கனம் கோர்ட்டார் அவர்களே! – 9

 

இன்னம்பூரான்

‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று அமைச்சரை வினவிய அரசனை அரியணையிலிருந்து இறக்கி விடவேண்டும். நிரந்தரமாக, அந்தப்புரத்துப் பள்ளியறை வாசியாக இருக்கும் மன்னனுக்குத் தான் இந்த அளவு நாட்டு நடப்பு பற்றிய அறியாமை இருக்க முடியும். அவனால் மக்களுக்கு பயன் யாதும் இல்லை. கெட் அவுட்.

டில்லி முனிசிபாலிட்டி அத்தகைய கண்மூடி ராஜாங்கம் போல. இல்லாவிடின், கிட்டத்தட்ட 5 லக்ஷம் சைக்கிள்-ரிக்க்ஷாக்கள் ஓடும் டில்லி நகரில், ஏதோ ஒரு குருட்டாம்போக்குக் கணக்கில் 99 ஆயிரம் வண்டிகளுக்குத் தான் உரிமம் கொடுப்போம். அதற்கு மேல் உரிமம் பெறாதவைகளுக்கு ரூபாய் 5.50 ரேஞ்சில் அபராதம் என்ற அபத்தமான விதியை 1907ல் இயற்றியிருக்க மாட்டார்கள். அது அபத்தம் மட்டும் இல்லை; அநியாயத்துக்கு அடித்தளம். ஊழல் பெருகவும், லஞ்சம் குவியவும் வழி. வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் (அதாவது, துட்டு கொடுத்தவனுக்கு மட்டும் ) உரிமம்; 5.50 ரேஞ்சு கன்னாப்பின்னா என்று அபராதம் விதிப்பேன் என்று குரைத்து, பின்னர் அதை குறைத்து, லஞ்ச அட்டவணை; உரிமம் இல்லாதவர்களை என்றென்றும் அடிமைப்படுத்தலாம். கடந்த நான்கு வருடங்களில் எத்தனை அநியாயம் நடந்ததோ? சைக்கிள் ரிக்க்ஷா ஒழிப்பதில் தவறு இல்லை. ஆனால், அதை விவேகமற்ற முறையில் செய்வது தவறு. ஒரேயடியாக, ஏழை பாழை வயிற்றில் அடித்தால், அது என்ன நியாயம் என்று டில்லி உயர் நீதி மன்றம் கேட்டது. விவேகமற்றுப்போன டில்லி முனிசிபாலிட்டிக்கு விவஸ்தையும் இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு சால்ஜாப்பு விண்ணப்பம் செய்தார்கள், இந்த மேதாவிகள்!

நேற்று,அதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஜி.எச்.சிங்க்வியும் எஸ்.ஜே.முகோபாத்யாயாவும், நாக்கை பிடுங்கிக்கொள்கிறமாதிரி,கேட்டது:

“உங்கள் புத்தி ஏன் இப்படி குதர்க்கமாக வேலை செய்கிறது? குடித்து விட்டு காரோட்டி மனித வதம் செய்யும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளையும், பிரேக் இல்லாமல் ஓடும் கார்களையும் விட்டு விட்டு, இந்த ‘ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயிலாண்டி’ ரிக்க்ஷா ஓட்டும் அரைப்பட்டினிகள் தான் உங்களுக்குக் கிடைத்தார்களா? இன்றைய சூழ்நிலையில் ஏழையால், ஏழைக்கு உழைக்கும் இந்த சைக்கிள் ரிக்க்ஷாவை பேருக்கு ஒழிப்பதாக மனப்பால் குடிக்கும் உம்மை என்ன செய்வது?

சார்! நீதித்துறை வேண்டும். நன்கு இலங்கவேண்டும். கனம் கோர்ட்டார் வாழ்க.

*

http://www.theworld.org/wp-content/uploads/Laxman-the-rickshaw-puller-who-was-interviewed.jpg

 

Leave a Reply

Your email address will not be published.