விமலா ரமணி

Vimala_Ramaniஜோசியர் வீடு நோக்கி ராஜா நடந்துகொண்டிருந்தான். அவனுக்கு நிகழ்காலத்தைவிட எதிர்காலக் கனவுகள்தான் அதிகம். அவன் மனைவி மல்லிகாவோ, நிகழ்காலத்தில் வாழ்கிறவள்……..

வறுமை தாண்டவமாடும் நிகழ்காலம் அவளை அச்சுறுத்தியது. எந்த வேலைக்கும் போகாமல் இவள் சம்பாத்தியத்தில் சாப்பிடும் தன் கணவனை நினைத்துக் கவலைப்பட்டாள். எதிர்காலக் கனவுகளில் சுகம் காணும் அவனைப் பற்றிக் கவலையாக இருந்தது.

“நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பதே உன் கையிலிருக்கும் வீணை” இவள் படித்த கவிதை.

இவன் கையிலிருக்கும் வீணையைப் பற்றிக் கவலைப்படாமல் நாளைய கற்பனைகளில் மூழ்கிக் கிடக்கிறான்.

அடிக்கடி ராஜா சொல்லுவான்……

“கவலைப்படாதே மல்லி, ஜோஸியர் சொல்லி இருக்கார். நான் என் பேருக்கு ஏத்த மாதிரி ஒரு நாள் ராஜா ஆகப் போறேன். எனக்கு ராஜயோக ஜாதகமாம். ஜோஸியர் சொன்னார்…..” என்பான்.

“ஏங்க அந்த ஜோஸியர் உங்களை வேலைக்குப் போகச் சொல்லலியா?” என்று கேட்க நினைத்தவள், வீண் சண்டை வேண்டாம் என்று அந்தக் கேள்வியைத் தவிர்ப்பாள்.

பலகாரங்கள் போட்டு, முறுக்கு தேன்குழல் என்று போட்டு, பிளாஸ்டிக் கவரில் சீல் செய்து கடைகளுக்கு அனுப்பி வந்தாள். அதற்கு உதவக் கூட இவன் வர மாட்டான். எதிர் காலக் கற்பனைகளில் மூழ்கி இருப்பான்.

”ஏங்க பலகாரங்களை எல்லாம் கடைகளுக்குக் கொடுத்துட்டு வரலாம் இல்லை?”

“இதோ பார்… இந்த மாதிரி வேலையெல்லாம் எங்கிட்டே சொல்லாதே. என்னால் முடியாது. வேணும்னா, உதவிக்கு வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிக்கோ. இப்பத்தான் மகளிர் உதவிக் குழு எல்லாம் வந்திருக்கே. யாரையாவது அணுகிக் கேட்டுப் பார்” என்பானே தவிர, தன் வேலைக்கு யாரை அணுகுவது என்பதைப் பற்றிச் சிந்திக்க மாட்டான்.

“நான் ஒரு டபுள் பட்டதாரி. என் போதாத காலம். நல்ல வேலை, போயிடுச்சி. மறுபடியும் பழைய மாதிரி பொஸிஷனுக்குத் தான் போவேனே தவிர இப்படி பொட்டிக் கடையிலே காபி டீ ஆத்தற வேலைக்கெல்லாம் போகமாட்டேன்.”

மல்லிகா யோசித்துப் பார்த்தாள். இவள் சினேகிதி ஒருத்தி, இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறவினர் வீட்டிற்கு அமெரிக்கா போனாள். எத்தனை முயன்றும் வேலை கிடைக்காத போது, உறவினர்களுக்குத் துன்பம் தரக்கூடாது என்று ஏதோ உணவகம்ஒன்றில் கம்ப்யூட்டரில் கணக்கெழுதும் வேலையை ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் பணி முடிந்தபின் சமீபத்தில் தான் அவளுக்கு அவள் தகுதிக்கேற்ற வேலை கிடைத்துள்ளது……. இதையெல்லாம் சொன்னால் இவனுக்குப் புரியாது.

அவள் தன் ஜாதகத்தை நம்பவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பினாள்.

வாசலில் யாரோ காலிங் பெல்லை உயிர்ப்பித்தார்கள்….

உம்… ராஜாவாகத் தான் இருக்கும். எப்போது ராஜாவாகப் போகிறோம் என்று ஜோஸியம் கேட்கப் போயிருப்பான். ஜோஸியர் சொன்னதை இவளிடம் அப்படியே ஒப்பிப்பான்….. பிடிக்கிறதோ, இல்லையோ இவள் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்……

“மல்லி…” மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தான் அவன்.

“மல்லி இன்னிக்கு ஒரு புது ஜோஸியரைப் பார்த்தேன்” உற்சாகத்துடன் அவன் ஆரம்பித்தான்.

ஜோஸியருக்கு தட்சிணை தர, இவளிடம்தான் பணம் வாங்கிக்கொண்டு போனான்.

“என்னன்னு கேளேன்…”

கேட்டாள்……

“என் ஜாதகம் சகட யோக ஜாதகமாம். அதாவது வண்டிச் சக்கரம் மாதிரி…. ஏதோ சொன்னாரே… ஆ….. சந்திரனுக்கு எட்டிலே குரு இருந்தா சகட யோகமாம்….”

இவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு யோகம் தான்… அது இவள் சினேகிதி…..

அவன் தொடர்ந்தான்….

“நம்ம பழைய முதல்வர் அமரர் எம்.ஜி.யார் அவர்களுக்கும் இதே யோகம் தானாம்… அதாவது எப்படி வண்டிச் சக்கரம் சுத்திட்டே இருக்கும் போது மேற்பகுதி கீழேயும் கீழ்ப் பகுதி மேலேயும் வருதோ, அப்படி ஏற்றத் தாழ்வுகள் வருமாம். ஏற்றமும் இறக்கமும் இருக்குமாம்….”

“அது சரிங்க, உங்க சக்கரத்துலே ஏற்றமே இல்லையே?”

“வரும் வரும் ஏற்றம் வரும்…”

“நான் நினைக்கறேன்… சக்கிம் சகதியிலே மாட்டிக்கிச்சோ என்னவோ?”

ராஜா இவளை முறைத்தான்.

“இரு.. இரு எனக்கும் ஒரு காலம் வரும்.”

ன்று…..?

மல்லிகாவிற்கு ஏகப்பட்ட வேலை.

நிறைய ஆர்டர்கள்……. எல்லாப் பலகாரங்களையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு மெழுகுவர்த்தியில் சீல் வைத்து… இந்த மாதிரி சீல் வைப்பது மகா போர்…

ஒவ்வொரு மாதமும் சீலிங் மிஷின் வாங்க நினைத்து, பட்ஜெட் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் வாங்குவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது…

இப்போதுதான் புதிதாக டெலிவரி பாய் என்று ஒரு ஆளை ஏற்பாடு செய்திருக்கிறாள்.

சப்ளை செய்ய வேண்டிய கடைகளின் விலாசங்கள், அவர்கள் தர வேண்டிய பணம், எல்லா விவரங்களையும் ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்திருக்கிறாள். அவன் அத்தனை சரக்குகளையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் போயிருக்கிறான். இவள் வியர்வை துடைத்து, ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டாள். இனி அடுத்து வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும்.

அப்போது…..?

வாசலில் கார் ஒன்று வந்து நிற்கிற சப்தம்….

இவள் வீடு தேடி காரா? ஏதாவது பெரிய ஆர்டராக இருக்குமோ?

இவள் கதவு திறந்தாள்.

வந்தவர் நடுத்தர வயதினர்…. பார்க்க செல்வந்தராகத் தெரிந்தார்.

வாசலில் ஒரு பிரும்மாண்டமான கார் நின்றுகொண்டிருநதது

”வாங்க… யார் வேணும்?” இவள் தடுமாறியபடி கேட்டாள்.

“இங்கே ராஜாங்கிறது…?”

அவர் கையில் ஒரு விஸிடிங் கார்ட்… ராஜாவின் கார்ட் தான்..

ராஜா சொன்ன மாதிரி ராஜாவிற்கு ராஜ யோகம் வந்து விட்டதா, என்ன?

ராஜாவின் கனவுகள் பலிக்கப் போகின்றனவா?

வீடு தேடி வேலைக்கு ஆர்டர் வரப் போகிறதா?

இவள் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“ஆ..ஆமாம்… அவர் என் வீட்டுக்காரர்தான்”.

வந்தவர் மெல்ல தயங்கியபடி கூறினார்…..

”ராஜா ரோட்டிலே நடந்து போயிட்டிருக்கும் போது  என்…. என் கார் வீல்லே அடிபட்டு…”

“ஐயய்யோ”

இவள் அலறினாள்.

“பயப்படாதீங்க…. நானே ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டுத் தான் வரேன்,….

“என்னோட பையன் குடி போதையிலே… அதெல்லாம் வேண்டாம்…. ராஜாவோட வைத்தியச் செலவை நான் ஏத்துக்கறேன்… நீங்க கோர்ட்டுக்குப் போகாம இருக்க… இந்தக் கவர்லே ஒரு லட்ச ரூபாய் பணம் வைச்சிருக்கேன்…

“காலை எடுக்க வேண்டி வரும்னு டாக்டர் சொன்னார்… நான்…. என்னோட கம்பெனியிலே… ராஜாவுக்கு வேலை போட்டுத் தரேன். ராஜாவை  ஐஸியுவிலே அட்மிட் பண்ணி இருக்கு. என்னோட கார்லே வாங்க, கூட்டிட்டுப் போறேன்….”

இவளுக்கு மயக்கம் வந்தது…. ராஜாவின் ஜாதகம், சகட யோக ஜாதகம் தான்…

வண்டிச் சக்கரம் காலில் ஏறி….

இனி இவள் பணிகளில் கூடுதல் வேலைகள் இருக்கும்… அது இவள் ஜாதக யோகம்…..

மல்லிகா மரத்துப் போனாள்…..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சகட யோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *