சீன வரிவடிவில் தமிழ்த் திருமுறைகள்
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
தமிழ்ப் புத்தாண்டு (தி. பி. 2042) வாழ்த்துகள். தைப் பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்துகளுடன் ஒரு நல்ல செய்தியையும் உங்களுடன் பகிர்கிறேன்.
தமிழ் மொழிக்கும் சீன மொழிக்கும் உள்ள தொடர்பு 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. (பார்க்க Foreign Notices of South India by K. A. Neelakanta Sastri சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு. tamilnool@tamilnool.com என்ற முகவரிக்கு சசிரேகாவுக்கு எழுதினால் நூலின் படி பெறலாம்.)
* சீன அரசர்களான ஆன் அரசர் காலத்தில் (தோராயமாக, தி. மு. 180) காஞ்சிபுரத்துக்குச் சீனத் தூதர், வணிகர், அறிஞர் போன்ற பலர் வந்து சென்றதைப் பான்கூ என்ற சீனக் கவிஞர் தோராயமாக தி. பி. 60இல் எழுதியுள்ளார்.
* தோராயமாக, தி. பி. 360ஆம் ஆண்டு பாகியன் தட்சிண தேசத்துக்கு வந்தார். அங்கிருந்து இலங்கைக்குப் பயணமானார். காசியப்ப புத்தருக்கு 500 அறைகள் கொண்ட நினைவகம் இருந்ததைப் பதிவு செய்தார்.
* தோராயமாக, தி. பி. 470இல் தமிழக அரசுத் தூதர்கள் சீனத்தின் வேய் அரசர்களிடம் சென்றனர்.
* தோராயமாக, தி. பி. 500இல் காஞ்சிபுரத்தில் இளவரசாயிருந்து புத்தத் துறவியான தமிழர், போதிதருமர், சீனா சென்றார். மூச்சுப் பயிற்சி, மன ஒடுக்கம், தற்காப்புக் கலையான களரி,என்பனவற்றைச் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்பயிற்சி நெறியே சென் புத்தம் எனப் பிற்காலத்தில் வழங்கி வருகிறது.
* தோராயமாக, தி. பி. 540இல்மகேந்திர பல்லவன் அரசவைக்கு வந்தவர் யுவான் சுவாங்கு. காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார்.
* தோராயமாக, தி. பி. 628இல் சீனக் கப்பலில் இசிங்கு வந்தார், நாகப்பட்டினத்தில் தங்கியிருதார்.
* தோராயமாக, தி. பி. 680இல் சீனருக்காகக் காஞ்சி மன்னன் நரசிம்மன், விகாரம் ஒன்றைத் தமிழகத்தில் கட்டிக்கொடுத்தான்.
* தோராயமாக, தி. பி. 960இல் நாகப்பட்டினத்தில் சீனருக்காக விகாரம் ஒன்றை, இராசராசன் கட்டுவித்தான்.
* தோராயமாக, தி. பி. 1185இல் சோழ நாட்டுக்கு வந்த சவு சுக்கா என்ற சீனர், சோழ நாட்டுக்கும் சீனத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியான வணிகம் நடைபெற்றுவந்ததைக் கூறுகிறார்.
* தோராயமாக, தி.பி. 1241இல் சீனாவின் கான் அரசர் காலத்தில் குவாங்சூ நகரில் தமிழர் கட்டிய சிவன்கோயில் திருக்கானேச்சரம். இன்றும் அக்கோயிலின் எச்சங்கள், தமிழ்க் கல்வெட்டுடன் உள்ளன. http://www.visvacomplex.com/Tamil_Inscription_Of_China.html
பன்னிரு திருமுறைகளைச் சீன மொழியில் வாசிக்கக் கூடியதான ஒலிபெயர்ப்பை
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1001&padhi=001 மின்னம்பல தளத்தில் சேர்த்துள்ளோம்.
தைப் பொங்கல் நாள் முதலாகத் தமிழ் மொழி – சீன மொழி ஒலிபெயர்ப்பை எவரும் படிக்கலாம். 18,266 திருமுறைப் பாடல்களையும் சீனம் பின்யின் (பார்க்க http://www.pinyin.info) வரிவடிவத்தில் படிக்கலாம்.
1. அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் புனல் க. முருகையன்
2. சிங்கப்பூர், நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசியக் கல்விக்கழகம், பேராசிரியர் முனைவர் கோ யெங்கு செங்கு
3. சிங்கப்பூர், நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசியக் கல்விக்கழகம், உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. சிவகுமாரன்
4. சென்னைக் கணினி வல்லுநர் திரு. வினோத்ராசன்
ஆகிய நால்வருமாக இநதப் பணியை இந்த நிலைக்குக் கொண்டு வந்து, தமிழர் – சீனர் உறவுகளை மேம்படுத்தி உள்ளனர்.
சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் சீனரான பலர், திருமுறைகளில் பயிற்சி பெற்றுள்ளனர். ஓதுவார்களாகவும் உளர். இவர்களைப் பற்றிய விவரங்களை <Subra.N@fmcti.com>, ppalania@my.hellmann.net>, <aarthimn@gmail.com> ஆகியோரிடம் பெறலாம்.
அத்தகையோர்களுக்கும் திருமுறைகளை ஓத விரும்பும் 100 கோடிக்கும் கூடுதலாக உலகெங்கும் பரந்து வாழும் சீனப் பெருமக்களுக்கும் இந்த ஒலிபெயர்ப்புகள் உதவும். This
அசைவில் செழுந் தமிழ் வழக்கை அயல் வழக்கினர்க்குக் கொடுக்கும் இந்தப் பணியைக் கடந்த 12 மாதங்களாக இணைத்து வந்தேன் என்ற உவப்பான செய்தியை உங்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு (2042) மற்றும் தைப்பொங்கல் திருநாளில் தருவதில் மகிழ்கிறேன். I am
நன்றி, வணக்கம்.