வீர மாருதியின் பிறந்த நாள்
விசாலம்
மார்கழி மாதம் வரும் அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி, பல கோயில்களில் சிறப்பாக நடைபெறும். ஆஞ்சநேயர் பிறந்த நாள் அல்லவா இது! அஞ்சனா தேவி பெற்றெடுத்த மாணிக்கம் அல்லவா இவர்! ஆஞ்சநேயர் மனோபலத்திற்கும் புத்தி பலத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர். பிரும்மசார்யத்தைக் கடைப்பிடித்தவர். சிறந்த அறிவாளி. ஸ்ரீ ராமரைத் தவிர அவர் வேறு ஒன்றும் நினைத்ததில்லை. அவர் மேல் அத்தனை அளவு கடந்த பக்தி.
நாம் ஆஞ்சநேயருக்குப் பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஏழரைச் சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தைப் பிடித்துக்கொண்டால் போதும். சனியின் தாக்கம் மிகவும் குறையும். அதே போல் பலவிதமான இன்னல்கள், துக்கங்கள் என்று வரும் போது, ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாகத் தீரும். அவருக்குப் பிரீதி செய்த வகைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
வடை மாலை சாத்துதல்
செந்தூரக் காப்பு அணிவித்தல்
வெண்ணெய்க் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்தப் பரிகாரங்களை நான் பலருக்குச் சொல்லி நன்மை நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
வடை மாலை…
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி, தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து, எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெற்றிலை மாலை….
சீதையைத் தேடித் தேடி, பல இடங்களில் காணாது, பின் அசோக வனத்தில் அவரைச் சந்தித்தார். அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து, என்றும் சிரஞ்சீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும். பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வாயுத் தொல்லை இல்லாமல் இருக்க, வெற்றிலை ரசம் கொடுப்பார்கள்.
வெண்ணெய் சாத்துதல்…
இராம – இராவண யுத்தம் நடக்கிறது. அப்போது இராமரையும் இலக்குமணரையும் அனுமன் தன் தோளில் சுமந்து சென்றார். அப்போது இராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க, சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்தக் காயத்திற்கு மருந்தாக, தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணெய் உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.
செந்தூரக் காப்பு…
சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமனிடம் “என் அவர் நலமா?” என்று சீதை கேட்கிறாள். அதற்கு அனுமன் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றார். உடனே மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக்கொண்டாள். இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை. தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக்கொண்டாராம்.
ராம் ராம் என எழுதி மாலையாக அணிவித்தல்
அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து இராமனைக் காட்டுவது போல் நாம்
பார்த்திருக்கிறோம். இராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். இராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை.
வாலில் பொட்டு வைப்பது…
அனுமனுக்குச் சக்தி முழுவதும் தன் வாலில் தான். இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி, சிம்மாசனமாக்கி இராவணனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர், அவர். இலங்கையை எரித்ததும் அந்த வாலில் வைத்த நெருப்பினால்தான். அந்தத் தீ அவருக்குச் சூடு கொடுக்கவில்லை. ஆனால் இலங்கையே எரிந்தது. ஆகையால் வாலிலிருந்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்று முடிவதற்குள், நினைத்த காரியம் சித்தியாகம் என்பது நம்பிக்கை… நம்புகிறவர்களுக்குப் பலிக்கிறது.
வடநாட்டில் ‘ஜய் போலோ பஜரங்க பலி கி ‘என்ற கோஷத்தை ஒவ்வொரு மாருதி மந்திரிலும் காணலாம். அவர்கள் அனுமனுக்கு ஜிலேபி மாலையும் சார்த்துவதைக் கண்டிருக்கிறேன். கபாஸ் என்ற சர்க்கரை மிட்டாய்யும் குஞ்சாலாடுவின் உதிர்ந்த தூளும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். தவிர வாயில் வெண்ணெயும் வைக்கிறார்கள். வடநாட்டில் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை இரண்டும் தான் அனுமனுக்கு மிக விசேஷம். அன்று கூட்டம் அலை மோதுகிறது. எல்லோரும் ‘ஹனுமன் சாலீசா’ என்ற நாற்பது குறள்களைக் கொண்ட அனுமனைப் பற்றிய சிறப்புகளை ஸ்லோகமாகப் படிக்கிறார்கள்.
“ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய் ஸித்தி ஸாகி கௌரீஸா”
(சரியான உச்சரிப்புக்காக அந்த வரிகள், ஆங்கிலத்தில்)
jo yah padai hanuman chaleesa
hoy siddhi saakhi gaureesa
இந்த ஹனுமான் சாலீஸவைப் படிப்பவருக்குச் சிவபெருமான் அருள் புரிகிறார். அதன் மூலம் பக்தர், பரிபூர்ண நிலையை அடைகிறார்.
========================
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
Thanks for the writer for giving very good explanation regarding vadamalai, butter and other prasadam articles offered to Lord Anjaneya. Let us chant the Ananeya Chaalisaa and get good health and prosperity.