முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஒபாமாவின் கொள்கைகளை ரசித்து, அவரைப் பாராட்டுபவர்களில் நானும் ஒருத்தி. முதன் முதலில் அவர் தேர்தல் களத்தில் குதித்தபோது அவரைப் பற்றி அவ்வளவு சரியாகத் தெரியாதலால் அவரை அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போகப் போக அவரது தேர்தல் பிரச்சாரங்களைத் தெரிந்துகொண்டபோது அவர் மேல் மதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செய்ய முயன்றதையும் ஜனநாயகத்தைப் பரப்ப முயல்வதாகக் கூறிக்கொண்டு தன்னுடைய நட்பு நாடுகளில் சர்வாதிகாரம் இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் தான் சிறுபிள்ளையாக இருந்தபோதே அறிந்ததாகவும் அந்தப் போக்கை மாற்ற அவர் விரும்பியதையும் அறிந்தபோது இவர் ஜெயித்து, ஜனாதிபதி பதவியை ஏற்று, அமெரிக்காவைத் திசை திருப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. போகப் போக இவர்தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற வெறியும் ஏற்பட்டது. அவர் வெற்றி பெற்றபோது ஒரு கருப்பர் அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்பதை விட அமெரிக்காவின் குறைகளை ஓரளவு உணர்ந்திருப்பவர் அமெரிக்காவின் தலைமைப் பதவியை ஏற்றிருக்கிறார் என்பதே என்னைப் பொறுத்த வரை மிகப் பெரிய சந்தோஷமான செய்தியாக இருந்தது.

“இவர் பதவி ஏற்றிருக்கிறார், இனி அமெரிக்கா தேவையில்லாமல் எந்த நாட்டின் மீதும் படையெடுக்காது, புஷ் தொடுத்திருந்த ஈராக், ஆப்கானிஸ்தான் யுத்தங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்; உள்நாட்டில் ஏழை பணக்காரர்களுக்கிடையே இருக்கும் பெரிய இடைவெளியை குறைக்க முடியாவிட்டாலும், இன்னும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது. (பின்னால் அவர் ஒரு பள்ளியில் உரையாற்றிய பிறகு மாணவன் ஒருவன் ‘இறந்தவர்களானாலும் சரி உயிரோடு இருப்பவர்களானாலும் சரி, யாரோடு நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு “காந்திஜியோடு உணவு உண்பதைத்தான் நான் விரும்புகிறேன்” என்று பதில் அளித்தபோது என் மதிப்பின் உச்சிக்கே அவர் போய்விட்டார்.)

Barack_Obamaமுதலிலிருந்தே ஒபாமா, எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்காரர்களோடு சமாதானமாகப் போவதையே விரும்பினார். குடியரசுக் கட்சியின் அரசியல் கொள்கைகள்தான் சிறந்தவை என்று நிரூபிப்பதை விட மக்களின் நலன்தான் முக்கியம் என்று நினைத்து அவர்களோடு ஒத்துப்போக விரும்பினார். அமெரிக்காவில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டு, இளைஞர்களைத் தன் பக்கம் இழுத்த இவர், சென்ற நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் துவங்கிய காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.  இவர் விடுத்த வேண்டுகோள் சராசரி அமெரிக்கர்களின் காதுகளில் விழுவதற்குப் பதில், ‘அரசின் செலவைக் குறைப்போம், அரசு உங்கள் வாழ்க்கையில் தலையிடாமல் பார்த்துக்கொள்வோம், உங்கள் வரிகளைக் குறைப்போம்’ என்று குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் உண்மையைத் திரித்துக் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, நிறைய குடியரசுக் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

செனட்டிலும் மக்களவையிலும் புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் பதவியேற்கு முன்பாகவே, முடியவிருந்த வேலையற்றோர்க்கான உதவித் தொகையை, குடியசுக் கட்சி அங்கத்தினர்கள் புஷ் பணக்காரகளுக்கு 2001, 2003 ஆகிய ஆண்டுகளில் கொடுத்த வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு,  நீட்டித்துக்கொண்டார். அப்போதே மனத்தில் அவர் செய்யும் காரியம் பற்றிக் கொஞ்சம் நெருடல் ஏற்பட்டாலும், ‘பணக்காரர்கள் என்னவாவது செய்து தொலையட்டும், ஏழைகள் வயிற்றில் அடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் தன்னுடைய முக்கிய நோக்கம்’ என்று ஒபாமா நினைக்கிறார் என்று சமாதனம் செய்துகொண்டேன். விட்டுக் கொடுப்பதற்கும் ஒரு அளவில்லையா என்று ஆயாசப்பட்டாலும், இதைத் தவிர வேலையற்றோர்களுக்கான உதவித் தொகையை நீட்டிக்க அவருக்கு வேறு வழி இல்லை என்று சமாதானமும் செய்துகொண்டேன்.

மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருக்கும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் இப்போதே ஒபாமா மிகவும் பாடுபட்டுக் கொண்டுவந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவச் சீரமைப்புச் சட்டத்தையே ஒழிக்க எல்ல முயற்சிகளும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கென்யாவின் பழங்குடி மக்களின் மரபில் வந்திருக்கும் ஒபாமா, எல்லோரும் பகிர்ந்துண்ண வேண்டும் என்ற பழங்குடி மக்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாகக் கூறி ஒபாமாவின் சோஷலிஸக் கொள்கைகளைக் கேலி செய்கிறார்கள். ஒபாமா அமெரிக்கர் என்பதற்கு அவருடைய பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று கூறுவோரும் உளர். ஒபாமா ஜனாதிபதிகளிலேயே ஊழல் மிகுந்த ஜனாதிபதி என்று கூறிய குடியரசுக் கட்சி அங்கத்தினர் ஒருவர், பின்னால் சமாளித்துக்கொண்டு வங்கிகளை மீட்க அவர் அளித்த ஒரு ட்ரில்லியன் டாலர் பணத்தால் நிறைய ஊழல்கள் ஏற்பட வாய்ப்புகள் நடந்தன என்றார்.

இப்படித் தன்னைப் பற்றி விமர்சித்தவர்களைப் பற்றி ஒன்றும் கவலைப்படாமல் இருந்தார் ஒபாமா. மக்களுக்கு நன்மை செய்வதிலேயே அவர் கவனமெல்லாம் இருந்தது. ஆனால், இப்போது ஒரு வங்கியிலும் ஒரு மருந்துக் கம்பெனியிலும் தலைமைப் பொறுப்பாளராக இருந்த வில்லியம் டேலி என்பவரை தன்னுடைய தலைமைச் செயலாளராக நியமித்திருப்பது ஒபாமாவை இதுவரை ஆதரித்து வந்த பல இடதுசாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏழை மக்களின் வாழ்க்கையை ஓரளவாவது உயர்த்த வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதாக அல்லவா இருக்கிறது என்று பலர் வியக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வரிச் சலுகையை நீட்டித்தும் வில்லியம் டேலியை தன்னுடைய தலைமைச் செயலாளராக நியமித்தும் ஒபாமா இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவியைப் பெற ஆயத்தங்கள் செய்து வருகிறார் என்றும் வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் பத்திரிகையில் பத்தி எழுதும் ஒருவர் ஆதங்கப்படுகிறார்.

ஒபாமா மீது மேலே கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு அதீதமானவை என்றாலும், இப்போது பணக்காரர்களுக்குச் சலுகை வழங்கும் டேலி போன்றவர்களை ஏன் இப்போது தன்னுடைய தலைமைச் செயலாளராக நியமித்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. இரண்டாவது தடவை ஜனாதிபதியாக வருவதற்குத்தான் அவர் இந்த ஏற்பாடுகள் செய்கிறார் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தனக்கு இரண்டாவது முறை ஜனாதிபதி பதவி கிடைக்கவில்லை என்றால், இருக்கும் இரண்டு வருடங்களில் அமெரிக்க மக்களுக்காக ஏதாவது செய்துவிட வேண்டும், அதற்கு மேல் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைமைச் செயலாளராக நியமித்து, மக்களுக்கு வேலைகள் கொடுக்கும் வணிக நிறுவனங்களின் தலைவர்களையும் பெரும் பணக்காரர்களையும் தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை. அமெரிக்க மக்களின் நலன்களை முதன்மையாக வைத்திருக்கும் ஒபாமாவிற்கு வேறு வழி எதுவும் இல்லையா?

================================

ஒபாமா படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *