அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா

2

அண்ணாகண்ணன்

சென்னை, அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா, 2011 ஜனவரி 2ஆம் நாள், அம்பத்தூரில் சிறப்பாக நடந்தது.

kamban vizha

காலையில் முதல் அமர்வாகக் கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது இதன் மையப் பொருள். இதில் “உள்ளமும்  கோடிய கொடியாள்’ என்ற தலைப்பில் கவிஞர் அரு.நாகப்பன், “நின்றநின் நிலை இது நெறியிற்றன்று’ என்ற தலைப்பில் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், “தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ என்ற தலைப்பில் கவிஞர் ரவிபாரதி ஆகியோர் பேசினர். இதில் “யாதினும் இனிய நண்ப’ என்ற தலைப்பில் கவிமாமணி ந. செல்லப்பன் எழுதிய கவிதையை கோ.பார்த்தசாரதி கவியரங்கத்தில் படித்தார்.

புதுச் சேர்க்கையாகப் புலவர் இராமமூர்த்தி கவிதை வழங்குகையில் ஆட்டோ என்பதற்குப் பெயர்க் காரணம் கூறினார். அதில் ஏறி வருபவர்களை ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வருவதால் அதற்கு ஆட்டோ எனப் பெயர் வந்திருக்கலாம் என்பது அவரின் கூற்று.

கூனியைப் பாட வந்த அரு.நாகப்பன், நீரா ராடியாவை நினைவூட்டும் வகையில் பாடினார். ராமன் பதவியிழந்தது போல், ராசா பதவியிழந்தார்.  அதற்குப் பரிசாக கைகேயியிடம் கூனி பரிசு பெற, நீரா ராடியாவும் ஆதாயம்  பெற்றார் எனப் பாடினார்.  இந்த ஒப்பீடு,  சுவையாக இருந்தது.

முத்துலிங்கம் பாடுகையில் முற்காலத்தில் இருந்த ஏழ்கங்க நாடும் இன்னும் சில பகுதிகளும் இணைந்தே இக்கால இலங்கை உருவானது. ஏழ்கங்க என்பதே ஈழம் என்றும் இலங்கை என்றும் திரிந்ததாக விளக்கினார்.

கவியரங்கம் நிறைவு பெற்றதும் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

“நான் 18 ஆண்டுகள் ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றினேன். அப்போது, தமிழில் எழுதும் ஆர்வம் மிகுந்தது. அதனால் தமிழ்க் கவிதைக்கு என ஒரு மாத இதழ் தொடங்க விரும்பினேன். அதற்கென ரூ.5 இலட்சத்தை ஒதுக்கினேன்.

கடைசி நேரத்தில் என் நண்பர் ஒருவரின் யோசனையின் பேரில், கவிஞர் முத்துலிங்கத்திடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர், முத்துச் சரம் என்ற இதழை நடத்தி வந்தார். ரூ.5 இலட்சத்தை நட்டப்பட வேண்டும் என்றால் கவிதை இதழ் தொடங்குங்கள் என முத்துலிங்கம் கூறினார். அதனால் அந்த முயற்சியைக் கைவிட்டேன். அதன் பிறகு தான் தினமணிக்கு ஆசிரியர் ஆனேன். அவருக்கு என் நன்றி.

கம்பன் என்று ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அல்லது அவரது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் இறையுணர்வு குறைந்த காரணத்தால்தான் நம்மை ஆங்கிலம் ஆட்கொண்டுள்ளது என்பது எனது கருத்து. தமிழ் மொத்தமாக ஓரங்கட்டுப்பட்டு விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஆசிரியர் பொறுப்பு ஏற்றதும் நான் என் உதவி ஆசிரியர்களை அழைத்துப் பேசினேன்.
தமிழ் இலக்கிய நிகழ்ச்சி தொடர்பாக எங்கிருந்து அழைப்பு வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கூறினேன்.

தினமணியில் எனது பங்கு என்னவாக இருக்கும் என்று எதிர்காலத்தில் கேட்டால், இலக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் முன்னுரிமை கொடுத்ததும், மறந்து போயிருந்த தமிழிசை இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்ததும்தான் எனது பங்களிப்பு என்று வரலாறு பதிவு செய்யும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

மதியம் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 82 வயதிலும் தளராத மன ஊக்கத்துடன் சுப்பு ஆறுமுகம், வில்லிசை இராமாயணம் என்ற தலைப்பில் அருமையான வில்லிசையை வழங்கினார். அவர் மகள் பாரதி, மருமகன் திருமகன், மகன் காந்தி, பேரன் கலைமகன் ஆகியோரின் பங்களிப்பும் நன்று.

அடுத்து, கருத்தரங்கம் தொடங்கியது.

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் தலைவர் இல.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். அவர் மன்னராட்சி நிகழ்ந்த இராமனின் காலத்தில் ஜனநாயகம் எவ்வாறு சிறந்திருந்தது என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விரித்துரைத்தார். இன்றைய ஜனநாயகத்தின் போலித் தன்மையையும் சுட்டிக் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து, பேரா. இரா. மோகன் சொற்பொழிவு ஆற்றினார். இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர். இவரின் தலைப்பு, உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். ஜடாயு என்ற பாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, நல்ல கருத்துகளை முன்வைத்தார்.

அவர் மனைவி பேரா. நிர்மலா மோகன், உயிர் கொடுத்துப் பழி மேற்கொண்டான் என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பணியாற்றுகிறார். இவர், கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பை முன்வைத்து, நல்லுரை வழங்கினார்.

இறுதியில் தமிழும் கம்பனும் என்ற தலைப்பில் கவிக்கோ ஞானச்செல்வன் பொழிவு ஆற்றினார். ‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ எனப் பாரதி குறிப்பிட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, விடை பகர்ந்தார்.

அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். செல்வி சரண்யா இறை வணக்கம் பாடினார். சிரிப்பானந்தா உள்ளிட்டோர் நாட்டு வாழ்த்துப் பாடினர். கம்பன் கழக ஆட்சி்க் குழு உறுப்பினர்களும் புரவலர்களும் இணைந்து விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலையில் சுப்பு ஆறுமுகம் வில்லிசை முடிந்ததும் பாதி அரங்கம் காலியானது. நிகழ்ச்சி முடியும் தறுவாயில் மழை பெய்தது. இல.கணேசன் வெளியே செல்லும்போது, “இந்த மழை முதலிலேயே வந்திருந்தால், இடையில் யாரும் வெளியில் சென்றிருக்க முடியாது” என்று சிரித்தபடி கூறினார்.

இது, அர்த்தம் பொதிந்த நகைச்சுவை!

=====================

படத்திற்கு நன்றி – தினமணி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா

  1. அருமையான நடை.. சுடச் சுடச் செய்திகள்… அனைத்து இலக்கிய நிகழ்வுகளும் இப்படி வரின் எத்தனை நன்மைகள்!! ’எள் என்றால் எண்ணெய்’ எனும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்…

  2. ஆசிரியருக்கு நகைச்சுவை உணர்வு குறைவோ, தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,இவண் விஜயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.