ஜெ.ராஜ்குமார்

ஏ! மானிடா, உன் பூத உடலாக நான் இருப்பதற்குப் பதிலாக, விலங்கினங்களாகவோ, பறவை இனங்களாகவோ பிறவி எடுத்திருக்கலாம். எத்தனையோ நன்மை புரிவதும்,கட்டுப்பாடோடும் இருக்கும் மனிதர்களுக்கிடையில் தீய மனிதர்களாக ஏன் நீங்களும் பிறவி எடுத்துள்ளீர்கள். 

எந்த ஒரு மிருகமும் தனக்குச் சோகம், அல்லது நிறையச் சந்தோஷம் வந்து விட்டதென்று மது அருந்துவதில்லை. மனிதன் மட்டும் தான் தனக்குச் சிந்தனை வரவில்லை எனவும், ஒரு ஸ்டைலுக்காகவும், தனிமையில் இருக்கும் போதும், சிகரெட் பிடித்துக் கொண்டு என்னைப் பாழ் படுத்திக் கொண்டிருக்கிறான். 

திருமணத்திற்கு முன்பு நட்பின் ரீதியில் ஆரம்பிக்கிறது இந்தப் பழக்கம். நட்பு என்றும் நல்ல எண்ணங்களைப் புகட்டுவதாகவே இருக்க வேண்டும். நண்பனுக்குப் பிறந்த நாள், திருமண நாள் அல்லது வேலை கிடைத்த நாள் என்று இன்னும் சிறு சிறு இன்பங்களுக்கும் அவர்கள் கூடிக் கொண்டாடப்படுவது நல்லது. ஆனால் அதில் மதுவையும்  சிகரெட்டையும் பயன்படுத்தி உடலுக்குத் தீங்கு செய்கின்றனர். 

திருமணம் ஆனவர்களோ, தங்கள் மனைவிக்குத் தெரியக் கூடாது என்றும், அவர்களைத் துன்புறுத்தியும் இந்த மதுவை உட்கொண்டு ஆனந்தம் கொள்கின்றனர். அப்படி மனைவியிடம் இல்லாத சந்தோஷம் அந்த மதுவிடம் இருக்கிறதென்றால், அந்த மதுவையே மனைவியாக்கிக்  கொள்வதுதானே? ஏன் இந்தப் பெண் நெஞ்சங்களை வஞ்சிக்கிறீர்கள்?

ஆம், பெண்களும் திருமணம் ஆன பிறகு, தன் கணவருடன்  சந்தோஷமாய்  எப்படி வாழலாம், இன்னும் என்ன என்ன விஷயங்களை எல்லாம் செய்தால் கணவருக்குப் பிடிக்கும்? என்று அறிந்து செயல்பட வேண்டும். வெறுமனே ஆண்களைத் தங்கள் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு, அவர்களை உங்கள் சிறை வாசத்தில் கொல்லாதீர்கள். இப்படி இருந்தால், உங்கள் கணவர் நீங்கள் ஊரில் இல்லாத போது  என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மதுவிலும் சிகரெட்டிலும் இன்னும் பல எண்ணங்களில் ஈடுபட்டுக் கெட்டு விடச் செய்கிறான் இந்த உடலையே. 

ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகு, தன் மனைவியின் மிகப் பெரிய ஆதரவையும் நல்ல நடவடிக்கையையும் பொறுத்துத்தான் உயரத்தில் கால் ஊன்ற முடியும். இப்பொழுது விரிவாக நான் இந்தத் தலைப்புக்குப் போக விரும்பவில்லை. அதற்கு இந்தப் பகுதி போதாது. 

நண்பன் ஒருவன்  தீய பழக்கங்களைக் கற்பிக்கச் செய்கின்றான் என்றால், பல்வேறு நண்பர்களும் அதை விடுத்துப் பல நல்ல செயல்களைச் செய்யும்படி அறிவுறுத்தலிலும் ஈடுபடுகின்றனர். ஆம், அப்பேர்ப்பட்ட நண்பர்ளையும் ஆதரித்துத் தக்க சமயத்தில் திருந்தி ஆக வேண்டும்.

ஒரு நண்பன் விளக்கமாகவே சொல்கிறான், ஒரு நாளைக்கு நீங்கள் பிடிக்கும் சிகரெட்டைக்  கணக்கெடுத்து, மாதம் இவ்வளவு செலவு செய்கிறீர்கள், அந்தப் பணத்தையும், நீங்கள் மது அருந்தி வீணாகத் தன் உடலைக் கெடுக்கும் பணத்தையும் கொண்டு என்ன செய்யலாம் என்று.

இந்த உலகத்தில், அல்லது உங்கள் ஊரிலும் எத்தனை பேர் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்களும், ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு, உங்கள் மனம் கொண்டு அந்தப் பணத்தை அவர்களுக்குச் செலவு செய்வீர்களானால் அதுவே அளப்பரிய தொண்டாகும்.  உங்கள் உடம்பாகிய நானும் நலம் பெறுவேன்! உங்கள் ஆயுளும் நீளும்!

அப்படி இல்லை, நான் புது வருடம் வரும் வரை இந்தப் பழக்க வழக்கங்களை விட மாட்டேன். அடுத்த வருடத்திலிருந்து பயன்படுத்த மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து மேலும் என்னை எவ்வளவு  அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்வீர். அடுத்த வருடம் யாருக்குத் தெரியும் ” குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு”.

அந்த இறைவன் அருளால் தாய் தந்தையர் கொடுத்த இந்த உடலை, உயிரைக் கெடுக்க என்ன அனுமதி இருக்கு உனக்கு?. இல்லை இல்லவே இல்லை. நல்ல பழக்கங்களோடு, நல்ல எண்ணங்களோடு உன் உடலையும் உன் மனதையும் மேம்படுத்தி வாழ்வதை இன்றே நன்றே செயல்படுத்து.

உங்கள் மனம் போன போக்கில் வாழாமல், “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்ற திருமூலரின் வாக்குப்படி, எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்தறிந்து இந்த உடம்பைப் பேணிக் காக்க வேண்டும். எத்தனையோ பலப்பல வகையானப் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் என்றும், health drink மற்றும் உடற்பயிற்சி என்று பல்வேறு தளங்களில் உங்கள் உடலைப் பாதுகாக்கவும் இளமையுடனும்  வைத்துக் கொள்ளவும் முயல வேண்டும்.

எத்தனை நாள் வாழப் போகிறோம் என்று அறியாமல் வாழும் மனிதனே, நீ வாழும் போது இந்தக் கட்டுப்பாடோடு வாழ்ந்தால் வாழ்க்கைப் பயணமும் சிறப்பாகும். நாளும் உனக்கு உற்சாகம் அளிப்பதாகவே அமையும்.

உன் உடம்பில் ‘கண்’ என்பது நீ இறந்த போதும் பிறர்க்குப் பயன்படும், அதை ஆரோக்கியமாய்  நீ வைத்திருந்தால். உன் இதயம் கூட மற்றோர்க்குப்  பயன்படும் இதய மாற்றுச் சிகிச்சைப்படி! தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன், என்னை மதிக்கக் கற்றுக் கொள், என் வாழ்க்கை உன்னத நிலையை அடைவதை நீயே உணர்வாய்!

இன்று இன்னும் வருத்தமான செய்தி என்னவென்றால், இந்தத் தீய பழக்கத்தில் இளம் பெண்களும், குடும்பப் பெண்களும் ஈடுபடுவதுதான். இதைச் சொல்லவே வெட்கக் கேடாய் இருக்கிறது.

எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், நீங்கள் சிகரெட் பற்ற வைக்கும் போது உங்கள் உதடுகள் ஒட்டாமல் செய்து விட்டிருப்பேன். நீங்கள் மதுவை உட்கொள்ளும் ஒரு ‘பெக்’கிலே வாந்தி எடுத்து உங்கள் முகத்தை அவமானத்தால் நனைத்திருப்பேன்!

சுய கட்டுப்பாடு இல்லையெனில் யாரும் முன்னேறியதாய்ச் சரித்திரம் இல்லை. காந்தி, தீய பழக்க வழக்கங்களைக் கை விட்டுத் தன் கொள்கையில் கடைசி வரை வாழ்ந்ததால்தான் இன்னும் அவர் நீங்கள் கெட்டுப் போகத் தரும் பணத்திலும் சிரித்துக் கொண்டிருக்கிறார்!

