ஏன் இப்படி?
ஸ்ரீஜா வெங்கடேஷ்
பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் தனக்கு கற்பிக்கும் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். அதுவும் திட்டமிட்டு நிதானமாக செயல் படுத்தியிருக்கிறான். இவற்றிற்கு இடையே வெளிநாட்டினர் நம் கலாசாரத்தைப் பாராட்டி அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இந்தியா வருகை என்ற செய்தி வேறு.
இவர்கள் எந்த கலாசாரத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? ஆசிரியர்களை பெற்றொருக்கும் மேலாக வைத்து அவர்களுக்கென ஒரு நாளையே ஒதுக்கி மரியாதை செய்யும் கலாசாரத்தையா? இல்லை தவறுகளைச் சுட்டிக் காட்டினார் என்று கொலை செய்த கலாசாரத்தையா? பெண்களை சக்தியின் சொரூபமாக வணங்கி வழிபடுகிறோம் , பெண்மை மிக அதிகமாகப் போற்றப்படுவதும் நம் நாட்டில் தான். மிக அதிகமாக அவமானப் படுத்தப் படுவதும் நம் நாட்டில் தான். அந்த கலாசாரத்தைத் தெரிந்து கொள்ளவா வெளி நாட்டினர் வருகிறார்கள்?
உண்மையிலேயே என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் அந்தச் சிறுவன் செய்தது தான். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த மகன் என்பதால் அளவுக்கதிகமாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டிருக்கிறான். தினமும் நூறு ரூபாய் பாக்கெட் மணீயாகவும் பெற்றிருக்கிறான். அதீத செல்லமே அந்தப் பையனின் வாழ்க்கைக்கு விரோதியாகி விட்டது. அந்த வயதிலேயே பைக் , செல் ஃபோன் என்று எல்லா வசதிகளையும் பெற்றோரின் கேள்வி கேட்காத அன்போடு அநுபவித்து வந்த மனது , ஆசிரியையின் நடவடிக்கையால் எல்லாமே நிறுத்தப் பட்ட நேரத்தில் , மிகவும் ஆத்திரமுற்றிருக்கிறது. இவர்களால் தானே தனக்கு இந்த வேதனை என்று யோசித்து , அவரை முடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தப்புக் கணக்குப் போட்டு எல்லாம் முடிந்து போனது சில நொடிகளில்.இன்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தனி அறையில் முடங்கிக் கிடக்கும் அந்தச் சிறுவனுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும் இனி?
சிரிப்பும் , விளையாட்டுமாகக் கழிய வேண்டிய பள்ளிப்பருவம் ஏனிப்படிக் கொலைப் பருவமாக ஆனது? இதற்கு யாரைக் காரணம் சொல்வது? யாரைக் குற்றம் சாட்டுவது? ஹமீது என்ற அந்தச் சிறுவன் செய்தது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் தான். ஆனால் அந்தக் கொலைக்கு அவனைத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை? சிறு வயதிலிருந்தே தன்னுடைய கண்காணிப்பில் வைத்து வளர்க்க வேண்டிய பெற்றோர் , அவனை கண்டு கொள்ளாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு? அந்தச் சிறுவனுக்கு தேவையில்லாத சௌகரியங்களைப் பழக்கியது யார் தவறு? ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிக்காமல் இருந்து விட்டு திடீரென்று கடுமையாக நடந்து கொண்டது யார் குற்றம்?
நம் கல்வி முறைப்படி எந்தக் குழந்தையையும் எட்டாம் வகுப்பு வரை ஃபெயிலாக்கக் கூடாது. இதனால் எல்லா வகையான மாணவர்களும் ஒன்பதாம் வகுப்புக்கு வர நேரிடுகிறது. அடுத்த வருடமே பொதுத் தேர்வு என்ற பூதம் இவர்களை விழுங்கக் காத்திருக்கிறது. அதனால் ஆசிரியர்கள் கண்டிப்பும் கறாருமாக இருக்க வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு ரிசல்ட் வேண்டுமே. என்னுடைய வகுப்பில் எல்லோரும் பாஸ் என்ற மந்திர வார்த்தையைத்தான் எல்லா ஆசிரியர்களும் விரும்புகின்றனர். பள்ளி நிர்வாகமும் , பெற்றோர்களும் கூட அதையே தான் விரும்புகின்றனர். இந்த நிலையில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு விஷயம் , அந்தச் சிறுவனின் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது தான். ஒரு குறிப்பிட்ட திரைப் படத்தை முப்பது முறை பார்த்திருக்கிறான் அவன். கத்தி வாங்கியிருக்கிறான். நிச்சய்ம் கொலை செய்யும் மன நிலையில் இருக்கும் ஒரு சிறுவனின் நடத்தையில் கணிசமான மாற்றம் இருக்கும் இல்லையா? அதை ஏன் அவன் பெற்றோர் , உடன் பிறந்தவர் என்று யாரும் கவனிக்கவில்லை? அந்த நேரத்தில் கவனித்து அவனிடம் ஆறுதலாக நாலு வார்த்தைப் பேசியிருந்தால் இந்த விபரீதம் நேர்ந்திருக்காதே!
ஆரம்பத்தில் அதிக செல்லம் கொடுக்க வேண்டியது. செல்லம் கொடுப்பது என்றால் என்ன? பணத்தை வீசி எறிந்து தேவையோ தேவையில்லையோ குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது. செலவுக்கு நிறையக் காசு கொடுப்பது. இவை தான் செல்லம் கொடுப்பது என்றாகி விட்டது. படிப்பின் அருமையும் , பணத்தின் அருமையும் புரிய வேண்டிய வயதில் செல்ஃபோனோடு விளையாடி , கண்டவற்றையும் தெரிந்து கொள்கின்றனர். அதன் விளைவுகள் விபரீதமாகின்றன. வீட்டில் கவனிக்க வேண்டிய தாயோ டிவி சீரியல்களில் மூழ்கித் தன்னையே தொலைத்த பிறகு , குழந்தைகளின் ஞாபகம் எங்கிருந்து வரப் போகிறது அவர்களுக்கு?
கொலை நிகழ்ந்ததால் இந்தச் சம்பவம் நம் அனைவரின் கவனத்தையயும் கவர்ந்துள்ளது. ஆனால் சத்தம் இல்லாமல் வேறு சில விபரீதங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. ஈரோட்டில் ஒரு பள்ளியில் 14 வயது உள்ள மாணவர்கள் சிலர் குடித்து விட்டு வந்ததற்காக சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டும் ஒரு சிலர் பள்ளியை விட்டே நீக்கப் பட்டும் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்கமலிருக்க வேண்டும் என்று மாற்றாக ஆசிரியர் சங்கத் தலைவர் கிறிஸ்து தாஸ் அவர்கள் தலைமை ஆசிரியருக்கும் , மற்ற ஆசிரியர்களுக்கும் தண்டிக்கும் உரிமை வழங்கப் பட வேண்டும் என்று கோருகிறார்.
மாணவர்களின் நன்ண்டத்தைக்கு இந்த கோரிக்கை எவ்வளவு தூரம் உதவும்? வேண்டுமென்றே சில மாணவர்களைப் பழி வாங்க ஆசிரியர்கள் இந்தச் சலுகையை பயன் படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படியானால் இதற்கு மாற்று என்ன? சட்டமியற்றியோ , தண்டித்தோ மாணவர்களை நல்வழிப் படுத்துவது என்பது முடியாது. மாணவர்கள் முதலில் குழந்தைகள் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நன்னடத்தை வீட்டிலிருந்தே தான் தொடங்க வேண்டும். அதற்குத் தாயின் பங்கு கணிசமானது. அதனால் தான் பாரதியாரும் , மற்ற பெரியோர்களும் பெண்கல்வியை முன் வைத்துப் பேசினார்கள்.
படிப்பு என்று நான் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் சொல்லவில்லை. பொறுப்பான குடிமகனாக குடிமகளாக ஆக்க வேண்டிய கல்வி முறை தான் நம் நாட்டுக்கு அவசியம். இன்றைய மாண்வர்கள் தான் நாளைய பெற்றோர் , நாளைய அதிகாரிகள். நாளைய இந்தியாவை ஆளப் போகிறவர்கள். அவர்களைப் பொறுத்தே இந்தியாவின் வளர்ச்சி அமையும். அந்த மிக முக்கியப் பொறுப்பை மனதில் வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப் ப்ட வேண்டும். பள்ளிகள் பொறியாளர்களையும் , மருத்துவர்களையும் உருவாக்கும் தொழிற்சாலைகள் போல் இயங்குகின்றன. எங்கள் பள்ளியிலிருந்து இத்தனை பேர் பொறியியல் படிப்புக்குப் போயிருக்கிறார்கள் , இத்தனை பேர் மருத்துவப் படிப்பிற்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்குப் பெருமை. எத்தனை பேர் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று நல்ல குடிமகனாக விளங்குகிறார்கள் என்பதைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை , பெற்றோர்களுக்கும் அக்கறையில்லை. இதில் சினிமாவைக் குறை சொல்லி ஆகப் போவதென்ன?
இன்று நம் நாட்டில் எத்தனை பெற்றோர்களுக்கு அவ்வையின் ஆத்தி சூடியும் , கொன்றை வேந்தனும் தெரியும்? திருக்குறள் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் இன்று போதி தர்மரை குடிசை வாசிகளுக்குக் கூடத் தெரியும். காரணம் சினிமா. நல்ல விஷயங்களையும் சினிமா சொல்லத்தான் செய்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு வேளை ஆத்தி சூடி வேறு எந்த நாட்டிலாவது போற்றப் பட்டால் அதைப் பற்றிய சினிமா வந்தால் , நம் மக்களுக்கு ஒரு வேளை தெரிய வரலாம்.
மேற்சொன்ன வன்முறை சம்பவங்கள் இனியும் தடுக்கப்பட வேண்டுமானால் தனி மனித ஒழுக்கம் வேண்டும். அதைச் சட்டம் போட்டோ , தண்டித்தோ கொண்டு வர முடியாது. மக்களுக்கு படிப்பு மூலமாகவும் , பெற்றோர் வழியாகவுமே இத்தகைய ஒழுக்கம் வர முடியும். அதனால் நம் கல்வித்துறையைச் சேர்ந்த அறிஞர்கள் , கொஞ்சம் சீரியசாக இந்த விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதற்கேற்றப் பாடத் திட்டத்தை தயார் செய்ய வேண்டும். அப்படி தயார் செய்த பாடத்திட்டம் , எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப் படுகிறதா என்று கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். அதை விடுத்து நீயா ?நானா? போட்டிகளாலும் , பொறாமைகளாலும் இளம் தளிர்களின் வாழ்வை மேலும் பாழாக விடக் கூடாது. சுகமாக அமைய வேண்டிய பள்ளிப் பருவம் சுமையானதாக ஆகிவிடக் கூடாது.
Good Article. Parents should first have self discipline and then only the child will have
நம் எல்லோர் மனத்திலும் இருக்கும் கவலையின் பிரதிபலிப்பு.. இருப்பினும், இந்த மாணவனின் நடவடிக்கை ஒரு அதீத எல்லைக்கு போய்விட்டது. இது ஒரு விதிவிலக்காக இருக்கட்டும் என எண்ணுவோம்..
இளங்கோ சொல்வதில் பாயிண்ட் இருக்கிறது. திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது, சட்டரீதியாக, இப்போது.
ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிக்காமல் இருந்து விட்டு திடீரென்று கடுமையாக நடந்து கொண்டது யார் குற்றம்? என்ற கேள்வி நியாயமானதே. கல்வியை மதிக்கும் செல்வந்தர் வீடுகளில், இப்படி செல்லம் கொடுப்பதில்லை.
முதலில் பெற்றோர்களை கற்றுக்கொள்ள வைக்கவேண்டும். இந்த கேஸ் அரிதானது. ஆனால், எல்லா விஷயங்களையும் மீள்பார்வை செய்ய உரிய தருணம்.