காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சிலருக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். 2-ல் கேது. பொறுப்புக்களை வகிப்பவர்கள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களை பத்திரமாக வைக்கவும். 5-ல் செவ்வாய். இந்த ராசிக் காரர்கள், வயிறு சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க, உணவு விஷயத்தில் கட்டுப்பாடாய் இருப்பது நல்லது 7-ல் சனி. மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முன்னேற்றம் கூடும். 8-ல் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்கள், அதிக விளம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், வீண் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியி ருக்கும் 11-ல் சூரியன். பணியில் இருப்பவர்களுக்கு, அலுவலத் தேர்வுகளில் வெற்றி உறுதியாக கிடைக்கும். 12-ல் புதன், வியாபாரிகள், வங்கிக் கடன் பெறுதல், கடன் தவணை ஆகியவற்றில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகும்.1-ல் சுக்ரன். கலைஞர்கள் வேலை செய்யும் இடத்தில், கலகலகப்பும் பரபரப்பும் நிறைந்திருக்கும்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம் பெண்கள் தங்கள் சாமர்த்தியமான பேச்சால், குடும்பத்தில் நிலவும் சிக்கல்களைச் சீர் செய்து விடுவீர்கள். நட்புறவுகளால் சந்தோஷமான சந்தர்ப்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனினும்,  அலுவலக வேலைகளில் தவறு ஏற்படா வண்ணம் கவனமாய் இருப்பது நல்லது.   

ரிஷபம்: 6-ல் சனி. இந்த ராசிக்காரர்கள், சுற்றம் மற்றும் நட்பால் போற்றப்படும் வாரமிது! 10-ல் சூரியன். அனுபவமுள்ள வேலையாட்கள் பணியில் அமர்வதால், வியாபாரத்தில் விறுவிறுப்பு அதிகரிக்கும்.11- ல் புதன்.  எழுத்தாளார்களின் புதிய படைப்பு பிறரால் பாராட்டப்படும் .12-ல் சுக்ரன். கலைஞர்களுக்குத் தொல்லை தந்த மனிதர்கள் விலகுவார்கள் . 1-ல் கேது. முதியவர்கள், சீதோஷ்ண நிலைக்குத் தக்கவாறு உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் சீராக அமையும். 4-ல் இருக்கும் செவ்வாயால், கட்டி, காயம் போன்றவைகளால், விளையாட்டு வீரர்கள் சில பின்னடைவுகளை எதிர்கொள்வர். 7-ல் ராகு. பணியில் இருப்பவர்கள், உத்தியோகம் தொடர்பாக எழும் உபத்திரவங்களை இந்த வாரம், உறுதியுடன் சமாளிக்க வேண்டியிருக்கும். 2-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள், தகுதிக்கு மீறிய கடனை மறுத்து, வரவுக்குத் தகுந்த செலவு செய்தால், பொருளாதாரம் சீராகச் செல்லும்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம், பெண்கள், விருந்தினரின் வருகை, சுப நிகழ்ச்சிகள், விருந்து என்று திக்கு முக்காடிப் போவதோடு, பணமும், தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருக்கும்! அத்துடன், பிள்ளைகள் அதிக அளவில், கேளிக்கை விவகாரங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொண்டால், அவர்களின் கவனம் சிதறாமலிருக்கும்.

மிதுனம்: மாணவர்கள் தங்கள் முயற்சியால், முன்பு கோட்டை விட்ட முதலிடத்தை மீண்டும் பிடிக்க, 3-ல் இருக்கும் செவ்வாய் பக்க பலமாய் இருப்பார். 6-ல் ராகு இருப்பதால், வரும் பணத்தை அசையாச் சொத்துக்களில் செய்யும் முதலீடு லாபகரமாய் இருக்கும். 11-ல் குரு, சுக்ரன். கடன் தொல்லைகள் குறைவதால், இந்த ராசிக்காரர்கள், இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பீர்கள். 5-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள், புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு அதிகம் மயங்காமல் இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம். 9-ல் சூரியன், சுய தொழில் புரிபவர்கள், முழு ஆர்வத்துடன் செய்தாலும், எதிர் பார்த்த இடங்களிலிருந்து பண வரவு வருவதில் சற்றுத் தொய்வு இருக்கும். 10-லுள்ள புதன்., வாகனம் வாங்கும் யோகத்துடன் புதிய ஒப்பந்தங்களையும் லாபகரமாக ஆக்கும் சூழலை உருவாக்குவதால், வியாபாரிகள் புதுத் தெம்புடன் வலம் வருவார்கள். 12-ல் கேது. பணி புரிபவர்கள் நல்ல பெயரைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.

இ(ந)ல்லறம்: பெண்கள் பேச்சைக் குறைத்துச் செயலில் கவனத்தைத் திருப்பினால், விரும்பிய நல்ல பெயர் கிடைப்பது உறுதி. விழா விருந்துகளுக்குச் செல்லும் போது, தேவையில்லாமல் உறவுகளிடம் கடன் வாங்கிச் செலவு செய்வதையும், வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் குறைப்பது அவசியம்.

கடகம்: 11ல் கேது. பொது வாழ்வில் இருப்பவர்களின் தோற்றம் கம்பீரத்தையும், மதிப்பையும் பெறும் விதமாக அமையும். 10-ல் சுக்ரன். இந்த வாரம் கலைஞர்கள் செலவுகளில் கவனமாக இருப்பது அவசியம். 8-ல் சூரியன். பொறுப்பில் இருப்பவர்கள், பிறரிடம் அதிகார மனப்பான்மையோடு பழகுவதைத் தவிர்க்கவும். 9-ல் புதன். சுய தொழில் புரிபவர்கள், வரவையும், செலவயும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட்டால், பொருளாதாரம் சறுக்காமல் இருப்பதோடு மன உளைச்சலும் இருக்காது. 2-ல் செவ்வாய். மாணவர்கள் வீண் வம்புகளை மெளனத்தால் வெல்வது புத்திசாலித்தனமாகும். 4-ல் சனி. பங்குதாரர்களின் செயல்பாடு, கவலையை உண்டாக்கும் விதமாக இருக்கும். எனவே வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். 5-ல் ராகு. பணியில் இருப்பவர்கள் அதிக ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக செயல்பட்டால், அடுத்தவரின் நன்மதிப்பைப் பெறுவது எளிதாகும். 10-ல் குரு. பணம் புழங்கும் இடங்களில் இருப்பவர்கள் அவ்வப்போது வரவு செலவுகளைச் சரி பார்த்துக் கொண்டால், வீண் சந்தேகம் வளராமலிருக்கும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் குடும்பத்தில் போட்டி மனப்பான்மை, கருத்து பேதம் ஆகியவை வளர இடம் கொடாதீர்கள். எல்லாத் தரப்பிலிருந்தும் வரும் நல்ல செய்திகளால் உங்கள் உற்சாகம் கூடும். பிள்ளைகளுக்கு அதிகச் செல்லம் கொடுக்காமல், மிதமாக நடப்பது நல்லது.

சிம்மம்:3-ல் சனி. ஏளனம் செய்தவர்கள் எட்டி நிற்கும் அளவிற்குச் சுய தொழில் புரிபவர்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். 9-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிராளியின் பலம்,பலவீனம் இரண்டையும் மனதில் கொண்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். 7-ல் சூரியன், பணியில் இருப்பவர்கள், கெடுபிடி காட்டும் அதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமலிருக்க முடியும். 8-ல் புதன். கலை நயம் மிகுந்த பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். 9-ல் சுக்ரன். வியாபாரிகளுக்கு வெளி நாட்டு ஒப்பந்தங்கள் மூலம் வரும் லாபம் திருப்திகரமாய் இருக்கும். 1-ல் செவ்வாய்.  பணியில் இருப்பவர்கள் அதிக நேரம் வெளியில் சுற்றுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. 4-ல் ராகு. மாணவர்கள் சிறிய விஷயங்களுக்குச் சட்டென்று கோபப்படுவதைக் குறைத்துக் கொள்ளுதல் அவசியம். 10-ல் கேது. பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம், பணியில் இருக்கும் பெண்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்குப் பணிகள் வந்து கொண்டே இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பித்த சம்பந்தமான உபாதைகளை உடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் உங்களுக்கு அனுசரணையாக இருக்கும்.

கன்னி: 6-ல்சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உறவு கொண்டாடி வருவார் கள். 3-ல் ராகு.சுய தொழில் புரிபவர்களுக்குக் கதவைத் தட்டும் வாய்ப்புகளை வைத்து வளமான வாழ்க்கை அமையும் . 2-ல் சனி. அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களுக்குக் கண் சம்பந்தமான உபாதைகள் தலை காட்டும். 7-ல் புதன். கணக்கு வழக்கு துறைகளில் உள்ளவர்கள், சில சங்கடங்களைச் சமாளிக்க நேரிடும். 8-ல் சுக்ரன். கலைஞர்கள், மேற் கொள்ளும் வெளியூர் பயணங்கள் இனிமையான நினைவுகளை இணைக்கும் பாலமாக அமையும். 8-ல் குரு. வியாபாரிகள் குடும்ப அமைதிக்குக் குந்தகம் இன்றி தங்கள் பணிகளைச் சீரமைத்துக் கொள்வது அவசியம். 9-ல் கேது. பணியில் இருப்பவர்களுக்குத் தளவாடங்களின் கணக்கு வழக்கில் சிறு தொல்லைகள் உண்டாகும். 12-ல் செவ்வாய். இந்த ராசிக் காரர்களுக்குப் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் நிதானம் தேவை.

இ(ந)ல்லறம்:பெண்கள் மறைமுகத் தொல்லைகளை, மதியூகத்தால் சமாளிக்க வேண்டி இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் ,தவறான பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளிவிட்டால்,சஞ்சலங்கள் அருகே வராது. கவனமாக வேலை செய்தால், பணியிடத்தில் இணக்கமான சூழல் உருவாகும்.

துலாம்: 7- ல் உள்ள குரு. வியாபாரிகளுக்கு,வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை உண்டாக்குவார். 11-ல் செவ்வாய். குழந்தைகளின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் விலகி கல்விக்கான உதவிகளைப் பெறுவார்கள் 1-ல் சனி. சில தடைகளும், தாமதங்களும் சுய தொழில் புரிபவர்களின் மனதைச் சோர்வடையச் செய்யும். 2-ல் ராகு. இந்த ராசிக்காரர்கள், எல்லாப் பணிகளிலும் தங்கள் தனிப்பட்ட கவனமும், அக்கறையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது  அவசியம். 5-ல் சூரியன். புதன். பொது வாழ்வில் உள்ளவர்கள் பாடுபட்டுத் தேடிய நல்ல பெயரைப் பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது. 7-ல் சுக்ரன். கலைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொண்டால்தான் எதிர்காலம் வளமாக இருக்கும். என்பதை உணர்ந்து செயல்படவும். 8-ல் கேது. பணியில் உள்ளவர்கள் புதிய இடங்களிலும், புதிய மனிதர்களிடமும் கட்டுப்பாடாய் நடந்து கொண்டால் எந்தத் தொந்தரவும் இராது.

இ(ந)ல்லறம்: இந்த வாரம், பெண்களுக்குப் பல நாட்களாகத் தடைப்பட்டிருந்த விவகாரங்கள் எல்லாம் சுமூகமாக முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, சளி, காய்ச்சல் ஆகியவைகளின் பாதிப்பில்லாமலிருக்க, அவர்கள் சுகாதாரமான குடி நீரை பயன்படுத்துகிறார்களா என்பதை, அவ்வப்போது கவனித்தல் நலம்.

விருச்சிகம்: 4-ல் சூரியன் பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்குக் கொடுப்பதற்கு முன் நிலைமையை ஆராய்ந்து செயல்பட்டால், யாருக்கும் எந்த மன வருத்தமும் நேராது. 5-ல் புதன். பொறுப்பில் இருப்பவர்கள் பிறருக்கு, உதவி செய்கிறேன் என்று உபத்திரவங்களை விலை கொடுத்து வாங்காமலிருப்பது புத்திசாலித்தனம். 1-ல் ராகு. இந்த ராசிக் காரர்கள், எதிர்பார்த்தபடிவெளியிட சகாயங்கள் இராது ஆகவே எதிலும், கருத்தாக இருப்பது அவசியம். 6-ல் குரு, சுக்ரன். கலைஞர்கள் தொழில் ரீதியாகச் சில சில்லறைப் பிரசனைகளைச் சமாளிக்க நேரிடும். 7-ல் கேது. மாணவர்கள் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு நடந்தால், தேர்வு சமயங்களில் பாடங்கள் சுமையாய் தோன்றாது. 10-ல் செவ்வாய். சுய தொழில் புரிபவர்கள் பண விஷயங்களில் பக்குவமாகச் செயல்படவும். 12-ல் சனி. வெளிடங்களில்  தங்கியிருப்பவர்கள், கவனத்தைத் திசை திருப்பும் இடங்களுக்குப் போவதைத் தவிர்த்து விடவும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் அனுசரித்து நடந்து கொண்டால், கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்படாமல் இருக்கும். அத்துடன், இந்த வாரம் பிள்ளைகளின் வாகனங்கள் மற்றும் அவைகளின் பராமரிப்பிற்கெனக் கணிசமாகப் பணம் செலவு செய்யும் நிலை இருக்கும்.

தனுசு: 5-ல் குரு வலம் வருவது போல், மாணவர்களும் கலை விழா, போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்று வலம் வருவார்கள். 6-ல் கேது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு வியாபாரம் விருத்தியாகும். 11- ல் சனி.தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 3-ல் சூரியன். 4—ல் புதன். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, அரசு தொடர்பான காரியங்களில் இருந்த தேக்க நிலை மாறும். 5-ல் சுக்ரன். கலைஞர்கள் நூதனமான பொருட்களை வாங்கி மகிழ்வர்.9-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள் கேளிக்கைகளில் மனத்தை அலைபாய விடாமல் கட்டுப்பாடுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். 12-ல் ராகு. பணியில் இருப்பவர்கள், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி வைத்தால், கை மாற்றாய்ப் பிறரிடம் பணம் பெறும் அவசியமிராது.

இ(ந)ல்லறம் : வீண் அபவாதம், அலைச்சல் ஆகியவை தலை காட்டாமலிருக்க, பெண்கள், தேவையற்ற, வெளி வட்டாரப் பழக்கங்களைக் குறைத்துக் கொள்ளவும் . வயதான பெண்களுக்குத் தான தர்மம் செய்வது, ஆலயத் திருப்பணியில் பங்கேற்பது போன்ற நற்செயல்கள் செய்யும் பேறு கிட்டும்.

மகரம்: 11-ல் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும் . 4-ல் உள்ள சுக்ரன். நல்ல நண்பர்களை கலைஞர்கள் வசம் கொண்டு வந்து குவிப்பார்.  2-ல் சூரியன்.சுய தொழில் புரிபவர்கள் தகுதிக்கு மீறிய செலவுகளையும், ஆசைகளையும் குறைப்பது அவசியம். 3-ல் புதன். மாணவர்கள், சிறிய சச்சரவுகளுக்காக மனம் வருந்தும் சூழல் உருவாவதோடு நட்பு வட்டத்தில் கருத்து வேறுபாடும் தோன்றி மறையும். 4-ல் குரு, திறமையை அதிகரித்துக் கொள்ளும் வியாபாரிகளுக்கு மட்டுமே, லாபம் என்பது குறையாமலிருக்கும். 5-ல் கேது. வீடு, மனை நிலம் வாங்குகையில், பத்திரத்தைச் சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. 8-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள், சிக்கலான நேரங்களில், சூழலுக்கேற்றவாறு சிந்தித்துச் செயலாற்றினால் ,உங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாகாது. 10-ல் சனி. பணியில் இருப்பவர்கள், நினைத்த காரியம் முடியும் வரை, கவனமாகச் செயல்பட வேண்டும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் , சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள்.குடும்ப  உறவுகள் கசக்காமலிருக்கும். அலுவலக அளவில் எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போவதால், உடன் பணி புரிபவர்களின் போக்கில் எரிச்சலும்,படபடப்பும் வந்து போகும்.

கும்பம்: கலைஞர்கள், குறுக்கீடுகளை முறியடித்து, ஒப்பந்தங்களை உங்கள் வசம் ஆக்கிக் கொள்ள 3-ம் இட சுக்ரன், துணை இருப்பார். 1-ல் சூரியன். அவ்வப்போது, வெறுப்பும், சலிப்பும் வந்து வந்து நீங்கும் வாய்ப்பிருப்பதால், பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் இருப்பது புத்திசாலித்தனம். 2-ல் புதன். சுய தொழில் புரிபவர்கள், இனிமையான பேச்சை உங்களின் மூலதனமாக வைத்துக் கொண்டால் தான், வரும் லாபம் அதிகமாகும். 3-ல் குரு. ,உங்களின் படபடப்பான பேச்சு புதிய தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிலிருப்பதால், இந்த ராசிக் காரர்கள், எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது. 4-ல் கேது.இந்த வாரம் வியாபாரிகள் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். 7-ல் செவ்வாய். பணியில் உள்ளவர்கள், எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், நிலைமை சாதகமாய் மாறி விடும். 9-ல் சனி. பொது வாழ்வில் உள்ளவர்கள், உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வாருங்கள், உங்களின் அலுவல்கள் யாவும் சீராக நடைபெறும் . 10-ல் ராகு. மாணவர்கள் செலவு வகைகளைச் சுருக்கி வைத்தால், கடன் தொல்லை ஏதும் இராது.

இ(ந)ல்லறம்: கோணலாய்க் கிடந்த உறவுகளைச் சீராக்கி மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலவச் செய்வதில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் சரியாக உள்ளதா என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கைப்பாதையை வளமானதாக ஆக்கலாம்.

மீனம்: 2-ல் சுக்ரன். குரு. கணக்கு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் நீங்குவதால், வருமான வரி கட்டுபவர்கள் விடுபட்ட சலுகைகளைப் பெற்று மகிழ்வார்கள். 3-ல் கேது. சிறு தொழில் புரிபவர்கள் கடனாகப் பணம் வாங்கிச் செலவழித்த நிலை மாறி விடும். 6-ல் செவ்வாய். பணியில் இருப்பவர்களின் திறமைக்கேற்ப, புதிய பதவிகள் வந்து சேரும். 8-ல் சனி. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு அவ்வப்போது தோன்றி மறையும் வாய்ப்பிருப்பதால்,வியாபாரிகள்  முக்கியமான விஷயங்களில் தக்கபடி ஆலோசித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனம். 9-ல் ராகு. கடினமான வேலைகளைப் பிறர் உங்கள் தலையில் கட்டலாம். எனவே மாணவர்கள் கவனமாகச் செயல்படவும். 2-ல் சூரியன். உயர் பதவியில் இருபவர்கள் பணியாளர்களிடம் தேவையற்ற கெடுபிடி காட்டுவதைத் தவிர்ப்பது நலம். 1-ல் புதன். இந்த ராசிக் காரர்கள், அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம் புதிதாக வேலையில் சேர்ந்துள்ள பெண்கள், சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்னைகளைத் திறம்படச் சமாளிக்க நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் புதிய மருந்துகளை உண்ணும் முன் மருத்துவ ஆலோசனை பெற்றுச் செயல் படுவது நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *