ஔவை நடராசனுக்கு பத்மஸ்ரீ விருது

3

அண்ணாகண்ணன்

சிறந்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஔவை நடராசன் (75), பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

Avvai_Natarajan

தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பணியை போற்றும் வகையில், 1984இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக அவரை நியமித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் தமிழக அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதற்குப் பிறகும் யாரும் இவ்வாறு அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில்லை.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர். அகிலமெங்கும் ஆயிரக்கணக்கான மேடைகளில் தமிழ் மணக்கச் செய்து வருபவர். சிறந்த சிந்தனையாளர். கூர்ந்த ஆராய்ச்சியாளர். பல நூல்களின் ஆசிரியர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் முக்கிய பொறுப்பாளர். தமிழின் வளர்ச்சிக்கும் தமிழரின் மேம்பாட்டுக்கும் தளராது உழைக்கும் பண்பாளர். தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றின் முன்னணிக் கருத்துருவாளர்.

ஒவ்வொரு விவாதத்திலும் புதிய கோணத்தில் சிந்தனை வெளிச்சம் பாய்ச்சுவதில் ஔவை நடராசன் முத்திரை பதித்து வருகிறார். கூர்மையான விமரிசனங்களைத் துணிவுடன் எடுத்துவைக்கிறார். தமிழுக்குத் தொண்டாற்றும் பலரையும் வாழ்த்தி, ஊக்குவிக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட, பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர். இவர் மகன் முனைவர் அருள் நடராசன், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ஔவை நடராசன் உள்பட, 128 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பெற்றுள்ளன. இவர்கள், கலை, இலக்கியம், திரைப்படம், வர்த்தகம், தொழில் விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் 31 பேர்கள், பெண்கள்.

திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி, பிரபல பொருளாதார நிபுணர் விஜய் கேல்கர், முன்னாள் தேசிய பாதுகாப்புச் செயலர் பிரஜேஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர்கள், பத்ம விபூஷன் விருதுகளைப் பெறுகின்றனர்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திரைப்பட நடிகர் சஷி கபூர், வஹிதா ரஹ்மான் உள்ளிட்ட 31 பேர்கள், பத்ம பூஷன் விருதுகளைப் பெறுகின்றனர்.

நடிகைகள் தபு, காஜோல், கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், பளு தூக்கும் வீராங்கனை குஞ்சராணி தேவி உள்ளிட்ட 84 பேர், பத்மஸ்ரீ விருதுகளைப் பெறுகின்றனர்.

ஔவை நடராசன் உள்பட, பத்ம விருதுகளைப் பெறும் அனைவரையும் வல்லமை வாழ்த்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஔவை நடராசனுக்கு பத்மஸ்ரீ விருது

  1. Manam Thullugirathu. Thamizh Allugirathu. Ilakkiyam Sollugirathu. Pazhamai Vellugirathu. Pudhumai KoLLugirathu.
    Avvaikku Adiyavanin Anbu Vanakkangal.
    Vijayakrishnan DD News & Lyric Writer Tamil Movies.
    9600644446

  2. ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் புகழ் ஓங்குக! பல்லோர் உள்ளத்திலும் புத்தூக்க உணர்வுகள் பூக்கட்டும். தமிழறிஞர்களுக்குக் கிடைக்கும் புகழ் நம் உள்ளத்துக்குள் தேன் அல்லவா! மகிழ்ச்சி! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *