சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-4)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

கடந்த சில நாட்களாகவே மங்கையின் வலக்கண் துடித்துக் கொண்டிருந்தது. பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்று யாரோ சொன்னது மங்கைக்கு ஞாபகம் வந்தது. அதோடு பக்கத்து வீட்டம்மா அந்த வீட்டைப் பற்றிச் சொன்னது வேறு அவள் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லாமல் மனதிலேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

மாமி வீட்டு வேலைகளில் உதவுவதால் முன்னளவு அடிக்கடி நெஞ்சு வலி வருவதில்லையே தவிர அடியோடு நின்று விடவில்லை. அப்படி வரும் போது வலியின் தீவிரம் தாங்க முடியாததாய் இருந்தது. மூச்சே நின்று விடும் போல ஒரு அடைப்பு. ஒரு வேளை தனக்கு ஏதேனும் இருக்குமோவெனப் பயந்தாள் மங்கை. ஆனால் டாக்டரிடம் போகவும் தயக்கம். ‘சாதாரண ஒரு விஷயத்தை அவர் பெரிது படுத்தி நிரந்தரமாகப் படுக்க வைத்து விட்டால்’ என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது. எனவே பேசாமல் இருந்து விட்டாள்.

இப்போதெல்லாம் சிவனேசன் வீடு திரும்ப ஒன்பது மணியாகி விடுகிறது. அவனது கம்பெனி இங்கிலாந்தில் உள்ள மற்றொரு கம்பெனியோடு கூட்டு வர்த்தகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருந்தது. அது குறித்த பல வேலைகளுக்கும் சிவனேசனே பொறுப்பு என்பதால் அவனுடைய பளு அதிகரித்தது. எல்லாவற்றையும் மிகத் திறமையாகச் சமாளித்தான் அவன். இதற்கிடையில் அவனுடைய முதலாளி சீனாவில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலையை வாங்கி அதை நிர்வகிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வேலை வேறு சேர்ந்து கொண்டது.

முதலாளி இங்கிலாந்துக்கும், சீனாவுக்கும் பறந்து கொண்டிருந்தார். சிவனேசன் இங்கிருக்கும் வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். சீனாவில் அந்தத் தொழிற்சாலையை வாங்குவது குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்தன. ஏன் அது நஷ்டத்தில் ஓடியது? தொழிலாளர் பிரச்சனை இருக்கிறதா? இயந்திரங்கள் தரமானதா? அது தயாரிக்கும் பொருளை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் உள்ளதா? அங்கிருந்து தயாரிப்புப் பொருளை வெளிநாட்டுக்கோ, இல்லை இந்தியாவுக்கோ கொண்டு வருவது எப்படி? இது போன்ற பல சந்தேகங்களை சிவனேசன் தன்னுடைய ரிப்போர்டில் கேட்டிருந்தான். அவற்றுக்குச் சரியான பதில் கிடைக்காமல் அந்தத் தொழிற்சாலையை வாங்குவது புத்திசாலித்தனமான செயலல்ல என்று முடித்திருந்தான்.

இவ்வாறு அவன் அல்லும் பகலும் நிறுவனத்தின் நினைவாகவே இயங்கிக் கொண்டிருந்தான். எல்லா விஷயங்களையும் மங்கையிடம் பகிர்ந்து கொள்வான். அதனால் மங்கைக்கும் அவனது வேலை நெருக்கடி புரியும்.

இந்நிலையில் ஒரு நாள் மங்கையும், கோமு மாமியும் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் கொறிக்க ஏதாவது கேட்பார்கள் என்று பண்டங்கள் செய்து கொண்டிருந்தார்கள். தேன்குழலும், ஓமப்பொடியும். தேன் குழல் செய்து முடித்தாகி விட்டது. ஓமப்பொடிக்கான மாவு பிசைந்து கொண்டிருக்கும் போது டெலிஃபோன் மணியடிக்கவே அடுப்பை, மாமியைக் கவனிக்கச் சொல்லி விட்டு ஃபோனை எடுத்தாள் மங்கை. சிவனேசன்தான் பேசினான்.

“ஹலோ மங்கை! ஒரு சந்தோஷமான சமாசாரம். கூடிய சீக்கிரமே நான் வெளிநாடு போனாலும் போவேன். அனேகமா அடுத்த மாசமே கிளம்ப வேண்டி வரலாம். எல்லாம் விவரமா வீட்டுக்கு வந்து சொல்றேன்.”

மங்கைக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்னங்க! என்ன சொல்றீங்க? வெளி நாட்டுக்கா? எப்போ போகணும்? எனக்கு ஒண்ணுமே புரியல்லையே?”

“மங்கை எல்லாத்தையும் வீட்டுக்கு வந்து சொல்றேன். என் முதலாளி இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி ஃபோன்ல சொன்னாரு. என்னால சந்தோஷத்தை அடக்க முடியலை. அதான் உனக்கு ஃபோன் பண்ணுனேன். வேற ஒண்ணும் இல்லை. வெச்சிடட்டுமா?” என்று கூறி வைத்து விட்டான்.

மங்கைக்குத் தலை சுற்றியது. மாமியிடம் சிவனேசன் சொன்ன விஷயத்தை அப்படியே கூறினாள். மாமிக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. “மங்கை உன் ஆத்துக்காரர் வெளி நாட்டுக்குப் போப்போறார்டீ, அவர் எவ்ளோ திறமை சாலியா இருந்தா அவருக்கு இந்த வாய்ப்பை அவர் முதலாளி குடுத்திருப்பார். எல்லாம் உன் யோகம்டீ. கடவுள் அருளாலே நமக்கு இனிமே எந்தக் கஷ்டமும் வராது. எவ்ளோ பெருமையா இருக்கு?” என்று பொரிந்து கொட்டினாள்.

ஒன்றும் தோன்றாமல் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள் மங்கை.

சாயங்காலம் சிவனேசன் வந்து விளக்கமாகக் கூறினான்.

முன்பே சொல்லியிருந்தபடி இங்கிலாந்துக் கம்பெனியோடு கூட்டு வர்த்தகம் செய்ய, பேச்சு வார்த்தை நடத்த சிவனேசனின் முதலாளி இங்கிலாந்து போயிருக்கிறார். தேவையான தொழில் நுட்ப விவரங்கள் அடங்கிய ஃபைல் ஒன்றைச் சிவனேசனைத் தயார் செய்யச் சொல்லி விட்டு அங்கிருந்து தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதன் படியே ஃபைலைத் தயார் செய்து விட்டான் சிவனேசன். தயார் செய்யப்பட்ட அந்த ஃபைல் இப்போது முதலாளிக்குத் தேவைப்படுகிறது. அது மிகவும் ரகசியமான ஃபைல் என்பதாலும், அதை வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதாலும் சிவனேசனையே எடுத்து வந்து தரச் சொல்லி விட்டார். அது மட்டுமல்ல இங்கிலாந்திலிருந்து அப்படியே சீனா சென்று அந்தத் தொழிற்சாலை விஷயமாகவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பது அவர் எண்ணம். அதற்கு சிவநேசனும் கூட இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே அவனும் இங்கிலாந்து பின் சீனா என்று பயணப் பட வேண்டும். இப்போது போனால் சிவனேசன் இந்தியா திரும்ப எப்படியும் ஆறு மாதங்களாவது ஆகலாம்.

இத விஷயங்கள் எல்லாம் தெரிந்தவுடன் மங்கைக்கு இனம் தெரியாத கலக்கம் தோன்றியது. தயவு செய்து வெளி நாடு போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்த வேண்டும் என்று தோன்றியது. சொல்லத் தெரியாத ஒரு பயம் அவள் மனதில் வியாபித்தது. ஆனால் சிவனேசனின் உற்சாகத்தையும், குழந்தைகளின் சந்தோஷத்தையும் பார்த்து, தனது பயம் அர்த்தமற்றது என்று முடிவு செய்து அதை ஒரு புறமாக ஒதுக்கி வைத்து அவளும் சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்.

பாஸ் போர்ட் வாங்குவதிலும், தேவையான உடைகள் வாங்குவதிலும், மற்றும் பிற ஏற்பாடுகள் செய்வதிலும் நாட்கள் பறந்தன. மங்கைக்கு என்று பாங்கில் ஒரு அக்கவுண்ட் ஏற்படுத்தி சிவனேசனுடைய சம்பளத்தொகையை அதில் சேரும்படி செய்து மாதாமாதம் அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்தான். குழந்தைகளிடம் சமர்த்தாக நன்றாகப் படிக்கும்படி அறிவுரை கூறினான். மாமியிடம் தன் குடும்பத்தையே அவர்களை நம்பி ஒப்படைத்து விட்டுச் செல்வதாகவும், மாமியே மங்கையின் தாயாக இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் மாமி கண் கலங்கி விட்டாள்.

“நீங்க கவலைப்படாமே மஹராஜனாப் போயிட்டு வாங்கோ. எல்லாரையும் நான் பாத்துக்கறேன். அனாதையான எனக்கு அடைக்கலம் குடுத்தேள். அந்த நன்றி நான் மறப்பேனா” என்று சொல்லி விட்டு ஓவென அழுது விட்டாள். மங்கைக்கும் ஏனோ கண் கலங்கியது.

சினனேசன் கிளம்புவது குறித்து ஏனோ மங்கையின் மனதில் ஒரு இனம் புரியாத சங்கடம். அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இனி அவனைக் காண்போமா இல்லை ஏதாவது ஆகி விடுமா? என்ற பைத்தியக்கார எண்ணம் மனதில் தோன்றி அவளை அலைக்கழித்தது. இவளின் சுரத்தில்லாத முகத்தைப் பார்த்து சிவனேசன் கூட “ஏன் மங்கை என்னவோ போல் இருக்கே? நான் ஃபாரின் போறது பத்தி உனக்கு சந்தோஷம் இல்லையா? எங்க ஆபீசுல மத்தவங்களுக்கெல்லாம் கெடைக்காத சான்ஸ் எனக்குக் கெடச்சுருக்கு. இந்தப் பயணத்தால நான் பல விஷயங்களக் கத்துக்கலாம். நம்ம எதிர்காலத்துக்கு அது ரொம்ப நல்லது, அப்படி இருக்கறப்போ நீ ஏன் முகத்தை உம்முன்னு வெச்சிட்டு இருக்கே?” என்றான்.

இனியும் இப்படியே இருந்தால் கணவன் தவறாக நினைத்துக் கொள்வான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு கலகலப்பாக இருக்க முயன்றாள் மங்கை. நாட்கள் ஓடின. பயண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தன. குழந்தைகளும், ப்ரியாவும் வரும்போது வாங்கி வர வேண்டும் என ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தார்கள். மாமியும், மங்கையும் பம்பரமாகச் சுழன்று பருப்புப்பொடி, இட்லிப் பொடி, கருவேப்பிலைப்பொடி எனத் தயாரித்தார்கள். ஆனால் அவற்றை எடுத்துப்போக அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவற்றைப் பார்சல் செய்ய வேண்டாம் என்று சிவனேசன் கூறி விட்டான். அது வேறு மங்கைக்குக் கோபம். மற்றவை எல்லாம் நீட்டாக பாக் செய்யப் பட்டு விட்டது.

குறிப்பிட்ட நாளில் அனைவரும் ஏர்போர்ட் சென்று சிவனேசனை வழியனுப்பினார்கள். தூரத்தில் ஒரு புள்ளியாகி அவன் மறைந்ததைப் பார்த்ததும் அப்படியே மயங்கிச் சரிந்தாள் மங்கை.

 

படத்திற்கு நன்றி:http://crispme.com/roundup-40-widescreen-aircraft-wallpapers

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *