வணிகமயமான காதலர் தினம்
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
பிப்ரவரி 14ஆம் நாள் காதலர் தினம். உலகெங்கிலும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் போல் இது வணிகமயமாக்கப்படவில்லை (commercialized). இந்தத் தினத்திற்கு மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பாகவே வணிக நிறுவனங்களும் கடைகளும் பரிசுகள் வாங்கும்படி மக்களைத் துரிதப்படுத்துகின்றன. அதைப் பற்றி நினைக்காதவர்களைக் கூட அதைப் பற்றி ஞாபகப்படுத்தி “இதை வாங்குங்கள், அதை வாங்குங்கள்” என்று விளம்பரம் செய்கின்றன.
இப்போது காதலர்கள் தினம் என்பது போய், நாம் அன்பு செலுத்தும் யாருக்கும் பரிசுகள் வழங்கலாம் என்றும் எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறார்கள். எப்படியாவது தாங்கள் தயாரிக்கும் சாமான்களை ஜனங்களை வாங்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களுடைய குறிக்கோள்.
காதலன், அன்று காதலியை விருந்திற்கு வெளியில் அழைத்துக்கொண்டு போக வேண்டும். அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். அன்று நிறையப் பேர் தங்கள் காதலிகளை அழைத்து வருவார்கள் என்பதை அறிந்து உணவு விடுதிகள், விசேஷ உணவு வகைகளைப் பரிமாறுகின்றன. ஆனால் நிறையக் கூட்டம் இருக்குமாதலால் எல்லோரையும் சீக்கிரமே உணவை முடித்துக்கொண்டு இடத்தைக் காலிசெய்யுமாறு இலைமறை காய்மறையாகத் தூண்டுகிறார்கள்.
சாதாரணமாக அமெரிக்காவில் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் யாரும் யாரையும் சந்தித்துப் பேச விரும்பினால் உணவகங்களுக்குத்தான் செல்கிறார்கள். அதனால் யாரும் உணவு உண்ட பின் உடனேயே எழுந்து வந்துவிடுவதில்லை. அதன் பிறகு நிறைய பேசிக்கொண்டிருப்பார்கள். அங்குள்ள ஊழியர்களும் யார் எத்தனை நேரம் அங்கேயே இருந்தாலும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்தத் தினம் மட்டும் விதிவிலக்கு. எல்லோரும் உண்டு முடித்த பிறகு சீக்கிரமே எழுந்து சென்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உணவக உரிமையாளர்கள் இந்தத் தினத்தன்று எவ்வளவு பணம் பண்ண முடியுமோ அவ்வளவு பணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, பாந்தமாகக் குடும்பம் நடத்துவதற்கு இந்தத் தினம் உதவியாக அமைய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தினத்தை இப்போது அமெரிக்காவில் வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் எல்லோரிடமும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு பெண் “காதலைத் தொடர நிறையப் பணம் தேவை” (It is expensive to be in love) என்றாள். பரிசுகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தால்தான் அன்பு நீடிக்கும் என்பதால் அப்படிச் சொல்கிறாள். ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்காகப் பழகுவதை இங்கு காதல் சந்திப்பு (dating ) என்கிறார்கள். அந்தச் சமயத்தில் பெரும்பாலும் ஆண்தான் நிறையச் செலவழிக்க வேண்டியிருக்கும். யார் அதிகமாகச் செலவழிக்கிறானோ அவனுடைய அன்பு அதிகம் என்று அந்த ஆணோடு தன் பழக்கத்தைத் தொடருவாள். பின் அது அவனோடு காதலாக மாறித் தொடரும். இப்படிப் பணம் செலவழித்து அவள் அன்பை அவன் பெற வேண்டும். அவளும் அவ்வப்போது அவனுக்குப் பதிலுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்.
வீட்டில் அமெரிக்கர்கள் சமைத்துக்கொண்டிருந்த போது பெண் தன்னுடைய அன்பிற்கு உரியவனுக்குத் தன் கையால் சமைப்பாள். இப்போது வீட்டில் சமைப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டது. அதற்குப் பதில் அவனுக்குப் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும்.
பணம் செலவழிக்காமலே ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தலாம், அக்கறை காட்டலாம் என்பதை அமெரிக்கச் சமூகம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறது? ஒரு தாய் தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்து, அவர்கள் அதை அனுபவித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தால் அந்தத் தாய்க்கு எவ்வளவு இன்பம் கிடைக்கிறது என்பது அமெரிக்கர்களுக்கு மறந்துவிட்டது. நேரம், நேரம் என்று பறக்கும் இவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்கினால் அவர்களுக்கு அது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை உணருவதில்லை.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் பிறந்த நாள் அன்றும் இவர்கள் நிறைய நேரம் செலவழித்துப் பரிசுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷம், அவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் ஈடுகட்டுகிறதா என்று இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. எல்லோரும் செய்கிறார்கள், அதனால் தானும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். இதைப் பயன்படுத்திக்கொண்டு, வியாபாரிகளும் தங்கள் விற்பனையை அதிகப்படுத்திப் பணம் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.
பணம் செலவழித்துத்தான் தங்கள் காதலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எப்போது அமெரிக்கர்கள் விடப் போகிறார்கள்? காதலியையோ, காதலனையோ சந்தோஷப்படுத்த இவர்கள் செலவழிக்கும் பணம், அந்த விளைவிற்குப் பதில், வியாபாரிகளின் கஜானாவை நிரப்பத்தான் அதிகம் பயன்படப் போகிறது என்பதை அமெரிக்கர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
============================
படத்திற்கு நன்றி: http://www.life.com
மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.