இளம் பத்திரிக்கையாளர் சிவபாபு அவர்களுடன் சிறப்பு நேர்காணல்
உறுதியாக, உயர்ந்து நின்று பொறுப்புகளை தோளில் சுமக்க ஆரம்பியுங்கள்! உங்கள் விதியை நிர்ணயிக்கப் போகிறவர்கள் நீங்களேதான் – சுவாமி விவேகானந்தர்.
கல்லூரியில் பயிலும் போதே இன்றைய மாணவர்கள் பல துறைகளிலும் தங்களை நிரூபித்துக் கொள்ள முழு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். உலகமயமாக்கலின் காரணமாக போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில் இன்று மாணவர்களுக்கு இது போன்ற சாதனைகள் அத்தியாவசியமான தேவையாகவும் உள்ளது. அந்த வகையில் ஈரோடை மாநகரின் சூர்யா பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் தங்கள் சுய முயற்சியில் ஒரு சிற்றிதழ், அதுவும் சுத்தமான தமிழ் மொழியில், இலக்கிய இதழாக வெளியிட்டு, அதனை அனைத்து கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாகவும் வழங்கி வருகிறார்கள் என்று அறியும் போது அவர்களைச் சந்தித்து அதுபற்றி அறிய வேண்டும் என்ற ஆவலும் மேலிட்டது. தங்களுக்கு சொற்பமாகக் கிடைக்கும் சட்டைப்பை பணம் கொண்டு இவ்வரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை மனதார வாழ்த்தத் தோன்றியது. சூர்யா பொறியியல் கல்லூரியின் மாணவர் தலைவர் திரு சிவபாபு, மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் பயிலுபவர், சூர்யா தமிழ் மன்றம் என்ற பெயரில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் ஆரம்பித்து அந்தச் சுவை கொடுத்த ஊக்கத்தில் இன்று “பரிதி” என்ற ஒரு தமிழ் சிற்றிதழையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அது பற்றி அவரிடம் பேசியபோது,
பத்திரிக்கை நடத்துவது என்பது சாமான்யமான காரியம் அல்ல என்பது தெரிந்துதான் இப்படி தமிழில் இலக்கிய இதழ் ஆரம்பித்துள்ளீர்களா? தொடர்ந்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
ஆம். எந்த காரியமாக இருந்தாலும் சிரமம் இல்லாமல் சாதனை புரிய முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறோம். எங்கள் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலமாக பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அழைத்து சிறப்புரையாற்றச் செய்தபோது மாணவர்கள் காட்டிய உற்சாகமும், ஆர்வமும், கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் அவர்கள் மிக விருப்பமாக கலந்து கொண்டு தங்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலமாகவும் இத்தகைய பத்திரிக்கை ஆரம்பிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் கல்லூரியின் தலைவர் திரு இளங்கோ மற்றும் தாளாளர் திரு. கா.கலைச்செல்வன் மற்றும் முதல்வர் முனைவர் சு.விஜயன் போன்றோரின் முழுமையான ஊக்குவிப்பு மற்றும் ஆலோசனையினாலும் எங்களால் தைரியமாக அன்னைத் தமிழில் அருமையாக ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எப்படியும் இதைத் தொடர்ந்து நடத்துவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
எந்த விதமான ஆதாரங்களுடன் இச்சிற்றிதழை துவங்கியுள்ளீர்கள்?
எமது கல்லூரியில் எம்போன்ற ஒத்த ஆர்வமுடைய சக மாணவர்களில் 34 பேர்களை எம்மோடு இணைத்துக் கொண்டு, அவரவர்களின் சொந்த கைச்செலவிற்காக பெற்றோர் கொடுக்கும் பணத்தைக் கொண்டு “பரிதி” என்ற பெயரில் இந்த இதழை ஆரம்பித்துள்ளோம்.
“பரிதி” என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?
எங்கள் கல்லூரியின் பெயர் சூர்யா பொறியியல் கல்லூரி என்பதால் நாங்கள் படிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதற்காக “பரிதி” என்று எங்கள் பத்திரிக்கைக்கு பெயர் சூட்டியுள்ளோம்.
உங்கள் பரிதி சிற்றிதழின் குறிக்கோள் என்ன?
தற்போது மாத இதழாக வருகிறது. பல சோதனைகளைக் கடந்து, சென்ற மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (12.03.2012) முதல் இதழ் வெளியிட்டுள்ளோம். அடுத்த இதழ் தயாராகிக் கொண்டுள்ளது. தமிழ் இலக்கியம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளவும், அவர்களிடையே தமிழில் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பு மற்றும் மேற்படிப்பு, முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புக்ள் இவையனைத்து விசயங்களும் இயன்றவரை தமிழில் வருமாறு முயற்சி எடுத்துள்ளோம். தற்போது ஈரோடு, சேலம், கோவை போன்ற நகரங்களின் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்களை ஒன்றிணைத்து இத்திட்டத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
எதிர்காலத்தில் பரிதி இதழ் வார இதழாக வெளிவர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நம் தமிழ் நாட்டு மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட முயற்சி மேற்கொள்வோம். தமிழ் இலக்கியம் சார்ந்த மாணவர்களின் கூட்டமைப்பாக மட்டுமே இது செயல்படும் என்றும் உறுதி கொண்டுள்ளோம். இன்று இலவசமாக வழங்கப்படும் இந்த இதழ் வெகு விரைவில் ஆண்டு சந்தா பெறுவதன் மூலம் மேலும் வளர்ச்சி காண இயலும் என்றும் நம்புகிறோம்.
மூன்றாம் ஆண்டில் பயிலும் நீங்கள் தங்கள் கல்வி முடிந்து வெளியில் சென்றவுடனும் இந்த சிற்றிதழ் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளீர்களா? அதற்காக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?
நான் கல்லூரியை விட்டு வெளியில் சென்றாலும், என் வாழ்நாள் முழுவதும் இச்சிற்றிதழ் எம் பார்வையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். தற்போது ஒரு முதலாமாண்டு மாணவரையும், ஒரு மூன்றாமாண்டு மாணவரையும் உதவி ஆசிரியராகப் பணியில் அமர்த்தி அவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் கொடுத்துள்ளேன். எனக்குப் பிறகு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வதோடு அடுத்து சிலரை உருவாக்கிவிடுவார்கள். இப்படியே கட்டாயம் நல்ல முறையில் தொடர முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். எங்கள் கல்லூரியில் தற்போது பேராசிரியர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் சிரமம் இல்லாமல் இருக்கிறது. இனியும் அவர்களுடைய ஆலோசனைகளும், ஆதரவும் எங்களை நன்முறையில் வழி நடத்தும் என்று நம்புகிறோம்.
அறிவியல் தமிழின் வளர்ச்சிக்காக ஏதேனும் முயற்சி எடுத்துள்ளீர்களா?
ஆம். நம் அறிவியல், செம்மொழியாம் தமிழ் மொழியில் பிரபலமானால் மட்டுமே நம் தமிழ் மொழி காலங்காலமாக நிலைத்து நிற்க முடியும் என்பதையும் நாங்கள் அறிந்தே இருப்பதால் அறிவியல் மொழியை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் முயற்சியையும் மேற்கொள்கிறோம். முதலில் வார்த்தைகளில் ஆரம்பித்து பிற்காலங்களில் கட்டுரைகளை மொழிபெயர்க்க எண்ணியுள்ளோம்.
தங்கள் முயற்சிகள் சிறக்க, தங்கள் சிற்றிதழ் பேரிதழாக வளர்ந்து நாடு முழுவதும் மணம் பரப்ப வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக்க நன்றி. வலைப்பூவின் உரிமையாளர்கள் தங்கள் வலைப்பூ பற்றிய சிறு குறிப்புடன் எங்களுடைய கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டால் அதனை எங்கள் பரிதி இதழில் வெளியிடுகிறோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. தமிழ் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்ற அனைத்து விதமான படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பினால் அதனை வெளியிடுகிறோம். எங்களைத் தொடர்பு கொள்ள:
paruthisurya@gmail.com
surya clg – புத்தகம் காண…
பரிதி, பாரெங்கும் அறிவு ஒளி வீசி, அறியாமை இருளை அகற்றிட வாழ்த்துகள்.