தியேட்டர் கிடையாது. படம் பார்க்க வேண்டுமானால் மற்றொரு சற்றே பெரிய கிராமமான கடையம்தான் செல்ல வேண்டும். எங்கள் தாத்தா, பாட்டி இருவரும் பக்திப் படம் என்றால் தவறாமல் சென்று பார்த்து விடுவார்கள். மற்ற படங்கள் என்றால் தாத்தா, பாட்டிக்குத் தெரியாமல் தனியாகச் செல்வதாக பாட்டி புகார் கூறுவாள். அதைத் தாத்தாவும் உடனே மறுப்பார். இது ஒரு சடங்கு போல வழக்கமாக நடக்கும் விஷயம்.

ஒரு முறை நாங்கள் லீவுக்கோ, அல்லது வீட்டில் விசேஷம் என்றோ பாட்டி வீட்டுக்குப் போயிருந்தோம். நாங்கள் என்பது நானும் என் அண்ணனும் தான். நாங்கள் அங்கே தங்கியிருந்த போது கடையம் தியேட்டரில் “மாயா பஜார்” படம் போட்டார்கள். அதைப் பார்த்தே ஆக வேண்டும் எனப் பாட்டி பிடிவாதம் பிடித்தார். தாத்தாவுக்கும் அந்தப் படம் பார்க்க இஷ்டம். அதனால் அவரும் உடனே சரியென்று சொல்லிவிட்டார். பாட்டி பகல் ஆட்டத்திற்கு வரமாட்டார். கதவுகளை எல்லாம் மூடி, காற்றே வராமல் செய்து விடுவார்கள், தலை வலிக்கும் என்று காரணம் சொல்வார். எங்கள் ஊர்களில் எல்லாம் பகல் ஆட்டம் (அப்படித்தான் எங்கள் ஊர் மக்கள் சொல்வார்கள்) இல்லையென்றால் இரவுக் காட்சிக்குத்தான் போக வேண்டும். அது ஆறு மணிக்குத்தான் தொடங்கும். படம் முடிவதற்குள் கடைசிப் பேருந்து போய்விடும் என்பதால் எல்லாரும் மாட்டு வண்டியில் போகலாம் என முடிவு செய்யப்பட்டது. இவர்களுடைய பரபரப்பில் எங்களுக்குப் படம் பார்க்க வர இஷ்டமா, இல்லையா என்று கேட்கவேயில்லை.

உண்மையில் எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்க விருப்பமில்லை. எனக்கு சினிமா தியேட்டர் என்றாலே அலர்ஜி. இறுக மூடிய கதவுகளும் , சுற்றாத ஃபேன்களும் இடையிடையே வரும் பீடி நாற்றமும் எனக்கு வயிற்றைப் பிரட்டும். என் அண்ணனுக்கோ “முரட்டுக் காளை” சினிமா அம்பாசமுத்திரத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. தாத்தாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ம்ஹூம்! தாத்தாவா மசிவார்? மாயா பஜார் படத்தில் நிறைய மாஜிக் காட்சிகள் இருப்பதாகவும் மேலும் அது மஹாபாரதக் கதை என்பதால் நாங்கள் பார்த்தே தீர வேண்டிய படம் என்றும் சொல்லி எங்களைக் கரைக்கப் பார்த்தார். பாட்டி “படம் பாக்கும்போது சாப்பிட நெறய முறுக்கு, அதிரசம் எல்லாம் தருவேன்” என்று மோஹன அஸ்திரத்தை வீசவே, நாங்கள் பணிய வேண்டியதாயிற்று.

சொன்னபடியே பாட்டி நிறைய தின்பண்டங்களை மூட்டைக் கட்டிக்கொண்டார். ‘வளர்ற பிள்ளைங்க கூட வராங்க’ என்று சொல்லி ஒரு தூக்குச் சட்டி நிறைய புளி சாதமும் மற்றொன்றில் தயிர் சாதமும் எடுத்துக்கொண்டார். அவற்றயெல்லாம் பார்க்கப் பார்க்க எங்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. இரவு நேரப் பயணம் என்பதால் பாட்டி, தாத்தாவை வண்டி ஓட்டிவர சம்ம்திக்கவில்லை. அதனால் மாணிக்கம் தான் வண்டியோட்டி வந்தார். மாணிக்கம் என்பவர், தாத்தா வயலுக்குப் பக்கத்து வயல் உரிமையாளர். இரண்டு காளைகளையும் பூட்டி, வண்டி ரெடியாக இருந்தது. நாங்களும் சாப்பாட்டு மூட்டை சகிதம் ஏறிக்கொள்ள, வண்டி கிளம்பியது. கடையம் வருவதற்குள் குறைந்தது நூறு தடவையாவது என் தலை வண்டியில் மோதியிருக்கும். பாட்டி “ஆடாம அலுங்காம வண்டியில ஒக்காரத் தெரியாதா? நெளிஞ்சுக்கிட்டே இருந்தா அப்படித்தான் மோதும்” என்றார்.

கடையத்திற்குச் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தோம். தாத்தா டிக்கெட் எடுத்து வர, படம் பார்க்க ஆரம்பித்தோம். அந்தப் படத்தில் அவர்கள் பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை. திடீரென ராட்ஷதர்கள் வந்தார்கள், அம்புகள் எய்து சண்டை போட்டார்கள், திடீரென இளவரசிகள் பாட்டுப் பாடினார்கள். எனக்கு போரடிக்கவே, பாட்டியிடம் மெதுவாக “வீட்டுக்குப் போலாம் பாட்டி! படம் நல்லாவேயில்ல” என்றேன். படத்தில் லயித்திருந்தவர்கள், என் கையில் ஒரு முழு முறுக்கை வைத்து, பேசாமல் படம் பார்க்கும்படி அதட்டினார்கள். என் அண்ணனுக்கு இது ஒரு நல்ல உத்தியாகப் படவே அவனுக்கும் அடிக்கடி போரடிக்கலானது.

வயிறு நிறைந்து எப்போது தூங்கினேன் என்றே எனக்குத் தெரியாது. படம் முடிந்து என்னை அவர்கள் எழுப்பும் வரை எனக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. அதற்கும் பாட்டி என்னைத் திட்டினார், “துட்டு குடுத்து டிக்கெட் எடுத்திருக்கு. இப்புடி தூங்கிட்டியே” என்று. வெளிக்காற்று பட்டதும் கொஞ்சம் தூக்கக் கலக்கம் போனது. வண்டி ஏறுமுன் மாணிக்கம் “ஐயா இப்போ இந்தப் பக்கம் வழிப்பறிக் கொள்ளை நடக்குதாம். அதுனால எதுக்கும் நாம சாக்குரதையா இருப்போம் என்ன?” என்று சொல்லி பளபளவெனே இருந்த புல் வெட்டும் அருவாளை எடுத்து தன் கைகெட்டும் தூரத்தில் வைத்துக்கொண்டார். விவரம் கேட்டதற்கு அந்த ஊர்க்காரர்கள் சொன்னதாகக் கூறினார்.

பாட்டி மிகவும் பயந்து விட்டார். ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தபடி வழியில் சாப்பிட நிறுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அது மட்டுமா? மடமடவென்று தன் காதில், கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்றி ஒரு சுருக்குப் பையில் போட்டு இடுப்பில் செருகிக்கொண்டு அதை சேலையைக் கொண்டு மறைத்து விட்டார். என்னைப் பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் வளையல், தோடு எல்லாமே பிளாஸ்டிக். இருந்தாலும் பயமாகத்தான் இருந்தது. என் அண்ணன் சும்மா இல்லாமல் “இப்புடி எல்லா நகையையும் மறச்சு வெச்சுட்டீங்களே! ஏன் ஒண்ணுமே இல்லன்னு குத்திட்டா என்ன செய்ய?” என்று பீதியைக் கிளப்பினான்.

அதற்குத் தாத்தா “நாங்க ரெண்டு பேர் இருக்கோமில்ல, சமாளிச்சுற மாட்டோம்? என்ன மாணிக்கம்?” என்று கேட்க மாணிக்கமும் இருபது வருடங்களூக்கு முன் தான் எப்படி வழிப்பறிக் கொள்ளையர்களோடு சண்டை போட்டார் என விலாவாரியாகச் சொல்லிக்கொண்டு வந்தார். கடையம் எல்லை தாண்டிய உடன், சரியான கும்மிருட்டு. அப்போதெல்லாம் வழி நெடுக, தெரு விளக்குகள் கிடையாது.

யாரும் எதுவும் பேசாமல் வந்தோம். தன் வீரத்தைப் பறை சாற்றியபடி வந்த மாணிக்கம், வாயே திறக்கவில்லை. தாத்தாவோ மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்காதபடி இருந்தார். சாலை ஒரு இடத்தில் இரண்டாகப் பிரியும். ஒரு பாதை எங்கள் தாத்தா, பாட்டி ஊருக்கும் மற்றொரு பாதை  எங்கள் ஊரான ஆழ்வார் குறிச்சிக்கும் போகும். அத்தைகைய பிரிவுப் பாதைகளை விலக்கு என்று எங்கள் ஊரில் சொல்வோம். அப்படி நாங்கள் அந்த விலக்கை நெருங்கும் போதுதான் ஒரு பயங்கரமான விஷயம், எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது.

சுமார் இருநூறு மீட்டர் தூரத்தில் ஒரு ஆள் இரு கைகளையும் விரித்தபடி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அந்த அரை குறை வெளிச்சத்தில் அந்தக் காட்சி சற்று திகிலூட்டுவதாகவே இருந்தது. எங்கள் வண்டி நெருங்க நெருங்க, அவன் கட்டியிருந்த வேட்டியையும் சட்டையையும் ஆட்டினான். எனக்கு பயத்தில் உயிரே போய் விடும் போல் இருந்தது. எல்லாருமே பயந்து விட்டர்கள். தாத்தா “மாணிக்கம் நம்ம ஊர்ப் பாதை வேண்டாம், ஆழ்வார்குறிச்சிப் பாதையில வண்டிய விடு” என்றார் மெல்லிய குரலில். ஏற்கெனவே மாணிக்கமும் அந்த முடிவுக்குத்தான் வந்திருந்தார் போல. மறு பேச்சுப் பேசாமல் வண்டி எங்கள் ஊர்ப் பாதையில் ஓட ஆரம்பித்தது. யாரேனும் எங்களை நோக்கி அரிவாளோடு ஓடி வருவார்களோ? என்று பயமாக இருந்தது.

நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

பத்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஹப்பா! எனக்கு ஏற்பட்ட நிம்மதியை வர்ணிக்கவே முடியாது. கிராமங்களில் பத்தரை மணி என்பது, நடுநிசிக்குச் சமம். எனவே எங்கள் திடீர் வரவால் என் பெற்றோர் பயந்து போனார்கள். யாருக்கும் எந்த உடம்பும் இல்லை எனத் தெரிந்த பிறகே அவர்களுக்கு நிம்மதியானது. ஊருக்குள் வந்து, வெளிச்சத்தையும் பார்த்ததாலோ என்னவோ! எங்களுக்குத் தைரியம் வந்தது. எங்கள் திகில் கதையைத் தாத்தா வர்ணித்தார். கேட்டுவிட்டு எங்கள் அப்பா சிரிக்க ஆரம்பித்தார். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

அவர் சிரிப்பு அடங்கி “ஐயோ அப்பா (என் தாத்தா) அந்த வெலக்கு பக்கத்துல இருக்குற சொம தாங்கிக் கல்லுல யாரோ கிழிஞ்ச வேட்டிய கட்டி விட்டிருக்காங்க. காத்துல அது ஆடுனத பாத்துட்டு பயந்து..”  மீண்டும் அடக்க முடியாமல் சிரித்தவர், “நான் நேத்து அந்தப் பக்கமா சைக்கிள்ள போகும் போது பாத்தேன். ராத்திரியில யாராவது பயப்படாம இருக்கணுமேன்னு நெனச்சேன். ஆனா நீங்களே இப்படி .. ” என்று மேலும் அடக்க முடியாமல் சிரித்தார். எங்களுக்கும் சிரிப்பு வர, நாங்களும் சிரித்துவிட்டோம். தாத்தாவும்  மாணிக்கமும் “நாங்க தனியா இருந்தா யாரானா என்னன்னு துணிஞ்சி போயிருப்போம். வண்டியில பிள்ளைங்க இருந்தாங்களா அதான்..” என்று அசடு வழிந்தார்கள்.

படத்தில் பார்த்த நகைச்சுவைக் காட்சியை விட இது நன்றாக இருந்ததாக என் பாட்டி சொன்னார்கள். தாத்தா தான் புலம்பிக்கொண்டே இருந்தார். ரொம்பவும் கேலி செய்தால் அவருக்குக் கோபம் வந்து விடும் என்பதால் அந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் அதிகம் பேசவில்லை. விலக்கிற்குப் போய் அது வேட்டி கட்டிய சுமை தாங்கிக் கல் தானா? என்று தாத்தாவும் மணிக்கமும் சரி பார்த்தார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனையோ சினிமாவுக்கு போய்வந்தும் கூட மாயா பஜார் சினிமாவை என்னால் மறக்க முடியவில்லை. அது போன்ற திகில் நிறைந்த சினிமா அனுபவம் எனக்கு ஏற்படவேயில்லை. அந்தப் பழைய நினைவுகளோடு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 10

  1. சின்ன வயதில் சினிமா பார்த்த சம்பவத்தை மிக நன்றாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

  2. இப்பொழுது சினிமா திரை அரங்குகளில் சென்று பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது. காரணம் ஒன்று தொலைக்காட்சி. மற்றொன்று திரை அரங்குகளின் டிக்கெட் விலை. ஒரு குடும்பத்துடன் படம் பார்க்க சென்றால் குறைந்தது ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. போக வர செலவு வேறு.

    நன்றாக நகைச்சுவை உணர்வுடன் எழுதியதற்கு பாராட்டுகள்.

  3. நன்றாக எழுதியதற்கு வாழ்த்துகள்.

  4. Today the enjoyment of watching film iin a theatre is robbed from us due to CDs. This column took me to my first experience of watching a film in a theatre. Good work madam.

  5. Really enjoyable article. The writer has very beautifully narrated not only about the interest shown by children watching film nearly 20 to 25 years ago but also about the thrilling incident while returning in the dark in a village wherein sufficient lighting facilities are not available even today. Congrats to Srija Venkatesh Madam for her good article.

    Really nice one.

  6. தன்னுடைய சிறு வயதில் படம் பார்த்த அனுபவத்தை மிகவும் அழகாக சொல்லிருக்கிறார் திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்கள். Congrats .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.