எத்தனையோ வேலைகள் இருப்பின், எத்தனையோ அறிஞர்களின் சாதனை உழைப்பில் இந்த உலகத்தில் மெருகேற்றப்பட்டவனைப் பயன்படுத்தி வாழும் மனிதனே, உண்மை புரிந்து விடு, உனக்கெனக் கொள்கை வளர்த்து விடு, தீயவைகளைத் தீயில் போட்டுக் கொளுத்தி விடு, தீபமாய்ச் சுடர் விடப் புறப்படு, வாழு சுயக்கட்டுப்பாடோடு, வாழ்க்கை வரும் உன்னோடு!

 

படத்திற்கு நன்றி: http://www.richardkrawczyk.com/178/health-awareness

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “உடம்பு பேசுகிறது!

  1. ராஜ குமார், ஆற்றல் மிகுந்த சொற்களில் சாட்டையடியாய்ப் போட்டிருக்கிறீர்கள்.

    இன்றைய தேதியில் ஓராயிரம் ராஜ் குமார்கள் வேண்டும்!
    மதுப் பழக்கம் பற்றிய இந்த காட்டமான – உண்மையான சேதிகளை மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் பேசவேண்டும்! 

    மது எனும் தனிமத வியாதி – குடும்ப வியாதியாக – சமுதாய வியாதியாக – விசுவரூபம் எடுத்து விட்டது –

    படித்த பண்பாடுள்ள குடும்பங்கள் கூட இன்று  மது  பரவி வீதியில்!

    ஆம்! 
    இன்று, மது என்பது நம் சமுதாயத்தின் வேரைப் பிடித்து  வெறித்தனமாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது     
    சாதாரண நாட்களிலேயே ஈமொய்க்கும் கூட்டம் என்றால் –
    சனியன்று மாலை – நமது  சாராயக் கடைகளில் திரளும்  கூட்டத்தைப் பார்க்கும்போது திகில் ஏற்பட்டுவிடுகிறது.
    விடலைகள் சர்வ சாதாரணமாக மது வாங்கி அருந்த முடிகிறது என்றால் – சட்டங்கள் – எங்கே போயின – காவலர்கள் எங்கே போயினர்?
     
    பெண்கள் கொஞ்சம் முன்னுக்கு வருவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இப்பெண்களின் பின்னணியில் இவர்களது இல்வாழ்க்கையில் – ஆடவரின் மதுப பழக்கத்தால்  – இவர்கள்  சொல்லொணாத்துயரை  அனுபவித்துவரும் கொடுமையை இன்று அதிக அளவில் தெரிந்து கொள்கிறோம்.

    மதுவுக்கு அடிமையாகிறவன் – வீட்டில் எந்த ஒன்றையும் வைப்பதில்லை – குழந்தைகளின் நோட்டு – புத்தகம் – பையைக் கூட எடுத்துக் கொண்டு போய் – வீசைக்கு போட்டு –  குடிக்கச் செல்லும் தகப்பன்கள் அதிகம் பேர்.   இவர்களது – வீட்டில் பெண்கள் படும் – குழந்தைகள் படும் அவமானம் கண்ணில் இரத்தத்தை வரவழைக்கிறது. 

    ஒருமுறை சென்னையில் மாநாகராட்சிப் பள்ளிப் பெண் குழந்தைகளுக்காக – ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி நடத்தினேன். அந்தப் பயிற்சிக்கு வந்திருந்த ஒரு பெண் தந்த  தகவல்கள் கேட்டு அதிர்ச்சி  அடைந்து விட்டேன். முப்பது வயது மனிவியையும் பதினைந்து வயதான தனது  மகளையும் தகாத உறவில் ஈடுபடுத்திக் கொள்ள  இருவரிடம் அவர்களை விலைபேசி – அதற்காக முன் கூட்டியே  காசைப் பெற்றுக்கொண்டதோடல்லாது, அந்த இருவரும் வீட்டிற்குள் வர அனைத்தும் ஆவன செய்திருந்த மோசடியை தாயும் மகளும் எவ்வாறெல்லாம்  சமாளித்து  முறியடித்தனர் என்பதயும் – ஒவ்வொரு இருபத்து நாலு மணி நேரத்தையும் அந்த இரு பெண்களும் எத்தனை சிரமத்தோடு நகர்த்த வேண்டியிருக்கிறது என்பதையும்  அப்பெண் சொன்னபோது, எனது நாடி நரம்பெல்லாம் நடுக்கம் ஏற்பட்டது.  

    ஊருக்கு வெளியே இத்தனை மைல் கல் தொலைவில் மட்டுமே கள் கடை இருக்க முடியும் என்ற காலம் போய் எங்கும் மதுக் கடைகள் இருக்கமுடியும் என்பதான நிலைமை!

    “ஏம்மா! அந்த கடையிலே என்ன விக்கறாங்க? நீ ஏன் அந்தக் கடைக்கு என்னை கூட்டிக்கிட்டுப் போக மாட்டேங்கிற? அங்க ஏதோ வாங்கி சாப்பிடறாங்கமா!எனக்கும் ஆசயா இருக்குமா!”

    — நான்கு வயதுக் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்   சாராயக் கடையைக் காட்டி, தாயைக்  கேள்வி கேட்டு நச்சரித்த அந்த காட்சி கண்டேன்!

    ” அது சாராயம் டா குடிக்கக் கூடாது! – தாய் 

    குடிக்கக் கூடாதுங்கற? அவங்க குடிக்கறாங்களே!
    நீ பொய் சொல்ற! ஏமாத்தற!   
     
    வாங்கிக் குடு – சாலையில் புரண்டு அழுத அந்தப் பிள்ளையை அடித்தும் – தரதரவென இழுத்தும் சென்றாள் அந்தப் பெண்!

    கள் இங்கே உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போகிறது!
    மோரைக் குடத்திலிட்டு தலைமீது சுமந்து கொண்டு
    வீதியேகிச் சுற்றிச் சுற்றி நாவறளக் கூவிக் கூவி
    வீட்டின் படியேறி விரும்பியே தந்திட்டாலும்
    குடத்திலே இன்னும் மோர்!  

    — அவ்வை மகள் 
     
     

  2. அவ்வை மகள், தங்கள் அழகு மிகு விமர்சனத்தை படித்த பிறகு தேசிய விருது பெற்றது போல் உணர்கிறேன். நீங்கள் இந்த சமுதாயத்தில் சந்தித்த நிகழ்வுகளை பதிவு செய்ததை கண்டு ஆச்சரியப்படுகிறேன். மேலும் ஆயிரம் பல்லாயிரம் கோடி மக்கள் இந்த விழிப்புணர்வில் இணைந்தாலொழிய மது என்னும் கொடிய அரக்கனை ஒழிக்க இயலாது.

  3. “Mens sana in corpore sano” (“Νοῦς ὑγιὴς ἐν σώματι ὑγιεῖ”.) Thales;மனம் பேசினால், உடல் தானே பேசும். ஓரேடியாக எல்லாவற்றையும் கடுமையாகக் குறை கூறாமல், மிதமான போக்கு சிலாக்கியம்.

  4. அன்பரே, மிதமிஞ்சிய தவறுகள் நடக்கும் இந்த காலத்தில், எதை நாம் குறைத்து சொல்லமுடியும், எதையும் விட்டுவைக்கவில்லையே இந்த பாழ்மனம்.
    நேற்று நடந்த சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள். நூலகத்துக்கு(அண்ணா நூற்றாண்டு நூலகம்) போகலாம் என்று புறப்பட்டேன், நல்ல புத்தகங்களின் தோழனாகி விட்டாலே, எந்த தவருதலுக்கும் மனம் துணை போகாது என்ற கருத்தை மனதில் கொண்டு. அந்த அடிப்படையில் நூலகம் இருக்கும் தெரு நோக்கி போகையில், வேகமாய் அலறிக்கொண்டு அத்தெரு நோக்கி வந்தது ஆம்புலன்ஸ், காவல் அதிகாரியும் அங்கே வந்தார். என்னவென்று கூட்டம் கூடி விட்டது. அவ்வழியே சென்ற எனக்கோ அச்சம் ஏறி விட்டது. அந்த ஆம்புலன்ஸ் நின்ற இடம் அங்கே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்னே. அங்கே யாரையோ மிக வேகமாக ஏற்றிக்கொண்டு திரும்பலானது .
    சரி என்னவென்று விசாரித்தேன், அதைக்கேட்ட பிறகு என் தலை சுற்றலாயிற்று. அந்த மனிதன் மிகுதியான சாராயம் பருகியதால், அவனுடைய நாக்கு வெளியே தள்ளிவிட்டதாம். இது என்ன கொடுமை இறைவா. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே.
    எனக்கு இதை பார்த்த பிறகு வெறுமனே இந்த மனிதனை மட்டும் குறை கூற முடியவில்லை.
    அந்த டாஸ்மாக் ஒட்டியே வரிசையாக வீடுகள், 10 வீடு தாண்டினால் அந்த தெருவின் நடுவில் கோயில், கொஞ்சம் தாண்டினால் அண்ணா நூலகம். இப்பொழுது இங்கே டாஸ்மாக்கின் அவசியம் என்ன? இப்படி பாழாய்போகத்தானா, இல்லை மனிதனின் பொறுமையை சோதித்து பார்கத்தானா? எதை சொல்வது, தனி மனிதன் கட்டுப்பாட்டில் இருந்தால் எல்லாம் சரியாகும் என்கிறீர்களா? அவனுக்கு குடும்பத்தில் ஆயிரம் கஷ்டமா? இல்லை பெருமை போட்டி என்று குடிக்கரானா? புரியவில்லை…!
    இல்லை மக்களாய் பார்த்து திருந்த வில்லையெனில் அவர்களை திருத்த முடியாதா? நாம் எதையும் சுட்டி காட்டக்கூடாதா? நாம் பிறந்த ஜென்மத்தில் எத்தனை நாள் வாழப்போகிறோம் என்றே தெரியாது இருக்கையில், இது என்ன குறையிலும் கொஞ்சம், மிகுதி என…? எவை எவை எங்கெங்கு நடக்கிறதோ எதனால் நடக்கிறதோ அத்துணை காரணங்களையும் கண்டறிந்து களை எடுத்தே ஆக வேண்டும்.

  5. நம்மூரில் மதுப்  பழக்கம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது-
    இது ஆரோக்யமான போக்கு அல்ல –
    வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் – மதுவோடு மாந்தர்கள்!
      
    இங்கிருந்து விடுமுறைக்காய் அங்கு வந்திருந்த சமயம் நான் கண்டு – 
    ஜூலை 28, 2011 –  அம்பராத்தூணியில் வெளிவந்தது –
       
    கோப்பும் கோப்பையுமாய் அரசுப் பணியாளர்கள்

    இருவாரங்களுக்கு முன் சென்னையில் நானிருந்தபோது சென்னையின் புராதனமானதொரு கட்டிடத்தில் இயங்கிவரும் அரசுசார் நிறுவனம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது வெறிச்சோடிப் போனார்ப் போல் தெரிந்தது. பழைய களையில்லை. எனக்குப் பரிச்சயமான முகங்கள் எதுவும் தென்படவே இல்லை. விசாரித்தபோது பழைய ஆட்கள் யாவரும் ஏறக்குறைய ரிட்டையராகி விட்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது!!

    எங்கு நோக்கினும் புதுமுகங்கள்!! ஆனால் அவர்கள் எவரிடமும் சுறுசுறுப்போ தெளிவோ, பணிபக்தியோ, பொறுப்போ, தென்படவில்லை!! எதுகேட்டாலும் தாறுமாறாய் பதில் வந்தது. அனைவரும் நடுத்தர வயதினர்! நாற்பதிலிருந்து அதற்கு மேல் தான் வயதிருக்கும் எவரொருவருக்கும். மனம் ஒன்றுதல் இல்லாமல் அவர்கள் அங்கு வேலைக்கு வந்திருப்பதாய்ப் புரிந்தது.

    கோப்பைத் தொடுவதும், கொஞ்சம் புரட்டுவதும், கம்ப்யூட்டரில் எதையோ தட்டுவதும், உடனே கழிவறைக்குப் போய்வருவதும், செல் போனில் வரும் அழைப்புக்காய் வராந்தாவிற்குச் சென்று சவதானமாய் வெகுசத்தமாய்ப் பேசிவிட்டுவருவதும். உடனே டீ சாப்பிடச் செல்வதும், அங்கிருந்து வந்த ஒரு ஒருமணிநேரத்திரற்கேல்லாம் சாப்பாட்டிற்குச் செல்வதும் – இந்த முற்பகல் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நான் சென்ற வேலைக்காக, அந்த செக் ஷனில் காத்துக் கொண்டிருந்தேன்.

    நான் அங்கு காத்துகொண்டிருந்த வேளையில்ஒன்று பளிச்செனப் பட்டது — அதிர்ச்சியாகவும் இருந்தது – அங்குள்ள பணியாளர்களில் முக்கால்வாசிப் பேர்கள் குடிப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்!! இலேசான் சாராய வாடையை அங்கே நுகர முடிந்தது!!

    தொந்தியும் கல்லீரல் பெருத்து முன் தள்ளியதான “சிரோசிஸ் லிவர்” பிரச்சனையுடனும் வெகுபலரும் காணப்பட்டனர். சாப்பாட்டு இடைவேளையின் போது இரு சிப்பந்திகள குடிபோதையில் மிகவும் கீழ்த்தரமான வாசகங்களைப் பயன்படுத்தியவாறு பகிரங்கமாகவே வராந்தாவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

    சாப்பாட்டு இடைவேளியிலிருந்து வர அரைமணிநேரம் தாமதம், வந்த கொஞ்ச
    நேரத்திற்கெல்லாம் டீ ப்ரேக், அடுத்து, அரைமணிநேரம் முன்னதாகவே வேலையை முடித்துக்கொண்டு புறப்பாடு என பிற்பகலும் கண்கொள்ளாக் காட்சியாகவே போனது.
    நான் அரைமணிநேரத்தில் முடியும் என எதிர்ப் பார்த்துச்சென்றிருந்த வேலை முடிய ஐந்து நாட்களாகின.

    கரை போட்ட வேட்டிகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்! அவர்கள் வந்தால் இவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லும் – இயங்கும் விதமும் அலாதியாக இருந்தது.

    நம்மூரில் அரசு அலுவலகங்கள் திறம்பட இயங்குவதில்லை எனபது தெரிந்த விஷயம் தான் என்றாலும் – இத்தனை அளவுக்கு – ஒட்டுமொத்தத் சீர்கேடு எனும்படியாக – நிலைமை போயிருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

    குடிபோதையும் சாராய வாடையுமாக கோப்புக்கும் கோப்பைக்குமிடையில் அரசுப் பணியாளர்கள் நர்த்தனமாடும் காட்சி கண்ணராவியாக உள்ளது.

    புதிதாக சுமார் நூறு பேரை ஒன்றாகப் பணிக்கு அமர்த்தியிருக்கிரார்கள். ஆனால் அவர்களுக்குப் பக்கத்திலிருந்து வேலை சொல்லிக்கொடுக்க அனுபவசாலிகள் இல்லை. அனைவரும் ரிடையராகி விட்டார்கள்.

    இவர்கள் என்னென்ன வேலை செய்துகொண்டிருந்தார்களோ இது அரசுவேலையென்று இங்குவந்து சேர்ந்திருக்கிறார்கள். வயது முதிர்ந்திருக்கிறதே தவிர வேலை தெரியவில்லை.

    இம்மாதிரியான இடைவெளியும், பொறுப்பற்ற நடைமுறையும் நிகழாதவாறு தடுத்திருக்க முடியும் – நிர்வாகமும், அரசும் – முன்கூட்டியே சரியாக திட்டமிட்டிருந்தால்!!

    எதுஎப்படியாயினும், குடிபோதையில் பணியில் இருப்பது, அல்லது, பணியிடத்தில் குடிப்பது ஆகிய இரண்டுமே பணியின் போது நடத்தைப் பிறழ்வு செய்வதாகும். இவர்களை நடத்தை ஒழுங்கீனச் சட்டத்தின் கீழ்க் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும்; பணிநீக்கம் செய்ய முடியும்.

    ஆனால் கேட்பாரற்ற ராஜ்ஜியமாக அரசு அலுவலகங்கள் செல்கின்ற நிலவரத்தைப் பார்த்தால் பெருந்தலைகள் என்னதான் செய்துகொண்டிருக்கிரார்கள் என்று வினவத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *