காதலி தினம் – குறு நாவல்
தமிழ்த்தேனீ
அருண் முதன் முறையாகப் படி தாண்டினான்!!!
கமலனுக்கு ஆச்சரியமாய் இருந்தது…. அருணா இப்படி? அருண் எப்படிப்பட்ட நண்பன்! எப்படிப்பட்ட மனிதன்!
அருண் – அனுபமா வாழ்க்கை, அது ஒரு ஆனந்தத் தேரோட்டம், மல்லிகைப் பூந்தோட்டம் – வாலிப வயதிலும் கல்லுரியில் படிக்கும் போதும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் ரிஷ்யசிங்கர் என்ற பெயர் எடுத்த அருண், அனுபமாவை யதேச்சையாகப் பார்த்த பின் இமைகளை மூட மறந்த அருண். அது காதலா -பூர்வ ஜன்மத் தொடர்ச்சியா?
காதல் எவ்வளவு கடினமான விஷயம்? அது கேட்டவுடன் கிடைக்குமா? கிடைத்தது…..!!!! அருணுக்கு மட்டும்.
நேருக்கு நேர் கண்களைப் பார்த்து, என்னை மணக்க உனக்குச் சம்மதமா ? என்று கேட்ட அருணுக்கு… அனுபமா அவன் உள்ளத்தைப் படித்தவள் போல் சம்மதம் என்றாள் .பெற்றோர் சம்மதத்துடன் ஆனந்தமாக நிறைவேறியது, அவர்களின் கல்யாணம்.
ஆந்த்ரீகமான , ஆதர்ச தம்பதிகள். அருண் குழந்தையானான். அனுபமா தாயானாள், தாய்மையின் புனிதமான தோற்றம் அனுபமாவின் உடலில் ஒரு புது மெருகேற்றி இருந்தது. கண்களின் கீழே மெல்லிய கரு வளையம். அது அவளுடைய பொன் நிறத்துக்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்திருந்தது. அணு அணுவாக அவளைப் பார்த்து ரசித்த அருண் அன்றிலிருந்து அவளுக்குத் தாயுமானான். கண்களில் வைத்து இமைகளில் தாங்கினான்.
உடல் சுகத்துக்கு மட்டுமே முதல் இடம் கொடுக்கும் ஆண்களுக்கு மத்தியில் – உள்ளத்தை, அனுபமாவின் ஆந்த்ரீகமான காதலைப் பெற்றவன். உன்னதமான தாய்மையின் சிறப்பை, பெண்மையின் சிறப்பைப் போற்றும் சிறந்த ஆண்மகன் அருண்.
அந்த அருணா இப்படி!
திருமணமான முதல் வருட ஆண்டு விழா. அதைச்சிறப்பாக கொண்டாடினர் சம்பந்திகள் இருவரும். அருணும் அனுபமாவும் காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு , உல்லாசப் பறவைகளாய், கடற்கரை, பூங்கா, சினிமா என்று போய்விட்டு, பிறகு பிரவுசிங் மையத்துக்குப் போய் நண்பர்களிடம் இணையத்தில் பேசிவிட்டு, இரவு வீட்டுக்குத் திரும்பினர். வழக்கம் போல் இனிதான தாம்பத்யம் எல்லாம் முடிந்து அயர்வாய், திருப்தியாய்க் கண்ணயர்ந்தனர் இருவரும்.
மறுநாள்……… பொழுது விடிந்தது……. வழக்கமாக விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு, ‘ஹாய் டியர்’ என்று சொல்லிக்கொண்டே கையில் காபியுடன் அருணை எழுப்பும் அனுபமா, அன்று காலை அருண் எழுந்த பிறகும் எழவில்லை….?
சரி, கர்ப்பவதியல்லவா, அதனால் ஏற்பட்ட சோர்வு என்று நினைத்த அருண், அவளைச் சீண்டினான். அவள் அப்போதும் அசையாமல் படுத்துக் கிடந்ததைப் பார்த்து, ‘போறும் அனு. சீக்கிரம் எழுந்திரு. இன்னிக்கு டாக்டர் கிட்ட போகணும் 10 மணிக்கு அப்பாயின்ட்மென்ட். வயித்துல குட்டிப் பையன் எப்பிடியிருக்கான்? உன்னோட ஹெல்த் எப்பிடி இருக்குன்னு செக் பண்ணணும், எழுந்திரு அனு’ என்றான்.
அனு அசையாமல் கிடந்தாள். அருண் பதறிப் போய் அவளின் முகத்தைத் திருப்பினான். மூச்சு நின்று போய் இருந்தது . மருத்துவர் வந்து இயற்கையான மரணம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்… அப்புறம் நடந்ததெல்லாம் அருணின் மயக்க நிலையிலேயே நடந்தது.
சாதாரணமாக எமன் பழி சுமக்கமாட்டான். எந்த ஒருவர் இறப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் அனுபமா விஷயத்தில் எமனே பழி சுமந்தான். அருண் நினைத்தாவது பார்த்தானா ? எந்த நோயுமில்லாது, ஆரோக்கியமாக மான் குட்டியைப் போல் வளைய வந்த அனு, இப்படி.. ஒரு அலுக்கல் குலுக்கல் இல்லாமல் இரவு தூங்கிய அனு, காலையில் எழுந்திருக்கவில்லை.
அனு சிரித்துக்கொண்டே தன் கடைசீ…. மூச்சை விட்டுவிட்டாள்! மல்லிகைப் பூந்தோட்டம் அலுங்காமல் தீயில் கருகியது போல அமைதியாகப் போய்விட்டாள். முதல் நாள் இரவு அனு, அவனைக் கட்டிக்கொண்டு, ‘அருண் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான் உனக்குப் பொண்டாட்டி. நீதான் எனக்கு புருஷன்’ என்று நெகிழ்ந்து போய், கண்களில் நீர் வழியச் சொன்னது, ஞாபகம் வந்தது. குமுறினான் அருண். அன்றிலிருந்து தன் மொத்த இயக்கத்தையும் மறந்த நடைப் பிணமானான் அருண்.
அதற்குப் பிறகு எத்தனையோ முறை அவனை ஒருசாதாரண மனிதனாக்க எவ்வளவோ முயன்ற கமலன்,
தோற்றுக் கொண்டே இருந்தான்.
**********************************************
கடைசியாக , ‘டேய் அருண். உங்க அப்பா அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு. நீ பழைய மாதிரி ஆகணும். இந்த உலகத்துல இது சகஜம்டா. இப்பிடியே இருக்காதே உன்னை மாத்திக்கோ. என்னோட வா’ என்று தனக்கே பழக்கமில்லாத ஒரு புதிய இடத்துக்கு அழைத்தான் கமலன்.
அதைக் கேட்டவுடன் அருண் சீறியது ஞாபகம் இருக்கிறது.
‘டேய் கமலன், என் அனுவை விட சிறந்த பொண்ணு இனிமே உலகத்துல கிடைக்க மாட்டா. இனிமே இந்த மாதிரி பயித்தியக்காரத்தனம் எல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. இதோட நிறுத்திக்கோ’ என்று சீறிய அருண்…
கமலனால் தன்னையே நம்ப முடியவில்லை.
அந்த அருணா இப்படி?! அருணா சொன்னான் அந்த வார்த்தைகளை…? பதறிய கமலனைக் கொஞ்சமும் சட்டை செய்யாத அருண், ‘உன்னால முடியுமா? நானே ஏற்பாடு செய்துக்கவா?’ என்று கேட்டவுடன் அதிர்ந்தான் கமலன்.
‘சரி, நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ஏற்பாடுகளும் செய்தான் கமலன்.
அருணா இப்படி…!?
அன்று இரவு கமலன் சாப்பிடவில்லை, தூங்கவில்லை.
புகழ் பெற்ற அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிகார வர்கத்தின் கரங்களைப் பணம் என்னும் வசதியால் முடக்கிப் போட்ட அந்த ஐந்து நட்சத்திரஹோட்டலில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஃபோம் மெத்தையில் நிச்சலனமாக மல்லாந்து படுத்து இருந்தான் அருண்!!! அன்று அவனுடைய அனுபமா, அவனை விட்டுப் பிரிந்த நாள். அருணை அவனுடைய முதலிரவு உடை அலங்கரித்திருந்தது. அனுபமாவின் நினைவுகள், அவன் மனத்தை ஆக்ரமித்திருந்தன.
அறைக் கதவு திறந்தது…….. அவள் உள்ளே நுழைந்தாள். அவள் பல பெரிய அரசியல்வாதிகளை மண் கவ்வ வைத்த அவள், பல சினிமாக்காரர்களின் பணம் பண்ணும் யந்திரமான அவள், சினிமாப் பைத்தியங்களின் கனவுக் கன்னியாய் விளங்கி, இரவுத் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கும் அவள், ஒய்யாரமாய் உள்ளே நுழைந்தாள்! அதிர்ச்சி! அவளுக்கு அதிர்ச்சி!!
அவள் வந்தவுடனே ஓடி வந்து அவளை மகாராணியாகப் பாவித்து, காலடியில் வீழ்ந்து கிடக்கும் சீமான்களிடையே, அவள் வந்தது கூடத் தெரியாமல் படுத்துக் கிடக்கும் அருணைப் பார்த்து… தான் வந்த அறையின் எண் சரிதானா என்று சந்தேகப்பட்டு வெளியே சென்று, அறை எண் சரிதான் என்று உறுதியும் செய்து, மீண்டும் உள்ளே நுழைந்தாள் அவள். அப்போதும் அவன் தன்னைக் கவனிக்காததால் எரிச்சலாகி, பின் தன் தொழிலுக்கே உரிய சாகசத்துடன் அவனை நெருங்கினாள், அந்த 100% தொழில்காரி. அவனை நெருங்கி, ஒயிலாக, கவர்ச்சியாகக் கைகளை உயர்த்தி, சோம்பல் முறித்தாள். வேனிடி பேகை அலட்சியமாகக் கட்டிலில் போட்டுவிட்டு, கதவைத் தாழ்ப்பாள் போட்டாள்.
அவள் அவனைப் பார்த்துக் கவர்ச்சியாக சிரித்தாள். அருணின் அருகே வந்து அவனை மென்மையாக முத்தமிட்டாள் அவள் அவனுக்குக் கொடுக்கும் முதல் முத்தம். அருண் திடுக்கிட்டு எழுந்தான்.
“நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன யோசனை?” என்று கேட்டுக்கொண்டே அவனை அணைத்தாள் அவள்.
அருண் அவளை தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே மெதுவாக விலக்கி, கட்டிலில் உட்கார வைத்தான்.
“உன் பேரென்ன?” அருண் கேட்ட கேள்விக்குக் கடகடவெனச் சிரித்த அவள், “உனக்கு எந்தப் பேரு பிடிக்குமோ அதான் என் பேரு” என்றாள், கவர்ச்சியாகச் சிரித்தபடி.
“ஆமாம், என் பேரைக் கேட்டீங்களே!!! உங்க பேரென்ன? நான் உங்களை எப்படி கூப்பிடறது, உங்களோட உண்மையான பேரோ ,இல்லை உங்களுக்கு எப்பிடிக் கூப்பிட்டா பிடிக்குமோ, அந்தப் பேரோ சொல்லுங்க? அப்பிடியே கூப்பிடறேன். ஆமா என்ன கேட்டீங்க? நான் எப்பிடி இந்தத் தொழிலுக்கு வந்தேன்னுதானே? ஆமா உங்களைப் பாத்தா நல்ல பிள்ள மாதிரி தெரியுதே, நீங்க எப்பிடி இங்க வந்தீங்க? இப்பிடீ மாத்தி மாத்தி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா, பொழுது விடிஞ்சிரும். வா என் புதிய காதலனே” என்றாள் அவள்.
அருணிடம் எந்தச் சலனமும் இல்லை.
“என்னா… என்ன வச்சு கதை எழுதப் போறீங்களா..? இல்ல கல்யாணம் செஞ்சுகிட்டு ஒரு விபசாரிக்கு வாழ்க்கை குடுக்கப் போறிங்களா? கலகலவெனச் சிரித்தாள் அவள்.
அமைதியாக இருந்த அருண், அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டே “இல்ல… அதெல்லாம்… இல்ல. ஆனா நீ எனக்காக ஒண்னு செய்யணும்”
”இன்னிக்கு ஒரு நாள்….. நீ என் மனைவியா, என் அனுபமாவா மாறணும், வாழணும். முடியுமா?” என்று கேட்டுவிட்டு, காத்திருந்தான் அருண்.
(ஏற்கெனவே கமலன் இவனைப் பத்தி சொல்லியிருந்ததால் அவளுக்கு இவன் பைத்தியமோ என்று சந்தேகம் வரவில்லை)
“சரி அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லு” என்றாள், அவள் ஒரு வறட்டுக் குரலில்.
“நன்றி , நீ ஒண்ணும் செய்யவேண்டாம். நீ இன்னிக்கு மட்டும் உடம்பால வாழாதே. மனசால வாழு. புரியலையா? இன்னிக்கு ஒருநாள் மட்டும்நீ என் கண்மணியா, என் பெட்டர் ஹாஃபா, என் மனைவியா, என் உலகமா, எனக்கு எல்லாமா மாறணும், வாழணும். முடியுமா?”
கேட்டுவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுபவனைப் பார்த்து அவள்… கண்களிலும் முதல் முறையாகக் கண்ணீர் துளிர்த்தது…….! வெகு நாட்களுக்குப் பிறகு.
**********************************************
அவளுக்கு….. அற்பக் காசுக்காக…. கட்டிய மனைவியை, தன்னை விற்ற அவள் கணவனின் ஞாபகம் வந்தது. காதல் என்றாலே காமம் என்று அர்த்தப்படுத்திக்கொண்டு கண்ட இடங்களில் கட்டிப் புரளும் இப்படிப்பட்ட ஆண்களின் இல்லை… இல்லை மிருகங்களின் மத்தியில்… இப்படி ஒரு மனிதனா? இவ்வளவு மனிதநேயமா? இப்படிக்கூட ஆண்கள், மனைவி மேல் பாசம் வைப்பார்களா.? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட மனைவியை அவள் இறந்து போன பின்னால் கூட இப்படி நேசிக்க முடியுமா?! அடடா எப்படிப்பட்ட கணவன் இவன்.எப்படிப்பட்ட மனிதன் இவன்? இவனில் இருந்து பிரித்து இவள் மனைவியைக் கொண்டு போக, எப்படி மனசு வந்தது ஆண்டவனுக்கு? இவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்.
சுதாரித்துக்கொண்டு எழுந்தாள், அந்தத் தொழில்காரி, இல்லை இல்லை மனைவி. குமுறிக் குமுறி அழுபவனை, முகம் தாங்கி, “அழாதேடா கண்ணா” என்று முகம் தாங்கி, தன் சேலைத் தலைப்பால் அவன் முகம் துடைத்து, தன் மார்பிலே அவனைத் தாங்கி, “ஆமா உன் பேரு என்ன?” என்றாள்.
“அருண்..” என்று ஒரு குழந்தையைப் போல் தேம்பிக்கொண்டே சொன்னவனை அணைத்துக்கொண்டு, “அருண் இந்த நிமிஷம் முதல் நீ என்ன வேண்டாம்னு சொல்ற வரைக்கும் நான்தான் உன் அனுபமா!!! சரி ஒரு நிமிஷம் இரு” என்ற அவள், ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய், அனுபமாவின் முதல் இரவுப் புடவையைக் கட்டிக்கொண்டு, ஓர் ஓரமாக உட்கார்ந்து அனுபமாவை மனத்தில் ஆந்த்ரீகமாக நினைத்து, ‘அனுபமா நீ யாரோ எவரோ? எனக்குத் தெரியாது. நான் இதுக்குத் தகுதியானவள்தானா? எனக்குத் தெரியாது. ஆனா நான் உன்னை மனப்பூர்வமா பிரார்த்தனை பண்றேன். இந்த மனுஷனுக்கு அமைதியைக் கொடுக்க, நீ என்னுள் வரவேண்டும். உன்னை என்னில் நான் ஆவிர்பவிக்கிறேன். அதனால எனக்கு சக்தி கொடு. இந்த உன்னதமான மனுஷனுக்கு என்னை அனுபமாவாகவே காட்டு’ன்னு வேண்டிக்கிட்டு மனதால் உடலால், ஆத்மாவால் அனுபமாவாக மாறினாள் அவள்….
அனுபமாவாக மாறிய அனுபவமே சுகமாக, இதமாக, புதுப்பிறவி எடுத்தது போல் உடலில் புது இரத்தம் பாய்ந்ததுபோல், புனர் ஜன்மம் எடுத்தாள் அவள்.
**********************************************
அல்ல அல்ல இப்போது அவளல்ல…! இவள்.
“மானச சஞ்சரரே ப்ரம்மணீ மானச சஞ்சரரே
மதஸ்லிதி பின்ச்சா லங்க்ருத சிகுரே”
எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டிருந்தது.
அவள்…… இல்லை இல்லை அனுபமா என்னும் இவள் எழுந்தாள். அருணும் எழுந்தான். அருணும் அனுபமாவும் கை கோத்துக்கொண்டு, அறைக்கு வெளியே நடந்தனர். காலாற நடந்தனர். அனு, அருணின் தோளில் தலை சாய்த்துக்கொண்டு குதூகலமாக, ஆனந்தமாக, பீச், சினிமா, ஹோட்டல்,
கடைசியாக ஆத்மார்த்தமாகக் கோயிலுக்கும் சென்றுவிட்டு மீண்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.
அன்று அருணுக்கு இரண்டாம் முதல் இரவு. இவளுக்கும்தான். ஏனென்றால் அவள்.. இல்லை இல்லை…. இவள் அனுபமாதானே. பொழுது விடிந்தது. அனுபமா எழுந்து குளித்துவிட்டு, தலை உலருவதற்காக நுனி முடிச்சிட்டு, அருணை எழுப்பினாள். அனுபமாவின் தலையிலிருந்து அருண் முகத்தில் நீர்த் திவலைகள் தெறித்தன. அருண் எழுந்தான்.
“குட் மார்னிங் அனு” என்றான்.
“குட்மார்னிங்” சொல்லி, அவனை மென்மையாக முத்தமிட்டாள், இவள்.. அனுபமா.
அடடா முதலில் வந்த அவள் கொடுத்த முத்தத்துக்கும் இந்த இவள்… அனுபமா முத்தத்துக்கும் எத்தனை வேறுபாடு?
இவள் சிரித்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் சிரிப்பு.
இவள் நடந்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் நடை.
இவள் கொடுத்த முத்தம், இது இல்லறத்துத் தேவதை கொடுக்கும் முத்தத்துக்கு ஈடான முத்தம்.
இவள், அருணின் கையைப் பிடித்தபடி…. அருண் !!!
”என் வாழ்க்கையிலே நேத்து ஒரு பொன்னான நாள்!!! இல்லை.. இல்லை நான் பெண்ணான நாள்”! நான் இந்த நாளை மறக்க மாட்டேன் என்றபடி அனுபமாவின் புடவையை அவிழ்த்து மடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அங்கே வைத்துவிட்டு, “சரி நான் போய்ட்டு வரட்டுமா?” என்றாள்.
அரைகுறை மனதுடன்….? அருண் மவுனமாகத் தலை ஆட்டினான். இவளில் இருந்து பிரிந்து அவள் ஏக்கத்துடன் வெளியே சென்றாள்.
கமலன் உள்ளே நுழைந்தான்.
“அருண்…. அவள் இந்தக் கவரை உன்கிட்ட கொடுக்கச் சொன்னா, இந்தா…..” என்று கமலன் நீட்டிய அந்தக் கவரை வாங்கிப் பிரித்தான் அருண். அதிலிருந்த கரன்சிகள் அந்த அறையெங்கும் சிதறின.
அந்தக் கடிதத்தில்
“உலகத்தின் சிறந்த ஆண்மகனே அருண்,
தாம்பத்யத்துக்கு விலை கிடையாது”
என்று எழுதி
“என்றும் உங்கள் அனுபமா”
என்று கையொப்பம் இட்டிருந்தாள் அவள்.
அருண் குமுறிக் குமுறி அழத் தொடங்கினான்.
அருண் எதற்காக அழுகிறான்? யாருக்காக அழுகிறான்? என்று தெரியாமல் கமலன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அருமைன்னு ஒரு வார்த்தையில் சொல்ல இயலாது சார்