நார்வே தமிழ்த் திரைப்பட விழா
முழுக்க முழுக்கத் தமிழ்த் திரைப்படங்களுக்கு என்று தனியானதொரு திரைப்பட விழா இல்லையே என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் பெரு விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், தமிழ் சினிமாவை உலகெங்கும் பரவலாக்கும் பேராவலிலும் உருவாக்கப்பட்டதுதான் நார்வே தமிழ்த் திரைப்பட விழா.
இந்த விழா, முதன் முதலாக, 2010ஆம் ஆண்டு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் சிறப்பாக நடந்தது. தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னணிக் கலைஞர்களான எஸ்.பி. ஜனநாதன், எம். சசிகுமார், மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக ஆஸ்லோவுக்கு வந்து விழாவில் பங்கேற்றனர். மொத்தம் 13 படங்கள் பங்கேற்றன. இந்தப் படங்களைத் தமிழர்கள் மட்டுமின்றி நார்வே நாட்டு மக்களும் பார்த்து ரசித்துப் பாராட்டினர்.
இப்போது 2011ஆம் ஆண்டுக்கான நார்வே தமிழ்த் திரைப்பட விழா, 2011 ஏப்ரல் 20 முதல் 25்ஆம் தேதி வரை ஆஸ்லோவில் நடக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் உள்பட15 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
விழாவுக்கான படங்களை 12 பேர் கொண்ட விழாக் குழு தேர்வு செய்துள்ளது. மொத்தம் 22 வகையான பிரிவுகளில் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பிட்ட பிரிவில் பார்வையாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற படம், அந்த பிரிவின் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும். இதற்காக மிகச் சிறந்த, சர்வதேச ரீதியிலான, வெளிப்படையான தேர்வு முறையை நார்வே தமிழ்த் திரைப்பட விழாக் குழு கடைப்பிடிக்க உள்ளது.
இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பவர் வசீகரன் சிவலிங்கம். நார்வே தமிழரான இவரது விஎன் மியூசிக் டிரீம்ஸ் என்ற நிறுவனத்தின் ஆதரவுடன்தான் இந்த விழா நடக்கிறது. இவருடன் மேலும் நார்வேயின் அபிராமி நிறுவனமும் இந்த விழாவை நடத்துவதில் கைகோத்துள்ளது.
இதுகுறித்து வசீகரன் சிவலிங்கம் கூறுகையில், “தமிழ்த் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளைப் படைத்து, முன்னேறி வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிருந்து முன்னேறி, 2010இல் 149 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழர்கள் வாழ்விலும் உலகத் தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட தமிழ் சினிமாவை இன்று உலகமெங்கும் உள்ள தமிழரல்லாதவர்களும் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப் படங்கள் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும் ஆங்கிலத் திரைப்படங்களின் தொழில்நுட்பத்துக்கு நிகராகவும் தமிழ் சினிமா வளர்ந்துள்ளது.
இப்படியான ஒரு சூழலில், தரமான கதைகளைக் கொண்ட தமிழ்ப் படங்களை உலகத் திரையரங்குகளில் திரையிடுவதற்கான முன் முயற்சியாகவும், தமிழ்ப் படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழ உதவும் பலகணியாகவும், நார்வேயில் தொடர்ச்சியாகத் தமிழ்த் திரைப்பட விழா நடக்கிறது. உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடத்தப்படும், தமிழர் விருது என்ற சிறப்பான விருதினைத் தரும் விழாவாக இது மாறும் என நம்புகின்றேன்.
இத்திரைப்பட விழாவில் ஒரு பங்காளராக வி.என்.மியூசிக் டிரீம்ஸ் நிறுவனம் அங்கம் வகிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த விழாவின் நிறைவு நாளன்று பார்வையாளர்கள் தேர்வு செய்கின்ற திரைப்படங்களுக்கு ‘தமிழர் விருது’ வழங்கப்படும்…” என்றார்.
இந்த விழாவுக்கு தேர்வாகியுள்ள தமிழ்ப் படங்கள் (ரெகுலர்):
1 .எந்திரன்
2. அங்காடித் தெரு
3. களவாணி
4. மதராஸபட்டினம்
5. ஆடுகளம்
6. மைனா
7. பாஸ் என்கிற பாஸ்கரன்
8. விண்ணைத்தாண்டி வருவாயா
9. யுத்தம் செய்
10. தா
11. பயணம்
12. தென்மேற்கு பருவக்காற்று
13. என் சுவாசம்
விழாவில் சிறப்புத் திரையிடலாக,
புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களும் திரையிடப்படும்.
செங்கடல், எல்லாளன் ஆகிய இரு திரைப்படங்கள் சிறப்புப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படங்களை திரையிடும் நாள் மற்றும் நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.
குறும்படங்கள் விழா:
நார்வே திரைப்பட விழாவின் முக்கிய அங்கமாக குறும்படங்களைத் திரையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 படங்களைத் தேர்வு செய்து, இதில் திரையிட உள்ளோம். தமிழ்த் திரைப்பட இயக்குநர் சேரன், இந்தப் படங்களைத் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்.
தமிழர் வாழ்வியல் சார்ந்த படங்களுக்கு மட்டுமே இதில் இடம் உண்டு. தங்கள் குறும்படங்களை இந்த விழாவுக்கு அனுப்ப விருப்பமுள்ளோர், 2011மார்ச் 25ஆம் தேதிக்குள் விழாக் குழுவுக்குப் படங்களை சிடி / டிஜி பீட்டா / ஹார்ட் டிஸ்க் வடிவில் அனுப்பி வைக்கலாம்.
=============================
தகவல் – மக்கள் தொடர்பாளர் அ.ஜான்
நார்வே அல்ல “நோர்வே”